ஏழுமலையானுக்கு எவ்ளோ சொத்து? இளையராஜாவுக்கு பிடிக்காத முதல் மரியாதை! கதம்ப சோறு! பகுதி 48

கதம்ப சோறு பகுதி 48

வாரா வாரம் புதன் கிழமைகளில் இந்த பகுதியை எழுதி வந்தேன். இந்த வாரம் புதனன்று வேலைப்பளு அதிகம் அதனால் பதிவு எழுதவில்லை. இன்று மணக்கிறது கதம்ப சோறு.

சமூக வலைதளங்களை கட்டுப்படுத்தும் சட்ட மசோதா!

    இந்த முறை சட்டசபையில் பல்வேறு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் உருப்படியான ஒன்று என்றால் அனுமதியின்றி கிணறு தோண்டினால் ஓர் ஆண்டு சிறை என்ற மசோதாதான். ஆங்காங்கே ஆழ்துளைக் கிணறுகள் பிள்ளைகளை பலிவாங்கிக் கொண்டிருக்கையில் இது போன்ற சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால் பலிகள் குறையும். அரசுக்கும் எங்கெங்கு கிணறுகள் உள்ளன என்ற கணக்கும் தெரியும். இதிலும் பணம் வாங்கிக் கொண்டு அனுமதி கொடுப்பார்கள்தான். இருந்தாலும் குற்றம் மட்டுப்படும். அடுத்த சட்டம் தமிழக கலாசாரம் சம்பந்தப்பட்டது. தமிழ்க் கலாச்சாரம் இப்போது பேண்ட் அணிந்து கிளப்புக்கு சென்று குடித்து கூத்தாடி மகிழ்வது என்றாகிவிட்டது. இதனால் டிஸ்கோத்தே கிளப்புகள் ஆங்காங்கே முளைத்து நிறைய கல்லா கட்டுகின்றன. அந்த கிளப்புக்களில் வேட்டி அணிந்து செல்வதை தடுத்தால் ஓராண்டு சிறையாம். வேட்டிக்கு மதிப்பு கொடுக்கிறேன் பேர்வழி என்று இப்படி ஒரு சட்டம். எப்படியோ தமிழன் வேட்டி அவிழ்ந்து மானம் கெட்டால் பரவாயில்லை! சரக்கு அடிக்காமல் இருக்க கூடாது. அப்போதுதானே அரசுக்கு வருமானம். இப்படியெல்லாம் இனிமேல் எழுத முடியாது. ஆம் சமூக வலைதளங்களையும் வலைபதிவுகளையும் கழுத்தை நெரிக்க ஒரு சட்டமசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப குற்ற சட்ட திருத்தம் என்னும் அது தகவல் தொழில்நுட்ப குற்றங்களை தடுப்பதற்காக என்று சொல்லப்பட்டாலும் சமூக வலைதளங்களை குறி வைத்தே கொண்டுவரப்பட்டுள்ளது. சமூகம் குறித்த விழிப்புணர்வை, அரசுக்கு எதிரான கருத்துக்களை இனி தைரியமாக பதிவு செய்ய முடியுமா என்று தெரியவில்லை. இந்த சட்டத்தின் மூலம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து ஓராண்டு சிறையில் தள்ளி விடுவார்களாம். சில எதிர்கட்சிகளும் வலைபதிவர்களும் இந்த சட்டத்தை எதிர்த்து குரல் கொடுத்தாலும் சட்டம் நிறைவேறி விட்டது. இது கருத்து சுதந்திரத்தை பறிக்கும் மோசமான சட்டம். இனி வலைபதிவர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டியதுதான்.

எதிர்கட்சியாக ஆசைப்படும் காங்கிரஸ்!

    மக்களவையில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் இப்போது எதிர்கட்சி அந்தஸ்துக்கு கூட கெஞ்சும் நிலைக்கு வந்துவிட்டது. குறிப்பிட்ட அளவு உறுப்பினர்கள் இல்லாததால் இந்த முறை எதிர்கட்சி அந்தஸ்து காங்கிரஸுக்கு வழங்கப்படவில்லை! பதவி சுகம் அனுபவித்தே பழகி விட்ட அந்த கட்சி பா.ஜ. இந்த விஷயத்தில் பழிவாங்குவதாக கூறிவருகிறது. நீதிமன்றத்தையும் அணுகியது. நீதிமன்றமோ இதில் தலையிடமுடியாது சபாநாயகர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறிவிட்டது. பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் பதவி என்பது கேபினட் அமைச்சர் பதவிக்கு சமமானது. எப்படியும் அதை தன் மகனுக்கு பெற்றுத் தந்துவிட வேண்டும் என்று துடிக்கிறார் சோனியா. பதவி, பட்டம், பவிசுகளையே எதிர்பார்க்கிறீர்களே மேடம்? இதுவரை மக்களுக்கு என்ன சேவை செய்து சாதித்து விட்டீர்கள்? அப்படி செய்து இருந்தால் உங்களைவிட்டு ஆட்சி போயிருக்காதே! இனியும் பதவிக்கு ஆசைப்படாமல் மக்களுக்கு உருப்படியாக செய்து மக்கள் மனதில் இடம்பெற முயற்சியுங்கள்!

