ரத்தான தூக்கும்! உதயமான தெலுங்கானாவும்! கதம்ப சோறு- பகுதி23

கதம்ப சோறு பகுதி 23

ரத்தானது தூக்கு!


   ராஜிவ் கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், பேரறிவாளன், முருகனுக்கு தூக்குத்தண்டணையை ரத்து செய்து தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம். வீரப்பன் கூட்டாளிகளுக்கு தூக்குத்தண்டனை ரத்தானபோதே இந்த வழக்கிலும் நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தபடியேதான் தீர்ப்பும் வந்துள்ளது. ஆதரித்தும் எதிர்த்தும் பல்வேறு கருத்துக்கள் எழுந்து கொண்டுதான் இருக்கும். ஆனால் இது ஒரு புரட்சிகரமான தீர்ப்பு என்றுதான் சொல்லவேண்டும். வீரப்பன் கூட்டாளிகள் போல இல்லை இவர்கள் நாட்டின் பிரதமரையே கொல்ல சதி செய்தவர்கள் என்று வாதாடிய மத்திய அரசின் வாதம் எடுபடாமல் போனது. தாமதமாக கிடைக்கும் நீதி தண்டனைக்கு சமம் என்பார்கள். இவர்களின் கருணை மனு மீதான தாமதமே இவர்களுக்கு உயிரை காப்பாற்ற உதவியாக அமைந்துள்ளது வேடிக்கை! இவர்கள் தவறே செய்யாதவர்கள் அல்ல! குற்றவாளிகள்தான் ஆனால் தூக்கு தண்டனை அளிக்குமளவிற்கு குற்றம் இல்லை என்றுதான் விடுவித்து இருக்கிறது நீதிமன்றம். இத்தனை நாள் சும்மா இருந்தவர்கள் எல்லாம் இன்று என்னால் தான் இந்த வெற்றி என்று ஆளாளுக்கு கூச்சல் இடுகிறார்கள். இட்டுவிட்டு போகட்டும். மரண தண்டனையில் தப்பித்த அவர்கள் விரைவில் விடுதலையும் அடையட்டும்!

வரி இல்லாத பட்ஜெட்கள்!

  தேர்தல் வருவதால் மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டும் மாநில அரசு ஆண்டு பட்ஜெட்டும் தாக்கல் செய்தன. இரண்டுமே வரிகளை குறைத்து இலவசங்களை வாரி இறைத்த ஒன்றுதான். வழக்கம் போல எதிர்கட்சிகள் குறை கூறியும் ஆளும்கட்சியினரும் கூட்டணியினரும் பாராட்டியும் பேசிக்கொண்டார்கள். ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் சமயம் நிகழும் கூத்துக்கள்தான் இவை. இந்த அறிக்கையினால் இதுவரை எந்த மாற்றமும் இந்தியாவிலேயோ தமிழகத்திலேயோ நடந்ததாக எனக்கொன்றும் நினைவில்லை! இலவசங்களுக்கு மட்டும் 48 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாம் தமிழக அரசு. இலவசங்களை யார்தான் கண்டுபிடித்தார்களோ அவர்களை தூக்கில் போட வேண்டும். இந்த தொகையை எத்தனையோ பயனுள்ள செலவினங்களுக்கு பயன்படுத்தி நல்லாட்சி தருவதில் கவனம் செலுத்தலாம். ஆனால் இலவசம் தந்து மக்களை முட்டாளாக்குவதில்தான் எல்லா அரசுகளும் உள்ளன.

முடிவுக்கு வந்த கெஜ்ரிவாலின் ஆட்சி!

     பெரும்பான்மை இல்லாத போது ஆட்சிக்கு வர ஆம்-ஆத்மி யோசனை செய்திருக்க வேண்டும். எந்த கட்சி ஊழல்கட்சி என்று சொன்னதோ அதனுடனேயே சேர்ந்து ஆட்சி அமைத்தது. அன்றிலிருந்து மீடியாக்களுக்கு தினமும் தீனி கிடைத்தது. இயற்கை எரிவாயு விசயத்தில் ஊழல் என்று பெட்ரோலிய அமைச்சர் ரிலையன்ஸ் கம்பெனிகள் மீது வழக்குத் தொடுத்தது. அப்போதே அதன் ஆட்சி ஆட்டம் கண்டுவிட்டது. இறுதியில் ஜன் லோக்பாலை நிறைவேற்ற முடியவில்லை! என்று கூறி ராஜினாமா செய்துவிட்டார் கெஜ்ரிவால். உடனடியாக லோக்சபா தேர்தலுக்கு 20 வேட்பாளர்களையும் அறிவித்து விட்டார். முதல்வன் பாணி அரசியல் நடத்தும் இவருக்கு இன்னும் அரசியல் பால பாடம் புரியவில்லை என்றே தோன்றுகிறது. மீண்டு வருவோம் என்கிறார். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை, திட்டங்கள் எதையும் நிறைவேற்றவில்லை, இவரிடம் மீண்டும் ஆட்சி கிடைக்குமா என்பது சந்தேகமே!


