ரேசன் கார்டில் பெயர் சேர்த்த கதை!



ரேசன் கார்டில் பெயர் சேர்த்த கதை!

திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. எங்கள் ரேசன்கார்டில் மனைவி பெயரும் குழந்தை பெயரும் சேர்க்காமல் இருந்தேன். ரேசன்கார்டில் பெயர் சேர்ப்பதில் இருந்த நடைமுறைச் சிக்கல்கள் என்னை அந்த பணியை செய்ய விடாமல் செய்தன. முன்பெல்லாம் வீட்டுக்கு வீடு ஆசிரியர்கள் ரேசன் கணக்கெடுக்க வருவார்கள் நாம் சொல்வதை குறித்துக் கொள்வார்கள்.
  அவர்கள் நமக்குத் தெரிந்தவர்கள் எனில் கூடுதலாக ஒரு நபரை சேர்த்தும் பதிவிட்டுக் கொள்வார்கள். அப்புறம் பார்ம் பில்லப் பண்ணி போட்டோ ஒட்டி ரேசன் கார்டு கொடுத்தார்கள். ஆனால் இந்த பணியையும் அப்போது ஆசிரியர்களே செய்தார்கள்.என்னுடைய சிறிய வயதில் நான் பாட்டி வீட்டில் தங்கி படித்தேன். என் பெயர் அங்குள்ள ரேசன் கார்டிலும் இருந்தது. இங்குள்ள (அப்பா ஊரில்) ரேசன் கார்டிலும் இருந்தது.
    எல்லாவற்றிலும் ஊழல் செய்யும் இந்த அரசாங்கம் இப்போது என்னமோ பெரிதாக ரேசன் ஊழலை ஒழிப்பதாக சொல்லி ரேசன் பதிய பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. அதில் ஒன்றுதான் நீக்கல் சான்றிதழ். என் மனைவியை இங்குள்ள ரேசன் கார்டில் சேர்க்க அங்கு நீக்கி சான்றிதழ் கொண்டுவர வேண்டும். மனைவியின் ஊர் அருகில் இருந்தால் உடனடியாக வாங்கி வந்து விடலாம். ஆனால் என் மனைவியின் ஊர் கரூர். இதனால் நீக்கல் வாங்குவதில் தாமதம். இதற்குள் எனக்கு முதல் குழந்தையே பிறந்து விட்டது. அதற்கு ஒரு வயதும் நிறைந்துவிட்டது. சரி மனைவி குழந்தை இருவரையும் சேர்த்துவிடலாம். நீக்கல் சான்றிதழ் இந்தமுறை வாங்கி வந்துவிடு என்று மனைவியை ஊருக்கு அனுப்பும் போது சொன்னேன்.
  அவளும் தாய் வீடு சென்று இதற்காக ஒருவாரம் அலைந்து எப்படியோ நீக்கல் சான்றிதழ் வாங்கி வந்துவிட்டாள். அப்போது எனக்கு ஒரு சோம்பேறித்தனம். இதை எதற்கு வேலை மெனக்கெட்டு தாலுகா ஆபிசில் சென்று கொடுத்து பதிவு செய்யவேண்டும். இன்னும் ஒரு மாதத்தில் புது கார்டு கொடுக்க போகிறார்கள் அதில் சேர்த்து பதிவு செய்து விடலாம் என்று கிடப்பில் போட்டுவிட்டேன்.
  அப்போதுதான் ஐயா வைத்தார் ஆப்பு! கலைஞர் ஆட்சியின் கடைசி வருடம் அது! புது கார்டு இந்தவருடம் இல்லை! இப்போது உள்ள கார்டிலேயே இணைப்புத் தாள் ஒட்டி தருகிறோம் என்றார்கள் போச்சுடா சாமி! என்று நொந்து போனேன். இதற்குள் வீட்டில் அடுத்த கல்யாணம் நடந்து என் தங்கையும் நீக்கல் சான்றிதழ் வாங்கி சென்று விட்டாள். இதை ஒரு புரோக்கர் மூலம் செய்து கொடுத்துவிட்டார் என் அப்பா! எனக்கு தெரியாது. தெரிந்திருந்தால் அந்த