தொடரும் மின்வெட்டும்! மோடியின் அதிர்வேட்டும்! கதம்ப சோறு பகுதி 41

கதம்ப சோறு! பகுதி 41

மீண்டும் ராகிங் கொடுமைகள்!

   மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசு ராகிங் கொடுமையால் உயிரிழந்த பிறகு சட்டங்கள் கடுமையாக்கப் பட்டு கல்லூரிக்குள் ராகிங் கொடுமைக்கு ஓரளவு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆனாலும் அங்கங்கே அவ்வப்போது ஒன்றிரண்டு ராகிங் கொடுமைகள் நடந்து அது வெளியே வராமலும் சென்று கொண்டிருந்தது. இதோ இன்று மீண்டும் ஒரு மருத்துவக் கல்லூரி மாணவி ராகிங் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தன்னுடைய தற்கொலைக்கு காரணம் மூன்றாம் ஆண்டு மாணவி கோட்டீஸ்வரி என்று தன்னுடைய டைரியிலும் எழுதி வைத்துள்ளார். யோக லட்சுமி என்ற அந்த மாணவி மிகவும் கஷ்டப்பட்ட ஒரு குடும்பத்திலிருந்து மருத்துவம் பயில வந்து அந்த குடும்பத்தின் கனவை கனவாகவே விட்டுச்சென்றுவிட்டார். விளையாட்டாக செய்யப்படும் செயல்கள் விபரீதமாகி இன்று ஒரு மாணவியின் உயிரையே பறித்து அந்த குடும்பத்தின் கனவைக் கலைத்துவிட்டது. யோகலட்சுமியை பாத்ரூம் கூட செல்லவிடாமல் கொடுமை செய்துள்ளனர் சீனியர் மாணவிகள். பாலியல் ரீதியாகவும் சித்ரவதை செய்துள்ளனர். சக மாணவியை இப்படி பெண்களே கேலி செய்து பலி வாங்கிவிட்டது கொடுமையான விஷயம். விரைவில் ராகிங் பிரச்சனைகளுக்கு நல்லதொரு தீர்வை அரசு எடுக்க வேண்டும். சீனியர்- ஜூனியர் இடையே நல்லதொரு நட்புறவை ஏற்படுத்துவதாகவே ராகிங்க் எனப்படும் விளையாட்டு அமைய வேண்டுமே தவிர அது கொலை, தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு விபரீதமாக முடியக் கூடாது.

ஆரம்பிச்சாச்சு மோடி தர்பார்!

     முந்தைய காங்கிரஸ் ஆட்சி மாதிரி ஒவ்வொரு முடிவுக்கும் கை கட்டிக்கொண்டு கூட்டணிக் கட்சியினரை கருத்துக் கேட்டு ஊழலில் அவர்களுக்கு பங்கு கொடுக்க வேண்டிய நிலையில் பா.ஜ.க அரசு இல்லை! தனிப்பெரும்பான்மை! தட்டிக்கேட்க வலுவான எதிர்கட்சி இல்லை! முக்கியமாக எதிர்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை! நல்லதானாலும் கெட்டதானாலும் பா.ஜ.க எடுக்கும் முடிவுக்கு எதிர்ப்பிருந்தாலும் பணிய வேண்டிய கட்டாயம் இல்லை! ஐந்து வருடங்கள் அவர்களுடைய தர்பார்தான்! அதன் மக்களுக்காக பாடுபடும் மோடி அரசு மக்களுக்காகவே ரயில் கட்டணங்களை உயர்த்தி விட்டது. இது முதல் அதிரடி அடுத்ததாக சமையல் காஸ் சிலிண்டர் மாதம் ஒருமுறை 5 ரூபாய் அளவிற்கு விலை ஏற்ற உள்ளது. இரண்டுமே தேவையான ஒன்றுதான். இலவசங்களுக்கு பழகிவிட்ட நமக்கு இதெல்லாம் கொஞ்சம் அதிகமாகத்தான் தெரியும். எங்கு சலுகை எதிர்பார்க்கிறோமோ அங்கு நாமும் சலுகை கொடுத்தாக வேண்டும். நாம் நியாயவானாக இருந்தால் எதிரியையையும் அழுத்தம் கொடுக்கலாம். மானியங்கள் என்ற முறையில் பல்லாயிரக்கணக்கான தொகை வீணடிக்கப் படுகிறது. இதில் எல்லாம் மாற்றங்கள் தேவைதான். மானியங்கள் மூலம் செலவழிக்கப்படும் தொகை உண்மையில் ஏழைகளுக்குச் சென்றடைகிறதா? என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். இலவசங்களை கொடுத்து கொள்ளையடிக்கும் அரசை விட கட்டணங்களை உரிமையாக பெற்று நன்றாக நிர்வகிக்கும் அரசே தேவை. அந்த வகையில் துணிச்சலாக செயல்படும் மோடிக்கு பாராட்டுக்கள்தான்.


