குருவருள் பெறின் திருவருள் வரும்!

குருவருள் பெறின் திருவருள் வரும்!

மாதா, பிதா குரு, தெய்வம் என்பது பழமொழி. அன்னையும் பிதாவும் பெற்று வளர்த்தாலும் குரு என்ற ஒருவர்தான் பிள்ளைகளுக்கு நல்லொழுக்கங்களை கற்பிக்கிறார். ஆகவேதான் இந்த மூவரையும் தெய்வமாக வணங்க வேண்டும் என்று சொல்லுவர்.

    அதே போல ராசி மண்டலத்திலும் குருவானவர் முக்கியமானவர். குருபலன் இருக்கிறதா? என்று ஜாதகம் பார்த்து திருமணம் செய்வர். எந்த ஒரு வேலையாயினும் குருபலன் நன்றாக இருக்கிறதா என்று பார்ப்பர். குருபார்த்தால் கோடி நன்மை என்ற சொலவடையும் உண்டு.
   தேவ குரு பிரகஸ்பதி, அசுர குரு சுக்கிராச்சாரியார். தேவர்களும் அசுரர்களும் குருவின் பேச்சை மதியாது பலமுறை இன்னலுக்கு ஆட்பட்டிருக்கிறார்கள். குருவின் ஆசியால் நன்மையும் அடைந்து இருக்கிறார்கள். ஆகவே நமது வாழ்க்கையில் குருவின் பங்கு மகத்தானது.
   அதே போலவும் ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் குருபெயர்ச்சி மிக முக்கியமானது. குருவானவர் ஒரு ராசியில் அதிகபட்சமாக ஒரு ஆண்டுதான் இருப்பார். அப்படி அவர் தங்கி இருக்கும்போது அந்த ராசிக்கும் மற்ற ராசிகளுக்கும் எந்த வகையான பலன்களை கொடுப்பார் என்று கணித்து சொல்கிறார்கள்.

 இந்திய ஜோதிட முறையில் குரு பகவான் மந்திரி அல்லது மந்திராலோசனை தருபவராக கருதப்படுகிறார். இவர் வித்தை, ஞானம், சுகம் ஆகியவற்றை தருபவராக விளங்குகிறார். பொன்னிறம் கொண்டவரான குருவிற்கு மஞ்சள் வஸ்திரம் சார்த்தப்படுகிறது. வடகிழக்கு மூலைக்கு அதிபதியான குருவினுடைய அதிதேவதை இந்திரன் ஆகும். ஆகாயத்திற்கும் குரு அதிபதியாவார்.
   குருவின் ஆட்சி வீடு சுவஷேத்திரம் எனப்படும். தனுசு, மீனம் குருவின் சுவஷேத்திரம் ஆகும். குருபகவான் ஒவ்வொரு ராசியிலும் ஓராண்டுகாலம் தங்கியிருப்பார். 12 ராசிகளை கடந்து வர 12 ஆண்டுகள் ஆகும். பொதுவாக குரு சுபக்கிரகம் என்பதால் நல்ல பலன்களையே தருவார்.

   அப்படியே கெடுபலன்கள் ஏற்பட்டாலும் அது நமக்கு படிப்பினை தருவதாக அமையும்.
   குருபகவான் தற்போது மிதுன ராசியில் இருந்து கடகராசிக்குச் செல்கிறார். குரு பெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கப்படி இன்று ஜூன் 13, வைகாசி 30 மாலை 5.57 நிமிடத்திற்கு நடக்கிறது. இவர் 2015 ஜூலை மாதம் 4ம் தேதிவரை கடகத்தில் இருப்பார். அதன் பின் சிம்மத்திற்கு மாறுவார். ஆனால் அதிசாரமாக 3-12-2014 அன்று சிம்மத்திற்கு செல்கிறார். 22-12-2014ல் வக்ரம் அடைந்து கடகராசிக்கு மாறுகிறார்.
  இந்த குருபெயர்ச்சியில் நற்பலன் பெறும் இராசிகள்: மிதுனம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம்.

சுமாரான பலன் பெறும் ராசிகள்: ரிஷபம், சிம்மம், கும்பம்.