மானம் போச்சே தோனி!

   இந்திய கிரிக்கெட் அணி  வெளிநாடுகளில் பெரிதாக ஒன்றும் சாதித்தது இல்லை. முன்னாள் ஜாம்பாவான்கள் கவாஸ்கர், கபில்தேவ், அமர்நாத், போன்றோர் அணியில் இருந்தபோதே உதைபட்டுத்தான் திரும்பும். இந்த நிலையை கொஞ்சம் மாற்றிக் காண்பித்தார் சவுரவ் கங்குலி. களத்தில் துணிச்சலாக போராடும் குணத்தைக் கொண்டவர் கங்குலி. உணர்ச்சிகரமான கேப்டனும் கூட, இவர் அணியில் இருந்த போது சச்சின், டிராவிட், கும்ளே, ஜாகிர், ஹர்பஜன்,லக்‌ஷ்மன் போன்ற உலகத் தரமான ஆட்டக் காரர்கள் இருந்தார்கள். தோனியைக் கண்டெடுத்தவரும் இவரே! இவர் தலைமையில் வெளிநாட்டு மண்ணில் குறிப்பிடத் தக்க வெற்றிகளை பெற்றது இந்திய அணி. இன்றளவும் வெளிநாட்டில் அதிக வெற்றிகளை குவித்த கேப்டன் அவரே!. அவருக்குப் பின் கேப்டன் ஆன தோனி  சில வெற்றிகளை குவித்ததும் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். ஆனால் இன்று நிலைமை தலைகீழ் ஆகிவிட்டது. லார்ட்சில் குறிப்பிடத் தக்க வெற்றியை பெற்றது சரிதான். ஆனால் அடுத்த இரண்டு டெஸ்ட்களை வெல்லாவிட்டாலும் டிராவாவது செய்திருக்க வேண்டாமா? கேப்டனாக இருப்பவர் துணிச்சலாக முடிவெடுக்க வேண்டும். ஒரே டீமை வைத்துக் கொண்டு தொடர்ந்து சொதப்பும் கோலியையும், தவானையும் சேர்த்துக் கொண்டு சொதப்பலான பந்துவீச்சு வியுகத்தை வைத்துக் கொண்டு இவர் எப்படி அணியை கரையேற்றப்போகிறார் என்று தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை இவர் டெஸ்ட் அணியை வழிநடத்த சிறந்த கேப்டன் இல்லை என்றே தோன்றுகிறது. இன்று நடைபெறும் டெஸ்டில் ஜெயித்தால் தொடரை சமன் செய்யலாம். இதையாவது செய்யாவிட்டால் இருக்கும் கொஞ்சமானத்தையும் கப்பல் ஏற்றிவிட்டு திரும்புங்கள்!.

அச்சுறுத்தும் எபோலா வைரஸ்!

  மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் வைரஸ் இது. இதுவரை 1500க்கும் அதிகமான பேரை பலி கொண்டு இருக்கிறதாம். இது ரத்தம் மூலம் பரவுகிறது என்று சொல்லப்படுகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்தவரை தொடும்போதும் பரவுகிறது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்து உள்ளது. இந்த மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் தமிழகத்தின் தேனி மாவட்டத்தை சேர்ந்த பலர் பணிபுரிகின்றனர். இவர்களையும் இந்த நோய் தொற்றியிருக்க கூடுமோ என்று அவர்களின் உறவினர்கள் அஞ்சுகின்றனர். அவர்களை விரைவில் தாயகம் திரும்புமாறு வற்புறுத்தி வருகின்றனர். இதனிடையே இந்த நோய் குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை என்பது வருத்தமாக உள்ளது. அத்தகைய நோய் தொற்று உள்ள நாடுகளில் இருந்து வருவோரையும் நோய் தொற்றியிருக்க வாய்ப்பு உள்ளது. எனவே அவர்களை கண்காணிக்க வேண்டியுள்ளது. இந்தியா முழுவதும் துறைமுகங்கள் விமானநிலையங்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளன. இதனிடையே இந்த ஆப்பிரிக்க நாட்டில் இருந்துவந்த தேனி வாலிபரின் இரத்த மாதிரி புனே ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது தமிழக சுகாதாரத் துறையின் அலட்சியத்தையே காட்டுகிறது. மேலும் தமிழகம் சுகாதாரத்துறையில் முன் மாதிரியாக உள்ளது என்று சொல்லிக் கொண்டாலும் ‘எபோலா, பிளேக், ஆந்த்ராக்ஸ்’ போன்ற வைரஸ்களை கண்டறியும் வசதி இன்னும் தமிழகத்தில் இல்லை. இது போன்ற ஆராய்ச்சி மையங்களை அமைக்க எந்த கழக ஆட்சியும் முனையவில்லை என்பது வருந்தற்குரியது. இது போன்ற மையங்களை அமைக்க 5 கோடி செலவாகும். இதை மத்திய அரசிடமிருந்து மானியமாகவும் பெறலாம் என்ற போதும் தமிழகம் இன்னும் ஏன் விழிப்புணர்வு அடையவில்லை என்பது கேள்விக்குறி?


கிச்சன் கார்னர்!

  கோல்டன் பால்ஸ்!


தேவையானவை:  மேல்மாவு தயாரிக்க: உருளைக்கிழங்கு 2 ஜவ்வரிசி 2 மேசைக்கரண்டி, சோளமாவு 1 மேசைக்கரண்டி, மிளகாய்ப்பொடி 1 தேக்கரண்டி, எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி, கரம்மசாலா பொடி 1 தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு. பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை சிறிதளவு.
பூரணம் செய்ய: பனீர்  3 மேசைக் கரண்டி, மிளகுப்பொடி ½ தேக்கரண்டி சாட் மசாலா ½ தேக்கரண்டி உப்பு சிறிதளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்தபின் அத்துடன் எல்லா மசாலா பொருள்களும் சேர்க்கவும். ஜவ்வரிசியை இருபது நிமிடம் ஊற வைத்து பிழிந்து அத்துடன் சேர்க்கவும். பனீருடம் மற்ற பொருட்களை சேர்த்து பிசையவும். மேல் மாவு, பூரணம் இரண்டையும் சம உருண்டைகளாக செய்து மாவில் பூரணத்தை வைத்து மூடி  உருட்டி பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். மிக ருசியுள்ள கோல்டன் பால்ஸ் ரெடி.
(மங்கையர் மலர் இதழில்படித்த குறிப்பு)

டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்!

  பிறந்தநாள் மற்றும் திருமண விழாக்களுக்கு கேக் வாங்கும்போது பிளாஸ்டிக் கத்தி கொடுப்பார்கள். கேக் வெட்டிய பிறகு அந்த கத்தியை தூக்கி எறியாமல் மிக்சி இடுக்குகளில் ஒட்டியிருக்கும் அழுக்குக்களை சுத்தம் செய்ய பயன்படுத்தலாம்.

தேவையில்லாத துணிப்பைகள் நிறைய சேர்ந்துவிட்டதா? அவற்றை பிரித்து ஓரம் தைத்து வைத்துக் கொண்டால் சமையலறையில் அடுப்புத்துடைக்கவும், கைகள் துடைக்கவும் பயன்படுத்தலாம்.


வர மிளகாயை வறுக்கும் போது நெடி வராமல் இருக்க மிளகாயுடன் சிறிது உப்பு சேர்த்து வறுத்தால்நெடி வராது. காரமும் குறையாது.

ஜலதோஷத்தால் அவதிப்படுபவர்கள் அகன்ற பாத்திரத்தில் நீரைக் கொதிக்க வைத்து ஒரு கைப்பிடி புதினா இலைகளை போட்டு ஆவி பிடித்தால் உடனே நிவாரணம் கிடைக்கும்.

பழைய துடைப்பங்களின் பிளாஸ்டிக் குழாய்களை தூக்கி எறியாமல் செடி கொடிகளுக்கு பந்தல் அல்லது கம்பு நடும்போது கம்பை இந்த குழாயில் விட்டு நட்டால் விரைவில் அரித்து போகாமல் நீண்ட நாள் உழைக்கும்.

