பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 7பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 7

உங்கள் ப்ரிய “பிசாசு”

முன்கதை சுருக்கம்: ராகவனின் நண்பன் வினோத் தான் மணக்க போகும் பெண் என்று அழைத்துவரும் செல்வியின் நடவடிக்கைகள் வினோதமாக இருக்கிறது. அவளுக்கு பேய் பிடித்திருப்பதாக கூறுகின்றனர். அதே சமயம் முகேஷின் நண்பன் ரவிக்கும் பேய் பிடித்து கொள்கிறது. அது அவனை தன்னுடன் வருமாறு அழைக்கிறது. இதற்கிடையில் ராகவனின் நண்பர் மணி தன் வாழ்க்கையில் நடந்த இரு பேய் பற்றிய சம்பவங்களை கூறி வருகிறார்.

இனி} ஹீரோ ஹோண்டா ஸ்பெலண்டெரை ஆன் செய்து மிக லாவகமாக ஓட்டிக்கொண்டு நத்தம் ரோடுக்கு வந்து விட்டான் ரவி. பைக் மிக சீரான வேகத்தில் நத்தம் ஊருக்குள் நுழைந்து குளக்கரையும் தாண்டி முனுசாமி கோயில் வழியாக சென்றது. அதை தாண்டியது ஏரிக்கரை வரும். இரவு பத்து மணிக்கும் மேல் அங்கு எந்த நடமாட்டமும் இருக்காது. முனுசாமி அடிச்சிடும் என்று பேசிக்கொள்வார்கள். இவனோ நள்ளிரவில் அந்த கரடு முரடான மண் சாலையில் மிக லாவகமாக வண்டியை செலுத்திக் கொண்டு இருந்தான்.
   கோயில் அருகில் வந்ததும் பைக் நிதானமானது! அங்கேயே ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தான். அவன் நடையின் வேகம் அபரிமிதமாக  இருந்தது. அப்படியே ஏரிக்குள் இறங்கினான். எப்போதுமே வரண்டு கிடக்கும் ஏரி அது! கடல் பாலை புதர்கள் நிறைந்து பார்க்கவே அந்த இருட்டு வேளையில் பயங்கரமாக காட்சி தர சில் வண்டுகள் ரீங்காரம் இட்டு கொண்டு இருந்தன.
   ரவி எதையும் சட்டை செய்ய வில்லை.நேரே கரை மீது ஏறி உள்ளே இறங்கியவன் காணாமல் போனான். ஏறக்குறைய ஒரு மணி நேரம் கடந்திருக்கும் பின்னர் திரும்பி வந்தான் அவன் உடைகளில் சேறு ஒட்டிக்கிடக்க அதை லட்சியம் செய்யாது மீண்டும் முனுசாமி கோயில் அருகே வந்தான். ஸ்பெளண்டரை ஸ்டார்ட் செய்தான். மீண்டும் சீராக பஞ்செட்டி நோக்கி செல்ல ஆரம்பித்தான்.
ஒரு பத்து நிமிடத்தில் பஞ்செட்டி முகேஷின் வீட்டிற்கு வந்து வந்துவிட்டான் ரவி.பைகை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தான். எதுவும் நடக்காதது போல முகேஷின் பக்கத்தில் படுத்து உறங்க ஆரம்பித்தான்.
    விடிந்ததற்கு அறிகுறியாக பறவைகளின் சத்தங்கள் கேட்க அசந்து உறங்கிக் கொண்டிருந்த முகேஷ் திடுக்கிட்டு எழுந்தான். பக்கத்தில் ரவி இருக்கிறானா? என்று பார்த்தான். ரவி அசந்து தூங்குவதை பார்த்ததும் நிம்மதி அடைந்தான். இரவு நெடு நேரம் தூங்காத அலுப்பு அவனை வாட்டியது அப்படியே படுத்து மீண்டும் உறங்கிப் போனான்.
