நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி 21

நொடிக்கதைகள் பகுதி 21


1.அதிர்ச்சி!
   தேர்தல் ரத்து என்ற அறிவிப்பு வந்ததும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள் இந்த தீபாவளியை இனிப்புடன் கொண்டாட நினைத்த குடிமக்கள்!

2,சேம் திங்கிங்க்! 
    பேரூந்தில் ஏறி அமர்ந்தவன் சக பயணியிடம் புன்னகைத்தான். அவனும் புன்னகைக்க பரவாயில்லை ஆள் முசுடு இல்லை! கேக்கலாம் என்று வாயைத் திறக்கும் முன் அவனே இவன் கேட்க நினைத்ததை கேட்டான். தாம்பரம் வந்தா கொஞ்சம் எழுப்பி விடறீங்களா?

3.பரிசு!
   வார இதழில் நூறு ரூபாய் பரிசு வந்தவன் நண்பர்களிடம் காட்டி பெருமை பட மச்சி ட்ரீட் எங்கே என்று ஹோட்டலுக்கு கூட்டி சென்றார்கள் பில் முன்னூறை தாண்டியது.

4.வாட்சப் உறவு!

    பொண்ணு உங்களுக்கு தூரத்து உறவுன்னு சொல்றீங்களே எப்படி பிடிச்சீங்க! என்று திருமணத்தில் கேட்ட தோழியிடம் வாட்சப் குருப் ஒண்ணுல அவங்க அம்மா பழக்கமானாங்க அப்படியே சாட் பண்ணி கல்யாணத்தை முடிச்சிட்டோம் என்றார் பிள்ளையின் அம்மா.

5.போர்!
   சதா வாட்சப், பேஸ்புக், மெசெஞ்சர்னு ஒரே போரா இருக்குது! இன்னிக்கு ஒரு மாறுதலுக்கு பீச்சுக்கு போகலாமா என்றாள் மனைவி.

6.ரிலீஸ்!

   ஒரு வருடம் சிறையில் இருந்து விடுதலை ஆனவன் வீட்டுக்குச் சென்றவுடன் முதல் காரியமாக புறாக் கூண்டை திறந்து புறாக்களை ரிலீஸ் செய்தான்.

7.சீட்!
   நீண்ட நேரமாய் பஸ்ஸில் நின்று கொண்டே வந்தவனுக்கு இடம் கிடைத்து இருந்தது பொறியியல் கல்லூரியில்.

8.ருசி!
    ஒரு மாதமாய் மெஸ் சாப்பாட்டை சாப்பிட்டு கொண்டிருந்தவன் தானே சமைக்க ஆரம்பித்ததும் ருசியை உணர ஆரம்பித்தான்.

9.ஜாதகப் பொருத்தம்!
    பொண்ணுக்கு செவ்வாய் தோஷம் எதுவும் இல்லையே அப்புறம் ஏன் கல்யாணம் தள்ளிப் போவுது? என்று கேட்டவரிடம் ஐ.டி தோஷம் இருக்கு! தான் வேலை செய்யற மாதிரி ஐ.டி மாப்பிள்ளையே வேணும் அதுவும் தன்னைவிட அதிகம் சம்பாதிக்கணும்னு பொண்ணு எதிர்பார்க்குது என்றார் பெண்ணைப் பெற்றவர்.

10.ரசனை!
   கயிற்றின் மேல் நடந்து சாகசம் செய்து கொண்டிருந்தவனை ரசித்து பார்த்து கைதட்டிக் கொண்டிருந்தான் வாழ்வின் விளிம்பில் இருந்தவன்.

11. மட்டம்:
     பள்ளிக்குச் செல்ல அடம்பிடித்து அழுத குழந்தையை கட்டாயப்படுத்தி வேனில் ஏற்றிய தாய் ஆபீஸிற்கு மட்டம் போட என்ன காரணம் சொல்லலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

12. லேட்!
       தினமும் பத்து நிமிஷம் லேட்டாத்தான் வர்றீங்க! என்று சுவர் கடிகாரத்தைப் பார்த்தார் மானேஜர். தன்னுடைய வாட்ச் நேரத்தை பத்து நிமிடம் கூட்டி திருத்தி வைத்தான் சுரேந்தர்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. ஒவ்வொன்றும் ஒரு கருத்தை சொன்னது நண்பரே மிகவும் இரசித்தேன்

    ReplyDelete
  2. செமை தோழர்
    தொடருங்கள்

    செழுமை மேம்பட்டுக்கொண்டே வருகிறது

    முகநூலில் பகிர்ந்திருக்கிறேன்

    ReplyDelete
  3. வணக்கம் நண்பரே!

    தாமதத்திற்கு வருந்துகிறேன்.

    விகடனில் படித்திருக்கிறேன்.

    ஒருவரே இத்தனை கதைகளை எழுதியதை இங்குத்தான் பார்க்கிறேன்.

    ரசித்தேன்.

    என் பதிவில் குறிப்பிட்டிருக்கும் எற்றே இவர்க்கு முன் என்று என நான் வியக்கும் ஆளுமைகளுள் தாங்களும் ஒருவர்.

    தங்கள் தளம் குறிப்பாகப் பின்னூட்டப்பகுதி திறப்பதற்கு அதிகம் நேரம் பிடிக்கிறது.

    தயவு செய்து கவனிக்கவும்..

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. எளியோனை ஆளுமையாக கூறும் தங்கள் மாண்புக்கு நன்றி! பின்னூட்டப் பெட்டி திறப்பதில் பிரச்சனை இருப்பதாக தெரியவில்லையே! உடனே திறந்துவிடுகின்றதே! கருத்திட்டமைக்கு மிக்க நன்றி நண்பரே!

      Delete
  4. அனைத்தும் அருமை!

    ReplyDelete
  5. மிகவும் அருமை...
    ரசித்தேன் சகோதரரே...

    ReplyDelete
  6. ஒரு டஜன் கதை ,அதிலும் ஒவ்வொன்றும் ஒருவிதம் ...ரசித்தேன் :)

    ReplyDelete
  7. எல்லாமே அருமை சுரேஷ்...ரசித்தோம்

    ReplyDelete
  8. புறா ரிலீஸ் நெகிழ்சி. ஒன்பதாவது கதை நிதர்சனம். அனைத்தையும் ரசித்தேன்.

    ReplyDelete
  9. அனைத்தும் ரசித்தேன். பாராட்டுகள்.

    ReplyDelete
  10. ஐந்தும், ஆறும், ஒன்பதும் அருமை! அதிலும் முகநூல், வாட்சப் போரடிச்சுருக்குனு சொன்னது நிச்சயம் ஒரு நாள் நடக்கும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2