கரகாட்ட மோகனாம்பாள்! ஏடிஎம்மில் நாராயணசாமி! கதம்ப சோறு! பகுதி 38
கதம்ப சோறு பகுதி 38
ஒரு காலத்தில் தமிழகத்தில் தில்லானா
மோகனாம்பாள் பிரபலம். இப்போது நாளிதழ்களின் அசுரப்பசிக்கு தீனி அளித்து தினம்
தோறும் புது செய்திகள் தந்து கொண்டிருக்கிறார் கரகாட்டகாரி மோகனாம்பாள். அவரது
வீட்டில் இருந்து ஐந்து கோடி ரூபாய் பணமும் எழுபத்தி இரண்டு சவரன் நகைகளும்
பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் அவரை இன்னும் பிடிக்க முடியவில்லை. ஆந்திராவில்
இருந்து தமிழகம் வழியாக கடத்தப்படும் செம்மரத்துண்டுகள் விற்பனையில் கொடிகட்டி
பறந்து பல கோடிகளை சம்பாதித்து உள்ளார். சாதாரண கரகாட்டக்காரியாக தொழிலைத்துவக்கி
பின்னர் விபசாரத்தொழிலில் இறங்கி கந்து வட்டி, பின்னர் கடத்தல் தொழில் என்று ஒரு
கலக்கு கலக்கி இருக்கிறார். பெரியமனிதர்கள் பலரின் சகவாசமும் ஒத்துழைப்பும்
அவருக்கு இருந்துள்ளது. இப்போது கூட தொழில் போட்டியில் கூட்டாளி ஒருவரின்
போட்டுக்கொடுத்தலால் இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எல்லாத் தொழில்களிலும்
ஆண்களுக்கு நிகராக பெண்களும் வளர்ந்து வரும் இதை நினைத்து துக்கப்படுவதா?
சந்தோஷப்படுவதா தெரியவில்லை!
ஒரு
சாதாரண குடும்பத்தில் பிறந்து பின்னர் படிப்படியாக உயர்ந்து பிற்படுத்தப்பட்ட
மக்களுக்காக உழைத்த ஒரு தலைவர். இவரது அயராத உழைப்பினால் பா.ஜ.க மஹாராஷ்டிராவில்
அதிக இடங்களை கைப்பற்றியது என்றால் மிகையில்லை. வருங்கால மகாராஷ்டிர முதல்வர்
வேட்பாளராக பா.ஜ அறிவிக்க இருந்த நிலையில் சொந்த ஊரில் வெற்றிக்கொண்டாட்டத்தில்
கலந்து கொள்ள விமான நிலையம் செல்லும் வழியில் விபத்தில் சிக்கி உயிரை
இழந்திருக்கிறார் முண்டே. ஏற்கனவே உயர் இரத்த அழுத்தம் இருந்த நிலையில் விபத்தில்
அதிர்ச்சியில் கல்லீரல் பாதிக்கப்பட்டு சுவாசிக்க முடியாமல் மாரடைப்பு ஏற்பட்டு
மரணம் அடைந்து இருக்கிறார். பதவியேற்று ஒரே வாரத்தில் இப்படியொரு அதிர்ச்சியான
முடிவில் மோடி தனது அமைச்சரவை சகாவை இழந்தது துயரமான ஒன்று. மறைந்த முண்டேவின்
ஆத்மா சாந்தியடையட்டும்!
பழைய குருடி! கதவை திறடி!
புதிய ஆட்சி வந்து ஒருவாரம் தான் ஆகிறது.
இதற்குள் விமரிசிக்க கூடாதுதான். இலங்கை அதிபர் பதவியேற்பு விழாவில் கலந்து
கொண்டதில் மோடியின் ராஜதந்திரம் இருக்கிறது என்று எல்லோரும் சொன்னார்கள். நானும்
கூடச்சொன்னேன் பதவியேற்பு விழாவில் அரசியல் கூடாது என்று. ஆனால் இப்போது இலங்கை
கடற்படை மீண்டும் தமிழக மீனவர்களை கைது செய்து விட்டது. அம்மா கடிதம் எழுதி
இருக்கிறார். டீசல் விலை வழக்கம் போல உயர்த்தப்பட்டுவிட்டது. இங்கே தமிழகத்தில்
மின்வெட்டு இல்லை என்று சொல்லிவிட்டு அறிவிப்பில்லாமல் அடிக்கடி வெட்டுகின்றனர்.