 தொடரும் மின்வெட்டு!


 ஜூன் 1 முதல் மின்வெட்டு இருக்காது என்று எந்த நேரத்தில் முதல்வர் அறிவித்தாரோ அன்றிலிருந்து அதிகரித்து வருகிறது மின்வெட்டு. முதலிலாவது குறிப்பிட்ட சில மணிநேரங்கள் சொல்லிவிட்டு வெட்டினார்கள். இப்போதோ பலமணிநேரங்கள் சொல்லாமல் வெட்டுகிறார்கள். அதுவும் இரவு நேரத்தில் கொடுமையான வெப்பத்தில் மின்வெட்டினால் உள்ளேயும் படுக்க முடியாமல் வெளியேயும் படுக்க முடியாமல் படும் அவஸ்தை இருக்கிறதே அது மகா கொடுமை இந்த இருபத்தி ஐந்து நாட்களில் இதுவரை மூன்று நான்கு இரவுகள் இரவில் மின்வெட்டினால் ஒரே அவஸ்தை. நேற்று கூட திருநின்றவூர் ஆவடி போன்ற பகுதிகளில் இரவு நேரத்தில் போன மின்சாரம் விடிய விடிய வரவில்லையாம்.இதோ இந்த பதிவு கூட மதியம் 2.மணி சுமாருக்கு எழுத ஆரம்பித்தேன். பத்து நிமிடத்தில் போய்விட்டது மின்சாரம். இப்போது ஏழுமணிக்கு திரும்பியுள்ளது. இன்னும் எத்தனை நேரம் இருக்குமோ நிச்சயம் இல்லை! தென்மாநிலங்களில் நிலைமை இன்னும் மோசம்! மின்வழித்தடங்கள், மின்சார டிரான்ஸ்பார்மர்கள் பராமரிப்பு சொல்லிக்கொள்ளும்படி இல்லை! எங்கள் ஊர் பகுதியில் 50 வருடங்களுக்கு முன்பு நட்ட போஸ்ட்களும் மின் கம்பிகளுமே இன்னும் உபயோகத்தில் இருக்கின்றன. போதுமான பணியாளர்கள் கிடையாது. இருக்கும் பணியாளர்களும் சரிவர பணியாற்றுவது கிடையாது. இப்படி தள்ளாடுகிறது மின்சார வாரியம். இதில் மின் துறை அமைச்சர் விடும் வெட்டி சவடால்களுக்கு குறைவே இல்லை! இதில் இன்னும் என்ன கொடுமை என்றால் தமிழ்நாட்டில் உபரி மின்சாரத்தை எங்களுக்கு கொடுங்கள் என்று கேரளா முதல்வர் கேட்டதுதான். இதுதான் இந்தவார டிராஜடியும் கூட!

டீ.வி. கார்னர்!

