கோணலானும் கழுதையும்! பாப்பா மலர்!

கோணலானும் கழுதையும்!  பாப்பா மலர்!


கோணங்கிபுரம் என்ற நாட்டைகோணலான்என்ற மன்னன் ஆண்டுவந்தான்.அவனுக்கு அசட்டு நம்பிக்கைகள் அதிகம்! காலையில் கோவேறு கழுதையைப்பார்த்தால் நல்லது என்பதற்காக படுக்கையறையில் ஒரு கோவேறுகழுதையை கட்டி வைத்திருந்தான் என்றால் பாருங்கள். இவனது அசட்டு நம்பிக்கைகளுக்கு அளவே இல்லாமல் போனது. நிறைய போலிச்சாமியார்கள் அறிமுகம் ஆகி நாட்டை கெடுத்து வந்தனர். அவர்களின் பேச்சை தட்ட மாட்டான் கோணலான்.

   அந்த நாட்டின் மந்திரி மன்னனின் கோணல் புத்திக்கேற்ப ஜால்ரா தட்டி பிழைத்துவந்தான். இல்லாவிட்டால் அவனுக்கு பிழைப்பு இல்லாமல் போய்விடுமே! சாமியார்கள் கூறினார்கள் என்று பெரிய யாகம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்த மன்னன் யாகத்திற்கான பொருட்களை மக்களிடம் பிடுங்கி இருந்தான். இந்த சமயத்தில்தான் அவனுக்கு பல்வலி வந்தது.

    வாயெல்லாம் வீங்கி பேசமுடியாமல் இருந்த மன்னனை கண்ட மந்திரி, ”மன்னா! என்ன ஆயிற்று ஏன் இப்படி முகத்தை உம்மென்று வைத்திருக்கிறீர்கள்?” என்றான். பல்வலியின் உச்சத்தில் கோபத்தில் மன்னன் கத்தினான்.    “அடேய் முட்டாள் கழுதையே! நானே பல்வலியில் துடிக்கிறேன்! நீ என்னை உம்மனாம் மூஞ்சி என்கிறாயா? அருகில் நில்லாதே ஓடிப்போ! ”என்றான்.

    பல பேர் முன்னிலையில் தன்னை கழுதை என்று அசிங்கப்படுத்திவிட்டானே இந்த அசட்டு  மன்னன்.இவனுக்கு தக்க தண்டனை  கற்பிக்க வேண்டும் என்று மனதில் கறுவிக் கொண்டான் மந்திரி. உடனே பவ்யமாக “ மன்னா! மன்னிக்க வேண்டும் தங்களுக்கு பல்வலி என்று தெரியாமல் உளறி விட்டேன் பல்வலிக்கு அருமருந்து என்னிடம் உள்ளது. தாங்கள் விரும்பினால்..” என்று இழுத்தான் மந்திரி!

   ”அடேய்! அடேய் முட்டாளே! முதலில் உன் வைத்தியத்தை சொல்
அப்புறம் மன்னிப்பு எல்லாம்!” என்று எரிந்துவிழுந்தான் கோணலான், “ சரி சரி உனக்கு இந்த வைத்தியம் எப்படி தெரியும் அதை முதலில் சொல்!” என்றான்.

  “ மன்னா இந்த சிறுவனுக்கு ஏது அவ்வளவு அறிவு! எல்லாம் தங்கள் குருநாதர் சித்தானந்தா சுவாமிகள் கூறியதுதான் என்றான் மந்திரி. “ குருநாதர் கூறியதா! அப்படி என்ன மருந்து அது? குருநாதரே  நீங்கள் இதுவரை கூறவில்லையே ?”அருகில் இருந்த சாமியாரை கேட்டான் மன்னன்.


  “.. அது…!” இழுத்தான் சாமியார். “ மன்னரே அவருக்கு இருக்கும் வேலையில் இதை என்னிடம் கூறியதை மறந்திருப்பார் என்ன குருநாதரே நான் சொல்வது சரிதானே! அன்று என் பல்வலிக்கு அருமருந்தை சொல்லி குணப்படுத்தினீர்களே! அதை மன்னருக்கு சொல்லலாமா?”என்றான் மந்திரி.
 “எப்போது சொன்னேன் நினைவில்லையே இருந்துவிட்டு போகட்டும் எப்படியோ மன்னரிடம் நல்ல பேர் வாங்கினால்  போதும் அதற்கு இந்த மந்திரி நல்ல வாய்ப்பை தந்திருக்கிறான் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்ட சாமியார், மந்திரியாரே! நீங்களே அந்த வைத்தியத்தை சொல்லிவிடுங்கள்! வயதாகி விட்டதால் நினைவு மழுங்கி விடுகிறது நினைவுக்கு வரவில்லை! என்றான் சாமியார்.

