எலி தந்த பரிசு! பாப்பாமலர்!

எலி தந்த பரிசு!  பாப்பாமலர்!


முன்னொரு காலத்தில் அவந்தி நாட்டில் ஒரு வயசான தாத்தாவும் பாட்டியும் வசிச்சு வந்தாங்க. தாத்தா ஓர் விறகு வெட்டி. தினமும் காட்டிற்கு போய் விறகு வெட்டி விற்று அதில் வரும் சொற்ப வருமானத்தில் குடும்பத்தை காப்பாற்றிவந்தார். தாத்தா கொண்டு வரும் சொற்ப வருமானத்தில் சிறப்பா குடும்பம் நடத்துவாங்க பாட்டி.
   அன்று காலையில் பாட்டி பொரி அரிசி மாவு உருண்டை ஒன்றை பிடித்து தர அதை எடுத்துக் கொண்டு காட்டிற்கு விறகு வெட்ட புறப்பட்டார் தாத்தா. தாத்தா பச்சை மரங்களை வெட்ட மாட்டார். உலர்ந்து போன பட்டுப்போன மரங்களைத்தான் வெட்டுவார். அப்படி ஒரு பட்டுப்போன மரத்தினை கண்டுபிடிக்க நேரம் ஆகிவிட்டது. கொண்டு வந்த உணவு மூட்டையை ஓர் மரத்தின் அடியில் வைத்துவிட்டு மரத்தினை வெட்ட ஆரம்பித்தார். தேவையான அளவு வெட்டி முடித்ததும் அதை சுமையாக கட்டி வைத்தார்.
  நண்பகல் உச்சி வெயில் மண்டையை கொளுத்தவும் அருகில் இருந்த ஓடையில் முகம் கழுவி விட்டு சாப்பிடலாம் என்று முகம் கழுவிக்கொண்டு தான் உணவினை வைத்த மரத்தடிக்கு வந்தார்.
   ஐயோ! பாவம்! அவரது உணவு மூட்டையைக் காணவில்லை! அந்த மரத்தின் அடியில் ஓர் எலிப்பொந்து இருந்தது. அதனுள் வசிக்கும் எலிகள் பொரி அரிசி வாசம் மூக்கைத் துளைக்கவும் மூட்டையைத் தூக்கிச்சென்றுவிட்டன. அதில் இருந்த மாவு முழுவதையும் தின்றும் தீர்த்துவிட்டன.
      பொந்து வாசலில் தன்னுடைய துணி தென்படுவதை பார்த்து அதை இழுத்துப் பார்த்தார் தாத்தா. துணி முதலில் வரவில்லை. பின்னர் சிறிது சிறிதாக வெளியே வர துணியை கவ்வியபடி ஓர் சுண்டெலி வெளியே வந்து நின்றது.
  அது, தாத்தா! சுவையான உணவை எங்களுக்குத் தந்தீர்! மிக்க நன்றி என்று சொன்னது. எலி பேசுவதை ஆச்சர்யமுடன் பார்த்த தாத்தா, எலியே! வயிறு நிரம்ப உண்டீர்களா? உங்களுக்கு உணவு போதுமானதாக இருந்ததா? என்று வினவினார் தாத்தா.
      தன்னுடைய உணவை இவர்கள் உண்டுவிட்டார்களே! என்று கொஞ்சம் கூட வருத்தப்படாமல் தாத்தா தன்னை விசாரிப்பதை கேட்டு எலி நெஞ்சுருகிப் போனது. “தாத்தா! உங்கள் உணவை அனுமதியில்லாமல் எடுத்துச்சென்று சாப்பிட்டுவிட்டோம்!” நீங்கள் அதற்காக கோபப்படுவீர்கள் என்று பார்த்தால் எங்களுக்கு உணவு போதுமா? என்று விசாரிக்கிறீர்களே! உங்கள் உயர்ந்த மனசு யாருக்கும் வராது. எங்களுடைய மாளிகைக்கு வந்து சற்று இளைப்பாறிவிட்டு போகலாமே! என்று கூப்பிட்டது சுண்டெலி.
    உங்கள் மாளிகைக்குள் நான் எப்படி நுழைய முடியும்? சிறிய வாயிலில் என்னால் நுழைய முடியாதே! என்றார் தாத்தா.
   “ நான் கூட்டிச் செல்கிறேன்!” என்ற எலி அவர் மீது தாவி அவரது காதில் ஏதோ கூறியது. மறு நிமிடம் எலி அளவு சிறிய உருவமாக தாத்தா மாறிப் போனார். எலியுடன் அந்த பொந்தில் நுழைந்தார் தாத்தா. அந்த மாளிகையில் அவருக்கு தடபுடலான வரவேற்பும் விருந்தும் பறிமாறப்பட்டன. முடிவில் எலிகள் அனைத்தும் சுமக்க மாட்டாமல் ஒரு பெரிய மூட்டையைத் தூக்கி வந்தன. அதை தாத்தாவிடம் கொடுத்து, உமது இரக்க உணர்விற்கு எங்களது அன்புப் பரிசு! என்று சொன்னன.