இதையெல்லாம் பார்க்கும் போது பழைய குருடி கதவை திறடி என்ற பழமொழிதான் நினைவுக்கு
வருகிறது. ஆட்சிகள் மாறியும் காட்சிகள் மாறாத சூழல்தான் மக்களுக்கு!
போனவருடம் பிக்சிங் புகார்களின் எதிரொலியாக
இந்த வருடம் ஆரம்பத்தில் இருந்து ஐ.பி.எல் போட்டிகளை பார்ப்பதை தவிர்த்துவந்தேன்.
எப்படியோ சென்னை அரையிறுதி எலிமினேட்டரில் வென்று மீண்டும் பஞ்சாப்பை சந்தித்த
மேட்ச் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. உண்மையில் அந்த மேட்சில் என்னை
சேவக்கும் ரெய்னாவும் அசத்திவிட்டனர். வயதாகிவிட்டது பார்வை சரியில்லை பார்ம்
இல்லை! என்று தன்னை விமரிசத்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தார் சேவக் அன்று.
அவரது ஒவ்வொரு விளாசலும் அருமை. சென்னை பந்துவீச்சாளர்களை சிதறடித்தார். வெல்டன்
சேவக். அடுத்து சென்னை களமிறங்கியபோது ரெய்னா இப்படியெல்லாம் விளையாட முடியுமா?
என்று அதிசயிக்க வைத்தார். 25 பந்துகளில் 89 ரன்கள் எடுத்த அவர் சென்னையை ஆறு
ஓவர்களில் நூறு ரன்களை எட்டவைத்தார். அதன் பின் நடந்ததெல்லாம் அசிங்கம்!
ரெய்னாவால் ஆடமுடிந்தபோது மற்றவர்கள் தடுமாறியது! வீணாக ரன் அவுட் ஆனது எல்லாம்
கிரிக்கெட்டின் கலங்கம். பைனல் மேட்சில் முதல் பாதி பார்த்தேன். விரிதிமான் சஹா
கலக்கிவிட்டார். இந்திய அணியில் இவருக்கு எதிர்காலம் இருக்கிறது என்று
தோன்றுகிறது. என்னதான் கல்கத்தா ஜெயித்தாலும் முதல் போட்டியில் இருந்தே கலக்கி
வந்த பஞ்சாப் தோற்றது எனக்கு வருத்தமே! பஞ்சாப் தான் வெல்லவேண்டும் என்று
நினைத்தேன்! மணீஷ் பாண்டே அந்த நினைப்பை சிதறடித்துவிட்டார். கோப்பை வென்றது
கொல்கத்தா என்றாலும் அனைவர் மனங்களில் நின்றது பஞ்சாப்.
என் நூலகம்!
ஒரு பணக்கார வீட்டுப்பெண், கான் வெண்ட்டில்
படிப்பவள். பெயர் விம்மு.அவளுடைய அம்மா மெத்தப்படித்தவள். ரொம்ப நாகரீகமானவள்.
