ராஜா மோதிரம்! பாப்பா மலர்!

ராஜா மோதிரம்!


அவந்தி புரத்து ராஜா அனந்த வர்மா ஒரு நாள் ஆத்துல மந்திரிகளோட சேர்ந்து குளிச்சிக்கிட்டு இருந்தாரு. அப்ப அவரு விரல்ல இருந்த ராஜாவோட முத்திரை மோதிரம் நழுவி ஆத்துக்குள்ள விழுந்துருச்சு.
      குளிச்சு கரையேறுன பின்னாடிதான் தெரிஞ்சது ராஜாவுக்கு தன்னோட முத்திரை மோதிரம் காணாம போன விஷயம். ஆத்துக்குள்ளதான் விழுந்திருக்கும்னு சொல்லி சேவகர்களை ஆத்துல மூழ்கித் தேடச்சொன்னாரு.
    அவங்களும் ஆத்துல மூழ்கி பல மணி நேரம் தேடிப்பார்த்தும் மோதிரம்கிடைக்கவே இல்லை. ராஜா உங்க மோதிரம் கிடைக்கவே இல்லை! மணலுக்குள்ள எங்காவது சிக்கிக்கினு இருக்கலாம். அதனால வேற மோதிரம் செஞ்சுக்கங்கன்னு சொல்லிட்டாரு மந்திரி.
    ராஜாவுக்கு அந்த மோதிரம்னா உசுரு! ராசியான மோதிரமாச்சே! இப்படி காணாம போயிருச்சே! இனிமே என்ன நடக்குமோன்னு கவலைப்பட ஆரம்பிச்சாரு. அந்த கவலையிலேயே அரசவைக்கு கூட போகாம அப்படியே படுத்த படுக்கை ஆயிட்டாரு ராஜா.
    மந்திரிமாருங்க எவ்வளவோ சொல்லியும் ராஜா கேட்கலை! ராஜா இளைச்ச விசயம் எதிரி நாட்டுக்கு தெரிஞ்சது. இதுதான் சமயம். இப்ப அவந்திபுரம் மீது படையெடுத்து வந்தா ஈசியா ஜெயிச்சுப்புடலாம்னு எதிரிங்க எல்லாம் ஒண்ணா சேந்து முடிவெடுக்கிறாங்க!
   இந்த சேதியும் ஒற்றர்கள் மூலமா அனந்தவர்மாவுக்கு தெரிஞ்சது. ராசியான மோதிரம் போச்சு! அதனாலதான் நாடும் கைவிட்டு போவப்போவுதுன்னு ராஜா புலம்ப ஆரம்பிச்சிட்டாரு. மந்திரிகள் ராஜா தொலைச்ச மாதிரியே ஒரு மோதிரத்தை பொற்கொல்லர்கள் கிட்டே சொல்லி வடிவமைச்சாங்க! அதை எடுத்துவந்து ராஜா கிட்டே கொடுத்து இந்தாங்க உங்க தொலைஞ்சு போன மோதிரம். அப்படின்னு சொல்லிக் கொடுத்தாங்க.
    அதனோட பளபளப்பை பார்த்ததும் ராஜாவுக்கு தெரிஞ்சு போச்சு இது பழைய மோதிரம் இல்லைன்னு! யாரை ஏமாத்த பார்க்கறீங்க! இது அந்த மோதிரம் இல்லைன்னு சொல்லிட்டாரு ராஜா.
   ஊர் முழுக்க ராஜாவோட தொலைஞ்சு போன மோதிரத்தை பத்திதான் பேச்சு! அந்த மோதிரம் கிடைச்சா ராஜா நிறைய பரிசு தருவாராம்.மோதிரம் இல்லாததாலே எதிரிகிட்ட படையெடுக்க கூட ராஜா தயங்கிறார். மோதிரத்தை கண்டு பிடிச்சு கொடுக்கிறவங்களுக்கு நல்ல சன்மானம் கிடைக்கும்னு ஊரே பேசிக்கிச்சு.
    அதுக்கேற்றா மாதிரி ராஜாவும் ஒர் அறிவிப்பு வெளியிட்டார். இந்த மாதிரி என்னோட மோதிரம் ஆத்துல குளிக்கும் போது காணாம போயிருச்சு! அதை கண்டுபிடிச்சு கொடுக்கிறவங்களுக்கு பத்து ஊரை தானமா எழுதிக் கொடுக்கிறேன்! பத்தாயிரம் பொற்காசுகள் தரேன்! அப்படின்னு நாடு முழுக்க தெரிவிச்சாரு ராஜா.
      அந்த ஊரிலே வேலன்னு ஒரு பையன். அவனுக்கு அம்மா அப்பா யாரும் கிடையாது. வேலன் குழந்தையா இருக்கும் போதே அவங்க இறந்து போயிட்டாங்க! அவனோட பாட்டி அவனை எடுத்து வளர்த்தாங்க! ரொம்ப புத்திசாலியான பையன். மாடு மேய்ச்சி அவங்க தர்ற கூலியை வைச்சு பிழைச்சுக்கிட்டிருந்தாங்க பாட்டியும் பேரனும். ஆத்தங்கரையோரமா மாடுகளை மேயவிட்டுட்டு ஆத்துல மீனுங்களை பிடிக்கிறது வேலனோட வழக்கம். அந்த மீன்களை ஊரிலே கொண்டுபோய் வித்தா கொஞ்சம் காசு கிடைக்கும். அது அவனோட குடும்பத்துக்கு தேவையா இருந்தது.