  மின் தடை காரணமாக பல புரொகிராம்கள் பார்க்க முடியவில்லை! கடந்த சனிக்கிழமை எதேச்சையாக சானல்களை திருப்பியபோது புதுயுகம் சேனலில் ஒரு க்விஸ் நிகழ்ச்சி வித்தியாசமாக இருந்தது. இந்நிகழ்ச்சியின் பெயர் நினைவில் இல்லை! மூன்று போட்டியாளர்கள், ஒரு தொகுப்பாளினி கேள்வி கேட்பது பள்ளி மாணவர்கள். பல்வேறு தலைப்புக்களில், அரசியல், சமூகவியல், தமிழ், இலக்கணம் என்று ஐந்து ஐந்து கேள்விகள் கேட்கிறார்கள். போட்டியாளர்களாக டீ.வி செலப்ரட்டீஸ்கள்! குட்டீஸ்களின் கேள்விகளுக்கு முழிக்கிறார்கள். சுவையாக செல்கிறது நிகழ்ச்சி. நல்லதொரு பொழுதுபோக்கோடு பொது அறிவையும் வளர்த்துக்கொள்ள முடியும்.
இதே புதுயுகம் சேனலில் மேட்னி மூவி போடுகிறார்கள். சுமாரான படங்கள் போடுகிறார்கள். அதிக விளம்பரங்கள் இல்லை! அதையும் பார்க்கலாம்.

என் நூலகம்!

திக்குத் தெரியாத காட்டில்!
ரமணிச்சந்திரன்

வெளியீடு: அருணோதயம், 5/3 கௌடியாமடம் சாலை
   இராயப்பேட்டை, சென்னை- 14
விலை ரூ. 70.

ரமணிச்சந்திரன் நாவல்கள் எனக்கு அறிமுகம் ஆனது எனது பதின்ம வயதில். என்னுடைய அக்கா இந்த நாவல்களை விரும்பி படிப்பார். அவர்தான் இந்த நாவல்களை படிக்க எனக்கு அறிமுகம் செய்தவரும் கூட. அதற்கு முன் வரை குமுதம், விகடன், க்ரைம் நாவல்கள் படித்து இருக்கிறேன். இந்த நாவல்களை படித்தது இல்லை. முதல்முதலில் ரமணிச்சந்திரனின் காத்திருக்கிறேன் ராஜகுமாரா! நாவல் சென்னையில் பி.காம் முதலாண்டு பரிட்சை எழுதிவிட்டு வரும்போது வாங்கி வந்து மறுநாள் தேர்வுக்கு கூட படிக்காமல் இந்த நாவலை வாசித்து முடித்தேன். அப்படி ஓர் எழுத்து நடை! கதாபாத்திரங்களோடு ஒன்றிப்போக வைக்கும் பாணி எழுத்து அவருடையது. சிலநாவல்கள் கொஞ்சம் வளவளா என்று இருந்தாலும், பெரும்பாலும் நாயகன், நாயகி, அவர்களுக்கு இடையேயான ஊடல்,பின் சேர்தல் வகை நாவல்கள்தான் என்றாலும் பல பெண்கள் விரும்பி படிக்கும் நாவல்கள் ரமணிச்சந்திரனுடையதுதான். திக்குத் தெரியாத காட்டில் என்ற இந்த நாவலும் அந்த வகையில் ஒன்றுதான். நண்பனின் திருமணத்திற்கு வரும் நாயகன். அந்த திருமணத்தில் கலந்து கொள்ள வரும் பெண் வீட்டு சொந்தம் நாயகி. அவள் தூக்க மாத்திரை வாங்க செல்ல நாயகன் தடுப்பதில் சூடு பிடித்து நாயகன் அவளை மணந்து கொள்ளுதல், அவர்களிடையே கருத்து வேறுபாடு, பிரிதல், பின்பு சேருதல் என்று துளியும் விறுவிறுப்பு குறையாமல் சென்று சுபமாய் முடிக்கிறார் ஆசிரியர். சுவையான நாவல். இளைஞிகளுக்கு இனிக்கும்.

