கிளீ!
கிளீ!
கிச்சா என்ற கிளீ எனக்கு பழக்கமானது கிரிக்கெட்
போட்டி ஒன்றில். அப்போது டிகிரி கடைசி ஆண்டு படித்துக் கொண்டிருந்ததாக நினைவு.
கிளீ என்னைவிட வொர்த்தாய் பத்தாம் வகுப்பு கோட்டடித்துவிட்டு பக்கத்து கம்பெனி
ஒன்றில் லாரி கிளீனராக பொழுதை ஓட்டிக்கொண்டிருந்தான். அந்த கம்பெனி ஓர் இரும்பு
உருக்காலை. இரும்புக்கம்பிகளை ஏற்றிச்செல்லும் லாரியில்தான் கிளீ
பணியாற்றிக்கொண்டிருந்தான்.
டிரைவரும் இவனும் சேர்ந்து அவ்வப்போது
கம்பிகளை கடையில் போட்டு காசு பார்த்துக்கொண்டு இருந்தனர். அதனால் எங்கள்
க்ரூப்பில் கிளீயிடம் மட்டும் காசு எப்போதும் புரளும். அப்போதே ஆள் தண்ணியடிக்க
தம் கட்ட பழகி இருந்தான். எங்கள் குருப்பில் நான் மட்டும் சுத்த சைவம். மற்றவர்கள்
எல்லாவற்றையும் ஒரு வெட்டு வெட்டக்கூடியவர்கள் என்பதால் கிளீயின் சகவாசம்
அவர்களுக்குத் தேவையாக இருந்தது.
அப்போதெல்லாம் வயல்களில் அறுவடை நடந்தால்
உடனே கிரிக்கெட் கொண்டாட்டம்தான். உலககோப்பை தொடர்வேறு இந்தியாவில்
நடைபெற்றுக்கொண்டிருந்தது. ரப்பர் பந்துகள் கிடைக்காமல் தாறுமாறாக
விலையேறிக்கொண்டிருந்த ஒர் சமயத்தில் எங்கள் வீட்டு கொல்லைப்புறம் இருந்த வயலில்
கிரிக்கெட் ஆடும் சமயம் பந்து கிழிந்துவிட பந்து கொடுத்து உதவி ஆபத் பாந்தவனாக
எங்கள் மனங்களில் இடம்பிடித்தான். அப்புறம் எங்கள் டீமிலும் இடம்பிடித்தான்.
இத்தனைக்கும் டீமின் சீனியர் மெம்பரான எனக்கும் அவனுக்கும் ஏகப்பட்ட வயது
வித்தியாசம் ஆனால் நட்புக்கு வயது ஏது?
வயல்களில் நடவு ஆரம்பித்துவிட்டால்
விளையாட இடம் கொடுப்பது எங்கள் ஊர் சிவன் கோவில். அப்படி ஒன்றும் பெரிய கோவில்
இல்லை. ஆனாலும் பந்தை குத்திப்போட்டு ஆடி பொழுதை கழிக்க ஏதுவான இடம். சிவன் கோவில்
மடப்பள்ளி சுவரில் சாக்பீஸ் அல்லது கரித்துண்டால் ஸ்டம்ப்ஸ்களை வரைந்து
குத்திப்போட்டு ஆடுவோம். அதிலேயே பந்தயம் எல்லாம் உண்டு. மடப்பள்ளி சுவரோரம்
இருந்த பாதாம்மர நிழல் வெயிலில் இருந்து காக்கும். மடப்பள்ளியின் மீதும் மரத்தின்
மீதும் மதில்கள் மீதும் மற்றவர்கள் அமர்ந்திருப்பர். அப்படி ஒருநாள் கிரிக்கெட்
ஆடிக்கொண்டிருக்கும் போதுதான் மடப்பள்ளி மீதிருந்து கீழே குதித்து இறங்கும் போது
அவனது சட்டைப்பையில் இருந்து ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ விழுந்தது. அருகில்
இருந்த நான் அதை எடுத்து அவனிடம் கொடுக்கும்போதுதான் கவனித்தேன். அது ஒரு பெண்ணின்
புகைப்படம். அந்தக்கால ஸ்ரீதேவி சாயலில் கருப்புவெள்ளைப்படம்! “டேய் கிளீ! இது யாருடா?” என்றேன்.
