அரசுப் பள்ளி என்றால் கேவலமா? காசு கொடுத்து படிப்பதுதான் கவுரவமா?

அரசுப் பள்ளி என்றால் கேவலமா? காசு கொடுத்து படிப்பதுதான் கவுரவமா?


இரண்டு வாரங்கள் முன்னதாகவே இந்த கட்டுரையை எழுதி இருக்க வேண்டும். ஆனால் ஏனோ பல வேலை நெருக்கடிகளால் முடியவில்லை! இன்று தமிழ் இந்துவில் சமஸ் எழுதிய ஒரு கட்டுரையை படித்ததும் இந்த கட்டுரையை எழுதியே தீருவது என்று முடிவு செய்தேன். சமஸ் எழுதிய கட்டுரையை படிக்க இங்கு: அரசுப் பள்ளிகளின் படுகொலைக்கு யார் காரணம்?
    திருமணம் ஆவதற்கு முன்பே என் நண்பர் குழாமில் ஒரு சபதம் எடுத்து இருந்தோம். தனியார் பள்ளிகள் வரவால் அரசுப்பள்ளிகள் அழிந்து வருகின்றன. தனியார்பள்ளிகள் கொள்ளை லாபம் அடிக்கின்றன. கல்யாணமாகி பிள்ளை பிறந்தால் அரசுப் பள்ளியில்தான் சேர்ப்பது என்று ஒரு சபதம் அது. அப்போது நண்பர்களுக்குள் ஒரு சங்கம் இருந்தது. அதன் உறுப்பினர்கள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தந்தனர்.
    காலம் உருண்டோட சங்கம் கலைந்தது. பல நண்பர்கள் திருமணமாகி பிள்ளைப் பெற்று மனைவி, சுற்றம் என்று சாக்குபோக்கு சொல்லி தனியார் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்த்துவிட்டனர். இப்போது என் முறை! நான் என் பெண்ணை அரசுப்பள்ளியில்தான் சேர்ப்பது என்று உறுதியாக இருந்தேன். என் பெற்றோரும் அதையே சொன்னனர். சென்ற வருடமே பள்ளிக்கு சென்று விசாரித்தோம். அடுத்த வருடம் சேருங்கள் ஆங்கில மீடியம் கூட வருகிறது என்றார்கள்.
   ஒரு பத்து வருடங்கள் முன்பு அந்த ஆரம்பப் பள்ளியில் சுமார் நூற்று இருபது மாணவர்கள் பயின்று கொண்டிருந்தனர். இன்று அது கழுதை தேய்ந்து கட்டெரும்பாகி வெறும் முப்பது பேர்களே படிக்கின்றனர். அதில் பெரும்பாலும் தலித், மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் குழந்தைகள்தான்.
    குழந்தையை சேர்த்துவிட்டு வெளியே வரும்போதே இந்த ஸ்கூல்லயா சேர்த்து இருக்கிறே? கான்வெண்ட்ல சேர்க்கலையா? வேலம்மாளில் சேர்க்கறதுதானே? என்று தெரிந்தவர்களிடம் இருந்து ஏகப்பட்ட கேள்விகள்.

