அன்னையின் ஆசி! பாப்பாமலர்!



அன்னையின் ஆசி!

முன்னொரு காலத்தில் மிலான் நகரில் வணிகன் ஒருவன் வசித்து வந்தான். அவனுக்கு ஒரு தாய் இருந்தாள். அந்த வணிகன் தாய் மீது பக்தி உடையவன். அன்னைக்கு அனுதினமும் பணிவிடை செய்து மகிழ்வான். பின்னரே வியாபாரம் செய்ய  செல்வான். அவனுடைய வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் சகஜமாக இருக்கும்.
   நல்ல முறையில் வியாபாரத்தை கவனித்து வந்த அவனுக்கு சிக்கல் ஏற்பட்டது. அவனது தாய் நோயுற்றாள். அவள் அருகில் இருந்து பணிவிடை செய்த காரணத்தால் அவனால் வியாபாரத்தினை கவனிக்க முடியாமல் பெரும் நஷ்டத்திற்கு ஆளானான். எனினும் தாயை கைவிடவில்லை! உடனிருந்து மருத்துவம் செய்து வந்தான். ஆனாலும் வயதான தாய் நோய் முற்றி இறக்கும் தருவாயில் மகனை அழைத்தாள்.
   மகனே! உன்னைப் போல ஒரு மகனை பெற்றதற்கு பெருமைப் படுகிறேன்! வயதான காலத்தில் நோயுற்ற என்னை அருகில் இருந்து கவனித்துக் கொண்டு உன் வியாபாரத்தையும் இழந்தாய்! நீ நீடூழி வாழ்க! நான் போகும் தருணம் வந்து விட்டது. இன்றுமுதல் நீ தொட்டதெல்லாம் பொன்னாகும். மண் கூட பொன்னாகும். உனக்கு எல்லாவற்றிலும் இலாபமே கிடைக்கும் நஷ்டமே வராது என்று ஆசி கூறினாள். அத்துடன் அவளது கடைசி மூச்சு நின்று போனது.
  அன்னைக்குறிய ஈமக்கிரியைகளை செய்து முடித்த அந்த வணிகன் தொடர்ந்து வியாபாரம் செய்ய ஆரம்பித்தான். அன்னையின் ஆசிப்படி அந்த தொழிலில் பலமடங்கு லாபம் வர ஆரம்பித்தது. அன்று முதல் நட்டமே கிடைக்க வில்லை! தொட்டதெல்லாம் துலங்கியது. சில ஆண்டுகளில் மிகப்பெரிய செல்வந்தனாக மாறிவிட்டான்.
  ஆனால் எதிலும் இலாபம் என்பது அவனுக்கு போரடித்தது. ஏதேனும் ஒரு வணிகத்திலாவது எனக்கு இழப்பு ஏற்பட வேண்டும் என்று நினைத்தான். நண்பர்களை கூட்டி ஆலோசனை செய்தான்.பலர் பல வழிகளை சொன்னார்கள்.
  அது எதுவும் அவனுக்கு திருப்தி தரவில்லை! அப்போது ஒரு நண்பன் நண்பா கெய்ரோவில் ஒரு கூடை பேரிச்சம்பழம் பத்துரூபாய்! நம் ஊரில் நாற்பது ரூபாய் விற்கிறது. நீ இங்கே பேரிச்சம் பழம் வாங்கி அங்கே சென்று விற்றால் கண்டிப்பாக நட்டம் கிடைக்கும். இலாபம் வர வாய்ப்பே இல்லை! என்றான்.வணிகனுக்கு இந்த திட்டம் பிடித்துப் போகவே அதை செயல் படுத்த ஆரம்பித்தான்.
   அதிகவிலை கொடுத்து பேரிச்சம் பழங்களை வாங்கி நூறு ஓட்டகங்களின் முதுகில் அவற்றை ஏற்றினான். பல நூறு மைல் தொலைவில் உள்ள கெய்ரோவிற்கு புறப்பட்டான்.
  அப்பொழுது எகிப்து நாட்டு அரசன் பாலைவனம் வழியாக குதிரையில் வந்து கொண்டிருந்தான். அவன் கையில் அணிந்திருந்த மோதிரம் தவறி எங்கோ விழுந்துவிட்டது. கெய்ரோவில் இருந்து அரண்மணைக்கு வந்து சேர்ந்த அவனுக்கு மோதிரத்தை இழந்து விட்டது தெரிந்தது, வருத்தமடைந்தான். மந்திர ஆற்றல் நிறைந்த அந்த மோதிரம். அதை இழந்தால் என் எதிரிகள் பலம் பெற்று விடுவார்கள் நான் என்ன செய்வேன் என்று குழம்பினான்.
  தனது வீரர்களை அழைத்து பாலைவனம் முழுக்க தேடுங்கள். சல்லடை போட்டு தேடுங்கள் என் மோதிரம் எனக்கு வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தான்.அரசனும் கூடாரம் அமைத்து வீரர்கள் தேடுவதை மேற்பார்வை செய்து கொண்டிருந்தான்.
  அந்த சமயம் வணிகன் நூறு ஒட்டகங்களில் பேரிச்சம் பழத்தோடு வருவதை கண்ட அரசன் அவனை அழைத்து வரும்படி கூறினான். வணிகனும் மிகப் பணிவோடு அரசன் முன் வந்து நின்றான். அரசன் வணிகனை நீயார்? இந்த ஒட்டகங்களில் என்ன உள்ளது என்று கேட்டான்.