“அப்புறம் சொல்றேன்!” என்றவன்
விளையாடச்சென்றுவிட்டேன். அப்புறம் விளையாட்டு சுவாரஸ்யத்தில் அது மறந்தே
போய்விட்டது!
ஒருவாரம் கூட கழிந்திருக்கும்! மீண்டும்
ஒருநாள் அவன் சட்டைப்பையில் அந்த புகைப்படத்தை பார்க்க நேரிட்டது. அன்று மீண்டும்
கேட்டேன். “யாருடா இந்தப் பொண்ணு?”
ஒரு மாதிரி சிரித்தவன், “வேண்டாம் சாமி! உனக்கெதுக்கு?” என்றான்.
“
சும்மா சொல்லுடா! எப்பவுமே உன் பாக்கெட்ல வைச்சிருக்கே?” என்றேன்.
“பாக்கெட்ல மட்டுமா?.. என்றான்.
“அப்ப…”
“ப்ச்… விடு சாமி!”
“ என்னடா என்கிட்ட சொல்ல மாட்டியா? இப்ப நீ சொல்லப்போறியா? இல்லே பசங்க கிட்ட பத்தி
வைக்கவா?”
“ இல்ல.. வேண்டாம் சாமி! இது என் ஆளு சாமி!”
“ஆளுன்னா?
“என்ன சாமி ஒண்ணும் தெரியாத மாதிரி கேக்கற? இது
என் லவ்வர் சாமி?”
எனக்கு கொஞ்சம் பொறாமையாகத்தான் இருந்தது!
அவனவன் முப்பது முப்பத்தைந்து வயது ஆகி பெண் கிடைக்காமல் அல்லாடுகையில் இருபது
வயதில் லவ்வா?
“பொண்ணு உன் முறைப்பொண்ணாடா?”
மேலும் கீழும் பார்த்தவன், சாமி.. எங்க
சொந்தத்துல இந்த மாதிரி பிகர் நீ பார்த்திருக்கியா? என்றான்.
அவன் சொல்வது உண்மைதான். எனக்குத்தெரிந்து
அவன் சொந்தத்தில் இத்தனை அழகு யாருமில்லைதான்! பக்கத்து ஊர் என்பதாலும் என் வீட்டு
வழியேத்தான் அவர்கள் ஊருக்கு செல்ல வேண்டும் என்பதாலும் இதை நான் அறிவேன்.
“அப்போ?”
“இது என் கம்பெனியிலே வேலை செய்யுது?”
“என்ன வேலை கூலி வேலை செய்யுதா?”
“பிகரைப்பாத்தா அப்படியா தெரியுது சாமி? வாய்
கூசாம கேக்கறே?”
“இல்லேடா
உன் ரேஞ்சுக்கு…!” இழுத்தேன்.
“ என்ன என் ரேஞ்சுக்கு என்ன கொறை? என்னை
பார்த்தா ஸ்மார்ட்டா தெரியலையா?” என்று காலரை தூக்கிவிட்டான்.
உண்மைதான்! அவன் ஸ்மார்ட்டுக்கு என்ன கொறை?
ஒன்றும் கிடையாது. ஆள் கட்டுமஸ்தாக அன்றைய சினிமா ஹீரோ கார்த்திக் மாதிரி
இருந்தான். முன் நெற்றியில் விழும் முடியை நீவி விட்டுக்கொண்டான்.
“ஓக்கே! ஓக்கே! நீ ஹீரோதாண்டா! ஒத்துக்கறேன்!
ஆமா எப்ப கல்யாணம்?” என்றேன் எரிச்சலுடன்.
“ இப்பத்தானே பழக ஆரம்பிச்சிருக்கோம்!
கல்யாணம் பண்ணிக்கலாம்!” என்றான்.
