உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 60
உங்களின்
தமிழ் அறிவு எப்படி? பகுதி 60
வணக்கம்
வாசக நண்பர்களே! சென்ற இருவாரங்களாக மரபுத்தொடர்களை பற்றி அறிந்து கொண்டோம். சென்ற
வாரம் படித்ததை நினைவு கூற இங்கு: இடக்கரடக்கல்,மங்கலவழக்குத்தொடர்
நினைவுக்கு வந்து விட்டதா? இன்று நாம் கற்க
இருப்பது அன்று- அல்ல வேறுபாடு.
அன்று, அல்ல இரண்டும் குறிப்பு
வினைமுற்றுக்கள். “அல்” என்னும்
அடிச்சொல்லில் இருந்து பிறந்தவை ஆகும். இவை அஃறிணை, மூவிடம், ஒன்றன்பால்,
பலவின்பால் ஆகியவற்றுக்கு மட்டும் உரியது. எல்லாவற்றிற்கும் உரியது அல்ல. ஒருமை
பன்மை அறிந்து இந்த சொற்களை கையாள வேண்டும். அப்படி அறியாமல் கையாண்டால் இலக்கணப்
பிழை ஏற்படும்.
‘அன்று’ என்பது ஒருமை வினைமுற்று.
‘அல்ல’ என்பது பலவின்பால் வினை முற்று.
எனவே
எழுவாய் ஒருமையாக இருந்தால் ஒருமை வினைமுற்றையும். எழுவாய் பன்மையாக இருந்தால்
பன்மை வினைமுற்றையும் பயன்படுத்த வேண்டும்.
ஒரு
எடுத்துக்காட்டு மூலம் மேலும் அறிவோம்.
அன்று = அல்+று; று – ஒருமை விகுதி
இது ஒரு வீடு அன்று.
இது மொழி அன்று
இஃது ஊரன்று.
இது கிளியன்று.
மேலே
கண்ட வாக்கியங்களில் வீடு, மொழி, ஊர், கிளி ஆகியவை ஒருமை ஆகும். எனவே வினைமுற்று
‘அன்று’ என்று வந்துள்ளது.
இவை வீடுகள் அல்ல
அவை மொழிகள் அல்ல
இவை ஊர்கள் அல்ல
இவை கிளிகள் அல்ல
மேலே கண்ட
வாக்கியங்களில் வீடுகள், மொழிகள், ஊர்கள்,
கிளிகள் என்று பன்மை எழுவாய் வந்துள்ளதால் ‘அல்ல’ என்னும் பன்மை வினைமுற்று
வந்துள்ளது.
இது நாடு அல்ல, இவை நாடுகள் அன்று என்று
எழுதுதல் கூடாது. அவ்வாறு எழுதுவது இலக்கணப் பிழை ஆகும். ஆனால் இக்கால பேச்சு
வழக்கிலும் எழுத்து வழக்கிலும் எல்லாவற்றிற்கும் ‘அல்ல’ என்பதையே
பயன்படுத்துகின்றனர். இது தவறாகும்.
அல்லன் – அல்லள் – அல்லர்
அல்லன் – அல்+அன்; ஆண்பால்
விகுதியாகும்.
எ.கா) நெறியோடு வாழாதவன்
மனிதன் அல்லன்.
எல்லோர்க்கும் பணிகிறவன்
கோழை அல்லன்.
மெலியாரை ஒறுக்கின்றவன்
வீரன் அல்லன்.
அல்லள் – அல்+ அள்; அள்- பெண்பால் விகுதி.
எ.கா)குழந்தையை கொஞ்சி மகிழாதவள் தாய் அல்லள்
அல்லர் – அல்+ அர் அர்;
பலர்பால் விகுதி
எ.கா) நாட்டை போற்றாதார் மக்கள் அல்லர்
கல்வியை கற்காதார் மாணவர் அல்லர்.
இந்த எடுத்துக்காட்டுகள்
மூலம் அஃறினையில் ஒருமை இருந்தால்
ஒன்றன்பால் வினைமுற்று அன்று பயன்படுத்த வேண்டும்.
அஃறிணையில் பன்மை
இருந்தால் பலவின்பால் வினைமுற்று அல்ல பயன்படுத்த வேண்டும் என்று அறியலாம்.
அதே போல உயர்திணையில் ஆண்பால், பெண்பால் பலர்பால் எழுவாய்கள்
இருப்பின் அல்லன், அல்லள், அல்லர் என்று அறியலாம்.
இனிக்கும் இலக்கியம்
கலித்தொகை
குறிஞ்சிக்கலி
பாடியவர்: கபிலர்
(புகாஅக் காலைப்
புக்கெதிர்ப் பட்டுழி பகாஅ விருந்தின் பகுதிக் கண் தலைவி தோழிக்கு கூறியது)
சுடர்த்தொடீஇ கேளாய்!
தெருவில்நாம் ஆடும்
மணல்சிற்றில் காலில்
சிதையா அடைச்சிய
கோதை பரிந்து வரிப்பந்து
கொண்டோடி
நோதக்க செய்யும்
சிறுபட்டி, மேலோர்நாள்
அன்னையும் யானும்
இருந்தேமா இல்லிரே.
