ஆறுபடை வீடு தரிசனப் பலன் அளிக்கும் திருப்போரூர் முருகன்!

ஆறுபடை வீடு தரிசனப் பலன் அளிக்கும் திருப்போரூர் முருகன்!


 முருகனின் படைவீடுகளை தரிசனம் செய்வது முருக கடவுள் வழிபாட்டில் முக்கியமானது. ஆறுபடைகளையும் தரிசித்தால் அளவிலடங்கா பலன் கிடைக்கும் என்று இயம்புவர். ஆனால் இந்த ஆறுபடை தரிசனப்பலன் அனைத்தும் இந்த முருகனை தரிசித்தால் கிடைக்கும் என்கிறது தல வரலாறு.
   அது எந்த முருகன்? எந்த ஊர்?
கந்தசாமி என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலம் ஆன திருப்போரூர் முருகன் தான் அவர். இவரை தரிசித்தால் ஆறுபடைவீடுகளை தரிசித்த பலன் கிடைக்கும் என்று இந்த ஆலய தலவரலாறு கூறுகிறது.  வருகின்ற 11.06.2014 எல்லா முருகர் ஆலயங்களிலும் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழா முருகனின் பிறந்த நாள் விழாவாகும். இந்த சமயத்தில் ஆறுபடை வீடுகளின் பலன் அளிக்கும் திருப்போருர் முருகனைப் பற்றி சிறிது அறிந்து கொள்வோம்.
     முன்னொரு காலத்தில் தாரகக் கோட்டம் என்று இந்த ஊர் அழைக்கப்பட்டதாம். அவுணர்கள் என்னும் அரக்கர் கூட்டம் ஊரில் உள்ள பிரணவ மலையில் ஆட்சி செய்து மக்களையும் ரிஷிகளையும் துன்புறுத்தி வந்துள்ளது. இவர்களின் தலைவனான தாரகன் மிகவும் கொடியவன். இந்த தாரகனை முருகன் இங்கு வதம் செய்தார். தாரகனை வதம் செய்த இந்த ஊர் தமிழில் சமராபுரி என்று பெயர் பெற்றது.

   மதுரை மீனாட்சி அம்மன் அருள் பெற்ற சிதம்பர கவிராயர் இந்த ஊருக்கு வந்த சமயம் பனங்காடாக ஊர் காட்சி அளித்தது.  வேம்பு விநாயகர் ஆலயத்தில் தவமிருந்த அவருக்கு முருகன் காட்சி அளித்தார். அவர் முயற்சியில் ஆலயம் உருவானது. கோவளம் நவாப்பும் இந்த ஆலயத்திற்கு தானங்கள் அளித்துள்ளார். வைகாசி விசாகத் திருநாள் இவ்வாலயத்தை எழுப்பிய சிதம்பர சுவாமிகள் ஜீவ சமாதி அடைந்த நாளும் கூட. எனவே வருடம் தோறும் வெகு விமரிசையாக குருபூஜை கொண்டாடப்படுகிறது.
 