அப்பா செல்லமான விம்முவுக்கு பள்ளிக்கு அருகில் இருக்கும் சேரிப்பெண் வேலாயியின்
நட்பு கிடைக்கிறது. அத்துடன் வேலாயியின் செல்ல நாய் பூக்குட்டியின் சிநேகமும். இது
விம்முவின் அம்மாவிற்கு சுத்தமாய் பிடிக்கவில்லை! விம்முவிடம் ஒரு பேசும் கரடி
பொம்மை உண்டு. அதற்கும் பூக்குட்டியை பிடிக்கவில்லை. எப்படியோ ஒருநாள் பெற்றோர்கள்
இல்லாத சமயம் வேலாயியை வீட்டுக்கு பூக்குட்டியுடன்
வரச்சொல்லிவிளையாடிக்கொண்டிருக்கும் சமயம் டிரைவர் பார்த்து வேலாயியை
துரத்திவிடுகிறான். பூக்குட்டியை விரட்டிவிடுகிறார்கள். பின்னர் விம்முவிற்கு
ஜுரம் வந்து குறையாமல் போக பூக்குட்டியையும் வேலாயியையும் தேடுகிறார்கள். இதனிடையே
விம்முவும் தனியாக பூக்குட்டியை தேடுகிறாள். பூக்குட்டி கிடைத்தாளா? என்பதை தனக்கே
உரிய நடையில் மிகச்சிறப்பாக எழுதி இருக்கிறார் சுஜாதா.
120 பக்கங்கள் கொண்ட இந்த
நாவலின் முதல் பதிப்பின் விலை ரூ 15.
இப்போது கூடியிருக்கும் என்று நினைக்கிறேன். இந்த புத்தகம் என் லைப்ரரியில்
எப்போது இடம்பிடித்து இருந்தது. ஆனால் இப்போதுதான் படிக்க முடிந்தது.
எனது தங்கை முந்திரி புலாவ் செய்வது பற்றி
சொன்னார். அது உங்கள் பார்வைக்கு.
தேவையானவை: பாசுமதி அரிசி 1 கப், பொடித்த
முந்திரி 1 டேபிள் ஸ்பூன், துண்டுகளாக்கிய முந்திரி 1\4 கப். மிளகுத்தூள்
சீரகத்தூள் 1 ஸ்பூன், ஏலக்காய், கிராம்பு 1 ஸ்பூன் பெருங்காயத்தூள் 1\4 ஸ்பூன்.
நெய், உப்பு, தேவையான அளவு.
செய்முறை:
அரிசியை ஒரு முறை கழுவி பத்து நிமிடம் ஊறவிடவும். குக்கரில் நெய் விட்டு
துண்டுகளாக்கிய முந்திரி சேர்த்து பொன்னிறத்தில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு அதே நெய்யில் ஏலக்காய், கிராம்பு, தாளித்து ஊறிய அரிசியைப் போட்டு
வறுக்கவும். மிளகுத்தூள், சீரகத்தூள், பெருங்காயத்தூள் பொடித்த முந்திரி, உப்பு,
சேர்த்து கிளறி தண்ணீர் விட்டு குக்கரை மூடவும். மிதமான தீயில் வேகவைத்து ஒரு
விசில் வந்ததும், ஆப் செய்துவிட்டு சிலநிமிடம் கழித்து இறக்கவும். பின்னர் சிறிது
நேரம் கழித்து குக்கரை திறந்து வறுத்த முந்திரியை போட்டு கிளறி பறிமாறவும்.
சுவையான முந்திரி புலாவ் சூப்பராக இருக்கும்.
டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்!
உங்கள் துணிகள் சாயம்
போகிறதா? உப்பு கலந்த நீரில் நனைத்து பின்னர் துவைத்தால் இனி சாயம் போகாது.
பூ வேலைப்பாடு, பட்டு
எம்ப்ராய்டரி செய்யப்பட்ட துணிகளை உட்புறமாக அயர்ன் செய்தால் அவற்றின் பளபளப்பு
மங்காது.
அப்பளத்தை ப்ரிட்ஜில் வைத்து
எடுத்து பொறித்தால் எண்ணெய் அதிகம் குடிக்காது.
குளிர்சாதனப்பெட்டியில்
உணவுப்பொருட்களை மூடியே வைக்க வேண்டும். சூடான பொருட்களை வைக்கக் கூடாது.
மரச்சாமான்கள் பளபளக்க
மண்ணெண்ணெய் மற்றும் நல்லெண்ணையை சமமாக கலந்து அதில் துணியை நனைத்து துடைக்கலாம்.