‘உண்ணுநீர் வேட்டேன்’ என
வந்தார்க்கு அன்னை,
‘அடர்பொற் சிகரத்தால்
ஆக்கிச் சுடரிழாய்!
உண்ணுநீர் ஊட்டிவா’
என்றாள் என யானும்
தன்னை அறியாது சென்றேன்,
மற்று என்னை
வளைமுன்கை பற்றி நலியத்
தெருமந்திட்டு,
‘அன்னாய்! இவனொருவன் செய்ததுகாண்!’ என்றேனா,
அன்னையும் அலறிப்
படர்த்தரத் தன்னையான்,
‘உண்ணுநீர் விக்கினான்’
என்றேனா, அன்னையும்
தன்னைப் புறம்பழித்து நீவ,
மற்று என்னைக்
கடைக்கணால் கொல்வான்
போல்நோக்கி நகைக்கூட்டம்
செய்தானாக் கள்வன் மகன்.
புகாக்காலை என்றால் உணவு
உண்ணும் நேரம் என்று பொருள்படும். உணவு நேரத்தின்போது தலைவன் தலைவியை காணவருதல்
இந்த துறையாகும்.
விளக்கம்: சுடரும் வளையல்
அணிந்த தோழியே! நான் கூறப்போவதை கவனமுடன் கேள்! சிறுவயதில் தெருவில் நாம் மணல்வீடு
கட்டி விளையாடும் சமயம், நம் மணல்வீட்டை தன் காலால் சிதைத்துவிட்டு நம் கூந்தலை
இழுத்து அதனுள் இருக்கும் வரிப்பந்தை பறித்துக் கொண்டு ஓடி நம்மை நோகடிப்பானே ஒரு
சிறு பட்டி. அவனை உனக்கு நினைவிருக்கிறதா? அவன் நேற்று நானும் அன்னையும் வீட்டில்
இருக்கும் சமயம் என் வீட்டிற்கு வந்தான். வாசலில் நின்று, ‘அம்மா உண்ண நீர்
வேண்டும்’ என்று யாசித்தான். விருந்தினரை உபசரிக்கும் என் அன்னை, அடீ சுடரிழாய்!
பொன் கிண்ணத்தில் நீர் எடுத்துப் போய் அவனுக்குக் கொடு! என்று ஏவினாள். வந்தவன்
அவன் தான் என்று தெரியாத நானும் நீரெடுத்து சென்று அவனிடம் நீட்டினேன். அவன்
கிண்ணத்தை வாங்காமல் என் முன் கையைப் பற்றி இழுத்தான். திடுக்கிட்ட நான், அம்மா!
இவன் என்ன செய்துவிட்டான் பார்! என்று பயத்தில் அலறிவிட்டேன். அம்மாவும் தனது
பருத்த உடலை தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு அலறிப்புடைத்து வந்தாள். அப்போதுதான்
வந்தவன் நமது பழைய பட்டி என்றும் நம்மீது கொண்ட பெருங்காதலால் நம்மைக் காண ஆசையாக
வந்தவன் என்பதையும் உணர்ந்தேன். அன்னை என்ன நடந்தது என்று கேட்பதற்குள், ‘உண்ணும் நீர் விக்கினான்’ அதுதான் உன்னை அழைத்தேன் என்று பொய் சொல்லி
சமாளித்தேன். அன்னையும் அதை உண்மை என்று நம்பி ‘என்ன அவசரம் உமக்கு?’ என்று
புறத்தெ பழித்தாலும் அகத்தே பரிவுடன் விக்கிய அவன் தொண்டையை நீவினாள். அந்த நேரம்
அவன் என்னை கடைக்கண்ணால் கொல்வது போல் பார்த்து நமுட்டுச்சிரிப்பினை உதிர்த்தான்
அந்த கள்வன் மகன். என்று தோழியிடம் தலைவி கூறுகிறாள்.
இன்றைய சினிமா காதல்கள்
அன்றே இருந்திருக்கின்றன என்பது புலனாகிறதா? சிறப்பான பாடல்! மீண்டும் படித்து
ரசியுங்கள்!
மீண்டும் அடுத்த பகுதியில்
சந்திப்போம்! உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!
நன்றி!
மேலும் தொடர்புடைய பதிவுகள்:
நிறைய விசயங்களை தெரியவைத்தீர்கள் நன்றி நண்பரே...
ReplyDeleteஅறிந்து கொள்ள வேண்டும்... ஒவ்வொரு விளக்கமும் அருமை...
ReplyDeleteபாடல் சிறப்பு...
அருமை. இலக்கணம் தொடர்பில் உங்கள் தளத்தில் பல விடயங்களை அறியலாம் போலிருக்கிறதே? வாழ்த்துக்கள். எளிமையாக - அருமையாகப் புரிய வைத்து செல்கிறீர்கள். நன்றி. நமது வலைத்தளத்தில்: http://newsigaram.blogspot.com
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி சகோ..
ReplyDeleteமிக்க நன்றி ஐயா.
ReplyDelete