திருஷ்டிகளும் பரிகாரங்களும்! 2



திருஷ்டிகளும் பரிகாரங்களும்! 2

சில வாரங்களுக்கு முன் சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் திருஷ்டிகளும் பரிகாரங்களையும் பற்றி கூறினேன். இந்த பகுதியில் பொதுவான திருஷ்டிகளும் அதற்கான பரிகாரங்களையும் கூறப்போகிறேன். நம்பிக்கை உள்ளோர் தொடருங்கள்!


கல்லடி பட்டாலும் படலாம்! கண்ணடி படக்கூடாது! என்பர். அந்த கண்ணடிதான் திருஷ்டி எனப்படுகிறது. மற்றவர் நம்மை பார்க்கும் பார்வையில் ஒரு தீய தாக்கம் ஏற்பட்டு அதனால் பாதிப்பு ஏற்பட்டால் திருஷ்டி பட்டுடிச்சி என்பர். கண்ணேறு என்பது திருஷ்டியின் தூய தமிழ் பெயர்.பிறரோட பார்வை மட்டும் அல்ல நம்மோட பார்வையே கூட சில சமயம் பாதிப்புக்களை ஏற்படுத்தலாம்.
  நல்ல வளப்பமாக ஆரோக்கியமாக வாழும் ஒருவர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு இளைத்துப் போகலாம். எப்படி இருந்த மனுசன் இப்படி ஆயிட்டாரே என்று பேசிக்கொள்வார்கள். உடல் ஆரோக்கியம் குன்றிய அவருக்கு எப்படி திருஷ்டி சுற்றுவது? மூன்று தெருக்கள் கூடுமிடத்திலிருந்து சிறிது மண் எடுத்துக் கொள்ளுங்கள் ஒன்பது காய்ந்தமிளகாய் ஒருபிடி உப்பு, கொஞ்சம் கடுகு ஆகியவற்றையும் எடுத்துக் கொண்டு ஒரு கொட்டாங்குச்சி அல்லது இரும்பு பாத்திரத்தில் போட்டுக்கொண்டு முச்சந்தி மண்ணையும் அதனோடு போட்டு உடல் நலம் குன்றியவரை கிழக்குப்பார்த்து அமரச் செய்து இடமிருந்து வலமாக மூன்றுமுறையும் வலமிருந்து இடமாக மூன்றுமுறையும் சுற்றி கண்பட்ட திருஷ்டிகள் கடுகுபோல வெடிக்கட்டும் என்று சொல்லியவாறு சுற்றி கடவுளை வேண்டி கரி அடுப்பு பற்றவைத்து அந்த தணலில் போடுங்கள். பிறகு கால்களை கழுவிக் கொண்டு விபூதி பூசிக் கொண்டு உடல் நலம் பாதிக்கப்பட்டவருக்கும் பூசி விடுங்கள். விரைவில் குணமடைவார்.

பொறாமையினால் வரும் திருஷ்டி!
   உங்களுடைய உழைப்புக்கும் திறமைக்கும் கிடைத்த புகழினால் கூட திருஷ்டி உண்டாகும். பரபரப்பாக செயல்பட்ட நீங்கள் சட்டென மந்தமாக செயல்பட நேரிடும் திடீர் மந்தம் இந்த திருஷ்டியினால்தான் ஏற்படும். இதற்கு பரிகாரம் படிகாரம் சுற்றிப்போடுவதுதான். கடையில் பெரிய படிகாரக் கட்டி ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். திருஷ்டிக்கு ஆளானவரை கிழக்கு நோக்கி உட்காரவைத்து படிகார கட்டி ஒன்றினால் இடமிருந்து வலம், வலமிருந்து இடம் மூம்மூன்று முறை சுற்றி தலையில் இருந்து பாதம் வரை மேலிருந்து கீழாக இறக்கி வீட்டின் பின்புறம் தணல் பற்றவைத்து அதில் படிகாரத்தை போட்டுவிடுங்கள். மறுநாள் அந்த படிகாரக் கட்டி பூத்திருக்கும் அதை முச்சந்தியில்  போட்டுவிட்டு திரும்பி பாராமல் வீட்டுக்கு வந்து கைகால் கழுவி கடவுளை வேண்டி விபூதி பூசிக் கொள்ளுங்கள்.
படிகாரத்தை நீரிலும் போடலாம். அப்படி செய்தால் அதனை பிறர் கால் படாத இடத்தில் ஊற்றவும்.
  
