விறகு வெட்டியும் ராஜாவும்! பாப்பா மலர்!

விறகு வெட்டியும் ராஜாவும்!  பாப்பா மலர்!



ஒரு ராஜா தன்னோட மந்திரியை கூப்பிட்டு “நீ அரண்மனையை பார்த்துக்க. நான் போய் நாட்டை சுத்தி பார்த்துட்டு வர்றேன்”னுட்டு குதிரை மேல ஏறிப் போனாரு.அவரு போன பாதையில யானை பிடிக்கிறவங்க யானையை பிடிக்க பெரிய குழியை வெட்டி அதுக்கு மேல இலை தழையைப் போட்டு பரப்பியிருந்தாங்க! இது நம்ம ராஜாவுக்குத் தெரியாது. கம்பீரமா குதிரை மேல பவனி வந்த ராசா அந்த குழியைக் கவனிக்காம “தொபுக்” கடிர்னு அந்த குழியில விழுந்தாரு.
     “அய்யோ என்னை யாராவது காப்பாத்துங்களேன்! தூக்கி விடுங்களேன்! ன்னு கத்தினாரு ராஜா. யாரும் கண்டுக்கவே இல்லை! அது அடர்ந்த காடாச்சே!  யாரும் உதவிக்கு வரலை. அப்போ அந்த பக்கமா ஒரு விறகு வெட்டி  மரம் வெட்டிப் போக வந்துகிட்டு இருந்தாரு. அவர் காதுல ராஜா போட்ட கூப்பாடு  விழுந்துச்சு.  யாரோ என்னமோ கிட்ட போனா மகாராஜா குழிக்குள்ள கிடக்காரு!
      அய்யா! விறகு வெட்டியே! என்னை குழிக்குள்ள இருந்து தூக்கி காப்பாத்து! என் சொத்துல பாதியை தரேன்! என்று சொன்னாரு ராஜா. ராஜா சொன்ன வாக்கை தவற மாட்டாருன்னு விறகு வெட்டியும் சரி ராஜா காப்பாத்தறேன்னுட்டு களத்துல இறங்கினாரு.
  அவரு கையில் ஒரு கயிறு இருந்துச்சு கயித்தோட முனையை ஒரு மரத்துல இறுக்கமா கட்டி மறுமுனையை பிடிச்சு குழிக்குள்ள இறங்கினாரு. ராஜாவை பத்திரமா தூக்கி வெளியே விட்டாரு. அந்த குழிக்குள்ள ஒரு பாம்பும் விழுந்து தவிச்சிகிட்டு இருந்துச்சு! அது வேற ராஜாவை பயமுறுத்திகிட்டு இருந்துச்சு! ஆனா அது பாவம் வெளியேற முடியாம தவிச்சிகிட்டு இருந்துச்சு. விறகு வெட்டி அந்த பாம்பையும் பயப்படாம பிடிச்சி வெளியே விட்டாரு. அப்புறமா ராஜாவோட  குதிரை அதையும் அந்த பள்ளத்திலே இருந்து சிரமப்பட்டு தூக்கி விட்டாரு. போதாக் குறைக்கு ஒரு குரங்கும் குழிக்குள்ள கிடந்துச்சு! அதையும் வெளியே எடுத்து விட்டு விறகு வெட்டி மேல வந்தாரு. ரொம்ப களைச்சு போய் அவரு மேல ஏறி வந்தா ஒரு நன்றி கூட சொல்லாம மகாராஜா குதிரை மேல ஏறி பறந்து போயிட்டாரு.
   விறகு வெட்டிக்கு ஒரே ஏமாற்றமா போயிருச்சு! நம்ம வேலையை விட்டு மெனக்கெட்டு காப்பாத்தினதுக்கு ஒரு நன்றி கூட சொல்லாம போயிட்டாரே! இவரு எப்படி பாதி சொத்தை தரப் போறாரு! நல்ல ராசாதான்! நம்ம விதி அவ்வளவுதான்னு சலிச்சிகிட்டு விறகு வெட்டி விறகை வெட்ட கிளம்பிட்டாரு.
   விறகு வெட்டி வழக்கத்துக்கு மாறா ரொம்ப தாமதமா வீட்டுக்கு வந்ததும் வீட்டுக்காரம்மா கேட்டாங்க! ஏங்க இன்னிக்கு ரொம்ப லேட்டு? ரொம்ப களைப்பா வேற இருக்கீங்க? என்ன நடந்துச்சு!
விறகு வெட்டியும் ராஜா குழிக்குள்ள மாட்டிகிட்டதையும் காப்பாத்தி விட்டதையும் சொல்லி பாதி சொத்து தரேன்னு சொன்னாரு! ஆனா நன்றி கூட சொல்லாமா கிளம்பிட்டாரு அதுக்கப்புறம் விறகுவெட்டிகிட்டு வர்றதுக்கு தாமதமாயிடுச்சுன்னு சொல்லிட்டு சாப்பிட்டு தூங்கிட்டாரு.