கிச்சன் கார்னர்:

ஜவ்வரிசி வடை!


தேவையானவை:  ஜவ்வரிசி கால்கிலோ. நறுக்கிய வெங்காயம் ஒன்று, இஞ்சி, சிறியதுண்டுகளாக நறுக்கியது சிறிது, பச்சைமிளகாய் நறுக்கியது 5. வறுத்த வேர்க்கடலை 25 கிராம். கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு. தேவையான அளவு.

செய்து பார்ப்போமா? ஜவ்வரிசியை தண்ணீரில் கழுவி ஊறவைக்கவும். மென்மையானவுடன் மிக்சியில் போட்டு சிறிது உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். பின்னர் அதை பாத்திரத்தில் கொட்டி வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி கறிவேப்பிலை,ஒன்றிரண்டாக வேர்க்கடலையை பொடித்து அதனுடன் சேர்த்து பிசைந்து கொள்ளவும். எண்ணெயை காயவைத்து மாவை வடைகளாக தட்டிப்போட்டு, வெந்தவுடன் இறக்கி சூடாகப் பறிமாறவும்.

டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்!

நீங்கதான் காய்கறி வாங்கறீங்களா வீட்டுக்கு! கொஞ்சம் கவனிங்க ப்ளீஸ்!

காய்கறிகள் நன்கு விளையவும், நல்லதோற்றம், வேகமான முதிர்ச்சி நிறைய மகசூலுக்காக ஏகப்பட்ட பூச்சி மருந்துகள், உரங்கள் போடப்படுகின்றன. இவை நம்மை பாதிக்கும். காய்கறிகளை எப்படி உபயோகிக்க வேண்டும் சில டிப்ஸ்.

வெள்ளரிக்காய், கேரட் இவற்றின் தோலை முழுமையாக நீக்கவும். கேரட்டிற்கு மாதத்திற்கு மூன்றுமுறை மருந்து தெளிப்பார்களாம். கேரட்டில் அடிப்பாகம். பச்சை நிறமுள்ள காம்பு பகுதி கண்டிப்பாக நீக்கிவிடுங்கள். உப்பு நீரில் கழுவி உபயோகிக்கவும்.

கத்தரி, மற்றும் தக்காளிக்கு அடிக்கப்படும் பூச்சிமருந்து காம்புப்பகுதியில் அதிகம் இடம்பிடிக்கும். கத்தரிக்காய் காம்பை நீக்கிவிடவும். தக்காளியின் குழிப்பகுதியான காம்பு பகுதியை நன்கு வெட்டி நீக்கவும். இதனால் தக்காளியால் உருவாகும் சிறுநீரகக் கல் உருவாகுதலும் தடுக்கப்படுகிறது.

காராமணி காயின் மேல் புழுக்களை விரட்ட மருந்துஅடிக்கப்படுகிறது. வாங்கியவுடன் உப்பு நீரில் சிறிது நேரம் போட்டுவைத்திருந்து காம்பு நுனி பகுதிகளை நீக்கி உபயோகிக்கவும்.

கீரை பூச்சிகள் அரித்து இருப்பதே நல்ல கீரை மருந்து அடிக்காதது. பச்சைபசேல் என்று செழித்து காணப்படுவது மருந்து தெளித்த கீரை. அதை உபயோகிப்பதை தவிர்க்கவும்.

முட்டைகோஸ் மீதும் மருந்து தெளிக்கப்படுகிறது. பச்சை நிறமாக காணப்படும் இதழ்களை பிய்த்து எறிந்து உப்பு நீரில் கழுவி பயன்படுத்தவும்.

கறிவேப்பிலை ஓசியில் கிடைக்கிறது என்று இன்னும் ஒரு கொத்து கூடக் கேட்போம். கறிவேப்பிலை விரைவில் துளிர்க்க ப்யூரிட்டான் என்ற மருந்து தெளிக்கப்படுகிறது. யூரியா போடுவார்கள். ப்யுரிட்டான் நமது ஹார்மோன்களை பாதிக்கக்கூடியது. வினிகர் கலந்த நீரிலோ, சுடுநீரிலோ கழுவித் துடைத்து உபயோகிக்கவும்.

