உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 62

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 62


அன்பான வாசக பெருமக்களே! வணக்கம்! சென்ற பகுதியில் சாரியைகள் குறித்து படித்தோம். இந்த வாரம் நாம் படிக்க கற்க இருப்பது இலக்கணத்தில் முதல் பகுதியான எழுத்திலக்கணத்தின் முதலெழுத்தும் சுட்டெழுத்தும் ஆகும்.

  முதல் எழுத்துக்கள் உங்களுக்கு தெரிந்திருக்கும். இருந்தாலும் மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திக் கொள்வோம். மொழியில் பிற எழுத்துக்கள் எல்லாம் தோன்றுவதற்கு அடிப்படையாக உள்ள எழுத்துக்கள் முதலெழுத்துக்கள் எனப்படும்.

   தமிழில் முதல் எழுத்துக்கள் இருவகைப்படும். அவை உயிரெழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள்.

உயிரெழுத்துக்கள், அ,ஆ,இ,ஈ,உ,ஊ, எ, ஏ,ஐ, ஒ, ஓ, ஔ என்பனவாகும்.

மெய்யெழுத்துக்கள், க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்பனவாகும்.

உயிரெழுத்துக்களில் அ,இ,உ,எ,ஒ என்பன குறுகிய ஓசைதரும் குறில் எழுத்துக்கள் ஆகும்.

   ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ ஆகிய எழுத்துக்கள் நீண்ட ஓசை தரும் நெடில் எழுத்துக்களாகும்.

   இனி பார்க்கப்போவது சுட்டெழுத்து என்பதாகும். இதை பலர் வாக்கியமாக படித்தும் கேட்டும் இருந்தாலும் இன்னதென அறிந்திருக்க மாட்டீர்கள்.

    ஒன்றினை சுட்டிக்காட்ட  வரும் எழுத்து சுட்டெழுத்து எனப்படும். சுட்டெழுத்துக்கள் மொழிக்கு முதலில் நின்று ஒரு பொருளை சுட்டிக்காட்டும். சுட்டெழுத்துக்கள் அ, இ, உ  என்பனவாம்.
இவை தனியாக வந்தால் சுட்டெழுத்து என்றும், சொல்லோடு இணைந்து வந்தால் சுட்டுப்பெயர் என்றும் வழங்கப்படும்.

உதாரணமாக, அ, இ, உ = சுட்டெழுத்துக்கள்.
அவன், இவன், உவன்,  = சுட்டுப்பெயர்கள்.

இந்த சுட்டெழுத்துக்கள் அகச்சுட்டு, புறச்சுட்டு என்று இருவகைப்படும்.
சொற்களின் உள்ளேயே சுட்டெழுத்து அடங்கி வரும் என்றால் அவை அகச்சுட்டு என்று பெயர். எடுத்துக்காட்டு அவன், இவன், உவன்.
சொற்களுக்கு புறத்தே இச்சுட்டு வரும் எனில் அவை புறச்சுட்டு என்று வழங்கப்படும்.

  எடுத்துக்காட்டு: அப்பையன், இப்பையன், உப்பையன். என்ற சொற்களில் சொற்களின் முன் சுட்டு வந்துள்ளதை அ+பையன், இ+பையன், உ+ பையன் என்று பிரித்து பார்ப்பதின் மூலம் அறியலாம்.
தற்கால வழக்கில் அ, இ என்ற இரண்டு சுட்டெழுத்துக்களே வழக்கில் உள்ளது. உ என்ற சுட்டெழுத்து மறைந்துவிட்டது. எனினும் சங்ககாலத்தில் இந்த சுட்டெழுத்து இருந்தது.

அ என்னும் சுட்டெழுத்து சேய்மை( தூரத்தில்) உள்ள பொருளையும், இ என்னும் சுட்டெழுத்து அண்மையில் உள்ள பொருளையும் உ என்னும் சுட்டெழுத்து இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட தூரத்தில் உள்ள பொருளையும் குறிக்க பயன்படுத்தப்படும்.

ஒரு பொருளை சுட்ட ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் இருக்கும் எனில் நாளடைவில் ஒன்று மட்டும் நிலைத்து மற்றவை வழக்கொழியும். அவ்வாறே அ.உ இரண்டுக்கும் சேய்மை சுட்டாகிய அகரமே பயன்பட்டு உ மறைந்து போனது.

