தவளை இளவரசி! பாப்பா மலர்!
தவளை இளவரசி! பாப்பா மலர்!
வீர மார்த்தாண்ட புரம் என்ற
நாட்டை ஆண்டுவந்த உத்தமசேனன் என்ற மன்னனுக்கு இரண்டு மனைவியர். முதல் மனைவியின்
மகன் மகேந்திரன். இளையவள் மகன் உபேந்திரன். நாட்டை நிர்வகித்து வந்த உத்தம
சேனனுக்கு வயது முதிர்ந்து போகவே மூத்த மகனிடம் அரசுப் பொறுப்பினை கொடுக்க முடிவு
செய்தான்.
இதை அறிந்த இளையவள் தனது மகனுக்கு ராஜ்யம்
இல்லாது போய்விடுகிறதே என்று வருத்தப்பட்டாள். ஏதாவது சூழ்ச்சி செய்து மூத்தவனை
பட்டம் ஏற விடக்கூடாது என்று முடிவு செய்தாள். அதன் படி அவள் தீடிரென ஒருநாள்
தலையைப் பிடித்துக் கொண்டு ஐயோ! தலைவலிக்கிறதே! என்று பாசாங்கு செய்தாள்.
அரண்மனை வைத்தியர்கள் எவ்வளவோ வைத்தியம்
செய்தும் தலைவலி குணமாகவில்லை! நோய் இருந்தால்தானே குணமாவதற்கு? இது பொய்
நோய்தானே! அந்த சமயத்தில் ராணியால் ஏற்பாடு செய்யப்பட்ட வைத்தியர் ஒருவர்
அரண்மனைக்கு வந்தார். தான் ராணியின் நோயைத் தீர்ப்பதாக கூறினார். அரசனும்
மகிழ்ந்து ராணியின் நோயைத் தீர்த்தால் என்ன வேண்டுமானாலும் தருவதாக கூறினார். “என்ன வேண்டுமானாலும் தருவீர்களா?” என்று
கேட்டார் அந்த வைத்தியர். “கட்டாயம்! சொல்
தவறமாட்டேன்!” என்றார் மன்னர்.
வைத்தியர் ராணியின் அந்தப்புரம் சென்று ஏதோ
மூலிகைக் குழம்பை கரைத்து பூசினார். சிறிது நேரத்தில் ராணியும் நோய் தீர்ந்து
போயிற்று! என்று மகிழ்வோடு கூறினாள். இப்போது அந்த வைத்தியர் மன்னரிடம், “மன்னா!
ராணியின் நோயை குணமாக்கிவிட்டேன்! நீங்கள் சொன்ன வாக்கை நிறைவேற்றுங்கள்!”
என்றார்.
“
வைத்தியரே! என்ன வேண்டுமானாலும் கேளுங்கள்! பத்து ஊர் வேண்டுமா? பாதி ராஜ்யம்
வேண்டுமா? இல்லை பலகோடிப் பொன் வேண்டுமா?” என்றார் மன்னர்.
“ வைத்தியனுக்கு எதற்கு இதெல்லாம்?”
“அப்போது என்ன வேண்டும் சொல்லுங்கள்! தயக்கம்
வேண்டாம்!”
“ எனக்கோ வயதாகிறது! எனக்கு உதவியாக இருக்க
ஒரு உதவியாள் தேவைப்படுகிறது! அதற்கு உங்கள் மூத்த மகனை அனுப்ப வேண்டும்!”
மன்னர் அதிர்ந்து போனார். “ வைத்தியரே!
வருங்கால நாடாளும் மன்னன் அவன்! யோசித்துதான் கேட்கிறீர்களா?”
“ மன்னா! நான் நன்றாக ஆலோசித்துதான்
கேட்கிறேன்! நீங்கள்தான் வார்த்தை தவறுகிறீர்கள்!”
“வைத்தியரே! அவன் இளவரசன்! அவன் எப்படி
உங்களுக்கு உதவியாக இருக்க முடியும்! இந்த நாட்டின் பிரஜைகளில் யாரையாவது அனுப்பி
வைக்கிறேனே?”
“ மன்னா! வேறு யாரையும் எனக்கு உதவிக்கு
அனுப்பவேண்டாம்! உங்கள் மகன் மகேந்திரனை அனுப்பி வைப்பதானால் அனுப்புங்கள்!
இல்லையேல் நான் கிளம்புகிறேன்! வைத்தியருக்கு கூலி கொடுக்காத மன்னன் என்று உங்களை
ஊர் பேசும்” இறுகிய முகத்துடன் கூறினார் வைத்தியர்.
இதற்குள் மகேந்திரன் அரசவைக்கு வந்தான். “அப்பா! உலகம் உங்களை ஏச வேண்டாம். நான்
வைத்தியருடன் செல்கிறேன்!”