பச்சை மிளகாய் மீதும் மருந்து தெளிக்கப்படுகிறது. காம்பை நீக்கி சுடுநீரில் கழுவி உபயோகித்தல் நல்லது.

பாகற்காய் உடல் முள்மாதிரி இருப்பதால் அதில் மருந்து தங்க வாய்ப்பு உண்டு. அவற்றை நன்கு கத்தியால் கீறி உப்பு நீரில் அலசி உபயோகிக்கவும்.

நல்லசிவப்பாக உள்ள ஆப்பிள் மெழுகு பூசப்பட்டது. நல்ல நிறமான மாம்பழம் கார்பைடால் பழுக்கவைக்கப்பட்டதாக இருக்கலாம். பன்னீர் திராட்சையில் அடிக்கப்பட்ட பூச்சிக்கொள்ளி எத்தனை முறை கழுவினாலும் போகாது. பனியன் துணியினால் துடைத்து உபயோகிக்கவும்.

மொத்தத்தில் பழங்களை தோல் நீக்கி உண்ணுதல் உடலுக்கு நல்லது.

( பழைய இதழொன்றில் படித்தது)

படிச்சதில் பிடிச்சது!


   ஒரு பெண்மணி டாக்டரைத் தேடிவந்தார். “டாக்டர், என் கணவருக்கு திடீர்னு அகோரப் பசி வந்துடுச்சு! நிறைய சமைச்சுப் போடறேன். அவ்வளவையும் சாப்பிட்டுட்டு… கீழே கிடக்கிற குப்பை கூளங்களையும் எடுத்து சாப்பிட ஆரம்பிச்சுடறார். என்னான்னு பாருங்களேன் டாக்டர்!” என்றார்.
 “சரிம்மா! எவ்வளவு நாளா இப்படி இருக்கு?”
“ஒருவாரமா இப்படி இருக்கு!”
“இவ்வளவு நாளா ஏன் சும்மா இருந்தீங்க? ஆரம்பத்துலேயே இங்கே அழைச்சிக்கிட்டு வர வேண்டியதுதானே…?”
“வீடு பூரா சுத்தமாகட்டுமேன்னு காத்துக்கிட்டிருந்தேன் டாக்டர்!”
 (தமிழ் இந்துவில் படிச்சது)


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!   

Comments

 1. கதம்ப சோறு நல்லா பதமாத்தான் இருந்ததுங்க....

  ReplyDelete
 2. எங்கு சலுகை எதிர்பார்க்கிறோமோ அங்கு நாமும் சலுகை கொடுத்தாக வேண்டும்.

  அருமையான வார்த்தை நண்பரே.....

  ReplyDelete
 3. டிப்ஸ் - மிகவும் பயனுள்ளவை...

  மற்ற அனைத்திற்கும் நன்றி...

  ReplyDelete
 4. சத்துடன் கூடிய ருசியான அருமையான
  கதப்பச் சோறு
  பரிமாறியவிதமும் அருமை
  தொடர நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. மாணவியின் மரணம் மனம்பதைக்க வைத்தது. சட்டங்கள் போட்டு எவரையும் திருத்தமுடியாது. தாங்களே உணர்ந்து திருந்தவேண்டும். மற்றப் பகிர்வுகள் அனைத்தும் ரசனை. காய்கறி விஷயம் மிகவும் பயனுள்ளது. பகிர்வுக்கு நன்றி சுரேஷ்.

  ReplyDelete
 6. இந்த ராகிங் கொடுமை என்று தான் முடியப்போகுத!!!!

  ஜவ்வரிசி வடை புதிது. டிப்ஸ் எல்லாம் அருமை.