பரிகாரம் செய்து கொள்ள வேண்டிய ராசிகள்: மேஷம், கடகம், துலாம், தனுசு.

   குரு காயத்ரி:
    விருஷப த்வஜாய வித்மஹே
     க்ருணி ஹஸ்தாய தீமஹி
    தன்னோ குரு பிரசோதயாத்!

குரு துதி:
    கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறங்கமுதற் கற்றவேள்வி,
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு அப்பலாய்,
எல்லாமாய் அல்லதுமாய் இருந்தனை இருந்தபடி இருந்து காட்டிச்,
சொல்லாமற் சொன்னவரை நினையாமல் நினைத்து பவத் தொடக்கை வெல்வாம்.


குரு பார்வை, 5,7, 9 ம் ராசிகள்.
இந்த பெயர்ச்சியில் குரு  விருச்சிகத்தை 5ம் பார்வையாலும் மகரத்தை 7ம் பார்வையாலும், மீனத்தை 9 ம் பார்வையாலும் பார்க்கிறார்.
  ஒருவருக்கு திருமணம், குழந்தைப்பேறு, தொழில் வளர்ச்சி, பொன் பொருள் சேர்க்கை, ஆன்மீக ஞானம் ஆகியவை இந்த குருபார்வையால் கிடைக்கும்.

  சென்னை பாடியில் உள்ள வலிய நாதர் கோயில் அருகில் உள்ள குரு ஸ்தலமாகும்.

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில், பட்டமங்கலம் தட்சிணா மூர்த்தி கோயில், திருச்செந்தூர் சுப்ரமண்ய சுவாமி கோயில், உத்தமர் கோவில் புருஷோத்தமர் கோயில், கோவிந்தவாடி கைலாசநாதர் கோயில், திட்டை ராஜகுரு கோவில், திருவொற்றியூர் தட்சிணாமூர்த்தி கோயில் ஆகியவை குருஸ்தல கோயில்கள் ஆகும்.

 நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே திருப்புடைமருதூர், அத்தாளநல்லூர், அரிகேசவநல்லூர், இடைகால் (தென் திருவாரூர்), தென் திருபுவனம் பஞ்ச குரு ஸ்தலங்கள் உள்ளன. இங்குள்ள கோயில்களில் தட்சிணாமூர்த்தி திருவுருவங்கள் மாறுபட்ட நிலைகளில் அமைந்திருப்பது சிறப்பு. 

 பொதுவாக அமர்ந்த நிலையிலேயே காட்சி தரும் தட்சிணாமூர்த்தி, நின்ற நிலையில் அருளும் திருத்தலம் தென்குடித் திட்டை. இங்குள்ள வசிஷ்டேஸ் வரர் ஆலயத்தில்தான் குருபகவான் இவ்வாறு நின்ற நிலையில் தோன்றுகிறார். பூலோகத்தில் பிரளயம் நிகழ்ந்தபோது, நீரில் மூழ்காமல், இரண்டு  இடங்கள் மட்டுமே திட்டுகளாக நின்றன. சீர்காழியும் இந்த தென்குடித் திட்டையும்தான் அத்தலங்கள். ரிஷிகளில் முதல்வரான வசிஷ்டரிடம் குருபக வான் நின்ற நிலையில் உபதேசம் பெற்ற திருத்தலம் இது. இத்தலத்தில் அம்பிகை உலகநாயகிக்கும் வசிஷ்டேஸ்வரருக்கும் இடையில் குருபகவான்  சந்நதி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த குருபகவானை வழிபட, சகலவிதமான தோஷங்களும் தானே விலகும் என்பது பக்தர்களின் அனுபவ  நம்பிக்கை. தஞ்சாவூரிலிருந்து திருக்கருகாவூர் செல்லும் வழியில் தென்குடித் திட்டை உள்ளது. 