     ஜன்னல்வழியாக சூரியனின் கதிர்கள் முகத்தில் விழ எழுந்த ரவி முகேஷ்! டேய் முகேஷ் எழுந்திருடா என்று முகேஷை எழுப்பினான். முகேஷும் எழுந்தான். டேய் மணி ஏழு ஆகுது குளிச்சிட்டு வேலைக்கு கிளம்ப வேண்டாமா? இன்னும் தூங்கிட்டு இருக்கிற? என்றான் ரவி.
   அவனை முறைத்தான் முகேஷ்! நேத்து நைட் நீ பண்ண அலும்புக்கு நான் இப்ப எழுந்துக்கறதே அதிகம் நீ எங்கடா என்னை ஒருமணி வரைக்கும் தூங்க விட்ட?
   நான் என்ன பண்ணேன்? நீதான் என்னை கட்டாயப்படுத்தி துணைக்கு இங்க படுத்துக்கடான்னு சொன்னே? இல்லேன்னா நான் எப்பவோ வீட்டுக்கு போயிருப்பேன் என்று கையில் பேஸ்டை எடுத்தவாறு பாத் ரூமிற்குள் நுழைய முயன்ற ரவியை தடுத்தான் முகேஷ்.
  டேய் நில்லுடா! ஆமாம் ஏன் உன் லுங்கி பூரா இப்படி சேறா இருக்கு?
  சேறா இருக்கு எங்கடா?
நல்லா பாரு உன் லுங்கி பின்னாலே எல்லாம் சேறு!
  எப்படி வந்துச்சு தெரியலையே?
சேறு இருக்கட்டும் இது என்னாது எதோ சிவப்பா இருக்கே கறை மாதிரி?
   அதெல்லாம் எதுவும் இருக்காதுடா!
இல்லைடா நைட் நீ ஓடினப்போ கீழே விழுந்த இடத்தில ஏதாவது அடிபட்டு ரத்தம் வந்திருக்குமோ?
   நான் எங்க ஓடினேன்?
 நீ இல்லை உன் மேல பிடிச்சிருந்த பேய்! என்று மனதிற்குள் சொன்ன முகேஷ்
சரி சரி போய் இதையும் நல்லா கழுவிட்டு வா என்றான்.
  ரவி பாத்ரூமிற்குள் போய் பத்து நிமிடம் ஆகியும் வரவில்லை டேய்! இன்னுமாடா டைம் ஆகுது வாடா வெளியே என்று கத்தியபோதும் பதில் இல்லை
 இது என்னடா இது வேலியில போன ஓணானை இழுத்து மடியில விட்டுகிட்ட கதையா இருக்கே இவன் கூட ஒரே ரோதனையா போச்சே என்று புலம்பியவாறே பாத்ரூம் அருகே சென்றான்  முகேஷ்.
  ரவி ரவி ! என்று குரல் கொடுத்தவாறு கதவை தட்ட கை வைத்தான் அது திறந்து கொண்டது. உள்ளே ரவி லுங்கியை வாயில் வைத்துக் கொண்டு  அந்த ரத்தக் கறையை சுவைத்துக் கொண்டிருந்தான்.
   எதிரே தெரிந்த நிலைக் கண்ணாடியில் அவன் முகம் வேறாகத் தெரிந்தது!
பயத்தில் உறைந்து போனான் முகேஷ்.
  மணி மிகவும் சுவாரஸ்யமாக சொல்லிக் கொண்டிருந்தார் அந்த சம்பவத்தை அந்த பேயி சைக்கிளை பிடிச்சு அப்படியே நிறுத்தி வைச்சிகிச்சாம். நம்மாளு எவ்வளவோ மிதிச்சும் சைக்கிள் நகரவே இல்லையாம்! மரியாதையா கருவாடை கொடுத்திட்டு போயிடுன்னு குரல் கேட்டுச்சாம்
  வெலவெலத்து போன நம்மாளு முழு கருவாடையும் போட மனசில்லாம ஒரு துண்டை தூக்கி போட்டுட்டு சைக்கிளை எடுத்துகிட்டு வேகமா மிதிச்சாராம்! ஆனா சைக்கிள் நகரவே இல்லையாம்! என்னையாலே ஏமாத்த பாக்கிறே மொத்த கருவாட்டையும் கொடு! அப்படின்னு எதிர்லே வந்து சைக்கிளை மறிச்சிகிட்டு நிக்குதாம் அந்த பொம்பளை பேய்!