“மகேந்திரா! உனக்கு இளவரசு பட்டம் கட்டி
உள்ளேன்! வருங்கால மன்னன் நீ!”
“ஆனால் காலம் வேறு கணக்குப் போடுகிறதே அப்பா!
கலங்கவேண்டாம்! உபேந்திரனுக்கு இளவரசு பட்டம் கட்டுங்கள்! அவன் நாடாளட்டும்! நான்
வைத்தியருடன் செல்கிறேன். உங்களுக்கு ஒரு அவப்பெயர் வர நான் அனுமதியேன்!”
“இதல்லவோ ஓர் நல்ல மகனுக்கு அழகு! தந்தையின்
வாக்குறுதியை நிறைவேற்ற துடிக்கும் உன்னை வாழ்த்துகிறேன்!” என்றார் வைத்தியர்.
ஊரே கண் கலங்க தாய் தந்தையிடம் விடைபெற்று
வைத்தியருடன் கிளம்பினான் மகேந்திரன். இளையராணி தன் திட்டம் வெற்றி பெற்றதில்
மகிழ்ந்தாள். உபேந்திரன் இளவரசன் ஆனான். நாட்கள் ஓடின. வைத்தியருடன் சென்ற
மகேந்திரன் பல்வேறுபட்ட வைத்திய சாஸ்திரங்களை அறிந்து கொண்டான். வைத்தியருக்கு
தன்னால் இயன்ற பணிவிடைகளை செய்து வந்தான். ஒருநாள் வைத்தியர் மகேந்திரனை
காட்டிற்குச் சென்று மூலிகைகளை பறித்து வருமாறு கூறி அனுப்பினார்.
மகேந்திரனும் காட்டிற்கு சென்று வைத்தியர்
கூறிய அரிய மூலிகைகளை தேடலானான். அப்படியே தேடியபடியே நடுக்காட்டிற்குள்
சென்றுவிட்டான். தோளில் ஒரு கூடையில் அவன் பறித்த மூலிகைகள் இருந்தது. மற்றொரு
கையில் மூலிகை பறிக்க உதவும் சிறு கத்தி இருந்தது. காட்டின் புதர் பகுதிகளில்
மூலிகைகளை பறித்த படியே வந்த மகேந்திரன் காதில் ஏதோ ஒலித்தது. கூர்ந்து கவனித்தான்
“காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!” என்ற குரல் ஒரு மரத்தின் பின்னிருந்து கேட்டது.
ஆனால் அங்கு யாரும் காணவில்லை! என்ன இது?
குரல் மட்டும் கேட்கிறது. யாரையும் காணோமே! என்று யோசிக்கும் போது அங்கிருந்த ஓர்
தவளையிடம் இருந்து மீண்டும் “காப்பாற்றுங்கள்” என்ற குரல் வருவதை விசித்திரமாக
கேட்டான் மகேந்திரன்.
“ என்ன இது! இந்த காட்டில் தவளை கூட மனிதர்
மாதிரி பேசுகிறதே! ஆச்சர்யம்தான்!” என்று சொன்ன மகேந்திரன், “உனக்கென்ன ஆபத்து
இப்போது! என்றபோதுதான் கவனித்தான் அருகில் மிகப்பெரிய நாகப்பாம்பு ஒன்று தவளையை
முழுங்கக் காத்திருப்பதை.
தவளை, காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்
என்றபடி மகேந்திரன் அருகே தாவவும் பாம்பு அதை துரத்தியது. மகேந்திரன் பாம்பை
விரட்டினான். ஆனால் அது சீறியது. மகேந்திரன் கொஞ்சமும் பயப்படாமல் கையில் இருந்த
கத்தியை வீசினான். ஆனால் பாம்பு நகர்ந்து கொண்டு தவளையை கவ்வ முற்பட்டது. உடனே
மகேந்திரன் என் உயிரை கொன்றுதான் நீ இந்த தவளையைப் பிடிக்க முடியும். என்று
தவளைக்கு அரணாக தனது உடலை வைத்து படுத்தான். அதே சமயம் வீசிய கத்தியையும்
எடுத்தான் பாம்பு ஆவேசம் கொண்டு அவனை கொத்த வரும்போது அதன் கழுத்தை கெட்டியாக பிடித்து
மற்றொரு கையால் கத்தியால் குத்தினான்.
மறுகணம், பாம்பு அப்படியே சுருண்டு விழுந்து
இறந்தது. உடனே அதிலிருந்து கந்தர்வன் ஒருவன் வெளிப்பட்டான். அதே சமயம் தவளை தன்
உருமாறி அழகான பெண்ணாக உருவெடுத்தது.
