புலி மாப்பிள்ளையும்! நரி மாமாவும்! பாப்பா மலர்!
புலி மாப்பிள்ளையும்! நரி
மாமாவும்! பாப்பா மலர்!
வெகு காலத்திற்கு முன்னால்
காட்டில் ஒரு நரி வசித்துவந்தது. அது மிகவும் தந்திரம் மிக்கது. புத்திசாலியான அது
இக்கட்டான தருணங்களில் இருந்து தன்னைக் காத்துக் கொள்வதில் வல்லமை மிக்கது. அந்த
காட்டில் ராஜா ஒருவரின் செம்மரி ஆட்டு பட்டி ஒன்று இருந்தது.
ராஜாவுடைய பட்டி என்பதால் அதற்கு நல்ல
கவனிப்பு. அந்த ஆடுகளுக்கு நல்ல மேய்ச்சல்! அது மட்டுமல்லாமல் நல்ல தீனியும்
வேளாவேளைக்கு கிடைக்க அந்த ஆடுகள் நன்கு கொழுத்து இருந்தது. நரிக்கு அந்த ஆடுகளை
பார்க்கும் போதெல்லாம் நாக்கில் நீர் ஊரும். இந்த ஆடுகளை அடித்துத் தின்றால்
நன்றாக இருக்குமே! என்றாவது ஒருநாள் இவைகளை சுவைபார்க்க வேண்டும் என்று நினைத்துக்
கொண்டது.
ஆனால் அதனால் அந்த பட்டியை நெருங்கக் கூட
முடியவில்லை! எந்த நேரமும் அங்கு ஆடுகளை காவல் காத்துக் கொண்டிருந்தனர்
மேய்ப்பவர்கள். நரியினால் ஆசையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே அது பூமியைத்
தோண்டியபடியே பட்டியை அடைந்தது. ஆனால அதன் பொல்லாத நேரம் அதனால் ஆடுகளை தின்ன
முடியவில்லை. காவல்காரர்களிடம் சிக்கிக் கொண்டது.
ஆடு மேய்ப்பவர்கள் நரியை பிடித்து ஓரிடத்தில்
கட்டிவைத்தனர். அவர்கள் ஆடு மேய்த்து களைத்துப் போய் இருந்தமையால் இந்த நரியை
நாளைப் பார்த்துக் கொள்வோம்! அதுவரை இங்கேயே கிடக்கட்டும் என்று வெளியேறிவிட்டனர்.
பிழைப்பதற்கு நாளை வரை சந்தர்ப்பம் இருக்கிறது என்றதும் பெருமூச்சு விட்டு நிம்மதி
அடைந்தது நரி.
இவ்வாறு நரி அங்கே மாட்டிக் கொண்டிருந்த
சமயம், புலி ஒன்று அந்தவழியாக சென்றது. அது ஒரு முட்டாள் புலி, நரி ஆட்டு
மந்தைக்குள் இருப்பதை பார்த்த அது ஆச்சர்யம் அடைந்தது. “ நரியாரே! இங்கு என்ன செய்கிறீர்?” என்று
கேட்டது புலி. “புலியாரே! நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்!” என்று நக்கலாக
சொன்னது நரி.
நரியின் நக்கலை புரிந்துகொள்ளாத புலி,
“அப்படியானால் பெண் எங்கே? மற்றவர்கள் எல்லாம் எங்கே?” என்று கேட்டது.
“மணப்பெண் இந்த நாட்டு இளவரசி! அவரை அழைத்துவர
மற்றவர்கள் போயிருக்கிறார்கள்!”
“ அப்படியானால் உன்னை ஏன் கட்டி
வைத்திருக்கிறார்கள்?”
“ எனக்கு இந்த திருமணத்தில் இஷ்டமில்லை!”
“என்னது? இளவரசியை மணந்து கொள்ள உனக்கு
விருப்பம் இல்லையா?”
“ஆமாம்! எனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டமில்லை!
சுதந்திரமாக சுத்தி அலைய விரும்பும் எனக்கு திருமணம் பிடிக்கவில்லை!”