  இன்று ஊருக்குள் ஒரு நான்கைந்து தனியார் பள்ளி வேன்கள் வருகின்றது. காலை ஏழுமணிக்கெல்லாம் அவசர அவசரமாக அரைகுறை தூக்கத்தில் எழுப்பி குளிப்பாட்டி காலை உணவை திணித்து மதிய உணவை கட்டிக்கொடுத்து பஸ்ஸில் ஏற்றி அனுப்புகிறார்கள். பாடச்சுமை வேறு அதிகம். எல்.கே.ஜி படிக்கும் மாணவர்கள் கூட பத்துகிலோ எடை சுமக்க வேண்டியுள்ளது. பிள்ளைகளின் இளம்பிராய சுதந்திரம் வலுக்கட்டாயமாக பறிக்கப்படுகிறது. ஒரு ஆடல், பாடல், விளையாட்டு எதுவும் இல்லை! ஒரு எந்திரமாக வளர்க்கப்படுகிறது குழந்தை! ஆர்வம் இருக்கிறதோ இல்லையோ மியுசிக், கேம்ஸ், டேன்ஸ் என்று எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்ட்டிவிட்டீஸ் என்ற பெயரில் திணிக்கப்படுகிறது. அனைத்தும் பணம். பணம் காய்ச்சும் மரங்களாக பெற்றோர்களை மாற்றி அறுவடை செய்துவிடுகின்றன தனியார் பள்ளிகள்.
   எங்கள் பகுதியில் ஒரு ஐந்து ஆண்டுகளில் ஒரு கார்பரேட் பள்ளியாக உருவெடுத்த தனியார் பள்ளி கொள்ளை லாபம் சம்பாதித்து கொண்டு இருக்கிறது. அதன் விளைவாக சுற்றுப்புறத்தில் இருந்த அரசுப்பள்ளிகள் மற்றும் சில சின்ன நர்சரி பள்ளிகள் தங்களது இடத்தை தக்கவைக்க முடியாமல் இழந்து வருகின்றன.
     சின்ன நர்சரி பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன. அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து விலகல்கள் அதிகரித்துவிட்டது. இன்னும் சில வருடங்களில் அரசுபள்ளிகளே காணாமல் போய்விடும் போல!  அரசு பள்ளி என்றாலே ஒரு அலட்சியமாக கேவலமாக பார்க்கின்றனர் மக்கள்.
   என்னிடம் ஒரு பெண்மணி கேட்டார். கவர்மெண்ட் ஸ்கூல்லயா பெண்ணை சேர்த்தே? கான்வெண்ட்ல சேர்க்க மாட்டியா?
   ஏன் கவர்மெண்ட் ஸ்கூல்ல சேர்த்தா என்ன? உன் பையனும் அங்கதானே படிச்சான்!
  அது அந்த காலம்! இப்ப நிறைய கான்வெண்ட் வந்துருச்சு! இங்கிலிஷ் நல்லா சொல்லிக்கொடுக்கிறாங்க!
   அதே இங்கிலிஷ் இங்க ஓசியா சொல்லிக்கொடுக்கிறாங்களே!
   மெய்யாவா?
எல்லா கவர்மெண்ட் ஸ்கூலிலும் இங்கிலிஷ் மீடியம் வந்துருச்சு! கம்ப்யூட்டர் இருக்கு! வீடியோ டிவிடி போட்டு சொல்லிக் கொடுக்கிறாங்க எல்லாமே இலவசம் அதோட ஸ்கூல் நம்ம ஊரிலேயே இருக்குது! பசங்களை 9மணிக்கு ஸ்கூலுக்கு அனுப்பிச்சா போதும். என்ன ஆச்சோ ஏதாச்சோன்னு பதட்ட பட வேண்டியது இல்லை! என்றேன்.