பாலுமகேந்திராவின் மறைவு:

    தமிழ் திரை உலகின் பிரபல இயக்குனர் பாலு மகேந்திராவின் மரணம் திரை உலகை மட்டுமல்ல மற்றவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. சிறப்பான பல படங்களை இயக்கி தமிழ் திரையுலகை மற்றவர்கள் திரும்பிப்பார்க்க வைத்தவர் பாலுமகேந்திரா. சிறந்த ஒளிப்பதிவாளரும் கூட. கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதித்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர்  மாரடைப்பினால் இறந்து போனார். இறப்பிலும் சர்ச்சை கிளம்பியது. அவரது இரண்டாவது மனைவி மவுனிகாவை  இறுதி அஞ்சலி செலுத்த விடாமல் பாலு மகேந்திராவின் சீடர் இயக்குனர் பாலாவும் இன்னும் சிலரும் தடுக்க சர்ச்சை எழுந்தது. பின்னர் பாரதிராஜா போன்றோர் சமரசம் செய்து மவுனிகா அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றார். உணர்வுப்பூர்வமான இந்த நிகழ்ச்சியில் பாலா செய்தது ஓர் மனிதாபிமானமற்ற செயல். குருவுக்கு இழைத்த அநீதி என்று கூட சொல்லலாம். இயக்குனரின் தனிப்பட்ட வாழ்க்கை நமக்கு தேவையில்லை! அவரது படைப்புக்களே தேவை. அந்த வகையில் மகேந்திரா மறைந்தாலும் அவரது படங்கள் காலத்தால் அழியாதவையாக நிற்கும்.

யுவராஜ் 14 கோடி!

   ஐ.பி.எல் சூதாட்ட சர்ச்சைகளால் பாதிக்கப்பட்டதாக தெரியவில்லை! இந்த வருடமும் ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்றது. சென்னை அணி தன்னுடைய சில வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொண்டது. அஸ்வினை தக்கவைத்த அது பத்ரிநாத்தை கைவிட்டது. இந்த ஐபிஎல்லில் அதிக தொகைக்கு ஏலம் போனார் யுவராஜ் சிங். சமீபகாலமாக இந்திய அணியிலும் வாய்ப்பு கிடைக்காத இவருக்கு ஐ.பி.எல் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துவிட்டது. பெங்களூரு அணி இவரை 14 கோடிக்கு ஏலம் எடுத்து அதிசயிக்க வைத்தது. தன்னுடைய கிங்க்பிஷர் ஏர்லைன் ஊழியர்களுக்கு பலமாத சம்பளம் கொடுக்காமல் உள்ள மல்லையா இவரை இந்த அளவுக்கு ஏலம் எடுத்தது சர்ச்சைக்குள்ளானது. தமிழகத்தின் தினேஷ் கார்த்திக்கை 12.5 கோடிக்கு  டில்லி அணி ஏலம் எடுத்தது. இந்த தொடரால் நிறைய புதுமுகங்கள் அடையாளம் காணப்பட்டாலும் டெஸ்ட் போட்டிகளை அழித்து வருவது கண்கூடாக தெரிகிறது. கழுதை தேய்ந்து கட்டெறும்பான டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தடுமாறுவதை வைத்தே இதை அறிந்து கொள்ளலாம். தற்காத்து ஆடத்தெரியாத பல பேட்ஸ்மேன்கள் இந்த தொடரில் கலக்குவார்கள். நாமும் கைதட்டி ரசிப்போம்.

மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்!

  சென்னை மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் இரண்டு நாட்கள் நடைபெற்றது. கோயம்பேட்டில் இருந்து அசோக் நகர் வரையிலான 6.கி.மீ தூரத்தை 40 கி.மீ வேகத்தில் சென்ற ரயில் ஒன்பது நிமிடங்களில் கடந்தது. சென்னை மக்கள் விசிலடித்தும் கைதட்டியும் மெட்ரோ ரயில் ஓட்டத்தை கண்டுகளித்தனர். 14,600 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தில் தமிழகத்தின் பங்கு மூலதனம் 15 சதவீதம். சார்நிலைக்கடன் 5.78 சதவீதம் மீதமுள்ளவை ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவுமுகமை மூலம் கடனாக பெறப்படுகிறது. மொத்தம் 42 ரயில்கள் இயக்கப்பட உள்ளன. ஒவ்வொரு ரயிலிலும் நான்கு பெட்டிகள் இருக்கும். பிரேசில் நாட்டில் இந்த ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. ஐந்து ரயில்கள் சென்னை வந்துள்ளன. துருப்பிடிக்காத உருக்கினால் தயாரிக்கப்பட்டு ஏசி வசதி செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக 80கி.மீ வேகத்தில் செல்லக்கூடியவை. மொத்தம் 178 இருக்கைகள் உள்ளன. இவ்வாண்டு இறுதியில் சென்னை மெட்ரோ ரயில்கள் ஓடத்துவங்கும்.

