படித்த நரியும் முட்டாள் முதலையும்! பாப்பாமலர்!

படித்த நரியும் முட்டாள் முதலையும்! பாப்பாமலர்!


வேணுவனம் என்னும் காட்டில் நதி ஒன்று ஓடியது. அந்த நதியில் முதலை ஒன்று தன் குட்டிகளுடன் வசித்துவந்தது. அந்த காட்டில் புத்திசாலியான நரியும் தன் மனைவியுடன் வசித்துவந்தது. நரி தன் தந்திரத்தால் பலரையும் வென்ற கதை அந்த காட்டில் பிரசித்தம். அதுவும் முதலைகளை முட்டாள்கள் ஆக்கிய செய்தியும் பிரசித்தமாக இருந்தது.
   எனவே முதலை தன் குட்டிகளை நரியிடம் பாடம் படிக்க அனுப்புவது என்று முடிவு செய்தது. அந்த முதலைக்கு ஏழு குட்டிகள். ஒருநாள் தனது ஏழு குட்டிகளுடன் நரியின் இருப்பிடத்திற்கு முதலை வந்தது. பொந்துக்குள் பதுங்கியிருந்த நரி நண்டுகளை சுவைத்துக்கொண்டு இருந்தது. முதலை தன் வீடு தேடி வந்ததை கண்ட நரி ஆச்சர்யம் அடைந்தது. ஆனாலும் அதை வெளிப்படுத்தாது, “நண்பா முதலையாரே! என்ன இத்தனை தூரம் இந்த சாமானியனைத் தேடி வந்து இருக்கிறீர்?” என்றூ வினவியது.
      “ நரி நண்பா! நீதான் காட்டில் அதிகம் படித்த புத்திசாலி! உன் திறமையால் சிங்கராஜாவுக்கே மந்திரியாக இருக்கிறாய்! எங்கள் குடும்பம் படிப்பறிவு இல்லாமல் அசிங்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது. என் பிள்ளைகளாவது நன்றாகப்படித்து பெயர்வாங்கவேண்டும் என்று நினைக்கிறேன். தயவு செய்து என் பிள்ளைகளுக்கு நீதான் படிப்புச் சொல்லித்தரவேண்டும்! மறுக்க கூடாது!” என்று கேட்டது முதலை.
    “விருந்து தானாக வந்து சேருகிறது! அதை மறுப்பானேன்!” என்று மனதில் சொல்லிக் கொண்ட நரி, இருந்தாலும் பிகுவாக,   “எனக்கோ பல தொல்லைகள், அரசருக்கு ஆலோசனை சொல்லவே நேரம் போதாது. இருந்தாலும் நீ கேட்கிறாயே என்று உன் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லித் தருகிறேன்! ஆனால் ஒன்று இதற்கு பிறகு இந்த மாதிரி நிறைய பேரை என்னிடம் அனுப்பிவிடக் கூடாது!” என்று பிகு பண்ணிக் கொண்டது.
      “சரி நரியாரே! இதோ என் பிள்ளைகள்! இனி இவர்கள் உன் பொறுப்பு!” என்றது முதலை.
    “ஏழு பிள்ளைகளா! சரியாக ஏழே நாளில் உன் பிள்ளைகளை படித்தவர்களாக மாற்றிக் காட்டுகிறேன்! ” என்று ஜம்பமாக சொன்னது நரி.
    முதலை விடைபெற்று சென்றது முதலைக் குட்டிகளை மறைவாக கூட்டிச் சென்றது நரி. தன் மனைவியிடம் சொன்னது.  “முட்டாள் முதலை அதன் குட்டிகளை நமக்கு விருந்தாக கொடுத்துச்சென்றுவிட்டது. இன்னும் ஒருவாரத்திற்கு நமக்கு உணவுப் பஞ்சம் இல்லை!” என்றது.
     “படி முதலை! படி முதலை!
      ஏழு படியிலே ஒருபடி போனா ஆறு!
      என் வயித்துலபோயி பசியாறு!” இப்படி பாடம் சொன்ன  நரி ஒரு முதலைக் குட்டியை கழுத்தை திருகிச் சாப்பிட்டது.
        மறுநாள் முதலை  தன் குட்டிகளை பார்க்கவந்தது. பொந்துக்குள் ஒளிந்த நரி ஒவ்வொன்றாக ஆறு குட்டிகளை முதலையின் கண்ணுக்கு காண்பித்தது. ஏழாவதாக ஆறாவது குட்டியையே திரும்பவும் காண்பித்து ஏமாற்றியது. எல்லா குட்டிகளும் ஒரே மாதிரி என்பதால் முதலையினால் இந்த சூழ்ச்சியை புரிந்து கொள்ள முடியவில்லை. ஏழு குட்டிகளும் நன்றாக இருப்பதாக நினைத்துக் கொண்டு திரும்பிவிட்டது.
முதலை வந்து போனவுடன் மீண்டும் நரி பொந்தில் இருந்து ஒரு குட்டியை எடுத்து பாடம் சொன்னது.
    “முதலையே படி! முதலையே படி!
    முழுசா என் வயித்துல போய் படி!” அப்படி சொல்லி இந்த குட்டியையும் திருகித் தின்றுவிட்டது.
  அடுத்த நாள் முதலை வந்தபோது ஐந்தாவது குட்டியையே இருமுறை காண்பித்து ஏமாற்றிவிட்டது. மகிழ்ச்சியடைந்த முதலை தன் குட்டிகள் நன்றாக பாடம் படித்துவருவதாக நினைத்துக் கொண்டது.
  இப்படி ஆறு குட்டிகளை முழுங்கிவிட்டது. அன்று முதலைவந்ததும் ஒரே குட்டியையே ஏழு முறை காண்பித்து ஏமாற்றியும் விட்டது. முதலை திரும்பி சென்றதும் பொந்தில் இருந்து அந்த கடைசி குட்டியையும் எடுத்து,
    “ஏழுநாளு விருந்து! இலையுமில்லே! மலையுமில்லே!
   எங்க வீடு தேடிவந்த விருந்து! ஏப்பம் விட்டு
   மிச்சம் மீதியையும் அருந்து!” என்று பாடி அந்த குட்டியையும் கொன்று தின்றுவிட்டது.
    இப்போது நரியிடம் ஒரு முதலைக் குட்டியும் இல்லை! முதலைவந்து கேட்டால் என்ன சொல்வது? நாளைக்கு எதை காண்பிப்பீர்கள் என்று மனைவி நரி கேட்டது.
    “நாம் இங்கிருந்தால்தானே முதலை வந்து கேட்கும். இந்த ஆற்றுக்கு அக்கரையில் அடர்ந்த காடு இருக்கிறது. நாம் அங்கே சென்றுவிடுவோம். பிறகு முதலையால் நம்மை கண்டுபிடிக்க முடியாது. என்று சொன்ன நரி பொந்தைவிட்டுப்புறப்பட்டது.
    மறுநாள் முதலை வந்து பொந்துக்குள் பார்த்தது. நரியைக் காணவில்லை!  “நரியாரே! நரியாரே!” என்று கூப்பிட்டுப் பார்த்தது பதில் இல்லை. அப்போதுதான் கவனித்தது பொந்தின் உள்ளேயும் வெளியேயும் எலும்புகள் சிதறி இருப்பதை. தன் குட்டிகளையும் காணவில்லை நரியையும் காணவில்லை என்றபோதுதான் முதலைக்கு நரி தன் குட்டிகளை கொன்று தின்றது புத்திக்கு உரைத்தது. அது “ஓ” வென்று அழுதது.