  ஆறுமுறை கடல் கொண்ட இந்த கோயில் ஏழாவது முறை சிதம்பர சுவாமிகளால் உருவாக்கப்பட்டது. இத்திருக்கோயில் ஓங்காரவடிவில் அமைந்துள்ளது. வேறு எங்கும் காணமுடியாத வகையில் கொடிமரம் வட்ட மண்டபத்தில் இராஜ கோபுரத்திற்கு முன்பாக மிகச்சிறப்பாக அமைந்துள்ளது.
மூலவர் ஸ்ரீ கந்தசாமி பெருமான் சுயம்பு மூர்த்தி பனை வடிவில் சுயம்புவாக காட்சி தருகிறார். வள்ளி தேவசேனா சமேதராக சுப்ரமண்ய சுவாமியாக அருள்பாலிக்கின்றார். சுயம்பு மூர்த்தமானதால் அபிஷேகங்கள் கிடையாது. வாசனைத்திரவியங்கள் புனுகு சாம்பிராணி தைலம் போன்ற திரவியங்கள் சுவாமிக்கு சார்த்தப்படுகின்றது. சுயம்பு மூர்த்திக்கு வில்வ மாலை மட்டுமே சார்த்தப்படும். நெய் தீப ஆராதனை மட்டுமே நடைபெறும்.
   இந்த சுயம்பு மூர்த்தியின் எதிரே சிதம்பர சுவாமிகளால் எந்திரம் பிரதிஷ்டை  தனியாக ஆதார பீடத்துடன்  செய்யப்பட்டுள்ளது. பில்லி சூனியம் அகலுதல், சகல தோஷ நிவர்த்தி, கல்யாணத் தடை, போன்றவை நீங்க இங்கு முருகப் பெருமானை வணங்குகின்றனர்.
   இத்திருக்கோயிலின் தல விருட்சம் வன்னிமரம் ஆகும். இதில் திருமணம் ஆகாதவர்கள் மஞ்சள் கயிறு கட்டி வேண்டுதல் செய்ய திருமணம் கைகூடுகிறது. புத்திரபாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை தொட்டில் கட்டி வழிபடுகின்றனர்.
  திருநள்ளாறு கோயிலில் உள்ளது போல நிருதி( தென்மேற்கு) திசையில் கிழக்குபுறமாக காட்சி தருகிறார் சனீஸ்வரர். இது இங்கு சிறப்பு வாய்ந்தது ஆகும். வன்மீக நாதர் மேற்கு பார்த்து இருப்பது அம்பாள் புண்யகாருண்ய அம்பிகை வடக்கு நோக்கி இருப்பதும் வித்தியாசமான கோலம்.
   ஆலயத்தின் அருகே பிரணவ மலையில்  கைலாசநாதர் பாலாம்பிகை அருள் பாலிக்கின்றனர். பிரதோஷ காலத்தில் கந்தசாமிப்பெருமான் பிரதோஷ நாயனார் என்ற பெயரில் பிரணவ மலையில் எழுந்தருளி அங்குள்ள இறைவன் இறைவியை வணங்கிவிட்டு வருவது ஐதீகம்.

ஓம்கார அமைப்பில் அமைந்த இக்கோயில், சுவாமியை தரிசித்துவிட்டு வெளியேறும்போது சன்னதியிலிருந்து பார்த்தால், முன்னால் செல்பவர்களின் முதுகு தெரியாதபடி நுட்பமாக கட்டப்பட்டுள்ளது. சுவாமிமலை, திருத்தணி தலங்களைப்போலவே இங்கும் சுவாமி எதிரே ஐராவதம் (வெள்ளையானை) வாகனமாக உள்ளது. 

 
வள்ளி தெய்வானைக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. 

 
முருகன் சன்னதி கோஷ்டத்தில் பிரம்மாவின் இடத்தில், பிரம்ம சாஸ்தா (முருகனின் ஒரு வடிவம்) இருக்கிறார். இங்கு நவக்கிரக சன்னதி கிடையாது. 
 வைகாசி விசாகத்தன்று சுவாமிக்கு திருப்பாவாடை வைபவமும், தைப்பூசத்தை ஒட்டி சுவாமிக்கு தெப்பத்திருவிழாவும் விசேஷமாக நடக்கும். 
யந்திர முருகன்: கந்தசுவாமி, சுயம்புமூர்த்தியாக (தானாகவே தோன்றியவர்) இருப்பதால் பிரதான பூஜைகள் செய்வதற்காக சுப்பிரமணியர் யந்திரம் பிரதிஷ்டை செய்துள்ளனர். கூர்ம (ஆமை) பீடத்தின் மேலுள்ள இந்த யந்திரத்தில், முருகனின் 300 திருப்பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. முருகனுக்கு பூஜை நடந்தபின், இந்த யந்திரத்திற்கு பூஜை நடக்கும். செவ்வாய் கிரகத்திற்கு அதிபதி முருகன் என்பதால், செவ்வாய் தோஷமுள்ளவர்கள் இந்த யந்திரத்திற்கு (ஸ்ரீசக்ரம்) திரிசதி அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். 