   மறுநாள் வழக்கம் போல விறகு வெட்டி காட்டுக்கு போய் விறகு வெட்ட  கிளம்பினாரு. காட்டுக்குள்ள போனா இவரு மரம் வெட்டற எடத்துல விறகுங்க வெட்டி போட்டு குவியலா இருக்கவே ஆச்சர்யப்பட்டு யாரு வெட்டி போட்டிருப்பாங்கன்னு அண்ணாந்து பார்த்தா இவரு காப்பாத்துன குரங்குதான் கிளைகளை ஒடிச்சு போட்டுகிட்டு இருந்துச்சாம்! அடடா ஒரு குரங்குக்கு இருக்கற நன்றி உணர்ச்சி கூட ராஜாவுக்கு இல்லாம போச்சேன்னு விறகு வெட்டி கண் கலங்கி நின்னாராம்.
  அப்போ இவரு காப்பாத்துன பாம்பு அங்க வந்து நாகரத்தின கல்லை கக்கிச்சாம்! இது உனக்குத்தான் நீ எடுத்து வித்து பிழைச்சிக்கன்னு சொல்லுச்சாம். விறகு வெட்டி ரொம்பவும் மகிழ்ந்து விறகையும் நாகரத்தினக் கல்லையும் எடுத்துகிட்டு வீட்டுக்கு சீக்கிரமாவே வந்தாரு. மனைவிகிட்ட நடந்ததை சொல்லி சந்தோஷப்பட்டாராம். அப்புறம் நாகரத்தின கல்லை சந்தைக்கு கொண்டு போய் நல்ல விலைக்கு வித்துட்டு வீடு வாசல்னு  கட்டி வசதியா ஆயிட்டாரு.
  இது பக்கத்து வீட்டுக்காரனுக்கு பொறுக்கலை! ஒரு சாதாரண விறகு வெட்டி இப்படி வசதியா மாறிட்டானேன்னு வயித்தெரிச்சல் பட்டு ராஜாகிட்ட போய் விறகு வெட்டி பத்தி புகார் சொன்னானாம்.
ராஜாவும் விறகு வெட்டியை அரச சபைக்கு கூப்பிட்டு விசாரிச்சாராம்! “ஏம்பா விறகு வெட்டி! நீ எப்படி ஒரே நாள்ல பணக்காரனா மாறிட்டே! யாருகிட்ட கொள்ளை அடிச்சேன்னு ராஜா கேட்கவும். விறகு வெட்டிக்கு கோபம் வந்துச்சாம்.
   ஆனா பதட்டம் அடையாம தைரியத்தோட தன் நியாயத்தை சொன்னாராம். ராஜா! உங்களை குழியில் இருந்து தூக்கிவிட்டா பாதி சொத்து தரேன்னு சொன்னீங்க! ஆனா தூக்கிவிட்டதும் ஒரு நன்றி கூட சொல்லாம கிளம்பிட்டீங்க! அதே குழியில் இருந்த குரங்கையும் பாம்பையும் தூக்கிவிட்டேன். குரங்கு சுள்ளி ஒடைச்சு போட்டது. பாம்பு எனக்கு நாகரத்தின கல்லை கொடுத்துச்சு. நீங்க என்னன்னா சொன்ன வார்த்தையை மறந்ததும் இல்லாம என்னோட பக்கத்து வீட்டுக்காரன் பொறாமையினாலே சொன்ன கதையை நம்பி என்னை இங்க கொண்டு வந்து விசாரிக்கறீங்க! நீங்க பெரிய ராஜாவா இருக்கலாம்! ஆனா உங்கள விட இந்த விலங்குகளுக்கு பாசமும் அதிகம் நன்றியும் அதிகம்!அப்படின்னு சொன்னாரு விறகு வெட்டி.
  ராஜாவுக்கு பளீர்னு அறைஞ்சாப்போல இருந்தது. தன் தவறை உணர்ந்தார். விறகு வெட்டியே என்னை மன்னித்து விடு! அப்படின்னு சொல்லி பக்கத்து வீட்டு காரனை கண்டித்து விட்டு விறகு வெட்டிக்கு தன் சொத்தில் பாதியை தந்து வழியனுப்பி வைச்சாரு.
   விறகு வெட்டியும் அந்த பொருட்களை பெற்றுக் கொண்டு சந்தோஷமாக வாழ்ந்தான்!
(செவிவழிக்கதை)

(மீள்பதிவு)
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. கதை நல்லதொரு பாடத்தை தந்தது
    பாம்பினாலும், குரங்கினாலும்தான் மேலும் பலன் கிடைத்தது

    ReplyDelete
  2. அருமையான கதை...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அருமையான கதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  4. அருமையான பதிவு

    ReplyDelete
  5. நல்ல கதை. செய்நன்றியை உணர்த்தும் கதை அருமை.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2