  என்ன இருந்தாலும் மேன்மக்கள் மேன்மக்களே! தான் கூறிய வைத்தியத்தை கூட மறந்து விடுகின்றனர் பார்த்தீர்களா மன்னரே! நம் குருநாதர் என் பல் வலிக்கு கழுதை வைத்தியம் சொன்னார் அதை இப்போது மறந்து விட்டார்! என்றார் மந்திரி. கழுதை வைத்தியமா? சீக்கிரம் சொல்லுங்கள்! என் பல்வலி உங்களுக்கு விளையாட்டாகிவிட்டது இன்னும் நீட்டி முழக்கி கொண்டு இருக்கிறீர்களே!   மாமன்னா! நான் கூறுகிறேன்!  

 ”மாமன்னா!  பல்வலிக்கு கழுதையின் பால் சிறந்த மருந்து!”
அப்படியானால் உடனே கழுதைப் பாலை கொண்டுவாருங்கள்!”
அங்கேதான் சிக்கலே இருக்கிறது மன்னா?”
“என்னய்யா சிக்கல் விக்கல் என்று…!”

 “கழுதைப்பாலை வலி உள்ளவரே கழுதையின் பின்னங்கால் வழியாகநேரடியாக அதன் மடியில் இருந்து கறந்து அருந்தவேண்டும் என்று குருநாதர் கூறியிருக்கிறார்!”
 “அப்படியா சொன்னீர்கள் குருநாதரே!”
குருநாதரால் மறுக்க முடியவில்லை வேறு வழியின்றி தலை ஆட்டினார்.  

     ” வீர தீர பராக்கிரமசாலியான நீங்கள் ஒரு கழுதையின் பின்னால் சென்று மடியில் பால் கறப்பது நன்றாக இருக்காது என்றுதான்….” இழுத்தான் மந்திரி.
  ”அப்படியானால் என் பல்வலி குணமாவது உனக்கு பிடிக்கவில்லை!...”
  ”நான் அப்படி கூறுவேனா மன்னா!”
 “பின் என்ன என் குருநாதர் சொல்லி எதை மீறி இருக்கிறேன்! உடனே ஒரு பால் கறக்கும் கழுதையை கொண்டுவர ஏற்பாடு செய்யுங்கள்.”

    உடனே ஓர் முரட்டு கழுதைக்கு ஏற்பாடு செய்தான் மந்திரி.

   கழுதை வந்ததும் சாமியாரைப் பார்த்து,” குருநாதரே! தயை செய்து எனக்கு சொல்லிக் கொடுத்தது போல மாமன்னருக்கும் கழுதைப் பால் கறப்பதை சொல்லி தாருங்கள்! பின்னர் மாமன்னர் பால் கறப்பார் ”என்றான்.

 சாமியார் அதிர்ந்து போனார். ”என்னது நான் உனக்கு சொல்லிக் கொடுத்தேனா?”

   ”வரவர உங்களுக்கு ஞாபகமறதி அதிகமாகிவிட்டது குருநாதரே! உங்கள் மந்திரத்தை கழுதையின் மடிக்காம்பில் ஓதினால்தானே அந்த மந்திரம் பாலில் சென்று அரசரின் பல்வலியைப் போக்கும்.?” கழுதையின் பால் கறந்து மன்னரின் துயர் தீருங்கள் நமட்டு சிரிப்புடன் சொன்னான் மந்திரி.

  சாமியார் வேறு வழியின்றி கழுதையின் பின்னங்கால் பக்கமாக சென்று மடியில் கை வைக்க முரட்டு கழுதை எட்டி ஓர் உதை விட்டது. பல் சிதறி விழுந்தது. ”ஆ! என் பல்! பல் போயிற்று!” என்று சாமியார் இரத்த வெள்ளத்தில் கதற

   ”மன்னா! உங்கள் பல்வலியும் போய்விடும்  குருநாதர் உங்களுக்காக பல்லையே இழந்துவிட்டார் நீங்களும் முயற்சியுங்கள்!” என்றான் மந்திரி.

   ”ஆஹா! ”என்று மன்னன் கழுதையின் பின்னங்கால் பக்கம் குனிய கோபம் கொண்ட கழுதை பலங்கொண்ட மட்டும் எட்டி ஓர் உதை விட்டது. அந்த உதையில் கோணலான் என்ற பெயருக்கேற்ப கோணாலாகி போனது மன்னரின் முகம்.  “ஆ! ஐயோ! என்று என் பல் பல்! பல் எல்லாம் உடைந்து போயிற்றே!”

  ”பல் இருந்தால்தானே மன்னா! பல்வலி வரும்! அதனால்தான் பல்லைப் பிடுங்க இப்படியொரு அருமையான வழியை சொன்னார் குருநாதர்.” என்றான்  மந்திரி இருவரையும் பழிவாங்கிய திருப்தியில் உள்ளூர நகைத்துக் கொண்டு…

 (திருத்திய மீள்பதிவு)
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



Comments

  1. நல்ல கதை...வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. அருமையான கதை
    சிறுவர் பதிவு எழுதுவது என்பது சிக்கல் தான்
    தங்கள் முயற்சியைப் பாராட்டுகிறேன்.

    ReplyDelete
  3. சிறுவர்கள் ரசித்து கேட்க நல்லதொரு கதை!

    ReplyDelete
  4. பல்லை தட்டி விட்டீர்கள் அரசருக்கும், சாமியாருக்கும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2