உங்கள் வியாபாரத்தலம் அல்லது அலுவலகத்தில்!
   முறையாக திட்டம் தீட்டியும் அலுவலகம் அல்லது தொழிலிடத்தில் இறங்குமுகமா? அந்த திருஷ்டிக்கு பரிகாரம் இதுதான். வளர்பிறை சனிக்கிழமை அல்லதுஞாயிற்றுகிழமையில் கடற்கரைக்கு சென்று பெரிய கேன் அல்லது பாட்டிலில் கடல் நீரை எடுத்துக் கொள்ளுங்கள் அதை துணியில் வடிகட்டி  வடிகட்டிய நீரை எடுத்துச் சென்று உங்கள் அலுவலகம், தொழிலிடத்தில் குறிப்பாக உங்கள் அறையில் தெளியுங்கள் முடிந்தால் கழுவியும் விடலாம். இதில் முக்கியமான விசயம் இதை பிறரைக் கொண்டு செய்யக் கூடாது. பாதிக்கப்பட்டவரே செய்ய வேண்டும். இவ்வாறு மாதம் ஒரு முறை செய்து பாருங்கள் திருஷ்டி விலகி தொழில் சிறப்பாக வளரும்.

வந்த திருஷ்டிக்கு பரிகாரம் பார்த்தோம்! இனி திருஷ்டி வராம இருக்க பரிகாரம்.
சிறப்பாக வியாபாரம் நடக்க பரிகாரம்! உங்களுடைய வியாபாரத் தலம் அல்லது அலுவலகத்தில் கறுப்பு கம்பளிக் கயிற்றில் படிகாரத்துடன் ஊமத்தங்காய், அல்லது தும்மட்டிக்காய் சேர்த்துக் கட்டி அத்துடன் ஏழு மிளகாய்களை கோர்த்து கடைசியாக சிறிய படிகாரத்தையும் சேர்த்துக் கட்டி வாசலில் தொங்கவிடுங்கள். இந்த படிகாரம் கொஞ்சம் கரைந்ததும் அல்லது நாளானதும் மீண்டும் புதியதாய் கட்டுங்கள். இதில் முக்கிய விசயம் கடையை திறந்ததும் இரண்டு ஊதுபத்தி ஏற்றி கடவுளை வணங்கவும். மூடும் போது வாசலில் கற்பூரம் ஏற்றவும். அப்புறம் உங்க வியாபாரம் செழிக்கும்.
மாதா மாதம் கழிக்கும் திருஷ்டி!
  அமாவாசையன்னிக்கு திருஷ்டி கழிக்கறேன் பேர்வழின்னு தேங்காயையும் பூசணிக்காயையும் உடைச்சு நடு ரோட்டுல போடறீங்க! அதுமுறையா செய்யக்கூடிய ஒன்று! எப்படின்னு கேட்டுக்கங்க!
 அமாவாசையன்னிக்கு தேங்காய் உடைக்கிறவங்க அன்னைக்கு காலையிலேயே தேங்காயை எடுத்து சாமி படத்துகிட்டே  வைச்சிடனும் மஞ்சள் தூளை தண்ணியிலே கரைச்சி அதை தேங்காய் பக்கத்துல வைச்சிடுங்க  தேங்காயை உடைக்கிறதுக்கு முன்னாடி அதை கையில் எடுத்துகிட்டு மனசார கடவுளை வேண்டி திருஷ்டி போகணும்னு வேண்டிகிட்டு அதை உடைக்கிறவர் கிட்ட தேங்காயையும் மஞ்சள் தண்ணீரையும் கொடுத்திடுங்க தேங்காயில் கற்பூரம் ஏற்றி சுற்றி  வாசல்ல ஒரு ஓரமா உடையுங்க. உடைபடற தேங்காய் மத்தவங்க எடுத்து உபயோகப்படுத்தனும். குறைந்தபட்சம் ஈ எறும்பாவது சாப்பிடனும். அதுதான் நல்லது. தேங்காயை உடைச்சதும் மஞ்சள் தண்ணீரை கொஞ்சம் தலையிலயும் உடம்புலயும் தெளிச்சிகிட்டு சுத்தி போட்டவறை உள்ளே வரச் சொல்லுங்க. உள்ளே வந்ததும் தண்ணீர் ஒரு டம்ளர் குடிக்க கொடுங்க! இப்படி ஒவ்வொரு அமாவாசையும் செய்யுங்க வாணிபம் வளர்பிறையா வளரும்.