   தாத்தா பையை பிரித்து பார்த்தார். பை நிறைய் தங்க காசுகள் இருந்தன. இவ்வளவு காசுகள் எனக்கு எதற்கு? ஒன்று போதுமே? என்றார் தாத்தா. அப்படியா  போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. இதோ இந்த பையில் அந்த ஒற்றைநாணயத்தை போட்டு வைத்துக் கொள்ளுங்கள். இதை நீங்கள் செலவழித்ததும் மீண்டும் ஓர் தங்க நாணயம் தோன்றும். நீங்களும் பாட்டியும் சந்தோஷமாக இருங்கள் என்று சொல்லி வழி அனுப்பிய எலி தாத்தாவை பொந்து வாயிலில் கொண்டு வந்து விட்டு பழைய படி பெரிய உருவமாக காதில் மந்திரம் சொல்லி மாற்றி விட்டது.
   தாத்தா அந்த தங்க நாணயப் பையோடு வீட்டிற்கு சென்றார். அன்று நீண்ட நேரம் கழித்து தாத்தா விறகு கட்டுடன் ஒரு புதிய பையையும் எடுத்து வருவதைப் பார்த்த பக்கத்து வீட்டுக் காரன் தாத்தா என்ன சொல்லப் போகிறார் என்று மறைந்திருந்து ஒட்டுக் கேட்டான்.
     பாட்டியிடம் நடந்ததை எல்லாம் சொன்னார் தாத்தா! அதை ஒன்றுவிடாமல் கேட்டான் பக்கத்துவீட்டுக்காரன். அட கிழவனுக்கு வந்த வாழ்வைப் பார்! ஒரு மூட்டை தங்க நாணயத்தை வேண்டாம் என்று சொல்லி விட்டானே! நாம் போய் கொண்டு வந்து விடவேண்டியதுதான் என்று நினைத்துக் கொண்டான்.
   மறுநாள் தாத்தாவிடம், தாத்தா! காய்ந்த விறகே கிடைக்க மாட்டேன் என்கிறது. நீங்கள் எங்கிருந்து விறகு வெட்டி வந்தீர்கள்! அங்கு விறகு கிடைத்தால் போய் வெட்டி எடுத்து வந்து விடுவேன்” என்று விசாரித்தான். தாத்தாவும் தான் விறகு வெட்டிய இடத்தை அடையாளமாக சொல்லவும் அவன் கையில் ஒரு கோடரியும் கொஞ்சம் பொரி அரிசியும் எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.
  எப்படியோ காட்டில் அலைந்து திரிந்து தாத்தா சொன்ன மரத்தை கண்டு பிடித்து விட்டான். விறகு வெட்டாமல் தான் கொண்டு வந்த பொரி அரிசி உருண்டையை பொந்தினுள் வீசினான். பின்னர் மரத்தினடியில் படுத்து உறங்கினான்.
   மாலை ஆகிப் போனது. விழித்து எழுந்தவன் எலி ஏதும் வராது போகவே கோபம் அடைந்தான். ஏய் எலிகளே! மரியாதையாக வெளியே வாருங்கள்! என் பொரிமாவுக்கு தங்கம் தாருங்கள் என்று கத்தினான்.
   அப்போது சுண்டெலி ஒன்று கோபமாக வெளியே வந்தது. நீதான் பொரிமாவை உள்ளே கொட்டியவனா? அது ஒன்றும் தாத்தா கொண்டுவந்தது போல சுவையாக இல்லை! போனால் போகட்டும் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டது.
   எனக்கு நிறைய தங்கம் வேண்டும்!
 அவ்வளவுதானே! சரி வா! எலி அவன் காதில் மந்திரம் சொல்ல சிறு உருவம் அடைந்தான் . பொந்தினுள் நுழைந்தான். அங்கே பொந்து முழுக்க தங்க நாணயங்கள் சிதறிக் கிடந்தன. எல்லாவற்றையும் பொறுக்கி பைகளில் போட்டுக் கொண்டான்.