   அதற்கு கட்டுக்கடங்காத கோபம் ஏற்பட்டது. எப்படியாவது நரியைக் கொன்று பழி தீர்ப்பது என்று முடிவு செய்து நரியைத் தேடி அங்கும் இங்கும் அலைந்தது. இறுதியாக ஆற்றங்கரை யோரம் சென்ற போது நரியும் அதன் மனைவியும் ஆற்றை நீந்தி கடப்பதை பார்த்தது.
   “ ஓகோ! என் குட்டிகளை கொன்றுவிட்டு நீந்தி தப்பிக்கிறீர்களா?” அதுதான் நடக்காது! இதோ வருகிறேன்! என்று நீரில் குதித்தது. நிலத்தை விட நீரில் முதலையின் பலம் அதிகம். அது வேகமாக நீரில் நீந்தும். அதனால் விரைவாக நரியை பிடித்துவிட்டது. அதற்குள் மனைவி நரி மேலேறிவிட்டது.  முதலை நரியின் காலைக் கவ்வியது. அப்போது நரி, தனது மனைவியிடம்,  “கண்ணே! நீ கரையேறிவிட்டாயா? யாரோ என் குச்சியை இழுக்கிறார்கள். குச்சியை இழந்துவிடுவேனோ? என்று பயமாக உள்ளது.” என்றது.
     அடடே! நரியின் கால் என்று குச்சியைப் பிடித்துவிட்டோம் போல! என்று முதலை தன் வாயை திறந்தது. இதுதான் சமயம் என்று நரி காலைவிடுவித்துக் கொண்டு கரையேறி ஓட்டம் பிடித்தது. கரையில் முதலையால் வேகமாக செல்ல முடியவில்லை. அதனால் நரியை பிடிக்க முடியவில்லை.
     தன்னை நரி ஏமாற்றியதை அறிந்த முதலை மேலும் கோபம் கொண்டு நரியை பழி தீர்க்க அந்த காட்டிலேயே அலைந்தது. ஆனால் தந்திரமான நரியோ அதன் கண்ணில் மண்ணைத்தூவி தப்பித்தது. தந்திரத்தை தந்திரத்தால் வெல்ல வேண்டும் என்று ஒரு நாள் முதலை இறந்துவிட்டார் போல பாசாங்கு செய்து படுத்துக் கிடந்தது.
   நரி கரையின் அருகில் வந்து முதலை செத்துக்கிடப்பதை பார்த்தது.  பெண் நரி, ஆகா முதலை செத்துக் கிடக்கிறது! இன்று நமக்கு விருந்துதான் என்றது. ஆண் நரியோ பொறு! என்றது. முதலையை கவனித்து பார்த்தது. பின்னர் முதலை செத்துப்போனாலும் அதன் வால் அசையுமே! என்று சொன்னது.
   அப்போது முட்டாள் முதலை, வாலை அசைத்தது. அப்போதுதான் நரி அதன் அருகில் வரும் என்று அது நம்பியது. முதலை உயிருடன் இருப்பதை அறிந்த நரி ஓட்டம் பிடித்தது. முதலை ஏமாந்து போனது.
   அந்த நதியில் ஓர் குறிப்பிட்ட இடத்தில் நீர் அருந்த நரி வருவது உண்டு. இதை கவனித்த முதலை அங்கு ஒளிந்து கொண்டது. நரி வரும்போது பிடித்து அதை விருந்தாக்க முடிவு செய்தது. அங்கு வந்த நரி அங்கே வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தது. நீரில் மீன்கள் இல்லாததை கண்டது. அடடே! இந்த மீன்கள் எல்லாம் எங்கே போய்விட்டது. கண்டிப்பாக இங்கே முதலை ஒளிந்து இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு, “இந்த தண்ணீர் தெளிவாக இருக்கிறதே! இதை குடிக்க முடியாது. கலங்கிய தண்ணீர்தான் நன்றாக இருக்கும் என்றது. இதைக் கேட்ட முதலை நீரை கலக்க துவங்கியது.
  “ஓ முட்டாள் முதலையே நீ இங்குதான் ஒளிந்து கொண்டிருக்கிறாயா? நான் வரவில்லை!” என்று ஓடியது நரி.
மற்றொருநாள் நரி நண்டுகளை பிடித்து சாப்பிடும் குட்டையில் முதலை ஒளிந்து இருந்தது. உஷாரான நரி, இந்த குட்டையில் நண்டுகளே இல்லை போல! இருந்தால் அவை மிதப்பதை நான் பார்ப்பேனே! என்று உரக்கச் சொன்னது. உடனே முதலை உள்ளே இருந்த நண்டுகளை கிளற வாலை மிதக்கவிட்டது.
   புரிந்துகொண்ட நரி! முட்டாள் முதலையே! உன்னால் என்னை பிடிக்க முடியாது! என்று ஓட்டம் பிடித்தது.
 அப்புறம் முதலை பல முயற்சி செய்தும் நரியை பிடிக்க முடியவில்லை! அது தன் ஏமாற்றத்தை உணர்ந்து வெட்கப்பட்டு நதிக்குள்ளேயே கிடந்தது.

