பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 9பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 9

உங்கள் ப்ரிய பிசாசு.

முன்கதை சுருக்கம்: ராகவனின் நண்பண் வினோத் அழைத்து வரும் பெண்ணிற்கு பேய் பிடித்துள்ளது. அந்த பேயே தன்னை அந்த ஊருக்கு அழைத்து வரச் சொன்னதாக கூறுகிறான் ராகவன். முகேஷின் நண்பன் ரவிக்கும் பேய் பிடித்துள்ளதாக முகேஷ் கருதுகிறான். அவனை திருப்பதிக்கு அழைத்து செல்ல முடிவெடுத்து அழைக்கிறான். முதலில் ஒத்துக் கொள்ளும் ரவி பின்னர் வீட்டில் மறுத்து பேசுகிறான். இனி:


 இருள் சூழ்ந்த இரவு வேளையில் சில சில்வண்டுகள் சத்தம் பேயிறைச்சலாக இருந்தது. கிராமம் என்பதால் வேறு சப்தங்கள் இல்லை! ஆங்காங்கே பட்டியில் உள்ள மாடுகள் வாலை சுழற்றும் சப்தங்களும் ஒரு சில நாய்களின் குறைப்புக்களும் தவிர அந்த ஊரே நிசப்தமாக இருந்தது. நள்ளிரவு தாண்டிய நேரம் என்பதால் ஊரின் அனைத்து வீடுகளும் அடைத்துக் கிடந்தன. சிலர் திண்ணையிலும் வாசலிலும் கட்டில் விரித்து படுத்துக் கிடந்தனர்.
   புது ஊர் புதிய இடம் என்ற எந்தவித பயமும் இன்றி செல்வி தனியாக நடந்து சென்று கொண்டிருந்தாள். அந்த நள்ளிரவிலும் சில நாய்கள் அவளை கண்டு உரக்க குறைத்தன ஆனால் கிட்டே நெருங்க வில்லை! தூரத்தில் நின்று குறைத்துவிட்டு ஓடின. இரண்டு தெருக்கள் கடந்து பூஜாரி வீட்டின் முன் வந்து நின்றாள் செல்வி.
  அந்த நேரத்திலும் விழித்து இருந்தான் அந்த பூஜாரி! திண்ணையில் கட்டில் போட்டு கையில் ஒரு விசிறியோடு அமர்ந்து இருந்தான். செல்வி அந்த வீட்டின் படலை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தாள். பூஜாரி அவள் வருவதை உறுதி செய்து கொண்டான். அவன் கண்கள் ஆர்வத்தால் மின்னின. அவனுள் ஒரு பரபரப்புத் தொற்றிக் கொண்டது. வேகமாக எழுந்தான். வா அம்மணி! வா! நீ வருவேண்ணு எனக்குத் தெரியும் என் குருநாதர் எனக்கு சரியாத்தான் வித்தையை கற்பிச்சு கொடுத்து இருக்காரு என்று விகாரமாய் சிரித்தான்.
     செல்வி பதிலேதும் பேசவில்லை! மவுனமாக அவன் பின்னால் நடந்தாள். அம்மணி என்னா அழகு! உனக்கு போயி பேய் பிடிச்சி இருக்கே! அதை என் மந்திர சக்தியாலே விரட்டறேன்! ஆனா அதுக்கு முந்தி நீ எனக்கு வேணும். அதுதான் அதனாலத்தான் மந்திரிச்சி கட்டறமாதிரி இந்த தாயத்தை கட்டி அனுப்பினேன். இது வசிகரிக்கிற தாயத்து!
   நேத்து நீ ஊருல நுழையறப்பவே பாத்தேன்! அப்பவே நீ எனக்குன்னு தோணிடிச்சி! வா! அம்மணி! வா என்று அழைத்தான் பூஜாரி. இந்த பூஜாரி இப்படித்தான் ஊரை ஏமாற்றிகிட்டு இருக்கான். சில வசிய மந்திரங்களை தெரிந்து வைத்துக் கொண்டு பேய் பிடித்ததாக வரும் பெண்களை மோசம் செய்து கொண்டிருந்தான். ஆனால் இந்த விசயம் இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது. நல்லவன் போலவே நடித்து வந்தான்.
   குடும்பம் இல்லாதவன் தனிக்கட்டை என்று மக்கள் அவன் மீது பரிதாபப்பட்டார்கள். இதனால் தைரியமாகவே அவன் இந்த காரியங்களை செய்து வந்தான்.  அந்த நினைப்பில் செல்வியிடமும் விளையாடவே நினைத்து தாயத்து என்ற போர்வையில் வசிய தாயத்து கட்டி அனுப்பிவிட்டான்.
   இது ஒருவகை வேரினால் செய்யப்பட்ட தாயத்து. இதை பக்குவப்படுத்தவேண்டிய முறையில் செய்து மற்றவர்கள் கையில் கட்டிவிட்டால் ஹிப்னாடிசம் போலவே அவர்கள் நம் கட்டுக்கு வருவார்கள். இங்கிருந்து ஹிப்னாடிசம் பண்ணியே வரவழைத்து விடலாம். அப்படி ஒரு வித்தையைத்தான்  அந்த பூஜாரி செய்து இருந்தான்.
  {வெகு காலம் முன் மோடி வித்தைக்காரர்கள் குடுகுடுப்பை காரர்கள் இதுமாதிரி செய்வதாக செய்திகளிலும் புத்தகங்களிலும் படித்திருக்கிறேன்}  பூஜாரி இந்தவித்தையை பிரயோகிப்பது இதுவே முதல் தடவை! எனவே அவன் தன் வித்தை பலித்துவிட்டது என்று மகிழ்வுடன் செல்வியை உள்ளே அழைத்துச் சென்றான். செல்வியும் பூனை மாதிரி அவன் பின்னால் சென்றாள். பூஜாரி கதவை இழுத்து மூடினான். அதன் பின் சிலநிமிடங்கள் வரை சப்தமே எழவில்லை! அப்புறம் பூஜாரியின் அலறல் அந்த ஊரையே எழுப்பியது.