இந்த ரகசியம் எனக்கு மட்டும்தான் தெரியும்
என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். யாரிடமும் சொல்லக்கூடாது என்று என்னிடம்
சொன்ன கிளீ இதையே எல்லோரிடமும் சொல்லி அவன் காதலிக்கும் விஷயத்தை அப்படியே
நண்பர்கள் வட்டத்தில் பரப்பி விட்டான்.
ஏற்கனவே எங்கள் வட்டத்தில் அவன் தான்
ஸ்மார்ட்! படிப்பு இல்லை என்றாலும் பந்தாவிற்கு குறைச்சல் கிடையாது! அயர்ன் பண்ண
பேண்டும் சட்டையும் கலையாது யார்ட்லி செண்ட் மணக்க அவன் வரும் போது ஆளையே தூக்கும்
வாசனை. இது எப்போதும் இல்லை வீக் எண்டில் மூவி பார்க்க சென்னை செல்லும் போதுதான்.
கிளீ லவ் பண்ணும் விசயம் எல்லோருக்கும்
தெரிந்து போயிற்று. இதற்குள் அவன் கதை கதையால் தன் காதலியைப்
பற்றிச்சொல்வான். ஒரு நாள் சினிமாவுக்குச்
சென்றோம் அங்கு இப்படி நடந்தது. இன்று பீச்சுக்கு சென்றோம் இங்கே இப்படி நடந்தது
என்று அளந்து விடுவான்.
கிராமத்தில் எந்த ஒரு பொழுது போக்கும் இல்லாத
சமயத்தில் கிரிக்கெட் விளையாடும் எங்களுக்கு அவனது கதைகள் ஓர் எண்டர்டெயின்
மெண்டாக அமைந்துவிட்டது.
இப்படியே
ஓர் ஆறுமாதம் ஓடிப்போய்விட்டது.
அன்று கிளீ கிரிக்கெட் கிரவுண்டிற்கு வரும்போதே
சோகமாக வந்தான். சரக்கு அடித்திருப்பான் போல ஒருவித வாசனை அடித்தது.
“டேய் குடிச்சிட்டு வந்திருக்கே? என்ன
ஆச்சு?”
“ ஒண்ணும் இல்லே சாமி! மனசு கஷ்டமா இருந்துச்சு!
அதான் கொஞ்சம் கள்ளு குடிச்சேன்!”
“இதான் கொஞ்சம் குடிச்ச லட்சணமா? உன்னால நிக்க
கூட முடியலை!”
“ஏன்? என்னால விளையாட கூட முடியும்? பெட்
மேட்ச் வைச்சிக்கலாமா? பத்து பத்து ரூபா?” என்றான்.
எங்களை எதிர்த்து விளையாடும் குருப்புக்கு
காதில் தேனாய் அவன் கேள்வி விழுந்திருக்க வேண்டும். ஒத்தை ரூபா பெட்டிற்கே உருண்டு
புரள்பவர்கள் அவர்கள். இன்று முழுதாய் பத்து ரூபா! என்றவுடன் ஓடி வந்தார்கள்.
எங்கள் அணியில் பாதி பேர் இல்லை! இவன் நிலையும்
சரியில்லை! வேண்டாம்டா! வீணா தோற்க பொறோம் என்றேன்.
இல்லை! பத்து ரூபா பெட் வைக்கிறோம்!
ஜெயிக்கிறோம் என்று பெட் வைத்தான். ஆறு ஆறு பேர் கொண்ட குழுவாக பிரிந்து விளையாடி
முதல் போட்டியில் தோற்றோம். பத்து ரூபாயை எடுத்து எதிர் அணியிடம்
கொடுத்துவிட்டான். அதோடு சும்மா இருந்தால் பரவாயில்லை! மீண்டும் போட்டிக்கு
அழைத்தான். பத்து ரூபா பெட்! மீண்டும் ஒரு தோல்வியே பரிசாக கிடைத்தது.
அவன் சலம்பல் அடங்கவில்லை! “
….த்தா! இந்த முறை எப்படியும் ஜெயிச்சிருவேன்! இப்ப இருபது ரூபா” என்றான்.