புரோக்கர் மூலமாக சேர்த்துவிட்டிருப்பேன். சரி இந்த வருடமாவது புது கார்டு வரும் என்றால் அம்மாவும் இணைப்புத் தாள் ஒட்டிவிட  எனக்கு மிகவும் சங்கடமாகிவிட்டது. என் மனைவிக்கு வாக்காளர் அடையாள அட்டை கூட கிடைத்துவிட்டது. ரேசன் கிடைக்காதது வருத்தமாக இருந்தது. வங்கியில் கணக்கு துவக்க கூட ரேசன் கார்டைத்தான் கேட்டார்கள். வாக்காளர் அட்டையை தூர வீசிவிட்டார்கள். இதனால் என் மனைவி என்மீது கோபமக இருந்தாள்.
   திடீரென்று போனவாரம் எனக்கு ஞானோதயம் பிறந்தது. இன்று எப்படியாவது பெயர் சேர்த்துவிட வேண்டும் என்று அனைத்து சான்றுகளையும் எடுத்துக் கொண்டு தாலுகா அலுவலகம் சென்றேன். அன்று வியாழக்கிழமை கூட்டம் குறைவாக இருந்தது. ரேசன்கார்டு பெயர்சேர்த்தல் நீக்கல், முகவரி மாற்றம் என்று ஒரு ஜன்னல் வாசலில் ஓட்டியிருந்தது. நான்கைந்து பெண்மணிகள் வரிசையில் நின்றிருந்தார்கள். நானும் அவர்களுடன் நின்றேன். அப்போது ஒரு மனிதர் வழி விட்டு நில்லுப்பா! எப்படியும் அரைமணி நேரம் ஆகும் என்றார். எல்லாத்தையும் பில்லப் பண்ணிட்டியா என்றார்.
  இல்லே இங்க ஃபார்ம் வாங்க வந்தேன்! என்றேன். விசித்திரமாய் பார்த்த அவர், இங்க பார்ம் கிடைக்காது, வெளியே கடை வாசல்ல உக்காந்து எழுதிகிட்டு இருக்காங்க பாரு அவங்க கிட்ட போயி பார்ம் வாங்கி எழுதி கொண்டு வா என்றார்.
  அப்போதுதான் கவனித்தேன். தாலுகா ஆபிஸ் எதிரே ஜிராக்ஸ் கடையில் ஒருவர் சேர் போட்டு உட்கார்ந்து எழுதிக் கொண்டிருப்பதை! நேரே அவரிடம் சென்றேன். என்னசார் வேணும்? என்றார். ரேசன்கார்டுல பேரு சேக்கணும்! சேத்திடலாம் சார்! உள்ள கடையில சேர்த்தல் பார்மும் ரெண்டுரூபா ஸ்டாம்பும் கேட்டு வாங்கிட்டு வாங்க என்றார்.
   அந்த பார்ம்நிரப்புவது பெரிய விசயம் ஒன்றும் இல்லைதான்! இருந்தாலும் எல்லோருக்கும் எழுதி தரும் அவர் வருமானத்தை நாம் ஏன் கெடுக்க வேண்டும் வேலையில்லாத இளைஞர்கள் நிறைந்த நாட்டில் இப்படியாவது உழைத்து சம்பாதிக்க நினைக்கிறாரே என்று அவரிடமே பில்லப் செய்தேன். மடமடவென்று நிரப்பியவர் சான்றுகளை வாங்கி இணைத்தார். இதை எடுத்துபோயி கவுண்டர்ல கொடுத்து அக்னாலட்ஜ்மெண்ட் வாங்கிக்கங்க! என்றார்.
  சார் பேர் சேர்த்து வர எவ்வளவு நாள் ஆகும்? என்றேன்! அது ஆகும் பத்து பதினைஞ்சி நாள் கொஞ்சம் செலவு பண்ணா இன்னிக்கே சேர்த்துடலாம்! என்றார்.
எவ்வளவு செலவு ஆகும்? ஒரு நூறு நூத்தம்பது ஆகும்! என்றார். சரி கொடுக்கிறேன் இன்னிக்கெ முடிச்சி கொடுத்துடுங்க என்றேன்.
