ஆக்ரமிப்பு!
ஆக்ரமிப்பு!
“யோவ்! எல்லாத்தையும்
அள்ளி வேன்ல போடுங்கய்யா! நான் டீ ஒண்ணு அடிச்சுட்டு வரேன்! சப் இன்ஸ்பெக்டர்
கூறிவிட்டு அகல கான்ஸ்டபிள்கள் அந்த தெருவுக்குள் அதிரடியாக நுழைந்தார்கள். யோவ்!
எடுய்யா! சீக்கிரம் காலி பண்ணு உங்களுக்கு எத்தனை தரம் சொல்றது மக்களுக்கு
இடைஞ்சலா கடை போடக்கூடாதுன்னு! சீக்கிரம் காலி பண்ணுங்க ஐயா வந்துட்டே இருக்காரு
என்று கத்தியபடியே நுழையவும் நடை பாதை வியாபாரிகள் அவசர அவசரமாக மூட்டை கட்ட
ஆரம்பித்தார்கள்!
அதற்குள் அந்த சப் இன்ஸ்பெக்டர் வந்து
விட்டார்! என்னய்யா பாத்துகிட்டு நிக்கறீங்க! அள்ளுங்கய்யா! என்று சத்தம் போடவும்
கான்ஸ்டபிள்கள் துரிதமாக நடவடிக்கையில் இறங்கினார்கள்!
ஐயா! ஐயா! இந்த ஒருதரம் விட்டுடங்கய்யா! இனிமே
கடை போட மாட்டோம்! பண்டிகை சமயம் அய்யா! கொஞ்சம் தயவு பண்ணுங்கய்யா! என்று ஒரு
பெரியவர் கெஞ்ச ஏண்டா! எத்தினி தரம் சொன்னோம்! கேட்டீங்களாடா! இது பொதுமக்கள் நடந்து
போற பாதை! உங்களுக்குத்தான் அரசாங்கம் கடை கட்டி கொடுத்திருக்கு இல்லே அங்க போயி
வியாபாரம் செய்ய வேண்டியதுதானே!
தப்புதான்யா! மன்னிச்சுடுங்கய்யா! இன்னிக்கு
ஒரு நாள் விட்டுடுங்க ஐயா! பொருளெல்லாம் போவுதே ஐயா! ஐயா! அந்த பெரியவர் கத்த கத்த
அள்ளிச்சென்றனர் கான்ஸ்டபிள்கள்.
கடைகள் அவசர அவசரமாக காலி செய்யப்பட்டன.
அன்றாடம் காய்ச்சிகளான அந்த நடைபாதை வாசிகள் கண்ணீருடன் புலம்புவதை யாரும் செவி
சாய்க்க வில்லை! வாங்க வந்த மக்களும் கூடி நின்று வேடிக்கை பார்த்தனரே தவிர யாரும்
எதுவும் கேட்கவில்லை!
அப்போது துணிச்சலாக ஒரு இளைஞன்
என்ன சார்! வழக்கமா மாமூல் வாங்கிட்டு போவீங்க! இப்ப இப்படி பண்ணறீங்களே
மாமூல் வேணும்னா கொஞ்சம் போட்டுதறோம் சார்! என்றபோது அவன் கன்னத்தில் பளாரென்று
அறை விழுந்தது!
ராஸ்கல்! எதிர்த்தா பேசுற! ரோட்டுல கடை போட்டு
விக்கிற நாயி! உனக்கு இவ்வளவு திமிரா? நீ மாமூல் கொடுத்துதான் நான் பிழைக்கிறனா?
யோவ் ஏட்டு இவனை ஜீப்புல ஏத்துய்யா? ஸ்டேஷன்ல வச்சி ரெண்டு தட்டு தட்டி
அனுப்புனாத்தான் நம்மள பத்தி இவனுக்கு தெரியும் என்றார் அந்த எஸ்.ஐ.
ஒரு மணி நேரத்தில் அந்த வீதி முழுவதும்
சுத்தமாக இருந்தது. போலீஸ் வேன் நிரம்பி இருந்தது. இன்னாயா! எல்லாம் ஏத்தியாச்சா!
போலாமா? என்றார் எஸ்.ஐ
எல்லாம் கிளியர்
பண்ணிட்டோம் சார் கிளம்ப வேண்டியதுதான். எங்கேயே அவன்? ஜீப்ல இருக்கான் சார்!