“வேண்டாம்டா! உன் நிலைமை சரியில்லை!
வீட்டுக்கு போ! என்றேன்!”
“ நிலைமை சரியில்லை! அதான் விளையாடறேன்!” நீ
பயப்படாதே! துட்டு போனா போவுது! சம்பாரிச்சுக்கலாம்!”
“ அது சம்பாரிக்கலாம்! ஆனா இப்ப வீணா ஏன் விடனும்!”
“என் வீணா என்னை விட்டுட்டாளே!”
“யாருடா இது வீணா?”
“இன்னா சாமி ஒண்ணும் தெரியாத மாதிரி கேக்கறே?
அன்னிக்கு போட்டோவை பார்க்கலை நீ?”
“அந்த போட்டோவை பார்த்தேன். லவ்பண்றேன்னு
சொன்னே ஆனா பொண்ணு பேரு நீயும் சொல்லலை! நானும் கேக்கலை!”
“அந்த சிறுக்கி! என்னை ஏமாத்திட்டா!”
“இன்னிக்கு ஆபிசுக்கு வரலை! கேட்டா நிச்சய
தார்த்தமாம்!”
“சரி விடுறா!”
“என்னத்தை விடச்சொல்றே?”
“சரி போ! ரெஸ்ட் எடு! எல்லாம் சரியா
போயிரும்!” என்று அவனை கிரவுண்ட்டை விட்டு துரத்துவதற்குள் பெரும்பாடாய்
போய்விட்டது.
அடுத்த நாள் மாலை அவன் அவன் கம்பெனியில்
இருந்து வந்தான். வரும்போதே கையில் ஒரு அழைப்பிதழ். நேற்றைய சோகம் இல்லை!
“என்னடா கையில பத்திரிக்கை!”
“வீணாவோட கல்யாண பத்திரிக்கை!”
“ஏண்டா! நேத்துதான் நிச்சயதார்த்தம்னு சொன்னே?
இன்னிக்கே கல்யாண பத்திரிக்கை கொண்டுவரே?”
“எல்லாம் முன் கூட்டியே முடிவு
பண்ணிட்டாங்களாம்? நேத்து பேருக்கு நிச்சயதார்த்தம் வைச்சிருக்காங்க?”
“அப்ப அவளுக்கு முன் கூட்டியே இதெல்லாம்
தெரியும்! தெரிஞ்சும் உன் மனசுல ஆசைய வளர்த்திருக்காலே பாவி!”
“ அப்படியெல்லாம் சொல்லாதே சாமி”
“அப்ப எப்படிச்சொல்றது?”
“வீணாவுக்கு விருப்பம் இல்லாமத்தான் இந்த
கல்யாணம் நடக்குதாம்!”
“இதை நான் நம்பணுமா?”
“நாங்க வேணா வீணா வீட்டுல
பேசிப்பார்க்கட்டுமா?”
“அதெல்லாம் ஆவுற கதை இல்லே சாமி! நம்ம
தகுதிக்கு நாமஎதிர்பார்க்கணும்!”
இதைத்தானே
நான் அன்னிக்கு சொன்னேன்! இப்போது அவனே சொல்கிறான் குழப்பமாய் நின்றேன்.
“என்னடா சொல்றே?”
‘இன்னிக்கு
கம்பெனி ஆட்டோ நான் தான் ஓட்டினேன்! ”
“அதுக்கு
என்ன இப்போ?”
“சொல்லவே
கூச்சமா இருக்கு!”
“ஆட்டோ ஓட்டுறது கூச்சமா?”
“அதில்லை!
வீணாவை அவங்க வீட்ல ட்ராப் பண்ணேன்!”
“அதில
என்ன கூச்சம்?”
“ இல்ல
சாமி வேணாம்!”
“சரி
விட்டுறு!”
