கஷ்டங்கள் போக்கும் கருட பஞ்சமி விரதம்!
கருட பஞ்சமி விரதம்!
ஆவணி மாத சுக்லபட்ச
பஞ்சமியில் வருவது கருட பஞ்சமி விரதம் என்று வழங்கப்படும். ஆவணிமாதம் சிரவணமாதம்
என்று வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு சிரவணமாதம் பிறந்துவிட்டதால் ஆடிமாதத்திலேயே
கருடபஞ்சமி அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த விரதம் இன்று 1-8-14 அனுஷ்டிக்கபடுகிறது.
கருடன் விஷ்ணுவின் வாகனம். தேவர்களுடன்
போரிட்டு அமிர்த கலசத்தை பெற்றுவந்து தன் தாய், சகோதரர்களின் அடிமை வாழ்வை
நீக்கியவர். இத்தகைய பலம் வாய்ந்த கருடனை பூஜிக்கும் விரதமே கருடபஞ்சமி என்று
வழங்கப்படுகிறது.
பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்கவும்,
பலசாலியான, அறிவாளியான புத்திரர்களை பெறவும் இந்த விரதம் அனுஷ்டிப்பார்கள்.
அடிக்கடி கெட்டகனவு ஏற்படுதல், பயம், பாம்பு எதிர்ப்படுதல் போன்றவைகளால்
சிரமப்படுபவர்கள் இந்த விரதம் அனுஷ்டித்தால் துன்பத்தில் இருந்து விலகுவார்கள்
என்று ஐதீகம்.
பிரம்ம தேவரின் மகனான கஷ்யபரின் நான்கு மனைவிகளுள் கத்ரு, வினதை என்ற இரு சகோதரிகளும் இருந்தார்கள். கத்ரு என்பவள் நாகர்களுக்குத் தாயாகவும், வினதை அருணைக்கும், கருடனுக்கும் தாயாகவும் விளங்கினார்கள். ஒருமுறை, கத்ருவுக்கும், வினதைக்கும் விவாதம் வளர்ந்து போட்டியில் வந்து நின்றது. அந்தப் போட்டியில் ஜெயிப்பவருக்குத் தோற்றவர் அடிமையாக வேண்டும் என்ற ஒப்பந்தத்தை வகுத்துக் கொண்டனர். போட்டியின் முடிவில் வினதை தோல்வியுற்று அடிமையானதால், அவள் பெற்ற அருணனும், கருடனும் அடிமைகளானார்கள். கருடன் கத்ருவுக்கும், அவளது பிள்ளைகளுக்கும் வாகனம்போல் ஆனான். இதனால் கருடன் மனம் வருந்தித் தனது தாயை எப்படியாவது அடிமை வாழ்க்கையிலிருந்து மீட்க வேண்டும் என்று சபதம் கொண்டான். அப்போது கத்ரு கருடனிடம், தேவேந்திரனிடமிருந்து அமிர்தக் கலசத்தைக் கொண்டுவந்து தந்தால், அடிமைத்தனத்திலிருந்து மூவருக்கும் நிரந்தரமான விடுதலை தருவதாகச் சொன்னாள். கருடன், அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற வழி பிறந்ததே என்று மகிழ்ச்சியடைந்து, தன் தாயை வணங்கித் தேவலோகம் சென்றான். தேவலோகத்தில், காவல் புரிந்துகொண்டிருந்த தேவர்களுக்கும், கருடனுக்கும் இடையில் கடும் போர் நடந்தது. இறுதியில், கருடன் வெற்றி பெற்று, தேவேந்திரனை வணங்கி, அவனிடமிருந்து அமிர்தக் கலசத்தைப் பெற்றுவந்து கத்ருவிடம் கொடுத்தான். மூவருக்கும் ஏற்பட்டிருந்த அடிமை வாழ்வை நீக்கி, ஆனந்தமாக வாழ வழி செய்தான், கருடன். அந்தக் கருடன் பிறந்த தினம் கருட பஞ்சமி என்று அழைக்கப்படுகின்றது.
கருட பஞ்சமியில் ஆதிசேஷன்
விக்கிரகம் வைத்து பெண்கள் வழிபடுவார்கள். புற்றுக்கு பால் ஊற்றி வழிபடுவார்கள்.
கத்ருவின் புத்திரர்களான நாகர்களாலேத்தானே தேவர்களுடன் கருடன் போரிட்டு அவனது
வீரம் வெளிப்பட்டது. அதன் காரணமாகவே ஆதிசேஷனுக்கும் நாகருக்கும் பூஜை
செய்விக்கபடுகிறது.
அன்றைய தினம் நோன்பிருந்து கவுரி அம்மனை நாகவடிவில் ஆராதிக்க வேண்டும். அன்று வடை, பாயசம், முக்கியமாக எண்ணெய் கொழுக்கட்டையோ அல்லது பால் கொழுக்கட்டையோ செய்து நாகருக்கு பூஜைசெய்து, தேங்காய் உடைத்து வைத்து, பழம், வெற்றிலை, பாக்குடன் நைவேத்யம் செய்ய வேண்டும். இந்த பூஜை முடிந்ததும் சரடு கட்டிக் கொள்ள வேண்டும். சரடுகளில் 10 முடி போட்டு, பூஜை செய்யும் இடத்தில் அம்மனுக்கு வலது பக்கம் வைக்க வேண்டும். பூஜை செய்யும் போது அம்மனுக்கு ஒரு சரடு மட்டும் சாற்ற வேண்டும். பூஜை முடிந்த பிறகு அனைவரும் வலது கையில் சரடு கட்டிக் கொள்ளலாம். அருகில் பாம்பு புற்று இருந்தால் சிறிது, பால், பழம், கொழுக்கட்டை எடுத்துக் கொண்டு போய், புற்றில் பால்விட்டு, பழம், கொழுக்கட்டை வைத்து விட்டு வரலாம். அருகில் புற்று ஏதும் இல்லா விடில் வீட்டில் பூஜையில் வைத்திருக்கும் நாகத்தின் மேலேயே சிறிது பால் அபிஷேகம் செய்ய வேண்டும். இந்த நோன்பு கூடப் பிறந்த சகோதரர்களின் நலத்தையும் வளத்தையும் கோரும் நோன்பாகும். ஆதலால் அவர்களை வீட்டிற்கு அழைத்து சாப்பாடு போட்டு பணமோ அல்லது துணிகளோ வைத்து, தாம்பூலம் கொடுத்து, பெரியவர்களாக இருந்தால் நமஸ்கரித்து ஆசி பெற வேண்டும். சிறியவர்களாக இருந்தால் ஆசீர்வாதம் செய்ய வேண்டும்.
கருடன் அவதரித்த நாளே கருட பஞ்சமி
எனப்படுகிறது. சிலர் நட்சத்திரத்தின் அடிப்படையில் ஆடிமாத சுவாதி நட்சத்திரத்தன்று
கருட ஜெயந்தி என்று வழிபடுவர்.
நன்மைகள் பல நல்கும் கருட ஜெயந்தி,
கருடபஞ்சமி தினங்களை அனுஷ்டித்து நன்மை பெறுவோமாக!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு
குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
கருட பஞ்சமி விரதம் அறிந்தேன்
ReplyDeleteநன்றி நண்பரே