ரவிக்கு திருப்பதி செல்வதில் விருப்பமே இல்லை! அவனது தந்தையே நம்ம குலதெய்வம் கோவில்தானே போய் வா என்றதும் மறுத்து பேசமுடியாமல் முகேஷுடன் அன்று மதியம் புறப்பட்டான்.
   நல்ல வெயில் அடித்துக் கொண்டிருந்தது! மண்டையில் வழிந்த வியர்வையைத் துடைத்தபடி பஸ் நிறுத்தத்திலிருந்த நாற்காலியில் தனது பையை கழற்றி வைத்தபடி முகேஷ் நாம இப்ப திருப்பதி போயித்தான் ஆகனுமா? என்றான் ரவி.
   ஏன் இந்த சந்தேகம்! கட்டாயம் போகனும்! இல்லேன்னா நாள் கடந்தா உன் நிலை இன்னும் சீரியஸா ஆகிடும்னு எனக்கு தோணுது.
  நான் அப்படி என்ன அப்நார்மலாவா இருக்கேன்?
 ஏன் கேட்க மாட்டே? நேத்து பூரா நான் பட்ட அவஸ்தை எனக்குத்தான் தெரியும்?
 சரிடா! இப்ப திருப்பதியில போய் உங்க சித்தப்பாவை பார்த்தா எல்லாம் மாறிடுமா?
 கண்டிப்பா!
எப்படி சொல்றே?
அவரு பெரிய மந்திரவாதி! அவர்கிட்ட மினிஸ்டர்ஸ் கூட போய் வராங்க! நம்ம ஆக்ட்ரஸ் கூட அங்க போய் வருவதா கேள்விப்பட்டிருக்கேன். பெரிய பெரிய பேயை எல்லாம் அவர் பிடிச்சி அடக்கி இருக்காராம்!
  நீ நேர்ல பாத்தியா?
பார்த்தாதானா? சொல்லி கேள்விப் பட்டிருக்கேன்!
  ம் அவ்வளவுதானா?
என்ன அவ்வளவுதானா? பெரிய பெரிய பிரும்ம ராட்சஸஸ் கூட அவர் அடக்கி இருக்காரு தெரியுமா?
  அட என்னமோ பெரிய காசி ராஜன் கதை மாதிரி சொல்லிகிட்டு போறே!
 அது என்ன காசி ராஜன் கதை! அதை முதல்ல சொல்லு!
 ஒரு ஊருல ஒரு சோம்பேறி இருந்தானாம். முழு சோம்பேறியான அவனுக்கு எப்படியொ பகடை ஆடறதுல ஒரு நாட்டம்! அதுல அவன ஜெயிக்க ஆளே கிடையாதாம்! எல்லோரும் பயந்து ஓடிட விளையாட ஆளே கிடைக்காம பெருமாள் கோவில்ல போய் உக்காந்தானாம். அங்க பெருமாளோட ஆடறதா சொல்லிட்டு இவனே ரெண்டு பேருக்குமா ஆடி அதுல பெருமாளை ஜெயிச்சி புட்டானாம். பெருமாள் கிட்ட காசு கேட்டானாம். அவரோ ரம்பையை கூப்பிட்டு கல்யாணம் பண்ணி வச்சிட்டாராம்!  தேவலோகத்துல ஆடறப்ப இவனை கூட்டிக்கிட்டு ரம்பை போனது தெரிஞ்ச இந்திரன் ரம்பையை பிரம்ம ராட்சஸா மாற சாபம் போட்டுட்டாராம்.
ரம்பையும் தன் கணவன் கிட்ட விசயத்தை சொல்லிட்டு பிரம்ம ராட்சஸா மாறி காசி ராஜன் பொண்ணுகிட்ட போயி பிடிச்சிட்டாளாம். யாராலும் விரட்ட முடியாம போயிருச்சாம்.
  இந்திரன் காசியில் விசுவநாதர் கோயில் கோபுரம் இடிஞ்சு தரைமட்டமாகி புதுசா கட்டறப்பத்தான் உனக்கு சாப விமோசனமுன்னு ரம்பைகிட்ட சொல்லியிருந்தானாம். அதை புருசன் கிட்ட சொல்லிட்டு ரம்பை காசிராஜன் பொண்ணை போயி பிடிச்சிட்டா!
  புருசன் காரன் காசிக்கு போய் பேய் விரட்டறதா ராஜாகிட்ட சொல்லி அந்த இளவரசிகிட்ட நான் உன் புருஷன் வந்திருக்கேன்னு சொன்னதும் அந்த பேய் அடக்கமா பேசுச்சாம்! ராஜாவுக்கு பெரிய ஆச்சர்யம்.