ஏழுமலையானுக்கு எவ்ளோ சொத்து!

  திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினமும் பல்லாயிரக் கணக்கானவர்கள் வருகிறார்கள். அவர்கள் காணிக்கையும் செலுத்துகிறார்கள். இப்போது திருப்பதி ஏழுமலையானுக்கு நாடு முழுவதும் 4200 ஏக்கர் அசையாச் சொத்துக்கள் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனுடைய இப்போதைய மார்க்கெட் மதிப்பு 90 ஆயிரம் கோடியாகும். திருப்பதி ஏழுமலையானை நாள் ஒன்றுக்கு சுமார் 45 ஆயிரம் முதல் 65 ஆயிரம் பக்தர்கள் தரிசிக்கின்றனர். நாள் ஒன்றுக்கு 80 லட்சம் முதல் 1.5 கோடி வரை உண்டியல் காணிக்கையாக கிடைக்கிறது. இதனால் ஏழுமலையானின் ஆண்டுவருமானம் 600 கோடி முதல் 700 கோடி ஆகும். இது தவிர தங்கம், வெள்ளி, வைரம் பல நகைகளும் உண்டு. 2009 ஆம் ஆண்டு ஆந்திர உயர்நீதிமன்றத்தில் தேவஸ்தானம் தெரிவித்த கணக்குப்படி 12000 கோடி மதிப்பிலான தங்க நகைகளும் 11000 கோடி மதிப்பிலான வைர நகைகளும் உள்ளது. சமீபத்தில் சென்னை திருவான்மீயூரை சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் தனக்கு சொந்தமான இடத்தை திருப்பதி தேவஸ்தானத்திற்கு தானமாக வழங்கினார். இதன் சந்தை மதிப்பு 5 கோடி என்று சொல்லப்படுகிறது. அரசுமதிப்பு 1.88 கோடி அதற்கு பத்திர பதிவு கட்டணம் 17 லட்சம் செலுத்தி இந்த இடத்தை ஏழுமலையானுக்கு வழங்கினார் அந்த பக்தை. மேலும் பத்துகோடி மதிப்பிலான இன்னொரு இடத்தை வழங்க தயாராக உள்ளதாகவும் ஆனால் பத்திரபதிவு கட்டணத்தை தள்ளுபடி செய்தாலோ அல்லது யாராவது ஏற்றுக்கொண்டாலோ இதனை உடனடியாக வழங்கத் தயார் என்று தெரிவித்துள்ளார். ம்..ஊகும்! கொடுத்து வைத்த ஏழுமலையான்!

இளையராஜாவுக்கு பிடிக்காத முதல் மரியாதை!


 மேகா என்ற படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இளையராஜா கூறியது, என்னிடம் முதல் தடவை வரும்போது எப்படி இருக்கிறார்களோ அதே மாதிரி கடைசிவரை இருக்கிறவங்க நிறைய பேர் இருக்காங்க! மாறினவங்களும் இருக்காங்க! அதுபற்றி நான் கவலைப்படவில்லை! நீங்கள் ஒருதடவை பார்த்து ‘த்தூ’ என்று துப்பிய படத்தை எல்லாம் பின்னணி இசை கோர்ப்பதற்காக 4 முறை பார்த்திருக்கிறேன். பாரதிராஜாவின்  ‘முதல் மரியாதை’ படத்தை முதல் முறை பார்த்த போது அப்போதிருந்த மனநிலையில் எனக்கு பிடிக்கவில்லை. நான் எழுந்துபோய் விட்டேன். ‘என்ன நீ படம் பாத்துட்டு போயிட்ட’ என்று பாரதிராஜா கேட்டபோது ‘வேலை இருக்கு என்று கூறி சமாளித்துவிட்டேன். எனக்கு படம் பிடிக்கவில்லை என்று அவருக்குத் தெரிந்துவிட்டது. அந்த படத்தின் ஜெயில் காட்சிக்கு பின்னணி இசை முடித்துவிட்டு பாரதிராஜாவை படம் பார்க்க அழைத்தேன். அதைப்பார்த்ததும் பாரதி ராஜாவுக்கு கண்ணீர் வந்தது. என் கைகளை பிடித்துக் கொண்டு  ‘உனக்கு படம் பிடிக்காமலேயே இப்படி பண்ணியிருக்கியே…’ என்று கேட்டார்.
   பிடிச்சிருந்தாலும் இப்படித்தான் பண்ணியிருப்பேன். படம் எனக்கு பிடிக்குது பிடிக்கலை என்பது என்னோட தனிப்பட்ட விஷயம். ஆனால் இசை என் சரஸ்வதி. நான் என் தொழிலுக்கு துரோகம் பண்ண மாட்டேன். நான் கூப்பிட்டதும் ஓடி வருதே ஏழு ஸ்வரங்கள்… அதுக்கு துரோகம் பண்ணமாட்டேன் என்றார் இளையராஜா.

