மீண்டும் வருவேன்!

மீண்டும் வருவேன்!


நான் அந்த வீட்டுக்கு குடிவந்து மூன்று மாதம் ஆகிவிட்டது. முதலில் எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. இப்போது ஒருவாரமாய்த்தான் நிறைய தொந்தரவுகள். ஊருக்கு ஒதுக்குப் புறமாய் நல்ல பெரிய பங்களா அது. சுற்றிலும் காம்பவுண்ட் போட்டு செடிகொடிகள் என பசுமையாக இருந்தது. அதுவும் வீட்டின் கொல்லையில் முருங்கை மரம் காய்த்து தொங்குவதை பார்த்ததும் எனக்கு சந்தோஷமென்றால் அப்படி ஒரு சந்தோஷம்.
    பின்னே இப்படி ஒரு வீடு எங்கே கிடைக்கும் எல்லாவற்றிற்கும் வசதியாக இருந்தது. என்ன ஒரு குறை ஊரை விட்டு ஒதுங்கி இருந்தது. அதுதானே நமக்கு வசதி. சத்தம் என்றாலே எனக்கு அலர்ஜி! அதனால்தான் இவ்வளவு தூரம் தள்ளிவந்து வீடு பார்த்ததே! நிம்மதியாக தங்கிவிட்டேன். ஒரு பிரச்சனையும் இல்லை. நமது காலத்தை இங்கேயே கழித்துவிட வேண்டியதுதான் என்று நிம்மதியாக இருந்தபோதுதான் ஆரம்பித்தது தொல்லை.
    இந்த வீட்டுக்கு பக்கத்தில் ஒரு புது கன்ஸ்ட்ரக்‌ஷன் ஆரம்பித்தது. அப்போதுதான் ஆரம்பித்தது அந்த தொல்லை! ஒரே சத்தம் புழுதி. புழுதியைக் கூட சமாளித்துக் கொள்ளலாம். அந்த சத்தம் இருக்கிறதே! அப்பப்பா! அப்படியே பெரிய இடிச்சத்தம் போல இரவுக்கும் பகலுக்கும் காதில் அப்படியே ஒலித்துக் கொண்டிருந்தது.
   இதுகூட பரவாயில்லை! பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான். அடுத்த மனைக்காரன் வீடு கட்டுவதை நம்மால் தடுக்க முடியாதுதான். ஆனால் அடுத்து ஆரம்பித்தது இன்னொரு தொல்லை. கீழ் தளத்திற்கு புதிதாக ஒரு குடும்பம் வாடகைக்கு வந்துவிட்டது. அதில் இரண்டு வாண்டுகள் அதுகள் அடிக்கும் லூட்டி இருக்கிறதே! இந்த வயசான காலத்தில் நிம்மதியாக இருக்கலாம் என்று பார்த்தால் இப்படி வந்து வாய்க்கிறது நமக்கு!
     இரவுக்கும் பகலுக்கும் அந்த பசங்கள் சத்தம்! கீழே மட்டும் அதுங்கள் ஆடினால் பரவாயில்லை! மேல் தளத்திற்கும் வந்துவிடும். சோபாவில் நான் உட்காந்திருப்பது கூட தெரியாமல் மேலே வந்துவிழும் அந்த வாண்டு. அப்படியே வலி உயிர் போகும். ஒரு முறை பொறுக்க முடியாமல் ஒரு கிள்ளு கூட கிள்ளிவிட்டேன். நல்ல வேளை அந்த வாண்டு அம்மாவிடம் சொல்லவில்லை!
   ஒரு நாள் அப்படித்தான் நல்ல வெயில் வேளை! மின்விசிறியை ஆன் செய்துவிட்டு காதில் இயர்போனை போட்டுக்கொண்டு நிம்மதியாக சோபாவில் சாய்ந்து அப்படியே கண்ணயர்ந்துவிட்டேன்! எங்கிருந்துதான் வந்ததோ அந்த வீட்டின் கடைக்குட்டி! ஐ! இயர் போன்! யார் சோபாமேலே போட்டது என்று ஒரு இழு இழுத்தது! என் காது கிழிந்து போனது! அதோடு விட்டால் பரவாயில்லை! அப்படியே என் மீது படுத்துக் கொண்டு பாட்டுக் கேட்க ஆரம்பித்து விட்டது. இரண்டு மணி நேரம் அப்படி இப்படி அசைய முடியவில்லை!
    இது கூட பரவாயில்லை! நிம்மதியாக ஒரு டீவி பார்க்க முடிகிறதா? பகலில் டீவியை ஆன் செய்தால் உடனே அந்தவீட்டுக்காரனின் மனைவி ஆரம்பித்து விடுவாள்.  “என்னங்க மேல ஏதோ சத்தம் கேட்குதே?”
    “அடக்கொடுமையே! இந்த வீட்டில் ஒரு டீவி கூட பார்க்க எனக்கு உரிமை இல்லையா?”