“ அப்படியானால் நான் இளவரசியை மணந்து
கொள்கிறேன்! என்னை இங்கே கட்டி வைத்துவிடேன்!” என்றது புலி.
“என் மைத்துனர்கள் பொல்லாதவர்கள்! கிண்டல்
பேர்வழிகள்! அவர்கள் உங்களை கிண்டலும் கேலியும் செய்தால் பொறுத்துக் கொள்வீர்களா?”
“இளவரசி கிடைக்கும் போது இதெல்லாம் எனக்கு
சாதாரணம்!”
“முதலில் என்னை அவிழ்த்துவிடுங்கள்! நான்
உங்களை கட்டிவிடுகிறேன்!”
புலி நரியை அவிழ்த்துவிட நரியும் புலியை
கட்டிவைத்துவிட்டது. “புலியாரே! மைத்துனர்கள் சீண்டுவார்கள்! கோபப்பட்டு
விடாதீர்கள்! அப்புறம் பெண் கிடைக்காது!” என்று சொல்லிவிட்டு பறந்துவிட்டது நரி.
மறுநாள் ஆடு மேய்ப்பவர்கள் வந்தார்கள்.
மந்தைக்குள் புலி இருப்பதை பார்த்து முதலில் பயந்தாலும் அதை கட்டி வைத்திருப்பதை
பார்த்து “பயப்பட ஒன்றுமில்லை!” என்று
அதன் மீது கல்லை எறிந்தார்கள்.
இது மைத்துனர்களின் விளையாட்டு! என்று புலி
ஹிஹி! என்று சிரித்தபடி இருந்தது.
வேலைக்காரர்களுக்கு தைரியம் வந்துவிட்டது.
மூங்கில் கழிகளாலும் ஈட்டியாலும் கற்களாலும் தாக்க ஆரம்பித்தார்கள். “ஹாஹா” “ஹிஹி!” என்று சிரித்து கொண்டிருந்த புலிக்கு
வலி தாங்க முடியவில்லை! “ போதும் விளையாடியது போதும் மைத்துனர்களே! முதலில்
இளவரசியை அழைத்து வாருங்கள்! என்றது.
வேலைக்காரர்கள் ஒரு பெரிய ஈட்டியை கொண்டு
வந்து புலியை தாக்க, இதற்கு மேலும் தாக்குப் பிடிக்க முடியாது! எனக்கும் பெண்ணும்
வேண்டாம் ஒன்றும் வேண்டாம் அடித்து பிடித்துக்கொண்டு ஓடியது புலி.
அப்போது காட்டில் ஒரு மர ஆப்பின் மீது
அமர்ந்து கொண்டு இருந்தது நரி. ஆப்பு என்பது மரவெட்டிகள் ஒரு மரத்தை பிளக்க ஒரு
பெரிய கட்டையை பாதியாக உடைத்து பிளக்க பிளவில் ஒரு கட்டையை செருகி வைப்பது
வழக்கம். அந்த ஆப்பை அடித்து இரண்டாக பிளப்பர். அந்த மாதிரி ஒரு கட்டை மீது
அமர்ந்திருந்தது நரி. அங்கே வந்தது புலி. நரி நமுட்டு சிரிப்புடன், “புலியாரே! திருமணம் நல்லபடி முடிந்ததா?”
என்றது.
நரியின் பக்கத்தில் வந்தமர்ந்த புலியின் வால்
அந்த ஆப்பில் சிக்கிக் கொண்டது. அது மிகவும் வெறுப்பாக, “அடப் போப்பா! உன்
மைத்துனர்கள் பொல்லாதவர்கள்! அவர்களின் விளையாட்டை தாங்க முடியவில்லை! அவர்கள்
என்னை அடித்து நொறுக்கிவிட்டார்கள்! நான் ஓடிவந்துவிட்டேன்” என்றது புலி.
