உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 61

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 61


அன்பார்ந்த வலைப்பூ அன்பர்களே! வணக்கம்! சென்ற வாரம் நமது பகுதியை நன்கு படித்து பின்னூட்டங்களில் உங்களின் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி! இந்த வாரம் நாம் பார்க்க படிக்க இருப்பது சாரியை.

   சாரியை என்பதை பகுபத உறுப்பிலக்கணம் எழுதும் சமயம் படித்திருப்போம் எழுதியிருப்போம். அதை இன்று விரிவாக பார்ப்போம்.

சாரியை என்றால் என்ன?
   தனியாக வந்தால் பொருள் பெறாது. பொருள் பெறுவதற்காக மற்றவற்றோடு சார்ந்து வருவதால் சாரியை என்று பெயர். தனிச்சொல்லையோ சொற்றொடரையோ நாக்கு கூறுமிடத்து எங்கு கடினப்படுகிறதோ, துன்புறுகிறதோ அவ்விடங்களில் எளிமைக்காக மென்மைக்காக வேறு ஓர் உறுப்பினை சேர்த்துக் கொள்ளும். அந்த உறுப்பிற்கு பெயர் சாரியை என்று பெயர்.

   வேறு வேறு சொற்கள் தம்மோடு சார்தற்பொருட்டு இரண்டு சொற்களின் இடையே இயைந்து நிற்கும். இஃது இன்னொன்றின் மீது சார்ந்து வரும். அப்போதுதான் இந்த சாரியைக்கு பொருள் உண்டு. தனித்து வந்தால் பொருள் இல்லை.

சாரியைகள் பின் வருவன:
   இன், வற்று, அத்து, அம், ஒன், ஆன், அக்கு, இக்கு, அன்.
இவைதவிர இன்னும் பிறவும் உள்ளன.

உதாரணமாக  வேர்+ ஐ  வேரை என்று எழுதலாம் சொல்லலாம். அதே சமயம் மரம்+ ஐ  என்ற சொல்லை மரத்தை என்றுதான் எழுதவோ சொல்லவோ செய்வோம். மரமை என்று சொல்வது இல்லை. மரம்+ ஐ க்கு இடையில்  ‘அத்து’ என்ற சாரியை சேர்ந்து அந்த சொல்லை எளிமை ஆக்குகிறது. இங்ஙனம் நாக்கே சேர்க்கின்ற ஓர் உறுப்பு சாரியை ஆகும்.

சொல்லின் இறுதியில் மகர ஒற்று இருக்குமானால் ‘அத்து’ என்ற சாரியை வரும்.
உதாரணம்: பணம் + ஐ – பணத்தை
            குணம்+ ஐ – குணத்தை
             நலம்+ ஐ – நலத்தை


சாரியைகளை  சொல் சாரியை, எழுத்துச் சாரியை என்று இரண்டு வகையாக பிரிக்கலாம்.

  சொல் சாரியைகள்:  இன், வற்று, அத்து, அம், ஒன், ஆல், அக்கு, இக்கு, அன்.

எழுத்துச்சாரியை : எழுத்துக்களை எளிமையாக கூறுவதற்கு கரம், காரம், கான், ஆகிய சாரியைகளை பயன்படுத்துகிறோம்.

குறிலெழுத்துக்கள் = கரம் – அகரம்- இகரம்- உகரம்- ககரம்-சகரம்- மகரம்

குறில் ஒற்று    = கரம் – ககர ஒற்று – க் சகர ஒற்று ச், மகர ஒற்று ம்

நெடில்    காரம்=    ஆகாரம்- ஈகாரம்- ஊகாரம்- ககர ஆகாராம்- சகர ஆகாரம்

சாரியைகள் பற்றி புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்! மீண்டும் படித்து நினைவுக்கு கொண்டுவந்து கொள்ளுங்கள்!

இனிக்கும் இலக்கியம்:

  குறுந்தொகை

  திணை: முல்லை

  துறை: கடிநகர் சென்ற செவிலித்தாய் நற்றாய்க்கு உரைத்தது

பாடியவர்: கூடலூர்க் கிழார்

     “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
      கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக்
      குவளை உண்கண் குய்ப்புகை கமழத்
      தாந்துழந்து அட்ட தீம்புளிப் பாகர்
      இனிதெனக் கணவன் உண்டலின்
      நுண்ணிதின் மகிழ்ந்தன்று  ஒண்ணுதல் முகனே.”


விளக்கம்: பிறந்த வீட்டில் செல்லமாக வளர்ந்து அடுப்படிக்கே செல்லாத மகள் வாழ்க்கைப் பட்டு கணவன் வீடு செல்கிறாள். அங்கு மகள் என்ன கஷ்டப்படுகிறாளோ என்று வருந்துகிறாள் தாய். அப்போது தலைவனும் தலைவியும் இல்லறம் நடத்தும் விதம் பற்றி செவிலித்தாய் இவ்வாறு கூறி தாய்க்கு ஆறுதல் தருகிறாள்.

   ‘ முற்றிய தயிரை பிசைந்த காந்தள் மலர் போன்ற தன் மெல்லிய விரல்களை துடைத்துக் கொண்ட ஆடையை துவைக்காமல் உடுத்திக்கொண்டு, குவளை மலர் போன்ற தன் கண்களில் தாளித்த புகை மணக்க நம் மகள் தானே துழாவி சமைத்த இனிய புளிக்குழம்பை கணவனுக்குப் பறிமாறினாள். அப்போது அவள் கணவன் அந்த குழம்பை உண்டு பார்த்து ‘இனிது’ என்று சொன்னான். கணவன் ‘இனிது’ என்று சொன்னதும் நம் மகளின் முகமானது நுட்பமாய் மலர்ந்தது

   இவ்வாறு செல்வ செழிப்பில் வளர்ந்தவள் கணவனுடன் நடத்தும் இனிய இல்லறத்தை செவிலித் தாய் கண்டுவந்து கூற தாய் மகிழ்ந்தாள்.

இந்த பாடலில் உவமைநயம், பொருள் நயங்கள் என்னே அழகாய் அமைந்துள்ளன பார்த்தீர்களா? அருமையான பாடலை படித்து ரசியுங்கள்!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


மேலும் தொடர்புடைய இடுகைகள்:Comments

 1. ஒவ்வொரு விசயங்களும் படிக்க படிக்க ஆச்சர்யமாக இருக்கிறது திரு.''தளிர்'' சுரேஸ் அவர்களே....

  ReplyDelete
 2. தமிழ் இலக்கண விளக்கம் மிக தெளிவாய் இருக்கிறது சுரேஷ் சார்!

  ReplyDelete
 3. வண்டமிழின் அருமைகள் பெருமைகள்

  பயனுள்ள பகிர்வு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. #கணவன் ‘இனிது’ என்று சொன்னதும் நம் மகளின் முகமானது நுட்பமாய் மலர்ந்தது#
  மலர்ந்தது என் முகமும்தான் ,அழகான படத்துடன் உங்களின் அருமையான விளக்கம் கண்டு !

  ReplyDelete
 5. இனிய கவிதையும் அதன் விளக்கமும் அருமை. அழகான படமும் காட்சியை நேரில் கொணர்ந்தது.நன்றி வாழ்த்துக்கள் ....!

  ReplyDelete
 6. கவியும்
  விளக்கமும் அருமை நண்பரே
  நன்றி

  ReplyDelete
 7. குறுந்தொகை விளக்கமும் அருமை...

  நன்றி...

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!