   அப்படியா?
அட ஆமாம்மா! கவர்மெண்டில ஓசியா டிவி கொடுத்தா வாங்கிக்கிறீங்க? மிக்சி கிரைண்டர். ஃபேன் எல்லாம் ஓசியில கொடுத்தா வாங்கிக்கிறீங்க! கல்வி கொடுத்தா மட்டும் கசக்குதா? என்றேன்.
   அவரால் பேச முடியவில்லை!
இன்னொருவர் கேட்டார். ஏம்ப்பா கான்வெண்டில சேர்க்குற அளவுக்கு உனக்கு வசதியா இல்லாம போயிருச்சு! நல்லாத்தானே சம்பாதிக்கிறே?
    நான் சம்பாதிப்பதை எல்லாம் கான்வெண்ட் காரனுக்கு கொடுத்து அவனை பெரிய ஆளாக்க விரும்பவில்லை என்றேன்!
  என்னப்பா இப்படி சொல்றே? நீ பத்தாயிரம் கட்டியா அவன் பணக்காரன் ஆயிடபோறான்! அங்க தான் நல்ல எஜுகேசன் கிடைக்கும் என்றார்.
   என்னைப்போல எத்தனைபேர்க்கிட்ட பத்தாயிரம் வாங்குவான்? அத்தனையும் கல்விக்கே செலவழிக்கிறானா? கவர்மெண்ட்ல நல்ல எஜுகேசன் இல்லாமலா பசங்க 10ம் வகுப்புல நானூத்தம்பது மார்க்கு வாங்குது? என்றேன்.
  இன்றைய கல்வி ஒரு பேசன் ஆகிவிட்டது! வகுப்பறையை மாடர்ன் ஆக்கி, ஃபேன் ஏசி என்று மாற்றி எல்லாவற்றையும் ஆங்கிலத்தில் சொல்லிக் கொடுத்து தமிழை மறக்கடித்து ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே கண்ணாடி அணியச் செய்துவிடுகின்றது கான்வெண்ட் பள்ளிக்கூடங்கள்.
பொதுவாக மனிதர்கள் பக்கத்து வீட்டுக்காரனை நோக்குகின்றனர். அவன் என்ன செய்கின்றான்? அவன் பிள்ளை எங்கு படிக்கிறான்? என்ன வேலை செய்கிறான்? அதையே தாமும் செய்ய வேண்டும் என்று நினைத்து அப்படியே செய்கின்றனர். அதற்கான தகுதி, பொருளாதாரம் போன்றவை பற்றி கவலைப்படுவது இல்லை!
அன்றாடம் கூலி வேலை செய்யும் ஒருவர்கூட தன் குழந்தையை கான்வெண்ட்டில் படிக்க வைக்க ஆசைப்படுகிறார். கலர்கலரான யூனிபார்ம், ஷு, டை, நுனிநாக்கு ஆங்கிலம், வேன் இவைகள் சாதாரண மனிதர்களை கவர்ந்திழுக்கவே செய்கின்றன.
    குறைந்த பட்சம் ஐந்தாம் வகுப்பு, அல்லது எட்டாம் வகுப்போடு இந்த கான்வெண்ட் மோகம் தீர்ந்து போகிறது. அதற்குப்பின் பீஸ் கட்ட முடிவதில்லை! அப்போது அருகில் இருக்கும் அரசுப்பள்ளியில் சேர்க்கின்றனர். பெரும்பாலும் ஆரம்பப் பள்ளிகள் தான் இந்த தனியார் பள்ளிகளால் பாதிக்கப் படுகின்றன.