சென்னை செங்குன்றம் அருகே உள்ள நத்தம்  வாலீஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள மோன தட்சிணாமூர்த்தி  பின்னனியில் கல்லால மரம் இன்றி மோன நிலையில் சனக சவுனிகாதி முனிவர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
  தாட்சாயணியின் பிரிவிற்கு பின்னர் சிருஷ்டி நின்று விடுமே என்று பிரம்மா விஷ்ணு தேவர்கள் வினவ, என்னுடைய ஜடாமுடியில் தங்கியுள்ள கங்கையின் சக்தி துணையோடு சிருஷ்டி தடையின்றி நடைபெறும் என்று அருளினார்.
   படைப்புத் தொழிலுக்கு துணை செய்கின்ற சக்திவடிவமே கங்கை. சுவாமியின் திருமுடி மேல் கங்கையின் பிரவாகம் வழிவது மிக அபூர்வமான காட்சி. முயலகனை தம் வலக் காலில் அழுத்தி தென் திசை நோக்கி அமர்ந்து அருள் பாலிக்கிறார் இந்த மோன குரு.
   குருபெயர்ச்சியை முன்னிட்டு  மோன குருவிற்கு விஷேச அபிஷேக ஆராதனைகள் மாலை 6 மணி அளவில் நடைபெறும்.
   குருவருள் இருப்பின் திருவருள் தானே வரும். குருபெயர்ச்சி அன்று ஆலயங்களுக்கு சென்று குருவினை வழிபடுவோம். அதே சமயம் நம்மை உருவாக்கிய குருவினுக்கும் வாழ்த்துக்கள் பறிமாறி வணங்குவோம். நன்மைகள் அடைவோம்.

உங்கள் ராசிக்கான குருபெயர்ச்சி பலன்களை அறிய இங்கு சென்று பார்க்கவும். குருபெயர்ச்சி பலன்கள்

டிஸ்கி: கடந்த ஞாயிறன்று தடைபட்ட மின்சாரம் இன்னும் ஒழுங்கடையவில்லை! தினமும் பல மணி நேரம் மின் தடை தொடர்கிறது. அதனால் வழக்கம்போல பதிவுகள் இடவும் தோழமைகளின் பதிவுகளை படிக்கவும் இயலவில்லை! மின் தடை சீரானதும் தோழமைகளின் பதிவுகளை வாசித்து கருத்திடுகிறேன்! சிரமத்திற்கு மன்னிக்கவும்.


Comments

  1. எனக்கு இவற்றிலெல்லாம் நம்பிக்கை இல்ல சகோ! அதுக்காக கடவுள் இல்லைன்னு சொல்ற ஆளும் இல்ல. பக்தி உண்டு பைஹ்த்டியம் இல்ல. நம் கடமையை ஒழுங்காய் செய்து, கடவுளை நம்பினவரை நாளும், கோளும் என்ன செய்யும் என நம்பும் ஆள் நான். இப்போதான் தஞ்சாவூர் பகுதிகளில் மினி டூர் அடிச்சேன். வாய்ப்பு கிடைப்பின் பிறிதொரு சமயம் வரேன். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. குருவருள் பெற்று திருவருளுடன் வாழ வாழ்த்துக்கள் “தளிர்“ சுரேஷ்.

    எங்கே என் வலைப்பக்கமே காணோமே என்று தேடி வந்தேன்.
    இப்பொழுது தான் புரிந்தது.

    ReplyDelete
  3. வேண்டிய பதிவே, குறு பார்த்தால் கோடி நன்மை அல்லவா. குருவின் பார்வையில் என்றும் நலம் பெற வாழ்த்துகிறேன்....! பதிவுக்கு நன்றி !

    ReplyDelete
  4. சிறப்புப் பதிவு வெகு சிறப்பு
    அறியாதன பல அறிந்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. நமக்கு படிப்பினை தருவது தான் சிறந்த பார்வை...

    சிறப்பான விளக்கங்களுக்கு நன்றி...

    ReplyDelete
  6. அறியாத செய்திகள் பல அறிந்தேன்
    நன்றி நண்பரே

    ReplyDelete
  7. குருப் பெயர்ச்சியைப் பற்றி விரிவான செய்திகள். அறிந்து கொண்டேன். நன்றி.

    ReplyDelete
  8. குருப் பெயர்ச்சி பற்றிய தகவல்களும் படங்களும் மிக அருமை.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!