  ReplyDelete
 7. ராகிங் கொடுமை இனி தொடரக்கூடாது. இதில் அரசாங்கம் சட்டம் போட்டு ஒன்றும் ஆவதற்கில்லை. அடுத்த மனிதனை எந்த விதத்திலும் துன்புறுத்தி சுகம் அனுபவிக்க எந்த ஒரு மனிதனும் இனி பழகாமல் கவன்மாய் பிள்ளைகளை வளர்க்கனும்.

  ReplyDelete
 8. ஜவ்வரிசில வடையா?! புதுசா இருக்கே! செஞ்சு சாப்பிட்டு பார்த்து சொல்றேன். காய்கறி டிப்ஸ்க்கு நன்றி சகோ!

  ReplyDelete
 9. ராகிங் கொடுமையில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது இதைப் போன்ற முதல் தலைமுறை கல்வி கற்க்கும் மாணவர்களே, அதற்க்கான நடவடிக்கையை சரியாக எடுக்காமல் வெறும் செய்திகளை மீடி மறைத்து மட்டும் எதை செய்யப் போகிறோமோ தெரியவில்லை

  ReplyDelete
 10. நம் சமூகத்தில் பரவியிருக்கும் வக்கிரத்தை காட்டும் ராகிங் கொடுமைகள் முற்றிலும் ஒடுக்கப்படவேண்டும் !

  " மானியங்கள் மூலம் செலவழிக்கப்படும் தொகை உண்மையில் ஏழைகளுக்குச் சென்றடைகிறதா? என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும் "

  மேலும் சொன்னால் இந்த மானியங்களே ஒரு வகையில் ஊழலின் ஊற்றுக்கண் !

  மின்வெட்டு... தொலைநோக்கு திட்டங்கள் செயல்படுத்தபடாத வரையில் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடையாது !

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  ReplyDelete
 11. கதம்ப சோறு மிக அருமை சுரேஷ்! என்ன முதலில் சொல்லப்பட்ட ஒன்று மனதுக்கு வேதனை! ராகிங்க் கொடுமை! ஆனால் அந்தப் பெண்ணுக்கு அவளது பெற்றோர் ஆதரவுடன், பெண்களின் சமூக அமைப்பிடம் சென்று புகார் கொடுத்து, அவர்கள் துணையுடன் கல்லூரி மேனஜ்மெண்டில் புகார் கொடுத்து, போலீசிலும் புகார் கொடுத்து தைரியமாகப் போராடி இருக்கலாமோ என்றும் தோன்றுகின்றது நண்பரே! ஏனென்றால் உயிர் என்பது சீப்பாகிவிட்டதோ என்று தோன்றுவதால்!! நம் பெண்களுக்கு இன்னும் தைரியம் வர வேண்டும்! புரட்சிப் பெண்களாக மாற வேண்டும்!

  மின் வெட்டு....ம்ம்ம்ம்ம் என்ன சொல்லியும் நோ யூஸ்! என்ன செய்ய...நாம் அமர வைக்கும் ஆட்சியாளர்கள்தானே.....நாம் அப்பாவிகள்!

  ஜவ்வரிசி வடை மகாராஷ்டிரா மாநிலத்து ஸ்பெஷல்! மிக சுவையாக இருக்கும்!

  காய்கறி டிப்ஸ் அனைத்தும் அருமை! கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டிய ஒன்று!

  ReplyDelete
 12. சுவையான கதம்ப சோறு..... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சுரேஷ்.

  ReplyDelete
 13. மைதிலி கஸ்தூரி ரெங்கன் வலைச்சரத்தில் இன்று தங்களைப் பற்றி விவாதிக்கிறார். தங்களின் பதிவுகளை அவ்வப்போது படித்துவருகிறேன். கதம்பச் சோறு ருசிக்கும்படி இருந்தது. வாழ்த்துக்கள்.
  www.drbjambulingam.blogspot.in
  www.ponnibuddha.blogspot.in

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2