உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 68
உங்களின் தமிழ் அறிவு
எப்படி? பகுதி 68
வணக்கம் அன்பர்களே! சென்ற
இரண்டு வாரங்களாக உவமைநயம், இறைச்சிப்பொருள் குறித்து படித்தோம். அது கொஞ்சம்
கடினமாகத்தான் இருந்தது. பக்கப்பார்வைகளும் குறைந்து இருப்பதைக் கொண்டு ஆழமான
இலக்கணம் யாரும் விரும்புவது இல்லை என்று அறிந்து கொள்ள முடிந்தது. இந்த பகுதியே
கூட ஒரு பொது அறிவுப்பகுதியாக தமிழ் நூலாசிரியர்கள் நூல்கள் பற்றி அறிந்து
கொள்ளக்கூடிய கேள்விபதில் பகுதியாகத்தான் முதலில் ஆரம்பித்தது. பின்னர் இலக்கணம்
கற்றுக்கொடுக்க ஆரம்பித்து இத்தனை பகுதிகள் வளர்ந்து விட்டது. சரி இன்று நாம்
படிக்கப்போகும் தலைப்பு இடைச்சொல்.
இலக்கணத்தில் சொல்லதிகாரத்தில் வரும் ஒரு பகுதி
இது. ஏற்கனவே சொல்லதிகாரத்தில் சில பகுதிகளை நாம் படித்தோம்.
இடைச்சொல் என்றால் என்ன?
தனித்து நின்று பொருள் தராது
பெயர்ச்சொல்லுக்கும் வினைச்சொல்லுக்கும் இடையில் வந்து பொருள் தரும் சொல்லுக்கு இடைச்சொல்
என்று பெயர்.
இடைச்சொல் என்பன, வேற்றுமை
உருபுகள், காலம்காட்டும் இடைநிலைகள், சாரியைகள், வினா எழுத்துக்கள், சுட்டு
எழுத்துக்கள், உவமை உருபுகள், அம்ம, கொல், மற்று, ஓ ஆகிய அசைச்சொற்கள் முதலியன
வாகும்.
இவை தனித்து நின்று பொருள் தராது.
பெயர்ச்சொல்லுக்க்கும் வினைச்சொல்லுக்கும் இடையில் நின்று பொருள் தரும்.
எ.கா: அவளோ வந்தாள்.
இத்தொடரில் அவள் என்னும்
பெயர் சொல்லோடு ‘ஓ’ என்ற எழுத்து சேர்ந்து வினாப்பொருளை உணர்த்துகிறது.
கரிகால் பெருவளத்தானும்
செங்குட்டுவனும் இமயத்தை நோக்கிப் படையெடுத்தனர்.
இத்தொடரில் ‘உம்’ என்ற உறுப்புக்கள் கரிகால் பெருவளத்தான்,
செங்குட்டுவன் என்னும் பெயர் சொற்களோடு
சேர்ந்து எண்ணும்மையாகி இடைச்சொல்லாயின.
இவ்வாறு தனித்து நின்று
பொருள் தராது பெயர்ச் சொல்லுக்கும் வினைச் சொல்லுக்கும் இடையில் வந்து பொருள்
தரும் சொல் இடைச்சொல் என்று பெயர்.
ஏகார இடைச்சொல்,ஓகார
இடைச்சொல், உம்மை இடைச்சொல், கொல் என்னும் இடைச்சொல், மன் என்னும் இடைச்சொல்,
மற்று என்னும் இடைச்சொல் என, என்று என்னும் இடைச்சொல், என இடைச்சொற்கள் பலவுண்டு.
எ.கா: ஏகார இடைச்சொற்கள்
கற்றலின் கேள்வியே நன்று.
கூறுவதும் யாமே
யாதும் ஊரே யாவரும் கேளிர்
ஓகார இடைச்சொற்கள்.
படிக்கவோ வந்தாய்? மன்னவனும் நீயோ
ஆணோ பெண்ணோ? ஓஓ பெரியன். அவளோ பாடினாள்.
உம்மை இடைச்சொல்
இன்றும் பட்டினிதான், கார்காலமும்
வந்துற்றது, திசைகள் மாறினும் சான்றோர் மாறார்.
கொல் என்னும் இடைச்சொல்
கற்றதனால் ஆய பயனென்கொல்
அணங்குகொல்.
இடைச்சொற்களை பற்றி ஓரளவு
புரிந்து கொண்டிருப்பீர்கள்.
இனிக்கும் இலக்கியம்!
அகநானூறு
மணிமிடைப்பவளம்
அவள் கண்ணின் இயல்பு.
பாடியவர்: வெண்ணாகனார்.
திணை: நெய்தல்
துறை: கழறிய பாங்கற்கு
தலைமகன் கழற்றெதிர் மறுத்தது.
அம்ம வாழி கேளீர்!
முன்நின்று
கண்டனிர் ஆயின், கழறலிர்
மன்னோ
நுண் தாது பொதிந்த
செங்காற் கொழுமுகை
முண்டகம் கெழீஇய மோட்டு
மணல் அடைகரை
பே எய்த் தலைய பிணர் அரைத்
தாழை
எயிறுடை நெடுந்தொடு
காப்ப,பல உடன்
வயிறுடைப் போது வாலிதின்
விரீஇ
புலவுபொருது அழித்த பூநாறு
பரப்பின்
இவர்திரை தந்த ஈர்ங்கதிர்
முத்தம்
கவர்நடைப் புரவிக்
கால்வடுத் தபுக்கும்
நல்தேர் வழுதி கொற்கை முன்
துறை
வண்டுவாய் திறந்த
வாங்குகழி நெய்தற்
போதுபுறங் கொடுத்த உண்கண்
மாதர் வாள் முகம் மதைஇய
நோக்கே.