படிச்சதில் பிடிச்ச கவிதை!

லேட் எனப்படுவது யாதெனில்...
   அதிகாலை துயில் எழுப்புகையில்
என் மீது கால்போட்டு எழமறுக்கும் அவன்
வாசலில் நின்று பல்துலக்கினால்தான்
நுரை வருமெனப் புலம்புவான்.
ஜில் தண்ணி, கண்ணு எரியுமெனக்
குளிக்க மறுத்து
திணித்த உணவை வாயில் வைத்து
வேடிக்கைப் பார்த்து
அடுத்த வாய் உணவுக்கு அனுமதி மறுப்பான்.
சீருடை அணிவித்ததும்
பெல்ட் காணவில்லை என
அவன் ஒளித்து வைத்தது நினைத்து
நகைப்பான்.
அம்மாவுக்குப் பறக்கும் முத்தமிட்டு
சாவகாசமாகக் கிளம்ப்
பள்ளிக் கதவை அடைத்ததைப் பார்த்து
‘ஓ’வென அழும் அவன் தான்
முணுமுணுக்கிறான்…..
 ‘மெதுவா வண்டி ஓட்டி வந்த
உன்னாலதான்பா லேட்டு!’
         ஆதி.சரவணன்.
ஆனந்தவிகடனில் படித்த இந்த கவிதை குட்டி பசங்கள் உள்ள எல்லோருமே ரசிப்பார்கள் என்று தோன்றியது. என் பெண்ணின் சேட்டைகளையும் அப்படியே ஞாபகப்படுத்தியது.

இந்த முறை பதிவு கொஞ்சம்.. இல்லை இல்லை நிறையவே நீண்டுவிட்டது! அடுத்த முறை சுருக்கித் தருகிறேன்! நன்றி!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!

Comments

 1. கருத்து சுதந்திரத்தை பறிக்கும் மோசமான சட்டம்.
  இது எதிர்பார்த்ததுதான் நண்பரே....

  ReplyDelete
 2. கதம்பம் நன்றாகவே மணக்கின்றது!

  தமிழ்நாட்டில் ஆராய்ச்சி மையங்கள் இல்லாதது குறைதான்....ஆனால் திருப்பதி ஏழுமலையான் லக்கியா என்பதை விட ந்மது ஜனங்கள் பாவப்பட்டவர்கள்...பின்ன இப்படி ஏழுமலையானுக்குப் ஃபீரியாக இடம் கொடுக்கும் மக்கள் அதை வைத்து எத்தனயோ சமூகத்திற்கு, உதவலாமே! ஏழுமலையானுக்கு எதற்குப் பணம் வேண்டும்....அவரல்லவா மக்களுக்குத் தரவேண்டும்.

  பகிர்ந்த கவிதை அருமை! ராஜா ராஜாதான்!

  ReplyDelete
 3. கலவையாய் கொடுத்த செய்திகள் கதம்பமாய் மணக்கிறது.
  கவிதை அருமை...

  ReplyDelete
 4. /// தகவல் தொழில்நுட்ப குற்ற சட்ட திருத்தம் என்னும் அது தகவல் தொழில்நுட்ப குற்றங்களை தடுப்பதற்காக என்று சொல்லப்பட்டாலும் சமூக வலைதளங்களை குறி வைத்தே கொண்டுவரப்பட்டுள்ளது. சமூகம் குறித்த விழிப்புணர்வை, அரசுக்கு எதிரான கருத்துக்களை இனி தைரியமாக பதிவு செய்ய முடியுமா என்று தெரியவில்லை. இந்த சட்டத்தின் மூலம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து ஓராண்டு சிறையில் தள்ளி விடுவார்களாம்///

  "குண்டர் சட்டமா", ஐயோ, சமூக வலைபதிவர்கள் அனைவரும் இனிமே நல்லா எக்சர்சைஸ் பண்ணி உடம்ப கொறச்சி ஒல்லியா வச்சுக்குங்க.

  இசைஞானி இளையராஜா பற்றிய பதிவு இதுவரை கேள்விப் படாதது. நன்றி

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2