   தலைவிரி கோலமா நின்ன அத பார்த்த நம்ம ஆளுக்கு பேதியே வந்துருச்சாம்! கருவாடு போனா போவுது உசுருதான் முக்கியம்னு சைக்கிளையும் அப்படியே போட்டுட்டு  ஓட ஆரம்பிச்சவர் ஊடு வந்துதான் நின்னாராம்! அப்புறம் ஜுரம் வந்து படுத்தவன் தான் ஒரு வாரம் எழுந்திருக்கலை! மந்திரிச்சு தாயத்து எல்லாம் கட்டி பத்து நாள் கழிச்சி எழுந்து நடமாட ஆரம்பிச்சான் அவன். என்று  கதையை முடித்தார் அவர்.
   நல்லா இண்டரஸ்டிங்காத் தான் இருக்கு! அப்புறம் உங்க பேத்திக்கு என்ன ஆச்சு சொல்லுங்க! என்றான் வினோத்.
   அது இப்ப வேணாம் தம்பி ரொம்ப இருட்டிடுச்சு!வீட்டுல என்னை தேடுவாங்க! நாளைக்கு வரேன் என்று துண்டை உதறி தோளில் போட்டவாறு கிளம்பினார் மணி.
ராகவன் மிரண்டு போயிருந்தான். இந்த கதைகளை அவன் ஏற்கனவே அறிந்தது என்றாலும் இப்போது கேட்கையிலும் பயங்கரமாக இருந்தது. சரி வாடா வீட்டுக்கு போவோம் என்று வினோத்தை அழைத்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தான்.
    இரவு ராகவனின் மனைவி டிபன் செய்திருந்தாள். மதியம் தான் சாப்பிடவே இல்லை! இப்ப இட்லி பண்ணியிருக்கேன் இதையாவது உங்க செல்வியை சாப்பிட சொல்லுங்க! அப்புறம் மீன் கொழம்புதான் வேணும்னு அடம் பிடிக்க போறா எங்காத்துல முள்ளங்கி கொழம்புதான். சட்னி இருக்கு மொளகாப் பொடி இருக்கு இது எதையாவது தொட்டுட்டு சாப்பிட சொல்லுங்க என்றாள்.
    சரி சரி! ரொம்பத்தான் ஓட்டாதே!இதோவரோம் என்று பாத்ரூமிற்குள் நுழைந்து கை கால் கழுவிக் கொண்டு வந்தார்கள் இருவரும். செல்வியும் வந்து அமர்ந்தாள். இப்போது அவளிடம் எந்த வித்தியாசமும் இல்லை! அனைவருக்கும் இட்லி பறிமாறினாள் ராகவன் மனைவி.
   இருவரும் நான்கு இட்லி சாப்பிடுவதற்குள் பத்து இட்லி சாப்பிட்டு இருந்தாள் செல்வி.  ஒருவேளை மிகுந்த பசியாக இருக்குமோ? ஆனால் காலையில் தானே எதிர்த்த வீட்டில் ஒரு படி சோறை காலி செய்தாள்  என்று எண்ணியவாறே இன்னும் இரண்டு இட்லிகளை வைத்தாள் ராகவன் மனைவி.
  இன்னா அயிரம்மா! ரெண்டு ரெண்டா போட்டுகினு கிறே! மொத்தமா போடு என்று இட்லி முழுவதையும் தன் தட்டில் கவிழ்த்து கொண்ட செல்வி அங்கிருந்த குழம்பை தட்டில் அப்படியே ஊற்றிக் கொண்டு  இட்லிகளை பிசைந்து உண்ண ஆரம்பித்தாள்.
   என்னங்க! எனக்கு ரொம்ப பயமா இருக்கு!
ஸ் நீ சும்மா இரு இதுக்கெல்லாம் பயப்பட வேண்டாம் இன்னிக்கு ஒரு பொழுது நாளைக்கு சரியாயிடுவா?
   இன்னா அய்யிரே! நாளைக்கு என்னை விரட்டிடலாம்னு பாக்கறீயா?
நான் நினைப்பது இவளுக்கு எப்படி தெரிகிறது என்று ஆச்சர்யப்பட்டான் ராகவன்
