உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 58

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 58


வணக்கம் வாசக நண்பர்களே! உங்களின் பேராதரவினால் ஒராண்டுக்கும் மேலாக இந்த தொடர் பீடு நடை போட்டு வருகிறது. சென்ற வாரம் உரிச்சொற்கள் குறித்து படித்தோம்
அதை நினைவு கூற இங்கு செல்லவும்: உரிச்சொல்

  இந்த வாரம் நாம் பார்க்க இருப்பது மரபுத்தொடர்கள். இது இலக்கணம் சார்ந்தது கிடையாது. ஆனால் ஒரு மொழியில் ஆளுமைத்திறன், மற்றும் படைப்புத்திறன் போன்றவை சிறந்து ஓங்க வேண்டுமெனில் இத்தகைய மரபுத்தொடர்களை நாம் அறிந்து கொள்வது அவசியம். இன்னும் சொல்லப்போனால் இது மரபுத்தொடர் என்று அறியாமலே நாம் அத்தகைய சொற்களை பேசிப்பழகியும் வந்திருப்போம். இப்போது அதனை தெரிந்து கொள்வோம்.

மரபுத்தொடர்கள் என்றால் என்ன?
   தமிழ்மொழியில் பழங்காலம் தொட்டு மக்கள் வழக்கத்தில் இருந்து வரும் சிறப்பு பொருள் தரும் நயமிகு தொடர்கள் மரபுத்தொடர்கள் என்று சொல்லப்படுகின்றன. தொல்காப்பிய மரபியலில் இவை குறிப்பிடப்பட்டாலும் தனியான இலக்கணம் வகுக்கப்படவில்லை.

   ஆங்கிலத்தில் (Idioms and Pharases) என்று வழங்கப்படுவதைத்தான் தமிழில் மரபுத்தொடர்கள் என்று சொல்லுகிறோம். மரபுத்தொடர்களில் சொற்பொருள் காணும் போது வேறாகவும் மரபுப்பொருளாக பார்க்கும்போது  தனித்த சிறப்புப் பொருள் தருவதாகவும் மரபுத்தொடர்கள் அமையும்.

உதாரணமாக நீராடுதல் என்ற சொல்லுக்கு சொற்பொருள் தேடினால் நீரில் ஆடுதல் என்று பொருள் வரும். அதையே அதை மரபுத்தொடராக பார்க்கும் போது தமிழ் மரபில் குளித்தல் என்று பொருள். இதே போல் பெருந்திணை என்ற சொல்லுக்கு சொற்பொருள் பெருமையான ஒழுக்கம் என்பதாகும். அதையே மரபுப்பொருளாக பார்க்கும் சிறுமையான ஒழுக்கம் என்ற பொருளில் பொருந்தாக் காமத்தை குறிக்கும். “ இவரு பெரிய மேதை” என்று சொல்லும் போது சொற்பொருள் பெரிய அறிவாளி என்றும் மரபு வழியில்  “முட்டாள்” என்றும் பொருள் படும்.

   இதையே ஆங்கில வாயிலாக பார்க்கும் போதும் break-fast  என்ற சொல்லை தனித்தனியாக break- fast என்று பிரித்தால் break என்ற சொல்லுக்கு உடை என்றும் fast என்ற சொல்லுக்கு பட்டினி விரதம் என்ற பொருளும் வரும். அதையே சேர்த்து break-fast என்று பொருள் கொள்ளும்போது “காலை உணவு” என்ற பொருளைத் தரும். இது ஒரு ஆங்கில மரபுத்தொடர்.  Take your chair என்பது ஒரு மரபுத்தொடர் அதை நேரடியாக மொழிபெயர்த்தால் உன் இருக்கையை எடுத்துக் கொள்க! என்று வரும். ஆனால் ஆங்கில மரபுத்தொடரான இதன் பொருள் அமர்க என்பதுதான்.

 இப்படி மரபு மரபாக வழிவழியாக நம்மிடையே பேசப்பட்டு வரும் மரபுத்தொடர்கள் ஏராளம். இந்த மரபுத்தொடர்கள் 5 வகையாக பிரிக்கப்பட்டுள்ளன.
1.      எதிர்மறை குறிப்புத்தொடர்.
2.      இடக்கரடக்கல்/ மங்கல வழக்குத்தொடர்
3.      வசைமொழித் தொடர்
4.      சுவைதரும் வெளிப்பாட்டுத் தொடர்
5.      பிற மரபுத்தொடர்கள்.