  இவன் காசிவிசுவநாதர் கோபுரத்தை எவ்வளவு சீக்கிரம் இடிச்சு மண்ணோடு மண்ணாக்கி புதுசா கட்டறீங்களோ அவ்வளவு சீக்கிரம் உங்க பொண்ணுக்கு குணமாகும்னு சொல்லிட்டான். மன்னனும் இடிச்சி கோபுரம் புதுசா கட்டவும் பேய் விலகிடுச்சு! ரம்பையும் சுய உருவம் பெற்று கணவனோடு வாழ்ந்தாள் இது சின்ன வயசுல கேட்ட கதை! இது மாதிரி இல்ல பிரம்ம ராட்சஸ் அது இதுன்னு சொல்றே என்றான் ரவி.
   இல்லைடா! நான் சொல்றது உண்மை! எங்க சித்தப்பாவை நேர்ல பாத்தப்புறம் நீ நம்புவே என்றான் முகேஷ். அசுவாரஸ்யமாய் தலையசைத்தான் ரவி.
  பஸ் வரவே ஏறி அமர்ந்தார்கள். டிக்கெட் வாங்கியதும்  பஸ்ஸில் வீசிய காற்று இதமாக இருக்கவும் நேற்று முழுவதும் சரியாக தூங்காத களைப்பினாலும் அப்படியே கண்ணயர்ந்து விட்டான் முகேஷ்.
   திடீரென ஒரு இடத்தில் நின்றது பஸ்! இங்க பத்து நிமிசம் நிக்கும்! டீ காபி சாப்பிடறவங்க இறங்கி சாப்பிட்டு வாங்க! கண்டக்டர் குரல் கொடுக்க கண்விழித்தான் முகேஷ். அவனது அருகில் ரவியை காணவில்லை!
      ரவி ரவி! என்று சுற்றும் முற்றும் பார்த்தான்! பக்கத்து இருக்கைகளில் இருந்தவர்கள் அவனை வித்தியாசமாக பார்த்தனர். என்னப்பா என்ன? யாரை தேடறே என்றார்கள்.
  என் ப்ரெண்ட்ம்மா! பக்கத்துல உட்கார்ந்து வந்தாரே அவரைத்தான் தேடறேன்!
 என்றபோது உன் பக்கத்திலயா? அப்படி யாரையும் நாங்க பாக்கலியே? என்றார்கள்.இதற்குள் நடத்துனர் வர சார்! என் கூட ஒரு பிரெண்ட் வந்தானே! அவனை காணோம் பார்த்தீங்களா? என்றார்
  என்னப்பா உளறரே? உன் கூட யாரும் வரலியே? நீ மட்டும் தானே ஏறினே?
 இல்லையே! டிக்கெட் கூட எடுத்தேனே! சட்டைக்குள் துழாவி டிக்கெட்டை தேடினான்! அவன் கையில் ஒரு டிக்கெட் மட்டுமே இருந்தது!
                                       மிரட்டும்(9)
 டிஸ்கி} சொந்த அலுவல்கள் காரணமாக மற்ற அன்பர்களின் வலைப்பூக்களுக்கு செல்ல நேரமில்லை! இரண்டு நாட்களுக்கு பிறகு சென்று படித்து கருத்திடுகிறேன்! பொறுத்தருள்க!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப் படுத்துங்கள்! நன்றி!Comments

 1. உங்கள் பகிர்வுக்கு நன்றி...
  நன்றி,
  மலர்
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 2. சார் உண்மையிலேயே அருமையாக செல்கிறது..எங்கேயோ தொடர்ச்சியை விட்டுவிட்டேன்..அணைத்து பாகங்களையும் முதலில் இருந்து படிக்க வேண்டும் ... ஒவ்வொரு பகுதியிலும் முந்தைய அகுத்கான லிங்க் கொடுத்தால் நலமாக இருக்கும்...

  ReplyDelete
 3. இடையில் காசி ராஜன் கதையும் இணைத்து விட்டீர்கள்... நன்றி சார் ... தொடர்கிறேன்...

  ReplyDelete
 4. தொடர்ந்து பேய் கதைகள் அருமை அண்ணா

  ReplyDelete
 5. மத்தியானமே படிச்சிருக்கணும்!ராத்திரியில் பேய்க் கதை!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2