இனிக்கும் இலக்கியம்!

நற்றிணை

திணை: நெய்தல்

துறை: பகற்குறி வந்த தலைமகனைத் தோழி வரைவு கடாயது

பாடியவர்: நக்கீரர்


“விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ்முளை அகைய
நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்த்தது
நும்மினும் சிறந்தது நுவ்வை யாகும் என்று
அன்னை கூறினள் புன்னையது சிறப்பே
அம்ம நாணுதும் நும்மோடு நகையே
விருந்திற் பாணர் விளரிசை கடுப்ப
வலம்புரி வான்கொடு நரலும் இலங்குநீர்த்
துறைகெழு கொண்கநீ நல்கின்
நிறைபடு நீழல் பிறவுமார் உளவே.”


துறைவிளக்கம்: நெய்தல் நிலத்தலைவன், தலைவியை களவில் கூடி நாள்தோறும் பகலில் ஓர் இடத்தில் சந்தித்துவந்தான். அவன் தலைவியுடம் மகிழ்ந்து இருந்தானே தவிர திருமணம் செய்து இல்லறம் நடத்தான் இல்லை. அப்போது ஒருநாள் பகலில் தலைவியை சந்திக்க வந்த தலைவனை தோழி மறித்து, தலைவியை மணந்து கொள்வதே அவனுக்கு நல்லது என்பதை நாகரீகமாக உணர்த்தினாள். இவ்வாறு தோழி கூறுவது வரைவு கடாதல் துறையாகும்.


பாடல் விளக்கம்:
        “தலைவனே! நாங்கள் சிறுமியராக இருந்தபோது தோழியருடன் இங்கே மண்ணில் விளையாடினோம். அப்பொழுது, புன்னையின் விதை ஒன்றை இம்மண்ணில் புதைத்துச் சென்றோம். சிலநாட்களில் அது முளைத்து வளர அதற்கு நீரும் பாலும் பெய்து நாங்கள் வளர்த்து வந்தோம். அதனைக் கண்ட எங்கள் அன்னை ‘இது உங்களினும் சிறந்தது, உங்களுக்கு தங்கை முறையாகும்’ என்று கூறினாள்.

   எனவே, எங்கள் தங்கையான இந்த புன்னை மர நிழலில் உம்மோடு நகையாடி மகிழ்தற்கு நாணமாக உள்ளது. புதியராய் வந்த பாணர் இசைத்த திருந்திய இசைபோல வலம்புரி வெண்சங்கு ஒலிக்கும் நீர்த்துறையின் தலைவனே! நீ மனம் வைத்தால் நாம் தங்கிப் பேச மர நிழல்கள் பிறவும் உள்ளன” என்று தோழி கூறுகிறாள்.
இப்படி பகலில் மட்டும் வந்து காதல் செய்து போகுபவனை வேறு இடத்தில் சந்திக்கலாம் என்று அலைகழித்தால் தலைவியை மணந்துவாழ முடிவெடுப்பான் என்ற நோக்கத்தில் தோழி இவ்வாறு கூறுகிறாள்.

தலைவியை மணந்து கொள் என்று நேரடியாக கூறாமல் புன்னைமரத்தை தங்கையாக்கி அளாவ வேறு இடம் பார் என்று நாகரிகமாக கூறுகின்றாள் தோழி.தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

மேலும் தொடர்புடைய பதிவுகள்:Comments

 1. வணக்கம்
  நல்ல விளக்கம்.. தொடருங்கள்...நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. ஒவ்வொரு எடுத்துக்காட்டும் அருமை... பாடல் விளக்கத்தை வெகுவாக ரசித்தேன்...

  ReplyDelete
 3. அருமை நண்பரே
  தங்களின் தமிழ்ப் பணிக்கு
  என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
  நன்றி நண்பரே

  ReplyDelete
 4. அன்பு ஐயா.. தமிழ் பாடம் அருமை..

  ReplyDelete
 5. ஆஹா அருமை சகோ .
  நற்றிணை நான் இனிமேல்தான் படிக்க வேண்டும்.

  ReplyDelete
 6. நல்ல விளக்கவுரை நண்பரே...

  ReplyDelete
 7. உங்களின் தமிழ் தொண்டிற்கு வேறு எதுவும் நிகர் ஆகாது

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2