முருகன் சன்னதி சுற்றுச்சுவரில் அவரது ஒரு வடிவமான குக்குடாப்தஜர் (குக்குடம் என்றால் சேவல்) சிலை உள்ளது. ஒரு கையில் சேவல் வைத்திருப்பதால் இவருக்கு இப்பெயர் ஏற்பட்டது. பாஸ்போர்ட், விசா கிடைக்க தாமதம் அல்லது சிக்கல் இருந்தால், வெளிநாடு செல்ல முடியதாவர்கள் இவருக்கு அர்ச்சனை செய்து வேண்டிக் கொள்கிறார்கள். வெளிநாட்டிலுள்ள உறவினர்கள் நலமாக இருக்கவும் இவரை வேண்டிக் கொள்வதுண்டு. 

மும்மூர்த்தி அம்ச முருகன்: சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியதால் முருகனை சிவ அம்சமாக வழிபடுவர். பிரணவ மந்திர பொருள் தெரியாத பிரம்மாவை சிறையிலடைத்தபோது, முருகனே படைப்புத்தொழில் செய்தார். இதனால் இவரை பிரம்மாவின் அம்சமாகவும் வழிபடுவதுண்டு. திருச்செந்தூர் போன்ற தலங்களில் விழாக்காலங்களில் சுவாமி, மும்மூர்த்திகளின் அலங்காரத்தில் எழுந்தருளுவார். இங்கு கந்தசுவாமி, மும்மூர்த்திகளின் அம்சமாகக் காட்சி தருகிறார். பிரம்மாவிற்குரிய அட்சர மாலை, கண்டிகை இவரிடம் உள்ளது. சிவனைப்போல வலது கையை ஆசிர்வதித்தபடி அபயஹஸ்த நிலையிலும், பெருமாளைப்போல இடது கையை தொடையில் வைத்து ஊருஹஸ்த நிலையிலும் காட்சி தருகிறார். 


திறக்கும் நேரம்: 
காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 
 

சென்னை மாநகரிலிருந்து 76 கிமீ தொலைவிலும், மாமல்லபுரத்திலிருந்து 15 கிமீ தொலைவிலும், செங்கல்பட்டிலிருந்து 27 கிமீ தொலைவிலும், திருக்கழுக்குன்றத்திலிருந்து 22 கிமீ தொலைவிலும், அருள்மிகு கந்தசாமி கோயில் கொண்ட திருப்போரூர் நகரம் அமைந்துள்ளது.

டிஸ்கி} இந்த கோவிலில்தான் விடுதலை புலி பிரபாகரனின் திருமணம் நடந்தது.



திருப்போரூர் செல்வோம்! குமரனருள் பெறுவோம்!

Comments

  1. நிறைவான தகவல்களுடன்
    அருமையான படங்களுடன்
    திருப்போரூர் முருகனை தங்கள்
    பதிவின் முலம் தரிசித்தோம்
    பகிர்வுக்குக் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா.

    அறியமுடியாத தகவலை அறிந்தேன்... திருப்போரூர் முருகனைப்பற்றி தங்களின் பதிவின் வழி அறிந்தேன் பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. பிறப்பறுக்கும் புண்ணியனே சிவகுருநாதா!
    பெண்டு பிள்ளை உமக்குண்டு சிவகுருநாதா!
    தாண்டவத்தின் தத்துவமே சிவகுருநாதா!
    தாண்டிச் செல்ல ஆவதுண்டோ சிவகுருநாதா!

    அருமையான பகிர்விற்கு வாழ்த்துக்கள் ! நன்றி அய்யா!

    ReplyDelete
  4. அருமையான படங்கள்
    அறியாத தகவல்கள்
    நன்றி நண்பரே

    ReplyDelete
  5. போரூர் சென்றதில்லை. அடுத்த பயணத்தின்போது சென்றுவரும் ஆவலை உண்டாக்கியது தங்களின் பதிவு. நன்றி.

    ReplyDelete
  6. திருப்போரூர் கோவில் பற்றிய சிறப்புகளும் தகவல்களும் தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி சுரேஷ்.

    ReplyDelete
  7. Very nice I want this temple phone number please help me

    ReplyDelete
  8. Very nice I want this temple phone number please help me

    ReplyDelete
  9. மிகவும் முக்கியமான தகவல் தந்தற்கு நன்றி ஐயா🙏🙏🙏

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2