துறை விளக்கம்: தலைவன்
தலைவியின் மேல் உள்ள ஆசையால் மயங்கியிருக்க தோழன் உன் பெருந்தமைக்கு இப்படி
வருந்துதல் கூடாது என்று சொல்ல, தலைவன், நீ அறியாதவன் நீ அவளை கண்டிருப்பாயானால்
என்னை இகழ மாட்டாய் என்று மறுத்து கூறியது.
பாடல் விளக்கம்: கேண்மை உடையவரே! நீவீர் வாழ்க! யாம் சொல்வதை
கேட்பாயாக!
நுட்பமான பூந்துகளால்
மூடப்பட்ட சிவந்த தண்டினையும் கொழுவிய மொட்டையையும் உடைய கழிமுள்ளி பொருந்திய
உயர்ந்த மணல் பொருந்திய கரை. அங்கு பேய் போலும் தலையை உடைய சருச்சரை உடைய
அடிப்பகுதியைக் கொண்ட தாழையின் முள்ளாகிய பற்களை உடைய நீளமான பல புற இதழ்கள் காக்க
அதன் வயிற்றை இடமாக உடைய அரும்பு விரிந்து புலால் நாற்றத்தை தாக்கி ஒழித்த மலர்
மணம் கமழும் இடம். அந்த இடத்தில்
பரவிய அலைகள் கொணர்ந்து வீசிய குளிர்ந்த
ஒளியையுடைய முத்துக்கள், விரும்பும் நடையை உடைய குதிரையின் காலை வடுவுண்டாக்கி
அதன் நடையைக் கெடுக்கும். இவ்வியல்புடைய நல்ல தேரை உடைய பாண்டியனின் கொற்கை
என்னும் கடல் துறையில் உள்ள
வண்டால் வாய்
திறக்கப்பெற்ற வளைந்த கழியிடத்தில் உள்ள நெய்தல் மலர் தோல்வி கண்ட தலைவியின் அழகிய
ஒளி பொருந்திய முகத்தில் உள்ள கண்களின் செருக்கிய பார்வையை முன்னே நின்று
பார்த்தால் இவ்வாறு கழறி கூற மாட்டீர்!
பாடலின் சுருக்கம்:
தலைவியை கண்ட மயக்கத்தில் இருக்கும் தலைவனை ஏளனம் செய்கிறான் தோழன். அப்போது தோழனை
வாழ்த்திய தலைவன், மணல் நிறைந்த கரையில் பேய்போல தலைவிரித்து முள் இதழ்கள் சூழ
இருக்கும் தாழம்பூ பூப்பதால் அவ்விடத்தில் புலால் நாற்றம் ஒழிந்து போகும்.
அந்த கரையில் அலைகள்
வீசியதால் குளிர்ந்த முத்துக்கள் சிதறி குதிரையின் நடையை பாதிக்கும். அத்தகைய
கரையை உடைய பாண்டியனின் கொற்கை துறைமுகத்தில் வண்டால் வாய் திறந்த நெய்தல் மலர்
தோல்வி காணும் வகையில் உள்ள தலைவியின் அழகிய முகத்தில் உள்ள கண்களின் பார்வையை நீ
பார்த்திருந்தால் நீ இவ்வாறு ஏளனம் பேசமாட்டாய் என்கிறான் தலைவன்.
உள்ளுறை உவமம்: தாழையின்
மணம் புலால் நாற்றத்தை கெடுக்கும். தலைவியின் காதல் பார்வை தலைவனின் மனதை
கெடுக்கும். கொற்கையின் முத்துக்கள் குதிரையின் ஓட்டத்தை கெடுக்கும். தலைவியின்
காதல் தலைவனை நெஞ்சத்தின் ஓட்டத்தை தடுத்து தலைவியின் பால் திருப்பும். என்பதாகும்.
என்ன ஒரு அழகான பாடல்!
மீண்டும் படித்து ரசியுங்கள்!
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!
நன்றி!
வணக்கம்
ReplyDeleteஐயா.
அருமையான விளக்கம்... பகிர்வுக்கு நன்றி.. மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
விளக்கவுரை அழகாக இருக்கிறது வாழ்த்துக்கள் நண்பரே....
ReplyDeleteஎழுத்தினில் இடைச் சொல்லையும் ,படத்தில் 'இடை'யையும் ரசித்தேன் !
ReplyDeleteபயன் உள்ள பதிவு அருமை வாழ்த்துக்கள் ....!
ReplyDeleteநண்பர் சுரேஷ் இலக்கணத்தை எல்லாம் குரித்து வைத்துக் கொண்டு வருகின்றோம்....மிக்க நன்றி சுரேஷ் ரொம்ப பயனுள்ளது...
ReplyDeleteஅகப்பாடல் அருமை. விளக்கம இன்னும் நன்று. ரசித்தேன்.
ReplyDeleteதமிழ் ஒரு அடையாளம் - மனதைச் சுற்றிச் சுற்றி வருகிறது.