உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 70
உங்களின்
தமிழ் அறிவு எப்படி? பகுதி 70
அன்பார்ந்த
வாசகர்களே வணக்கம்! சென்ற வாரம் ஒப்புமைப்படுத்தல் குறித்து படித்தோம். வாரா வாரம்
ஓரளவுக்கு தமிழ் மொழியின் இலக்கணத்தை சிறிதாவது அறிந்து வருகிறோம். இலக்கண கடலில்
சிறிது தூரமே நாம் நீந்தி வந்துள்ளோம். நம் நோக்கம் பாடம் சொல்லிக் கொடுப்பது
அல்ல! தமிழை ஓரளவு தெரிந்து கொள்ள வைப்பது மட்டுமே! அதனால்தான் இலக்கணங்கள்
வரிசையாக வராமல் மாறி மாறி வந்திருக்கும். இந்த எழுபதாவது பகுதியோடு இந்த தொடர்
நிறைவு பெறுகிறது. இலக்கணம் முழுமையும் சொல்லவில்லையே என்று வருத்தப்படாதீர்கள்!
அன்றாட வாழ்வுக்கு எழுதவும், பேசவும், தேர்வுகளுக்கு உபயோகமான இலக்கணங்களை அறிந்து
கொண்டுவிட்டோம். இன்னும் ஆழ்ந்து சொல்லித்தர நான் இலக்கண ஆசிரியனோ தமிழாசிரியனோ
அல்லன். நான் படித்ததை, நான் கற்றதை ஓரளவுக்கு உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்
அவ்வளவே! இன்று நாம் பார்க்கப் போவது உரைநடை பற்றி.
தமிழ்ப்பாடம் என்றாலே செய்யுளும்
உரைநடையும் என்று இருக்கும். கடவுள் வாழ்த்து ஆரம்பித்து பக்தி இலக்கியங்கள் வரை
செய்யுள் வடிவில் படிப்போம். உரைநடை வடிவில் கட்டுரைகள், கதைகளை படிப்போம்.
செய்யுள் நாமாக புரிந்துகொள்ள முடியாது ஆசிரியர் விளக்க வேண்டியிருக்கும்.
உரைநடையை நாமாகவே புரிந்து கொள்வோம்.
உரைநடை என்றால் என்ன?
செய்யுள் அமைப்பும் இன்றி,ஓசையும் இன்றி பல
சொற்கள் அடுத்தடுத்து தொடர்ந்து நடந்து பொருளைத் தருமாயின் அது உரை நடை எனப்படும்.
சரி
உரைநடை ஒன்று தானா? இல்லை இல்லை! உரைநடை நான்கு வகைப்படும்.
உரைநடையின்
வகைகள்:
1. பாட்டிடை வைத்த குறிப்பு. 2. பாவின்று எழுந்த கிளவி.
3.பொருளோடு
புணராப் பொய்ம்மொழி 4. பொருளோடு புணர்ந்த நகைமொழி.
1.
பாட்டிடைவைத்த குறிப்பு: பாட்டுக்களின் இடையே வைக்கப்படும் குறிப்பாகும். எடுத்துக்காட்டு. சிலப்பதிகாரம்.
2.
பாவின்று எழுந்த கிளவி. பொருள் விளங்கிக்
கொள்ளும் பொருட்டு சூத்திரத்திற்கு எழுதப்படும் உரை. உதாரணமாக தொல்காப்பியம்
நன்னூல் போன்றவற்றிற்கு எழுதப்பட்ட விளக்கவுரை.
3.
பொருளோடு புணராப் பொய்ம்மொழி: பொருள் மரபாகிய உண்மை நிகழ்ச்சியின்றி பொய்யை
புனைந்துரைக்கும் வகையில் எழுதப்படுவது ஆகும்.
எ.கா) ஒரு யானையும் ஒரு
குருவியும் நட்பு கொண்டு பழகின என்று இயல்புக்கு பொருந்தாத கற்பனை.
4. பொருளோடு புணர்ந்த
நகைமொழி: முழுவதும் பொய்யே எழுதாமல் உலகியலாகிய உண்மை நிலையை வலியுறுத்தி
எழுதப்படுபவை.
எ.கா) பஞ்ச
தந்திரக்கதைகள்.
உரைநடையை பற்றி அறிந்து
கொண்டோம்! இத்துடன் முத்தாய்ப்பாக இலக்கணப்பகுதி நிறைவு பெறுகிறது.
இனிக்கும் இலக்கியம்!
குறுந்தொகை.
திணை: முல்லை
பாடியவர்: ஓதலாந்தையார்.
வண்டு படத் ததைந்த கொடி
இணர் இடையிடுபு
பொன் செய் புனை இழை கட்டிய
மகளிர்
கதுப்பின் தோன்றும் புதுப்
பூங் கொன்றைக்
கானம், கார் எனக்
கூறினும்,
யானோ தேறேன் அவர் பொய்
வழங்கலரே.