   அன்னிக்கு வழக்கம் போல வேலன் ஆத்தோரமா மாடுகளை மேயவிட்டுட்டு கரையில உக்காந்து தூண்டில் போட்டான். ரொம்ப நேரமா தூண்டில் வீசியும் ஒரு மீனும் சிக்கவே இல்லை!  இன்னிக்கு முழிச்ச நேரம் சரியில்லை போல! ஒரு மீனும் சிக்கவே இல்லையேன்னு சொல்லிட்டு அந்த இடத்தை விட்டுத் தள்ளிப் போய் மீண்டும் தூண்டில் போட்டான் வேலன்.
   இப்ப அவனோட தூண்டில்ல ஒரு மீன் மாட்டிக்கிச்சு! ஆஹா மாட்டினியா! அப்படின்னு அதை பிடிச்சு கரைமேல போடப்போனான் வேலன். அப்ப அந்த மீனு பேச ஆரம்பிச்சிடுச்சு! ஐயா! ஐயா! என்னை ஆத்திலேயே விட்டுடுங்களேன்! நான் இப்பத்தான் குஞ்சு பொறிச்சு இருக்கேன்! என்னை காணாம என் குஞ்சுகள் தேடும்!னு சொல்லுச்சு அந்த மீனு.
   அடடா! இதென்ன அதிசயம்! இந்த மீனு பேசுதே!ன்னு ஆச்சர்யப்பட்ட வேலன்.  உன்னைப்போல நாலு மீனை பிடிச்சு வித்தாத்தான் என் கஞ்சிக்கு உதவும். உன்னைவிட்டா எனக்கென்ன லாபம்னு கேட்டான்.
  அப்போ அந்த மீனு சொல்லுச்சு! ஐயா! ஐயா! என்னை விட்டுடுங்க! உங்களுக்கு ஒரு பரிசு தரேன்! அப்படின்னுச்சு!
   என்ன பரிசு நீ தர முடியும்னு கேட்டான் வேலன்.
  கொஞ்ச நாள் முன்னாடி ராஜா ஆத்துல குளிக்கும் போது அவரோட மோதிரம்  நழுவி ஆத்துல விழுந்துருச்சு! அதை நான் முழுங்கிட்டேன்! என்னை நீ ஆத்துல விடறா மாதிரி இருந்தா உனக்கு அந்த மோதிரத்தை தரேன். அதை நீ ராஜா கிட்டே கொடுத்தா உனக்கு நிறைய பரிசு கிடைக்கும்னு மீனு சொல்லுச்சு!
    சரி! அந்த மோதிரத்தை கொடு உன்னை விட்டுடறேன்னு சொன்னான் வேலன்.
   அந்த மீனும் மோதிரத்தை வயிற்றில் இருந்து வெளியில் துப்பியது. வேலனும் அதை ஆத்தில விட்டுட்டு மோதிரத்தை எடுத்து பத்திரப்படுத்திக்கிட்டான்.
   மறுநாள் மோதிரத்தோட அரண்மணைக்கு போனான். அங்க காவல்காரன் தடுத்து என்ன விசயம்னு கேட்டான்.
  ராஜாவோட முத்திரை மோதிரத்தை கொண்டுவந்திருக்கேன்னு சொன்னான் இவன்.
   உனக்கு எப்படி கிடைச்சுது!ன்னு கேட்டான் காவல்காரன்.
அது  எப்படியோ கிடைச்சுது! ராஜாவை பார்க்கணும் வழியைவிடுன்னு சொன்னான் வேலன்.
    சரி! இது ராஜாவோட முத்திரை மோதிரம்னு உனக்கு எப்படி தெரியும்? என்கிட்ட காட்டு! நான் பார்க்கிறேன் அப்படின்னு வாங்கி பார்த்த காவல்காரன், அதை தன் பையில் போட்டுக்கொண்டு டேய்! மாட்டுக்காரப் பையா மரியாதையா போயிரு! இல்லைன்னா உன்னை திருடன்னு சொல்லி சிறையில போட்டுடுவேன்னு சொல்லி விரட்டி விட்டுட்டான்.
   வேலனுக்கு கஷ்டமாக போய்விட்டது! நமக்கு நேரம் சரியில்லை போல!  என்று சோகமாய் மீண்டும் ஆற்றங்கரைக்கு வந்து நின்றான். அப்போ அந்த மீன் மேலே வந்து, வேலா! ஏன் சோகமா இருக்கேன்னு கேட்டுச்சு!
   வேலன் நடந்தது எல்லாத்தையும் சொன்னான். அப்ப மீன் சொல்லுச்சு! வேலா கவலைப்படாதே! இந்த நாட்டோட மந்திரி வீட்டு பக்கமா போ! அங்க நான் சொல்ற பாட்டை பாடு! அப்புறம் உனக்கு நல்லது நடக்கும்னு சொல்லிட்டு ஒரு பாட்டை சொல்லிக் கொடுத்தது.
   வேலனும் அப்படியே மந்திரி வீட்டு முன்னாடி போய் ராஜாவோட மோதிரம் ஆத்தோட போனது! ஆத்தோட போனதை மச்சம் முழுங்கிச்சு! மச்சம் துப்பின மிச்சத்தை காவக்காரன் முழுங்கிட்டான்!ன்னு விடாம பாடிக்கிட்டு இருந்தான்.