 (செவிவழிக்கதை)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



Comments

  1. செவிவழிக்கதை என நாம் சாதாரணமாகச் சொல்லிவிடமுடியாது. இவ்வாறான பல வாய்மொழிக்கதைகளே வரலாற்றை வடிவமைக்க பெரிதும் உதவுகின்றன. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அடேங்கப்பா இந்த நரி தொடர்ந்து முதலையை ஏமாற்றவும் நரியை 67 வருடங்களாக ஏமாற்றிவரும் அரசியல்வாதிகளாகவும், முதலையை மக்களாகவும் நினைத்து தப்புதப்பா கணக்கு போட்டு விட்டேன்.
    ஐயோ,,, ஐயோ,

    ReplyDelete
  3. இதுதான் நரித் தந்திரம் என்பார்களோ?!!!

    ReplyDelete
  4. நரி என்றாலே தந்திரம் தானே அருமை தொடர வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  5. அருமையான கதை ..பகிர்விற்கு நன்றி சகோ

    ReplyDelete
  6. உங்கள் தலத்தை இன்று வலைச்சரத்தில் பாராட்டியுள்ளேன்.
    இணைப்பு http://blogintamil.blogspot.in/2014/08/blog-post_10.html
    வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  7. ஆஹா! இனிக்கு இந்த கதையை சொல்லித்தான் நிறைகிட்ட இருந்து தப்பிக்கணும்:) சூப்பர் சார்!!

    ReplyDelete
  8. அருமையான கதை

    ReplyDelete
  9. இந்த நரிக்கதை மிக அருமை.

    ReplyDelete
  10. வணக்கம்
    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோhttp://blogintamil.blogspot.com/2014/12/2009.html?showComment=1418843328533#c6833658329650163781

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2