துருப்பிடித்த அரிவாள் மனை,
கத்தி இவற்றின் மீது ஒரு வெங்காயத்தை நறுக்கித் தேய்த்தால் துரு போய் பளிச்
ஆகிவிடும்.
தனியார் பள்ளிகளில் படித்து 500க்கு 500 மதிப்பெண்கள் அல்லலாம்! ஆனால் அரசுப்பள்ளியில் படித்து 500க்கு 499 மதிப்பெண் எடுத்த இந்த பத்தமடைப் பெண்ணை பற்றி தெரிந்து கொள்ள இங்கு: பத்தமடையின் இன்னொரு பெருமை பாஹீரா பானு
புகைப்படக் கலையில் கலக்கும் கோவைச் சிறுமி சிதாராவை பற்றி அறிந்து கொள்ள இங்கு: புகைப்படகலையில் சர்வதேசபுகழ்பெற போகும் சிறுமி சிதாரா
படிச்சதில் பிடிச்சது!
நாராயண சாமி ஒரு நாள் ஏ.டி.எம்,மில் பணம்
எடுக்கப்போனார். ஆனால் பலமுறை கார்டை செருகி பின் நம்பரை போட்டும் பணம் வரவில்லை.
கடுப்பாகி பேங்கிற்கு போன் செய்து விவரத்தை கூறினார்.
அவருடைய கணக்கை சரிபார்த்த வங்கி ஊழியர், சார்
உங்க கணக்கில் எந்த பிரச்சனையும் இல்லை. பணமும் இருக்கிறது. ப்ளாக் ஆகவும் இல்லை.
பிறகு பணம் வராமல் இருக்காதே. மீண்டும் ஒருமுறை முயற்சி செய்யுங்கள் என்றார்.
நாராயணசாமி மீண்டும் முயற்சி செய்தார். ஆனால்
பணம் எடுக்க முடியவில்லை.
“ஏன் சார் ஏ.டி.எம்.மில் பணம் இல்லையா?
“இருக்கே சார்! மத்தவங்க எடுக்கிறாங்களே…”
“சார் உங்க கார்டு நல்லாத்தானே இருக்கு…? டேமேஜ்
ஒண்ணும் ஆகலியே?”
“என்ன பேச்சு பேசற? கார்டுக்கு டேமேஜ் ஆகிவிட
கூடாதுன்னுதான் நேத்து “லேமினேசன்” பண்ணி வச்சிருக்கேன்..”
(தி இந்துவில் படிச்சது)
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
நாராயணசாமி கதை அருமை!
ReplyDeleteவணக்கம் சகோதரர்
ReplyDeleteஒரு பதிவில் இத்தனை விசயங்களா! ஒவ்வொன்றையும் தனி பதிவாக போடலாம் என்று தோன்றுகிறது. சும்மா அசத்தியிருக்கிறீர்கள். க்டைசி கதையைப் படித்து சிரிக்காமல் இருக்க முடியுமா! அத்தனையும் அருமை. பகிர்வுக்கு நன்றிகள் சகோதரர்..
பல தகவல்கள் + டிப்ஸ்களுடன் அனைத்தும் அருமை...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி..
ReplyDeleteநராயண சாமி... சூப்பர் ..
ஒரே பதிவில் நிறைந்த நிகழ்வுகள்...15 நாள் நாராயணசாமின்னு ஏதும் வருமென்று எதிர்பார்த்தேன்..
ReplyDeleteகதம்பச்சோறு மணத்துலயும், ருசியிலயும் வெளுத்து வாங்குது.
ReplyDeleteபடித்ததில் பிடித்தது மிக அருமை! கதம்ப சோறு மணக்கின்றது!
ReplyDeleteநாராயண சாமினாலே காமிடிதான் போல ..
ReplyDeleteஅட கடவுளே!! இது சர்தார்ஜி ஜோக் மாதிரி இல்ல இருக்கு ...
ReplyDeleteநாராயணசாமி..... :)))))
ReplyDeleteஅனைத்து பகுதிகளும் நன்று. தொடரட்டும் பதிவுகள்.