“ நல்ல காரியம் செய்தாய்! சரி நாம் அரட்டை
அடிப்போம்!” என்று சொல்லியபடியே புலியின்
வால் மர பொந்தில் சிக்கியிருப்பதை பார்த்த நரி “இப்போது வேடிக்கையை பார்!” என்றபடி
ஆப்பை நகர்த்திவிட்டது. மறுகணம் டமால் என்ற ஓசையுடன் புலியின் வால் மரக்கட்டையில்
சிக்கிக் கொண்டது. வலியால் துடித்த புலி மரக்கட்டையோடு உருண்டது. நரியும் அதனுடன்
சேர்ந்து பாசாங்காய் உருண்டது. எவ்வளவோ முயன்றும் ஆப்பில் இருந்து வால் வெளியே
வரவில்லை! அப்படியே உருண்டுபோய் அருகில் இருந்த ஓர் அல்லிக் குளத்தில் விழுந்தன
இரண்டும்.
அங்கிருந்த தவளைகளை பிடித்து உண்ட நரி, புலி
மாப்பிள்ளையே சாப்பிடுகிறீரா? என்றது.
வலியாலும் பசியாலும் துடித்த புலி, “சாப்பிட
என்ன இருக்கிறது?” என்றது.
“வேறென்ன இருக்கும்? இந்த
அல்லிப்பூக்களைத்தான் சாப்பிட வேண்டும்! இதை சாப்பிட்டு எனக்கு வயிறு
ஊதிப்போய்விட்டது!” என்றது நரி.
அல்லிப் பூக்களை தின்ன முடியாமல் தின்ற
புலிக்கு முகமும் தொண்டையும் வீங்கிப் போய்விட்டது. அதன் வால் வேறு ஆப்பில் சிக்கி
வலித்துகொண்டிருந்தது. அப்படியே ஒரு வாரம் சேற்றில் படுத்துக் கிடந்தது. இப்போது
நரி அந்த பக்கம் வந்தது. “என்ன புலியாரே!
இன்னுமா குணம் ஆகவில்லை! ”என்றது.
“உனக்கு எப்படி குணமானது?” என்று கேட்டது
புலி.
“நான் எனது கால்களையும் கைகளையும் நானே மென்று
தின்றேன்! எனது நோய் குணமாகிவிட்டது. பிறகு எனக்கு புதிய கால்களும் கைகளும்
முளைத்துவிட்டது!” என்றது நரி.
“ இதை ஏன் முதலிலேயே நீ சொல்ல வில்லை!”
“உன் கைகளையும் கால்களையும்
உன்னால் சாப்பிட முடியாது அல்லவா?” நரி சொன்னதும் புலிக்கு கோபம் வந்தது. “கேவலம்
ஒரு நரி! உன்னால் செய்ய முடிந்ததை நான்
செய்ய முடியாதா?” என்று கோபித்தது.
“ அவ்வளவு பெரிய கல்யாணத்தையே சின்ன
விளையாட்டுக்காக விட்டுவந்த நீ இதை செய்வாயா?” உசுப்பிவிட்டது நரி.
“இப்போது பார்! நான் தின்று காட்டுகிறேன்!
அப்புறம் குணமாகியபின் உன்னை கவனித்துக் கொள்கிறேன்! என்று உறுப்புக்களை தானே
தின்ன ஆரம்பித்தது புலி.
இரண்டு மூன்று தினத்தில் அதற்கு கடுமையாக
புண்கள் ஏற்பட்டு இறந்தும் போனது. சுவையான புலி மாமிசத்தை பயமில்லாமல் தின்ன
ஆரம்பித்தது நரி.
(செவிவழிக்கதை தழுவல்)
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
கதை நல்ல சுவையாக இருந்தது நண்பரே...
ReplyDeleteஅழகான பாப்பா கதை! எங்கிருந்துதான் பிடிக்கின்றீர்களோ சுரேஷ்!
ReplyDeleteசெவிவழித் தழுவல் கதையானாலும் மனதைத் தழுவியது !
ReplyDeleteஆஹா! கதை ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு சார்!!
ReplyDeleteசின்ன புள்ளங்களுக்கு ஏத்த சுவாரஸ்யமான கதை, i like it...
ReplyDelete