    வெட்டி கவுரவம் பார்க்காமல் நிலை உணர்ந்து அரசு பள்ளிகளில் சேர்க்க பெற்றோர் முன் வர வேண்டும். குழந்தைகளை பிஞ்சிலேயே கருகவிடாமல் இருக்க அரசுப்பள்ளிகள் தான் சரி! இதை பெற்றோர்கள் எப்போது உணர்வார்களோ? உடுத்தும் உடை, உணவு, புத்தகம் என்று எல்லாம் இலவசம், கல்வியும் ஆங்கிலவழியும் உள்ளது. பள்ளியும் அருகிலே உள்ளது இருந்தும் பிள்ளைகளை ஐந்து கிலோ மீட்டர் தள்ளி கான்வெண்டில் தான் சேர்ப்பேன் என்றால் அது வெட்டிக்கவுரவம். அந்த கவுரவம் எனக்குத் தேவை இல்லை! எங்கள் ஊரில் பலர் இருக்கும் கொஞ்ச நஞ்ச நிலத்தையும் விற்று கான்வெண்டில் சேர்த்து படிக்க வைத்தனர் பிள்ளைகளை! பத்தாம் வகுப்பில் அவர்கள் எடுத்த மதிப்பெண்கள் அரசுப்பள்ளி மாணவர்கள் எடுத்ததை விட மிகக் குறைவு. ஜஸ்ட் பாஸ் என்ற நிலையில் தேறியுள்ளனர். இருந்தும் பாழாய் போன கவுரவம், அடுத்த வீட்டுக்காரனைப் பார்த்து பொறாமை ஒப்பீடு ஆகியவை இந்த கான்வெண்ட் மோகத்தை வளர்க்கிறது.
   முதல்வகுப்பில் சேர்த்துள்ளேன் என் மகளை! மூன்றே புத்தகங்கள்! மூன்று நோட்டுகள். சுமை இல்லை! பாடச்சுமையும் இல்லை! புத்தக சுமையும் இல்லை! தினமும் காலையில் பள்ளியில் விட்டு மதிய உணவிற்கு 12-40க்கு வீட்டுக்கு அழைத்துவந்து உணவு அளித்து பின் மதியம் 2.00 மணிக்கு சென்று மாலை 4-10க்கு பள்ளி விட்டதும் திரும்புகிறாள். அவளாகவே ஆர்வமாக படிக்கிறாள். எழுதுகிறாள். இன்று அவளை பள்ளியில் இருந்து அழைத்து வருகையில் சொன்னாள். அப்பா! ஸ்கூல்ல தினமும் சத்துணவுல முட்டை போடறாங்க! பசங்க எல்லாம் சாப்பிடறாங்க! பாவம் எத்தனை கோழிங்க செத்துப் போவுது!
  கோழிங்க எப்படிம்மா செத்து போகும்!
ஐயோ! அப்பா! இதுக்கூட தெரியாதா? முட்டையில இருந்துதானே கோழிக்குஞ்சுங்க பிறக்கும்! ஆனா இவங்க முட்டையை சாப்பிட்டுடறாங்களே!
   இந்த சிந்திக்கும் திறன்! கான்வெண்ட்டில் வருமா? என்று தெரியவில்லை! பிள்ளைகளின் சுதந்திரத்தை பறித்து, சிந்திக்கும் திறனை மழுங்கடித்து கூண்டில் அடைத்து வளர்க்கும் கான்வெண்ட் பள்ளிகள் தேவையில்லை! வண்ண மலர்த் தோட்டத்தில் சுதந்திரமாக பறக்கும் வண்ணத்து பூச்சிகள் போன்ற குழந்தைகளை ஆராதிக்கும் ஆரம்ப பள்ளிகளே தேவை!
  அரசுபள்ளிகள் ஒன்றும் கேவலம் இல்லை! படிக்கும் குழந்தைகள் எங்கிருந்தாலும் படிக்கும்! இதை எல்லா பெற்றோர்களும் உணரவேண்டும்.