மகேந்திரன் வியப்பின் உச்சிக்குச்
சென்றான். என்ன இது ஆச்சர்யம்! இது கனவா? இல்லை நிஜம்தான்! என்று தன்னைத்தானே
கிள்ளி உறுதிப் படுத்திக் கொண்டான்.
அப்போது தவளையாக இருந்து உறுமாறிய அந்த பெண்
பேசத்துவங்கினாள். “இளவரசே! நீங்கள்
காண்பது நிஜம்தான்! நான் அவந்தி நாட்டு இளவரசி! ஒரு சமயம் கானகம் சென்றபோது ஓடிப்பிடித்து
தோழிகளுடன் விளையாடுகையில் ஒரு முனிவரின் மீது மோதி அவரது நிஷ்டையை
கலைத்துவிட்டேன். அவர் என்னை தவளையாக மாறும்படி சபித்துவிட்டார். நான் அவர் காலில்
விழுந்து மன்றாடி சாப விமோசனம் அளிக்கும் படி கேட்டேன். அப்போது அவர் இளவரசன்
ஒருவன் உன் தவளை உருவத்தை பார்த்தும் அருவெறுப்பு அடையாமல் உனக்கு அடைக்கலம்
தருவான். அப்போது உன் சுயரூபம் பெறுவாய்! அவனையே மணந்து கொண்டு சிறப்பாக வாழ்வாய்
என்று விமோசனம் தந்தார். நீங்கள் என் தவளை உருவத்தை கண்டு வெறுக்காமல் பாம்பிடம்
இருந்து காப்பாற்றினீர்கள்! நான் சுய உருவம் அடைந்தேன்.” என்றாள்
கந்தர்வனும் நானும் தேவேந்திரனால் சபிக்கப்
பட்டு பாம்பாக உருமாறி இங்கு சுற்றி வந்தேன். இன்று உங்களால் விமோசனம் கிடைத்தது.
உங்கள் நாட்டை எதிரிகள் சூழ்ந்து கொண்டார்கள். உங்கள் தம்பியால் எதிரிகளை விரட்ட
முடியவில்லை! உடனே சென்று நாட்டை காப்பாற்றுங்கள்! இதோ என்னுடைய மந்திர வாளை
பரிசாகத் தருகிறேன் என்று வாள் ஒன்றை பரிசாகத் தந்தான்.
இளவரசியை அழைத்துக் கொண்டு வைத்தியரிடம் வந்து
நடந்ததைக் கூறிய மகேந்திரன் நாட்டைக் காப்பாற்ற அனுமதி வேண்டும் என்று கேட்டான்.
வைத்தியரும், “மகேந்திரா! உன் சிற்றன்னை தன் மகன்
நாடாளவேண்டும் என்று என்னை இவ்வாறு கேட்க வைத்தாள். நானும் உங்கள் நாட்டின் ஒரு
பிரஜை! நாடே முக்கியம்! விரைவாக சென்று நாட்டை மீட்போம்!” என்றார்.
மகேந்திரனும் விரைவில் நாடு திரும்பி
சைனியங்களை திரட்டி எதிரிகளை விரட்டி அடித்தான். சிற்றன்னையும் மனம் திருந்தினாள்.
மகேந்திரன் முறைப்படி அவந்தி நாட்டு இளவரசியை
மணந்துகொண்டு அரியனை ஏறி நாட்டை நல்லபடி ஆண்டு வந்தான்.
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
சரித்திரக்கதை அருமையாக இருந்தது நண்பரே....
ReplyDeleteஅருமையான கதை..
ReplyDeleteசுட்டிகளுக்கு மட்டுமல்லாது அனைவருக்கும் பிடிக்கும் - கதை.
ReplyDeleteபகிர்விற்கு நன்றி சகோ!
முதல் படம் .அந்த கால அம்புலி மாமாவில் வரும் படம்போல் உள்ளதே , என்னையும் குட்டியாக்கி விட்டீர்கள் !
ReplyDeleteஅழகான கதை! அப்படியே நாங்களும் அதனுடன் பயணித்தோம்!
ReplyDeleteபாப்பாக்களுக்குச் சொன்ன கதை எனக்கும் பிடித்தது.
ReplyDeleteஅழகிய கதை ! சட்டென எனது பால்ய கால அம்புலிமாமா, ரத்ணமாலா ஞாபகங்கள் வந்துவிட்டது !
ReplyDeleteநன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
எனது புதிய பதிவு : விடுமுறை விண்ணப்பம் !
http://saamaaniyan.blogspot.fr/2014/08/blog-post.html
( தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதியுங்கள்.நன்றி )
சரித்திரக்கதை மிக அருமை.
ReplyDelete