  போதுமா? உணவு சாப்பிடுகிறாயா? கேட்டது சுண்டெலி.
  இந்த பொந்து முழுவதும் உள்ள நாணயங்கள் அனைத்தும் வேண்டும் என்று மனதிற்குள் நினைத்த அவன்  எலிகளே! இந்த மாளிகை முழுதும் உள்ள பொன் நாணயங்கள் எனக்கே! இதோ இந்த மருந்தை அடிக்கப் போகிறேன்! நீங்கள் அழிந்து போவீர்கள்! அப்புறம் எல்லாம் எனக்கே! எனக்கே! என்று கையோடு கொண்டு சென்றிருந்த ஒரு மருந்தை தூவினான். அதன் நெடி அங்கே  பரவ எலிகள்  மாயமாக மறையத் துவங்கின. எலிகள் மறையவும் அங்கே இருந்த தங்க நாணயங்களும் காணமல் போயின. பொந்தின் வாயில் அடைத்துக் கொண்டது.
    விஷ மருந்தின் நெடி அவனையும் மயக்கத்தில் ஆழ்த்தியது. அவன் விழித்த போது பொந்தில் யாரும் இல்லை! நாணயங்கள் காணாமல் போயிருந்தன. இருள் சூழ்ந்திருக்க வெளியே வர வழி தெரியாது தவித்து போனான் ஆத்திரக் கார பக்கத்து வீட்டுக்காரன்.
   எலிகளே! என்னை மன்னித்துவிடுங்கள்! என்னை பழைய படி வெளியே கொண்டு சென்று விடுங்கள்! எனக்கு நாணயங்கள் வேண்டாம்! என்னை வெளியே அனுப்புங்கள் என்று கத்தினான். ஆனால் அவன் குரலைக் கேட்க அங்கே யாரும் இல்லை.
  அந்த பொறாமை பிடித்த பேராசை பிடித்த எலியாக மாறிப் போன மனிதன் தான் உருவத்தில் பெரிய பெருச்சாளியாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறான். எவ்வளவு உணவு கிடைத்தும் திருப்தி இல்லாமல் வளைகளை தோண்டிக்கொண்டிருக்கும் பெருச்சாளிகளை பார்த்து இருக்கிறீர்களா குழந்தைகளே! அதுதான் இந்த மனிதன்.
நன்றி: தமிழ் அறிவு கதைகள்.

டிஸ்கி} தமிழ் அறிவு கதைகள் தளத்தில் படித்த எலியும் தாத்தாவும் என்ற ஜப்பானிய கதை அவர்கள் அனுமதியுடன் என் பாணியில் மாற்றி இங்கே கொடுத்துள்ளேன் தள முகவரி: http://tamilarivukadhaikal.blogspot.in/2016/07/blog-post.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed:+blogspot/tbCPT+(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D)
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி

Comments

 1. கதையை இரசித்தேன் நண்பரே

  ReplyDelete
 2. அசத்துகின்றீர்கள், அருமை. தங்களின் பாணி எங்கள் அவரையும் கவர்ந்த ஒன்று.

  ReplyDelete
 3. அருமையான கதை

  ReplyDelete
 4. ஸ்வாரஸ்யமான கதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  ReplyDelete
 5. நல்ல கதை. பெருச்சாளியின் பின்புலம் சுவாரஸ்யம்தான்...அருமையாகச் சொல்லுகின்றீர்கள் சுரேஷ்!

  ReplyDelete
 6. அருமையான கதை. பெருச்சாளியின் முன் ஜென்மம் பற்றிய தகவலுக்கு நன்றி. :)

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!