  வணிகணும் நான் மிலானில் இருந்து வருகிறேன்! இந்த ஒட்டகங்களில் பேரிச்சம் பழங்கள் உள்ளன. கெய்ரோவிற்கு விற்க எடுத்துச் செல்கிறேன் என்றான். இதைக் கேட்ட அரசன் விழுந்து விழுந்து சிரித்தான். வணிகரே! இங்கிருந்துதான் மிலானிற்கு பேரிச்சம் பழங்கள் செல்கின்றன. இந்த வியாபாரத்தால் உனக்கு கண்டிப்பாக நட்டம் தான் ஏற்படும் என்றான்.இப்படி நட்டப்படுவதற்கு யாராவது வியாபாரம் செய்வார்களா? என்று கேட்டான் அரசன்.
   அதற்கு வணிகன் அரசே! மன்னிக்க வேண்டும்! இழப்பு ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வணிகம் செய்கிறேன்! என்றான்.
 அரசனுக்கு ஆச்சர்யம் ஆகிவிட்டது! என்னப்பா சொல்கிறாய்? என்று வியப்புடன் கேட்டான்.
  அதற்கு வணிகன். அரசே என் தாய் இறக்கும் போது நான் என்ன செய்தாலும் லாபம் கிடைக்கும் என்று ஆசி கூறி சென்றுவிட்டாள். அவர் சொன்னபடியே எல்லாவற்றிலும் லாபம் கிடைத்துவந்தது. ஏதாவது ஒரு முயற்சியிலாவது நட்டம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே  பேரிச்சம் பழங்களை இங்கு கொண்டு வந்தேன் என்றான். மேலும் அவன் அரசே! என் தாயின் ஆசி வல்லமை வாய்ந்தது. இந்த பாலைவன மண்ணில் ஒரு கைப்பிடி எடுத்து நான் கீழே வீசினால் அது பொன்னாகிவிடும் என்று சொல்லிக் கொண்டே கீழே குனிந்து ஒரு கைப்பிடி மண்ணை எடுத்தான். அதை சிறிது சிறிதாக கொட்டினான்.
         அந்த கைப்பிடி மண்ணிலிருந்து அரசனின் மோதிரம் கீழே விழுந்தது. மகிழ்ச்சியுடன் அதை எடுத்துக் கொண்ட அரசன் வணிகனை கட்டித் தழுவிக் கொண்டான்.
  வணிகனே! உன் தாயின் ஆசி உண்மையிலேயே ஆற்றல் வாய்ந்தது. இனிமேல் இப்படி சோதனை முயற்சிகளில் ஈடுபடாதே! இந்த பேரிச்சம் பழங்கள் அனைத்தையும் நீ வாங்கிய விலையைப் போல் நூறுமடங்கு விலை கொடுத்து நான் வாங்கிக் கொள்கிறேன்! அரண்மணையில் என் விருந்தினனாக சிலநாட்கள் தங்கி செல்ல வேண்டும் என்றான் அன்புடன்!
  வணிகனும் தன் தாயின் வல்லமையை நினைத்து மகிழ்ந்து வீண் சோதனைகளை தவிர்த்துவிட்டு அரசனின் அரண்மணையில் தங்கி விருந்துண்டு ஏராளமான செல்வத்துடன் வீடு திரும்பினான்.
    தாயிற்சிறந்த கோவிலுமில்லை!

(பேராசிரியர் ஏ. சோதியின் 150 நன்னெறிக் கதைகளில் இருந்து தழுவல்)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப் படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. நல்லதொரு தேர்வு .தொடர வாழ்த்துக்கள் சகோ .

    ReplyDelete
  2. நல்லதொரு கதையைப் படித்த திருப்தி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. நல்ல கதை, தாயின் ஆசிக்கு ஈடு இணை ஏது?

    ReplyDelete
  4. இந்த வாரம் சிறப்பான கதை சார்... மிக்க நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. Check Tamil's No.1 Informative,Best Time pass website http://tamilinfoway.com

    ReplyDelete
  6. சிறப்பாக இருந்தது!பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  7. கருத்திட்ட அனைத்து அன்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

    ReplyDelete
  8. நல்ல கதை தோழரே..நீண்ட நாட்களுக்குப்பிறகு குட்டிக்கதை படிக்கிறேன்..நன்று..:)

    ReplyDelete
  9. கதை அருமையாக இருந்தது.பகிர்ந்தமைக்கு நன்றி. தொடருங்கள்.

    ReplyDelete
  10. நல்ல கதை பகிர்வு க்கு அன்பு நன்றிகள் அண்ணா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2