எதிர்மறை குறிப்புத்தொடர்: தமிழர்களின் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தும் மரபுத்தொடர்கள் இவை. உதாரணமாக “ யோக்கியன் வரான்! சொம்பை எடுத்து உள்ளே வை!” என்ற தொடர். இதன் பொருள் திருடன் வருகிறான் பொருளை பாதுகாப்பாக வைத்துக் கொள் என்பதாகும். ஆனால் திருடனுக்கு எதிர்மறையான யோக்கியன் என்ற சொல்லை கூறி எச்சரிக்கின்றனர்.

இந்த வகை தொடர்களுக்கு இன்னும் சில எடுத்துக்காட்டுகள்
மாமியார் வீடு போயிருக்கிறான், வீட்டில் நல்ல விருந்து இருக்கு, இவரு பெரிய பாரிவள்ளல், பேரழகன், பெரிய யோக்கியன், கிளி அழகு, பேசா மடந்தை,கோடீஸ்வரன்.

இப்படி பல மரபுத்தொடர்கள்  உண்டு. நீங்களே கூட புதிதாக ஒரு மரபுத்தொடரை உருவாக்கலாம். இப்போது திரைப்படங்களில் சந்தானம், வடிவேல் போன்றவர்கள் கொடுக்கும் கவுண்டர் அட்டாக் கூட மரபுத்தொடர் போன்றவையே!
மீதி உள்ள நால்வகை தொடர்களை அடுத்த பகுதியில் காண்போம்.

இனிக்கும் இலக்கியம்.

குறுந்தொகை

நெய்தல் திணை

வற்புறுத்தும் தோழிக்கு தலைமகள் அழிவுற்று சொல்லியது

பாடியவர்: கல்பொரு சிறு நுரையார்.

    “காமம் தாங்குமதி என்போர் தாமஃது
    அறியுநர் கொல்லோ, அனைமது கையர்கொல்?
    யாம் எம் காதலர்க் காணே மாயின்
   செறிதுனி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க்
   கல்பொரு சிறுநுரை போல
   மெல்ல மெல்ல இல்லா குதுமே.”
  
தலைவன் வேலையின் காரணமாக தலைவியைப் பிரிந்து சென்றான். தலைவி பிரிவுத்துயரால் வருந்தினாள். அவளை வருந்தாதே பொறுத்துக் கொள் என்று தோழி ஆறுதல் கூறினாள். அதற்கு தலைவி பதில் உரைப்பதாக இந்த பாடல் அமைந்து உள்ளது.

    காமத்தை தாங்கி பொறுத்திருக்க வேண்டும் என்று அறிவுரை சொல்லுபவர்கள் அக்காமத்தின் இயல்பை அறியாதவர்கள் அல்லது அத்துணை இரக்கமற்ற கல் நெஞ்சினராக இருப்பார்கள் போலும்.
    நான் என் காதலரைக் காணவில்லையெனில், துயர்மிகுந்த நெஞ்சமோடு, மிக்க வெள்ளம் ஓடும்போது அதில் பொங்கும் சிறுநுரையானது பாறைகள் மீது மோதி எப்படி சிதறுமோ அப்படி நான் இல்லாமல் போய்விடுவேன். என்கிறாள் தலைவி.

   தலைவன் இல்லாது போனால் தன்னால் வாழமுடியாது. நுரைபோல சிதறிப்போய் விடுவேன் என்று உண்மையைக் கூறுகின்றாள் தலைவி.

 உண்மையில் இந்தப்பாடலை பாடிய புலவரின் பெயர் அறியப்படவில்லை. இப்பாடலில் அமைந்த ‘கல்பொரு சிறுநுரை போல’ என்ற உவமை நய அழகினால் இப்புலவரை அத்தொடராலேயே சிறப்பு பெயர் சூட்டிவிட்டனர்.

  இது மிக்கப் பொருத்தம்தானே! சிறப்பான உவமை நயத்தால் காமத்தை விவரித்த அந்த புலவரின் கவித்திறமை வியக்கவைக்கிறது அல்லவா? படித்து மகிழுங்கள்.

மீண்டும் அடுத்த பகுதியில் சந்திப்போம்!

உங்களின் கருத்துரைகளை இட்டு  இந்த தொடரினை செதுக்குங்கள்! நன்றி!

மேலும் தொடர்புடைய பகுதிகள்

Comments

  1. ஆங்கில விளக்கம் உட்பட மரபுத்தொடர்கள், இலக்கியம் இரண்டுமே அருமை...

    ReplyDelete
  2. ஆங்கிலத்தோடு அழகாக தொடர்பு படுத்தி விளக்கியமைக்கு நன்றி. பாடலின் விளக்கத்தையும் அருமை.

    நான் இந்த பகுதியை படிப்பதில் சற்று பிந்தங்கியிருக்கிறேன். விரைவில் மற்ற பகுதிகளையும் படித்து விடுகிறேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2