   சரி முதல்ல உள்ளபோயி இதை கொடுத்து அக்னாலட்ஜ்மெண்ட வாங்கி வந்து என்கிட்ட கொடுங்க அப்புறம் மீதி என்றார். உள்ளே சென்று பத்து நிமிடங்கள் காத்திருந்து அக்னாலட்ஜ்மெண்ட் வாங்கி வந்தேன். அதையும் காசையும் வாங்கிக் கொண்டவர் போன் நெம்பர் தந்து மூணு மணிக்கு போன் பண்ணிட்டு வாங்க! உங்க கார்டு ரெடியா இருக்கும் என்றார்.
  இதற்குள் அவருக்கு ஏகப்பட்ட வேலை! பல்வேறு விதமான கோரிக்கைகளுடன் வருபவர்களுக்கு மனு எழுதி தள்ளிக் கொண்டிருந்தார். ரேசன்கார்டு புதுப்பித்தல், புது கார்டு வாங்குதல், விதவை பென்சன், முதியோர் பென்சன்,ஜாதிச்சான்று, வருமானச் சான்று என பல்வேறு மனுக்களை எழுதி தரச் சொல்லி கூட்டம் க்யு கட்டி நின்றது. இவர் மட்டுமன்றி இன்னொருவரும் வேறோரு கடைமுன் இதே வேலை செய்து வருகிறார். இருவருக்கும் நல்ல வருமானம்.ஒரு மனு எழுத இருபது ரூபாய் வாங்குகிறார். மனுக்கள் முழுவதும் இவர் எழுத வேண்டியது இல்லை! ஜிராக்ஸ்கடையில் அதற்காக தட்டச்சு செய்யப்பட்ட மனுக்களை நிரப்ப வேண்டியவற்றை மட்டும் நிரப்பி இந்த  கட்டணம் வாங்குகிறார். நான் பார்த்தவரை அன்று மட்டும் ஒரு 30லிருந்து 40 மனுக்கள் நிரப்பி இருப்பார். சிலரிடம் கட்டாயமாக இருபது ரூபாய் கேட்பவர், சிலரிடம் பத்து ரூபாய் கொடுத்தாலும் வாங்கிக் கொள்கிறார்.இவரது செலவு போக எப்படியும் ஒரு ஐநூறு ரூபாய் தேத்தி விடுவார் போல.
   என்னைப் போல உடனடி காரியம் ஆக வேண்டுமானாலும் முடித்து தருகிறார். உள்கூலி தனியாக இவருக்கு தனியாக வாங்கிக் கொள்கிறார்.மதியம் மூன்று மணிக்குசெல்லாமல் 3.15க்கு சென்றேன். கொஞ்ச நேரம் உக்காருங்க சார்! ஆளு வெளியே போயிருக்கார் வந்தவுடன் கார்டு வந்து விடும் என்று யாருக்கோ போன் செய்துவிட்டு சொன்னார்.
  நாலுமணிவரை அந்த ஆள் வரவில்லை! பின்னர் இவரே ஆபிஸில் நுழைந்தார்.ஒரு பத்து நிமிசத்துல வந்துடறேன்! என்று சென்றவர் அரைமணி நேரம் கழித்துவந்தார். கையில் கார்டுடன் வந்தார். அதில் என் மனைவி பெயர், மகள் பெயர் சேர்த்து வட்டாரவழங்கல் அலுவலர் முத்திரையிட்டு கையெழுத்திட்டு இருந்தார்.  மிக்க மகிழ்ச்சியுடன் ரொம்ப தேங்க்ஸ் என்றென்! டீ சாப்பிடறீங்களா? என்றேன். மறுத்துவிட்டு என் பீஸ் மட்டும் தாங்க என்றார் எவ்வளவு என்றேன் பிப்டி ருபீஸ் என்றார்.
  கொடுத்துவிட்டு காரியத்தை சாதித்த மகிழ்ச்சியில் வீட்டுக்கு வந்து விட்டாலும் ஒரு குற்ற உணர்வு என்னை குத்திக் கொண்டுதான் இருக்கிறது. அன்றிரவே ஒரு கனவு! அதில் என் கார்டு கையெழுத்து ஆகி வரும் வேளையில் விஜிலென்ஸ் பிடிப்பதாகவும் அவர்களிடம் நீங்கள் ஒழுங்காக இருந்தால் நான் ஏன் இப்படி செய்கிறேன் என்று சண்டையிடுவது போன்றும் வந்தது. 
 எப்படியோ நாலு வருடங்களுக்கு பிறகு என் மனைவி பெயர் எங்கள் ரேசன் கார்டில் இடம் பிடித்தது!