”எங்க விட்றது! வீணாவை ஏத்திக்கிட்டு அவங்க
வீட்டுக்கு கிளம்பினேன்! சோழவரம் தாண்டி ஒரு இருட்டான ப்ளேஸ்! திடீர்னு வீணா
ஆட்டோவை நிறுத்த சொல்லிச்சு! என்னமோ ஏதோன்னு நிறுத்திட்டு கீழே இறங்கினேன். அது
என்னை பின் சீட்டுக்கு வரசொல்லுச்சு!...”
“ …பின்
சீட்டுல ஏறினதுதான் தாமதம் அப்படியே என்னை கட்டிபிடிச்சு….”
“கட்டிப்பிடிச்சு…
“கிஸ்
அடிச்சிருச்சு! அப்புறம் என்னை மறக்கவே முடியாதுன்னு சொல்லுச்சு! பேருக்கு அவனை
கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் மனசு பூரா நான் தான் இருப்பேனாம். அப்படியே
அழுதுகிட்டு சொல்லுச்சு!”
என்னால் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை!
என்ன பெண் இவள்? ஒருத்தனை காதலிக்கிறாள்!
ஒருத்தனை மணக்கிறாள். மணக்கும் முன் காதலித்தவனை சந்தித்து முத்தமிட்டு உன்னை
மறக்கமாட்டேன் என்று கூறுகிறாள்.பெண்கள் ஒரு புரியாத புதிர்தான்.
“அப்புறம்?” என்றேன் கோபமாக
“என்ன
சாமி கதையா கேக்குறே? அந்த நிமிஷத்தை நினைச்சால் இப்பக் கூட கிறுகிறுங்குது!
போவட்டும் சாமி! நல்லா இருக்கட்டும்! நான் மறந்துடறதா சொல்லிட்டேன்! நம்ம தகுதி
என்னா? அந்த பொண்ணு தகுதி என்னா? அவங்க அந்தஸ்துக்கு நான் கால் தூசி மாதிரி! எங்கிருந்தாலும் நல்லா இருக்கட்டும்” என்றான்.
“டேய்! நேத்து என்னமோ குடிச்சிட்டு அப்படி
சலம்பல் பண்ண? இப்போ! எங்கிருந்தாலும் வாழ்கன்னு பாடறே!”
“ஒண்ணை இழந்தாத்தான் ஒண்ணை பெற முடியும்
சாமி!”
“என்னடா தத்துவம்லாம் சொல்றே”
“தத்துவம் இல்லே சாமி! நிஜம்!”
என்ன பெரிய நிஜத்தை கண்டுட்டே?
“வீணா போனா ஒரு மீனா”
என்னடா சொல்றெ?
“வீணாவோட போஸ்ட்டுக்கு இப்ப வந்திருக்கிறது
மீனா” என்று சொல்லி கண்ணடித்தான்.
நான் தலையில் அடித்துக்கொண்டேன்!
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
ஹா..ஹா...
ReplyDeleteநல்ல கதை ..
“ஒண்ணை இழந்தாத்தான் ஒண்ணை பெற முடியும் சாமி!”
ReplyDeleteஉண்மைதான்....
www.killergee.blogspot.com
காதல் போயின் சாதல் என்றான் பாரதி!!
ReplyDeleteஇப்பொழுது
வீணா(ப்)போனா மீனா.... ஹா ஹா ஹா
காதல் போயின் “காதல்“ என்பதும் நன்றாகத் தான் இருக்கிறது.
வாழ்த்துக்கள் சுரேஷ்.
வீணா போயி
ReplyDeleteமீனாவா
ஆகா
நல்ல காதல்! :(
ReplyDeleteவீணா போனா மீனா!
ம்ம்ம்ம்ம் இதுக்கு பேர் காதலா??!!!!!!இந்த மீனு எப்ப நழுவுமோ?ம்ம்ம்ம்ம்
ReplyDeleteகதை சொன்ன விதம் னல்லாருக்குங்க!
அம்மாடி... இதுதான் காதலா... :))))
ReplyDeleteரொம்பவும் சீரியஸான கதைனு நினைச்சு படிச்சுட்டு இருந்த கடைசில இப்படி காமெடி கதை ஆக்கிட்டீங்களே....
ReplyDelete