    அரச சபையில இருந்து வந்த மந்திரி இந்த பாட்டை கேட்டாரு! இவனை கூப்பிட்டு விசாரிச்சாரு! இவனும் நடந்த எல்லாத்தையும் சொன்னான். மந்திரிக்கு காவல்காரன் பண்ணத் தப்பு விளங்கிருச்சு!
   உடனே வேலனை ராஜ சபைக்கு கூட்டிட்டு போனாரு! ராஜா மோதிரத்தை பிடுங்கின காவல்காரனை கூப்பிட்டு விசாரிச்சாரு! அவனும் தப்பை ஒத்துக்கிட்டு மோதிரத்தை கொடுத்திட்டான்.
   வேலனை பாராட்டிய ராஜா சொன்னபடி பத்து ஊரையும் பத்தாயிரம் பொன்னையும் பரிசா கொடுத்தாரு. மாட்டுக்கார வேலன் ஜமிந்தார் ஆயிட்டாரு. ராஜாவும் தெம்பாயிட்டாரு! படையெடுத்து வந்தவங்களை பந்தாடி விரட்டி விட்டாரு! அப்புறம் நீண்ட நாட்கள் நல்லாட்சி செய்தாரு.


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

 1. எப்போதோ படித்த கதை ஆயினும் இப்போது படிக்கும் போதும் புதுசாக தெரிகிறது ...அருமை

  ReplyDelete
 2. என்னதான் புது புது கதைகள் படித்தாலும், அந்த அம்புலி மாமா கதைக்கு ஈடாகுமா ? மனம் ஈர்த்த கதை !

  ReplyDelete
 3. ஹா ஹா..
  நல்ல கதை..

  ReplyDelete
 4. நல்ல கதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  ReplyDelete
 5. அருமையான கதை. நன்றி

  ReplyDelete
 6. குழந்தைகளுக்கேற்ற கதை. பாடமாக வைக்கலாம்.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2