இப்படி இந்த இளைஞர் மனு எழுதிக் கொடுத்து வயிறு கழுவி வருகையில் அவருக்கு அருகில் ஒரு டீக்கடை வாசலில் ஒரு முதியவர் சர்ட் பேண்ட் பிட் வைத்துக் கொண்டு வியாபாரம் செய்து கொண்டிருந்தார்?! வாங்குவதற்கு ஆளில்லை! அவ்வப்போது வந்து இந்த வாலிபரிடம் சீண்டிக் கொண்டிருந்தார்.காலையிலிருந்து எனக்கு வியாபாரமே இல்லே நீ ஐநூறு ரூபா சம்பாதிச்சிருப்பே போலிருக்கே என்பார். மனுதாரரை கையெழுத்து போடச் சொல்லும் போது நீயே செத்தவன் கையெழுத்தை கூட போட்றே அப்புறம் எதுக்கு அவங்களை போட சொல்றே போட்டு முடிப்பா! என்று கிண்டல் செய்து கொண்டிருந்தார். பக்கத்து கிராமத்திலிருந்து ஒரு பெண்மணி பட்டா பெறுவதற்கு வந்திருந்தார். அவர் வைத்திருந்த பத்திரம் கிழிந்து போயிருந்தது. அதை ஜிராக்ஸ் கடையில் லேமினேசன் செய்து கொள்ள சொன்னார். இரண்டு மனைகளை இணைத்து பட்டா வாங்க வேண்டும் என்று அந்த பெண்மணி சொல்ல மனு எழுதுபவரிடம் கூட்டி வந்து அதற்கு என்னென்ன வேண்டும் என்று கேட்டுச் சொன்னார். பின்னர் அந்த பெண்மணியிடம் வாம்மா டீ சாப்பிட்டு வீட்டுக்கு போலாம் என்றார். அந்த பெண்மணியின் செலவில் டீ குடித்து விட்டு வழி அனுப்பினார். என்னிடமும் டீக்கு என்று காசு வாங்கி கொண்டார். எப்படியெல்லாம் பிழைக்கிறார்கள் மனிதர்கள்!
டிஸ்கி}
தட்ஸ் தமிழை பற்றி திட்டி ஒரு பதிவு எழுதலாம் என்றிருந்தேன்! ஆனால் முதலில் நம்மை திருத்திக் கொண்டு பிறரை திருத்துவோம் என்று முடிவெடுத்து உள்ளேன். எல்லாம் கொன்றைவான தம்பிரான் உபயம்! ஒரேயடியாக மஞ்சள் பச்சை என்று கூறிவிட்டார். அதனால் நிறம் மாற்ற முயற்சிக்கிறேன்! அப்புறம் மற்ற மஞ்சள் காரர்களை ஒரு கை பார்ப்போம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப் படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. ரேஷன் கார்டு பெயர் சேரப்பதில் பல சிக்கல்களுள்ளது என்பது உண்மைதான்.உங்கள் மனைவி பெயரை நீக்க சான்று வாங்கி வராமல்
    உங்கள் ரேஷன் கார்டில் அவர் பெயர் சேர்த்துவிட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.நீங்கள் ஊரில் உங்கள் மனைவியின் பெயர் பெயர் நீக்கப் படாமலே இருக்கு, இப்படி பல்லாயிரக்கணக்கான பேர்கள் கூடுதலாக இருக்கின்றன.ரேஷேன் கார்டின் படி நமது மக்கள் தொகை ஒரிஜினல் மக்கள் தொகையைவிட அதிகம்.கரணம் பல போலி ரேஷன் கார்டுகள்.பலரது பெயர்கள் அவரது சொந்த ஊர்களிலும் இருக்கும் அவர்கள் வசிக்கும் ஊர்களிலும் இருக்கும்.
    பதிவை சுவாரசியமாக எழுதி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  2. எப்படியோ பெயரை சேர்த்துட்டீங்க....