  பூசணிக்காய் உடைப்பது என்றாலும் முதலில் சாமி படத்தில் வைத்து வேண்டிக் கொள்ளவும். மஞ்சள் கரைத்த தண்ணீரையும் உடன் வைக்கவும். உடைப்பதற்கு அரை மணி நேரம் முன்னதாக பூசணிக்காயை ஒரு இடத்தில் துளையிட்டு அந்த இடத்தில் மஞ்சள் குங்குமம் போட்டு சில சில்லறைகளையும் போடுங்கள். பூசணிக்காயை உடைக்க போகும் நபர் வலதுகையில் கறுப்பு கயிறு ஒன்றை கட்டிவரச் சொல்லி பூசணிக்காயை நீங்கள் கையில் எடுத்து கடவுளை நினைத்து மனசார திருஷ்டி கழிய வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். பின்னர் சுற்றுபவரிடம் கொடுத்து சுற்றி கடை வாசலில் ஓரமாக உடைக்கச் சொல்லுங்கள். பின்னர் மஞ்சள் தண்ணீரை தெளித்துக் கொண்டு அவரை உள்ளே வரச்சொல்லுங்கள்.கை கால் கழுவிகொண்டு வந்ததும் குடிக்க தண்ணீர் கொடுத்து அமரச் செய்யுங்கள்.
  உடைத்த பூசணிக்காய் சிதறலாமே தவிர நசுங்க கூடாது! அதனால்தான் அதற்குள் காசுகளை போடும் பழக்கம் வந்தது. காசுகளை எடுப்பவர்கள் அதை எடுத்துக் கொண்டு குப்பையில் போட்டுவிடுவார்கள். மேலும் அவர்களுக்கு எந்த பாதிப்பும் வரக் கூடாது என்பதற்காக மஞ்சள் குங்குமம் அதில் போடப்பட்டது. ஓரமாக உடைத்த பூசணிக்காய்களை குப்பையில் அள்ளி போடச்சொல்லுங்கள்.  பூசணிக்காய்க்கு திருஷ்டிகள் அனைத்தையும் ஈர்த்துக் கொள்ளும் ஆற்றல் உண்டு அதனை சுற்றுபவர் திருஷ்டிகளை அதனுள் ஈர்த்து போய் சிதறச் செய்கிறார். எனவே அவருக்கு தட்சணை கொடுங்கள். சுற்றும் நபர் வெளி நபராக இருப்பின் முதலிலேயே தட்சணை கொடுத்துவிட வேண்டும். அவர் மஞ்சள் நீரை தெளித்து கொண்டு அப்படியே சென்று விட வேண்டும் உங்கள் ஊழியராய் இருந்தால் மஞ்சள் நீர் தெளித்துக் கொண்டு கால் கழுவிக் கொண்டு உள்ளே வரலாம்.

  எளிமையான எலுமிச்சம் பழ திருஷ்டி கழித்தல்!
  கடையை திறந்ததும் கடவுளை கும்பிட்டு ஒரு எலுமிச்சம் பழத்தினை இரண்டாக வெட்டி அதில் குங்குமம் தடவி வருவோர் கண்பார்வை படும் படி வைக்கவும் கடை மூடும் சமயம் அதை எடுத்து தலையைச் சுற்றி அதைஇடம் வலமாக மாற்றி எறியுங்கள். அல்லது கடையை மூடும் போது ஒரு எலுமிச்சம் பழத்தில் கற்பூரம் வைத்து உங்களுக்கும் கடைக்கும் சேர்த்து சுற்றி அதை நசுக்கி இட வலமாக மாற்றி எறியுங்கள்.  எலுமிச்சம் பழம் தீய சக்திகளை திருஷ்டியின் பாதிப்புக்களை நெருங்கவிடாமல் செய்யும். எளிமையானதும் கூட.

 இன்னும் சில பரிகாரங்கள் உள்ளன! இறைவன் விருப்பமிருந்தால் அவை மூன்றாவது பாகத்தில் தொடரும்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. தொடருங்கள் நண்பரே.. அடுத்த பாகத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்!

    ReplyDelete
  2. அறிந்து கொண்டேன்... தொடர்கிறேன்...

    ReplyDelete
  3. திருஷ்டி பரிகாரங்கள் பற்றி தெரிந்து கொண்டேன். பகிர்ந்தமைக்கு நன்றி தொடருங்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2