நீ நினைக்கற மாதிரி நான் அவ்வளவு சீக்கிரம் இந்த உடம்பை விட்டு போக மாட்டேன்! என் கணக்கு இங்க நிறைய தீர்க்க வேண்டியிருக்கு ஒரு கணக்கை என் லவ்வர் தீர்த்துட்டான் போல ஆனா இன்னும் நிறைய இருக்கு அதெல்லாம் முடியறவரை நான் இவ உடம்புல தான் இருப்பேன்
  செல்வி! செல்வி நீ இன்னாம்மா சொல்றே ஏன் இப்படியெல்லாம் பேசற? என்றான் வினோத்!
  அவன் கன்னத்தில் பளாறென்று அறைந்தாள் செல்வி! டேய்! என்னை தொடாதே! நான் செல்வி இல்லேன்னு சொல்றேன் இல்லை! என்று சந்திரமுகி ஜோதிகா போல முறைத்தாள்.
  ராகவன் மனைவி பூஜையறைக்கு சென்று ஒருதட்டில் விபூதி வைத்து சூடம் கொளுத்தி எடுத்து வந்தாள்.
   இதோ பாரும்மா! எல்லாம் சரியாயிடும் இந்தா இந்த விபூதியை வைச்சுக்க என்று தட்டை செல்வியின் அருகில் எடுத்துச் சென்றாள்!
  அடுத்த கணம் அந்த தட்டு காற்றில் பறந்து வாசலில் சென்று விழுந்தது. அதில் இருந்த விபூதி தெறித்து அங்கிருந்தோர் மீது தெறித்தது.
  ஐயோ உடம்பெல்லாம் எரியுது! எரியுது! என்று அரற்றியவாறே அருகே இருந்த சொம்பில் இருந்து தண்ணீரை உடலில் ஊற்றிக் கொண்ட செல்வி அப்படியே மயங்கி விழுந்தாள்.
   ராகவனும் வினோத்தும் செய்வதறியாது திகைத்தனர்!
  நிச்சயமா இவளை ஏதோ பேய்தான் பிடிச்சிருக்கு! என்றாள் ராகவன் மனைவி!
ஆமாம்டா! இது ஏதோ காத்து சேஷ்டைதான் என்றான் ராகவனும்!
   நீங்க ரெண்டு பேர் சொல்றதும் சரிதான்! அதனாலதான் இங்கே இவளை கூட்டி வந்தேன்! அதுவும் இவ சொன்னதாலே என்றான் வினோத்.
  இவ யாரு? எப்படி உனக்கு பழக்கம்?நீ கட்டிக்க போற பொண்ணுன்னு சொன்னே?
ஒருவிதத்துல அது உண்மைதான்! ஆனா இவமேல இப்படி வந்து இறங்கற பொண்ணுதான் இவளை இங்க கூட்டிகிட்டு போகச் சொல்லுச்சு! என்றான் வினோத்.
   இது என்ன புதுக்கதை முளைக்கிறது! என்று பிரமிப்போடு பார்த்தனர் இருவரும்!
                                                  மிரட்டும்(7)

 டிஸ்கி} சென்னை சென்று வந்ததால் பதிவிட தாமதம் ஆகிவிட்டது. மன்னிக்கவும்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப்படுத்தலாமே! நன்றி!

Comments

 1. நன்றாக செல்கிறது... திருப்பங்கள் அருமை...

  ReplyDelete
 2. ராத்திரில வந்து படிச்சது தப்பாயிடுச்சே....!

  ReplyDelete
 3. இதே ஸ்பீட்ல இந்த தொடர் பாகம் பயனிக்கட்டும்!

  ReplyDelete
 4. கலக்குங்க, அடுத்த பாகம் விரைவில்

  ReplyDelete
 5. நானும் பேய் கதை எழுத முயலுகிறேன் ஆனால் முடியவில்லையே அண்ணா
  உங்கள் கதை அருமை

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2