    ReplyDelete
  3. இதில் யாரை குறைகூறுவது..எப்படியும் வேலை ஆனால் சரியென நினைக்கும் நம்மையா..அந்த நிலைக்கு நாம் தயாராக நம்மை தூண்டும் அரசுப்பணியாளர்களையா.. அவர்கள் அலைய விடாமல் வேலையை அதற்கான நேரத்தில் முடித்துக்கொடுக்க இதுபோன்ற நிகழ்வுகள், அலைச்சல், நேர விரயம், பணவிரயம் அனைத்தையும் தவிர்க்கலாம். நேர்மையான பதிவு..:):)

    ReplyDelete
  4. இது மட்டுமா...? முகவரி (வீடு) மாறினாலும் சரி... பெயர் சேர்க்கும் போதும், நீக்கும் போதும் சரி... அலைச்சல்... அலைச்சல்... அலைச்சல்... தான்...

    /// தட்ஸ் தமிழை பற்றி திட்டி ஒரு பதிவு எழுதலாம் என்றிருந்தேன்! /// - வேண்டாமே....

    ReplyDelete
  5. நன்பரே!தாங்களது அனுபவம்தான் நிதர்சனமான உண்மை.தனக்கு காரியம் ஆக வேண்டுமென்றால் எப்படியும் செய்து கொள்ளலாம்.
    ஆனால் அடுத்தவர்களிடம் பேசும்போது மட்டும் சட்டம்,நியாயம்,நேர்மை என சொல்வோம்.நான் உட்பட.
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete
  6. எப்படியோ கஷ்டப்பட்டு பேரை செர்த்துடிங்க.....ரொம்ப சந்தோசம்....

    நன்றி,
    மலர்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  7. நீங்கள் கஷ்டப்பட்டு பெயரை செர்த்துவிட்டேர்கள் இனி வருபவர்கள் கஷ்டபடாமல் இருப்பார்கள் உங்கள் பதிவை கண்டு. பகிர்வுக்கு நன்றிகள் அண்ணா

    ReplyDelete
  8. ஆமாங்க ரேஷன் கார்ட்டு வாங்குறது பெரிய தொல்லைனா இதுல பெயர் சேர்ப்பதும் மிகப்பெரிய தொல்லை தான்.

    ReplyDelete
  9. அனுபவப் பகிர்வு மிகவும் அருமை!
    -காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete
  10. இப்படித்தாங்க லஞ்சத்திற்கு ஒரு விதத்தில் எல்லோருமே உடந்தையாகி இருக்கிறோம். கொடுக்கிறவர் இருக்கும் வரை வாங்குபர் இருக்கத்தான் செய்வார்கள்.

    ReplyDelete
  11. புதிதாகப் பெயர் சேர்க்க பழைய இடத்தில் பெயர் நீக்கம் செய்வது பல வருடங்களாக இருந்து வரும் நடைமுறைதான். சரியான நடைமுறையும் கூட. எப்படியோ பெயர் சேர்த்தாயிற்று. கவலையை விடுங்கள்! :)))

    ReplyDelete
  12. // கொடுக்கிறவர் இருக்கும் வரை வாங்குபர் இருக்கத்தான் செய்வார்கள்.//

    இந்த வேலையை நீங்களே யாருடைய தயவையும் எதிர்பாராமல் கையூட்டு கொடுக்காமல் செய்யவேண்டுமென்றால் குறைந்தது ஐந்து தடவை அந்த ஆபீசுக்கு சென்றிருக்கவேண்டும். எவ்வளவு அலைச்சல்? எவ்வளவு லீவு?
    நாம் எல்லோரும் மகாத்மா காந்தி இல்லை.