  இதெல்லாம் கூட பொறுத்துக்கொண்டேன்! ஞாயிற்றுக்கிழமையானால் போதும் கீழ் வீட்டுக்காரன் மனைவி வீடு முழுவதும் துடைத்து பெருக்க ஆரம்பித்து விடுவாள். அவள் போர்ஷன் வரைக்கும் பார்த்துக் கொண்டால் போதாதா? மேல் போர்ஷனுக்கும் வந்து அடித்து பெருக்குவாள் அப்போது நான் இருப்பதையே அவள் கண்டுகொள்ள மாட்டாள். ஒரு சமயம் துடைப்பத்தால் அடித்தாள் பாருங்கள் அப்படியே தடித்து போய்விட்டது. இப்போதெல்லாம் அவள் துடைப்பம் கையுமாக தென்பட்டாலே அப்படி ஒரு அலர்ஜி எனக்கு! ஏதோ தெரியாமல் அடித்து விட்டேன் என்று ஒரு எக்ஸ்கியுஸ் கூட கேட்கவில்லை அவள்.
  பகலில்தான் போகட்டும்! இரவிலாவது எதையாவது பார்க்கலாம் என்றால் பன்னிரண்டு மணி வரை அவர்கள் முழித்துக் கொண்டு கொட்டம் அடிக்கிறார்கள். மேலே லைட் எரிந்தால் கூட என்னங்க மேல லைட் எரியுதே என்று குரல் கொடுக்கிறாள்.
   அன்றைக்கு அப்படித்தான் கொஞ்சம் புழுக்கமாக இருக்கிறதே என்று ஏசியை ஆன் செய்துவிட்டு படுக்கையில் படுத்து இருந்தேன். கீழ் வீட்டுக்காரன் வந்தான் படுபாவி! நான் ஒருத்தன் படுத்து இருப்பதையே பார்க்காமல் எதுக்கு இங்க தண்டத்துக்கு ஏசி ஓடுது! என்று ஆப் செய்துவிட்டு போய்விட்டான். ரொம்ப டென்சன் ஆகிவிட்டது எனக்கு.  கோபத்தில்  மின்விசிறியை ஓட விட்டேன்!ஜன்னலை வேகமாக திறந்தேன்!  வியர்த்துவிட்டது அவனுக்கு! அவன்  “பேய் பேய்” என்றுஅலறி அடித்து ஓடிவிட்டான். அங்குதான் நான் தவறு செய்து விட்டேன்.
    இப்போது அவர்கள் எல்லோரும் சேர்ந்து என்னை விரட்டப் போகிறார்களாம்! அடப்பாவமே! நான் என்னடா செய்தேன் உங்களுக்கு! இந்த பங்களாவை பார்த்து பார்த்து வாங்கினேன்! வாங்கிய எனக்கு கொடுத்து வைக்க வில்லை! பட்டென்று போய்விட்டேன்.
  சரி கொஞ்ச நாள் வாங்கிய பங்களாவில் வசிப்போம் என்றால் எங்கிருந்தோ வந்து வாடகைக்கு தங்கி என் வீட்டிலிருந்தே என்னை விரட்ட முயற்சிக்கிறீர்களே! அடேய் பாவிங்களே! இது உங்களுக்கு நல்லா இருக்கா?
    அதோ… அதோ அந்த மந்திரவாதியை அழைத்து வந்து விட்டார்கள்! இனியும் நான் இங்கிருந்தால் ஆபத்து… இப்போ போறேன்! ஆனா மீண்டும் வருவேன்…தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. சொல்லிச் சென்ற விதம் அருமை
  மிகவும் ரசித்தேன்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. ஹ ஹ ஹா ...

  http://www.malartharu.org/2014/06/time-management-part-one.html

  ReplyDelete
 3. அருமை.......

  பாதியிலேயே பேய் தான் பேசுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது... ஆனாலும் நன்றாக இருந்தது. கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுவோம் பேயை! :)

  ReplyDelete
 4. அடாடா பேயை கூட நிம்மதியாக இருக்க விட மாட்டேங்கிறாங்களே நம்ம ஆளுங்க

  ReplyDelete
 5. ப்பா செமையா இருந்தது. இக்கட்டுரை படித்த பின்பு பேய் மீதும் இறக்கம் வந்துவிட்டது பாவம் அந்த பேய்

  ReplyDelete
 6. அருமையான கதை ஐயா!

  ஏதாவது இதழுக்கு அனுப்பியிருக்கலாமே? எடுத்தவுடனே வலைப்பூவில் வெளியிட்டு விட்டீர்களா என்ன?

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!