கொண்டு வாய்யா!
அந்த இளைஞனை இழுத்துவந்து நிறுத்தினர். டேய்
தம்பி! நியாயம் எப்படி யாருகிட்ட பேசுறதுன்னு தெரிஞ்சு பேசனும். போவட்டும்
ஸ்டேஷன்ல வந்து வீணா அடிபட்டு சாகாதே உன் ஆளுங்க கிட்ட சொல்லி ஒரு ரெண்டாயிரம்
கொடுத்திட்டு போயி சேரு!
ஐயா! அவ்வளவு வசதி இல்லீங்க!
அடச்சீ வாய் மட்டும் நீளுது! இவன் திருந்த
மாட்டான்! ஜீப்புல ஏத்துங்கய்யா! அங்க வச்சி பாத்துப்போம்.
ஜீப் விரைந்தது. வேனிற்குள் நிறைய பொருட்கள்
குவிக்கப்பட்டிருந்தன. ஏய்யா ஏட்டு நிறைய பொருட்கள் அம்புட்டுகிச்சு போலருக்கு!
ஆமாய்யா! பண்டிகை வருதுன்னு எல்லோரும் புது சரக்கு எடுத்து இருக்கானுங்க பாவம்!
என்னயா! நீரு பாவம் புண்ணியமுன்னு பேசிகிட்டு
எவ்வளவு தேறுமுன்னு கணக்கு போடுய்யா!
அய்யா என் பையன் ரொம்ப நாளா ஒரு வீடியோ கேம்
கேட்டுகிட்டு இருந்தான். இதுல ஒண்ணை கொடுத்தீங்கன்னா?
யோவ் இப்பவே அடி போடறீயா! முதல்ல இன்ஸ்பெக்டர்
வரட்டும்! அப்புறம் பங்கு பாகம் பிரிப்பெல்லாம்! அவர்கிட்ட பேசி வாங்கிக்க என்றார்
எஸ்.ஐ.
அன்றைய மாலை செய்திகளில் பொதுமக்கள் வசதிக்காக
நடைபாதை கடைகள் அகற்றப்பட்டன. போலீஸ் அதிரடி நடவடிக்கை! என்று கொட்டை எழுத்தில்
வெளியாகி இருந்தன. அதே சமயம் அந்த தெருவில் பெரிய பந்தலும் மேடையும்
அமைக்கப்பட்டன. அமைச்சர் வருகிறாராம்.
சிலகுடும்பங்கள் அன்றைய வருமானத்தையும் நிரந்தர
முதலீட்டையும் இழந்து அழுது கொண்டிருந்த வேளையில் போஸ்டர்களில் அமைச்சர்
சிரித்துக் கொண்டிருந்தார் ஏழைகளின் காவலன் என்று!
(முற்றும்)
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப்படுத்துங்கள் நன்றி!
பொதுமக்களுக்குக் காவலனாய் விளங்கவேண்டிய காவல்துறை பல இடங்களில் இப்படிக் கீழிறங்கி தன் மானத்தை இழந்து நடப்பது வேதனைக்குரியது. ஒரு உண்மை சம்பவத்தை அப்படியே எடுத்துரைப்பது போன்ற எழுத்தும் கருத்தும் கதை என்பதை மறக்கச் செய்துவிட்டன. இந்நிலை மாறும் நாள் எந்த நாளோ என்றுதான் ஏங்கவேண்டியுள்ளது. நாட்டு அவலத்தை நச்சென்று உரைத்தக் கதைக்குப் பாராட்டுகள்.
ReplyDeleteம் ...
ReplyDeleteம்ம் நிச்சயம் உண்மைதான்....
ReplyDeletegood post
ReplyDeleteகடமையை புரிந்துகொள்ளாதோர் இப்படித்தான் .சம்பவம் கற்பனையல்ல உண்மைதான். நல்ல கதை.வாழ்த்துக்கள்.
ReplyDeleteநடக்கும் உண்மை...
ReplyDeleteசுடும் நிஜம்!
ReplyDeleteகருத்தும் வாக்கும் இட்ட அன்பர்களுக்கு எனது நன்றி!
ReplyDelete