    ReplyDelete
  13. யப்பா.......இவ்ளோ பெரிய கதையா ஒரு சின்ன விஷயத்துக்கு.நம் நாடுகள் திருந்த இன்னொரு யுகம் வேண்டும்.சொன்ன விதம் சுவாரஸ்யம்.அலுப்பேயில்லை !

    ReplyDelete
  14. நண்பரே!!


    நீங்கள் குடும்ப அட்டைக்கு பட்டபாடு... நான் என் திருமண சான்றிதழ் பெற்றதை காட்டிலும் மிக பெரிய கொடுமை இல்லை.


    நான் , மணந்தது வேறொரு மதத்தினை சார்ந்த பெண் .

    விபரம் கேட்ட வெளியிலுள்ள முகவர் ...

    "சார் , உங்கள் திருமணத்தை ஸ்பெஷல் மேரஜ்னு ரேசிஸ்டர் பண்ணிட்டா.. ரூ 10000 கிடைக்கும். கொஞ்சம் செலவாகும்.. எப்படியும் ஒங்களுக்கு லாபம் தான். நானே முடிச்சு குடுத்துறேன் " என்றார்.


    நானோ ,'ஐயா , நான் நேர்மையா வாங்கிறேன்".

    நான் US போக இன்னும் 30 நாள் இருக்கு. அதிகமாக 10 அல்லது 15 நாட்களில் வாங்கிடலாம் என்றெண்ணினேன் .

    அன்றே எல்லா சான்றுகளுடன் என்னுடைய விண்ணப்பத்தை சமர்பித்து வீடு திரும்பினேன்.

    10 தினங்கள் என் மற்ற பணிகளில் கழிந்தது. மீண்டும் பதிவு அலுவுலகம் சென்று விசாரித்தபோது என்னுடைய கோப்புகள் இன்னும் முதல் கட்டத்தையே தாண்ட வில்லை.

    "ஏன் நீங்க எனக்கு தகவல் சொல்லவில்லை இத்தனை நாள். என்ன காரணம் ?"

    "உங்கள் மனைவி மதம் பற்றிய சான்று போதவில்லை, மணவிழா தலைவர் ஒப்பம் இல்லை. " என்றனர்.

    அப்போது, முகவர் சற்றே என்னை கடந்தவர், சொன்னார்,"இவனுகளுக்கெல்லாம் பட்டத்தான் நம் அருமை புரியும்."

    இன்னொருவர் (அலுவுலக பணியாளர் ), "சார் , உங்களுக்கு அவரசம்னா , நான் முடிச்சு தரேன் , ஆனா கொஞ்சம் அதிகம்..."

    நான் மீண்டும் மறுத்தேன் . மீண்டும் தவித்தேன்.

    கடைசியாய் என்னுடைய மாமானார் தலையிட்டு எப்படியோ சான்றிதழ் பெற்று தந்தார்.

    இதனால் நான் என் மனைவியை தனித்து பயணிக்க செய்யும்படி ஆயிற்று..


    "அம்மணமா அலையுற ஊருல கோவணம் கட்டினால் கோமாளி தான்."

    ReplyDelete
  15. எனக்கு ஒரு ஆலோசனை சொலுங்க.. என் மனைவின் நீக்கல் சான்றிதல் காணமல் போய் விட்டது, நான் மீண்டும் எப்படி பெறுவது? நான் விசாரித்த வரை முடியாது என்று சொல்கிறார்கள்.. தயவு செய்து யோசனை சொலுங்க.. இப என் பொண்ணுக்கு வயசு 5 ஆச்சி.

    ReplyDelete
  16. பெயர் நீக்க வழி முறை சொல்லவில்லையே?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2