விளக்கம்: தோழி! வண்டுகள்
தேன் உண்ணுவதற்காக வந்து படியும்படி செறிந்து மலர்ந்த நீட்சியையுடைய பூங்கொத்துக்களைத்
தழைகளின் இடையே மேற்கொண்டு பொன்னாற் செய்த பெண்கள் அணிந்து கொள்வதற்காக செய்த தலை
அணிகளை கோர்த்து கட்டிய மகளிரின் கூந்தலைப் போன்று காட்சி அளிக்கும் புதிய பூக்களை
உடைய கொன்றை மரங்களையுடைய காடானது இது. கார்ப்பருவமென்று அம்மலர்கள் தெரிவிப்பினும்
நான் தெளியேன். ஏனெனில் தலைவர் பொய்மொழியைக் கூறார்.
தலைவன் தலைவியைப் பிரிந்து
வேலைநிமித்தம் செல்கிறான். கார்காலத்தில் வருவதாகக் கூறிச் செல்கிறான். கார்காலம்
வந்து கொன்றை மரங்கள் பூத்து பெண்களின் கூந்தலில் அணியும் அணிகலன்களை போன்ற
பூக்களால் பெண்கள் போலத் தோன்றுகிறது. ஆனாலும் அது பெண் அல்ல என்று உணர்கிறாள்
தலைவி. அதுபோலவே இது கார்ப்பருவம் போன்று தோற்றம் வரினும் கார் இல்லை என்று
தெளிந்து கொள்வேன். ஏனெனில் தலைவன் பொய் கூறமாட்டான். அவன் கட்டாயம்
கார்ப்ருவத்தில் வருவான் என்று சொல்லி பிரிவாற்றாமையை தணித்துக் கொள்கின்றாள்
தோழி.
தலைவன்மேல் தலைவி கொண்ட நம்பிக்கையை அழகாக
சொல்கிறது பாடல். உவமைகள் மிகச்சிறப்பாக அமைந்து பாடலை மேலும் அழகுபடுத்துகிறது.
மீண்டும் பாடலை படித்து மகிழுங்கள்.
இத்துடன் இந்த தமிழ் அறிவு
எப்படி என்ற தொடர் நிறைவு பெறுகிறது. உங்களின் கருத்துக்களை பின்னூட்டத்தில்
தெரிவியுங்கள்! மீண்டும் சமயம் வாய்ப்பின்
மற்றுமொரு தொடரில் சந்திப்போம்! இத்தொடருக்கு இதுவரை ஆதரவளித்து வந்த அனைத்து
நண்பர்களுக்கும் எனது நன்றி! நன்றி! நன்றி!
இந்த தொடர் எழுதிய உதவிய நூல்கள்: நன்றி:
தமிழ்நாடு அரசு தமிழ் பாடநூல்கள்
முனைவர் சொ. பரமசிவம் எழுதிய நற்றமிழ் இலக்கணம்.
வர்த்தமானன் பதிப்பகம் வெளியிட்ட சங்க இலக்கியங்கள்.
பயனுள்ள பகிர்வுகள்..!
ReplyDeleteதெளிவான விளக்கவுரைக்கு நன்றி நண்பரே....
ReplyDeleteஅருமை
ReplyDeleteநன்றி நண்பரே
நல்லதொரு பயனுள்ள பகிர்வு...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
சுரேஷ் தொடர்ந்து எழுதுங்க
ReplyDeleteஐயா வணக்கம்.
ReplyDeleteஇது உங்களது இன்னொரு முகமோ.....?
இப்பொழுதே அறிகிறேன்.
தொல்காப்பியம் சொல்லும் உரை நடை வகைக்கும் தற்பொழுதுள்ள உரைநடை வகைக்கும் வேறுபாடு உண்டு.
தற்பொழுது பயிலும் உரையை இந்நான்கு வகைமையுள் அடக்க முடியாது.
உரை என்றாலே பேச்சு என்று பொருள்படுவதே.
உரைப்பது உரை.
எழுதப்படுவன வெல்லாம் செய்யுள் என்ற ஆங்கிலேயர் வருகைக்கு முன்புவரை இருந்தது. பொருள் விளக்க ஆசிரியரால் சொல்லப்பட்டவை புரிதலுக்காக எழுதப் பட்ட செய்யுட்கு உரையாய் அமைந்தன.
தங்களின் தமிழ்ப்பணி போற்றுதற்குரியது.
தொடர்கிறேன்.
இது தொடரின் கடைசிப் பகுதி. இதைப்படித்ததும் தமிழறிவு விருத்திய்யவிட்டது என்று சொல்ல முடியவில்லை. முன்னவற்றைப் படிக்காதது என் குறை. வாழ்த்துக்கள்
ReplyDelete