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. ரொம்ப ஆச்சரியமாக இருக்கு. மேம்போக்காக சுருக்கமாக எழுதி விட்டு நகர்ந்து விடுவிங்க. ஆனால் இந்த முறை மிக அழகாக எழுதியிருக்கீங்க. எனக்கு இந்த கட்டுரை (கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ) பிடித்துள்ளது.

    ReplyDelete
  2. தங்கள் குழந்தையை அரசுப் பள்ளியில் சேர்த்துள்ளமைக்கு முதலில் பாராட்டுகள் ...அரசு ஆதரவுடன் தனியார் பண முதலைகள் விரித்துள்ள மாயவலையில் பெற்றோர் சிக்கித் தவிக்கிறார்கள்...தங்கள் பதிவு அருமை!

    ReplyDelete
  3. சமஸ் எழுதிய கட்டுரையினையும் படித்தேன்
    தங்களது எண்ண ஓட்டமும் அருமை
    பெற்றோர்களுக்கு விழீப்புணர்வு வரவேண்டும்
    நன்றி நண்பரே

    ReplyDelete
  4. வெட்டி கவுரவம் - சரியாச் சொன்னீங்க...

    ReplyDelete
  5. நல்ல உபயோகமான பதிவு நண்பரே... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. கையை கொடுங்கள் சார் . தெரிந்தவர்கள்,உற்றார், உறவினர் என்று யார் பேச்சையும் கேட்காமல், மகளை அரசாங்கப் பள்ளியில் சேர்த்ததற்கு. கேள்வி கேட்டவர்களுக்கு பதில் நெத்தியடி. தங்கள் மகள் மேன்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. சமஸ் எழுதிய கட்டுரையை நாங்களும் படித்தோம்! அதைப் பற்றியும் பேசினோம்....எழுத வேண்டும் என்றும் நினைத்தோம்....தாங்கள் அழகாக எழுதிவிட்டீர்கள்! மிக ஆழமான நல்ல கருத்துக்கலைச் சொல்லி இருக்கின்றீர்கள்......

    //அட ஆமாம்மா! கவர்மெண்டில ஓசியா டிவி கொடுத்தா வாங்கிக்கிறீங்க? மிக்சி கிரைண்டர். ஃபேன் எல்லாம் ஓசியில கொடுத்தா வாங்கிக்கிறீங்க! கல்வி கொடுத்தா மட்டும் கசக்குதா? என்றேன்.// நல்ல பதில்! உண்மை!

    பெற்றோர்கள் தான் முன் வர வேண்டும்...வெட்டி கவுரவம் பார்க்காமல்.....இதையேதான் நாங்களும் பேசிக் கொண்டோம்! நல்ல நல்ல பதிவு சுரேஷ்!!

    உங்களுக்கு சபாஷ்! தங்கள்மகளை அரசாங்கப் பள்ளியில் சேர்த்ததற்கு! சுற்றம் எல்லாம் குற்றம் பார்க்கையில்...தாங்கள் சேர்த்ததற்கு!.....தங்களுக்கு மட்டுமல்ல மகளுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்!

    முட்டையைப் பற்றித் தங்களுக்குத் தெரிந்திருக்கும்! இருந்தாலும்....உண்பதற்காக வரும் முட்டை கருவுற்ற முட்டை அல்ல....அதிலிருந்து குஞ்சு வராது! கோழி முட்டை இட சேவல் அவசியம் இல்லை! கோழிக்கு முட்டை உருவானதும் சேவலுடன் இணைந்தால் மட்டுமே அந்த முட்டைகளை கோழி அடைகாக்க அதிலிருந்து குஞ்சுகள் வரும்.....கோழிப் பண்ணையில் சேவல்களை அனுமதிப்பதில்லை. இந்த முட்டைகள் உணவிற்காக உபயோகப்படுத்தப்படுபவை! கோழிகள் குஞ்சுகள் பெருக்கம் வேண்டுமென்றால் அவை தனியாக வளர்க்கப்படுபவை....உஅணவிற்காக...ப்ராய்லர் கோழிகள்....அதனால்தான் முட்டை வெஜிடேரியன் என்று சொல்லப்படுகின்றது! தங்கள் மகளுக்கு இதைச் சொல்லலாம்!

    ஆனாலும் தங்கள் ம்கள் சொல்லியதிலும் அர்த்தம் உள்ளது! இந்தக் கோழிகளை சேவல் அண்டவிடாமல் வளர்ப்பதால்தான் அந்த முட்டைகள் உணவிற்கு....அவற்றுடன் சேவல் இணைந்தால் முட்டைகள் குஞ்சுகள் ஆகும்! எனவே அதுவும் அர்த்தமுள்ளதுதான்!

    ReplyDelete
  8. அருமையான கட்டுரை சுரேஷ்.

    உங்கள் மகளை அரசுப் பள்ளியில் சேர்ந்தமைக்கு பாராட்டுகள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2