உதயமானது தெலுங்கானா!

  தனித்தெலுங்கானா மாநிலம் அமைக்க வகை செய்யும் ஆந்திர மறு சீரமைப்பு மசோதா மக்களவையில் கடும் விவாதம் அமளிகளுக்கு நடுவே நிறைவேறியது. ஆந்திர மக்களின் நீண்டகால கோரிக்கை தெலுங்கானா. பல்வேறு போராட்டங்கள் உயிரிழப்புக்களுக்கு பிறகு இது குறித்து காங்கிரஸ் அரசு முடிவெடுத்து தெலுங்கானாவிற்கு ஒப்புதல் அளித்தது. அதன்பின்னரும் பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. காங்கிரஸ் கட்சிக்காரர்களே இப்போது தெலுங்கானா அமைவதை எதிர்த்து செயல்பட ஐந்து பேரை கட்சியைவிட்டு நீக்கியது காங்கிரஸ் கட்சி. இது தொடர்பான மசோதா ஆந்திர சட்டமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது. ஆனாலும் மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளிக்க மக்களவையில் மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. காங்கிரஸ்  எம்.பி ராஜகோபால் மிளகுப்பொடி தூவி ரகளை செய்தார். இவ்வளவு ரகளை விவாதங்களுக்கு பிறகு குரல் ஓட்டெடுப்பின் மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டு விட்டது.  தெலுங்கானா- சீமாந்திரா பகுதிகளுக்கு அடுத்த பத்து ஆண்டுகள் ஹைதராபாத் பொது தலைநகராக இருக்கும். பின்னர் சீமாந்திராவிற்கு புதிய தலைநகர் தேர்ந்தெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒ.எஸ்.ஆர் கட்சியினர் இன்று ஆந்திராவில் பந்த் அறிவித்துள்ளனர். பிரித்தாலும் சண்டை! ஒன்றாக இருந்தாலும் சண்டை! என்னமோ போங்க!

எரிபொருள் பிரச்சனைக்கு எளிய தீர்வுகண்ட இளைஞர்கள்

   நாகப்பட்டினம் தரங்கம்பாடியில் இருக்கும் ஹை டெக் ரிசர்ச் பவுண்டேஷனுடன் சென்னை சத்யபாமா பல்கலைக்கழக பொறியியல் மாணவர்கள் கார்த்திகேசன், சிவச்சந்திரன் இணைந்து எரிபொருள் பிரச்சனைக்கு தீர்வு கண்டுள்ளனர்.
   தண்ணீரை மின்னாற்பகுப்புக்கு உட்படுத்தி அதிலிருந்து ஹைட்ரஜன் வாயுவை பிரித்தெடுத்து அதனை எரிபொருளோடு சேர்த்து பயன்படுத்தி வாகன மோட்டாரை இயக்கமுடியும் என்று நிரூபித்துள்ளார்கள். இதற்கான ஆராய்ச்சி உலகளவில் நடந்து வருகிறது. அமெரிக்க அரசு இவர்களின் ஆராய்ச்சியை ஏற்றுக்கொண்டு ஒப்புதல் கடிதம் அனுப்பி உள்ளது. தற்போதைய  நிலையில் எரிபொருள் செலவை பாதியாக குறைக்கும் ஒரு கருவி என்றுதான் இதைச்சொல்லவேண்டும். இரு தனித்தனி பாகங்களாக கொண்ட இந்த கருவி 300 கிராம் எடைகொண்டது.இதனை ஒரு இருசக்கர வாகனத்தில் பொருத்திவிட்டால் இந்த கருவியும் இயங்கத்தொடங்கி ஹைட்ரஜன் வாயு பிரிக்கப்பட்டு  எரிபொருள் செல்லும் பாதையில் செலுத்தப்படும். அதனால் எரிபொருளின் தேவை பாதியாக குறையும். லிட்டருக்கு60 கி.மீ செல்லும்வண்டி 90 கிமீ வரை செல்லும். வண்டியை முடுக்க தேவைப்படும் மின்சாரத்திலேயே இந்தக்கருவி இயங்கத்தொடங்கிவிடும். கார்பனின் அளவும் இந்த கருவியினால் கட்டுப்படுத்தபடுகிறது. என்கிறார்கள் இந்த இளம் பொறியாளர்கள்.
டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்!


தக்காளி பழச்சாறு எடுத்து முகத்தில் தடவி காய்ந்தபின் அலம்பினால் சறுமம் இறுக்கமடையும். எண்ணெய் வழியாது.

ஃப்ரீசரில் பாலீதின் கவர்களை விரித்து அதன் மேல் பொருட்களை வைத்தால் எடுக்கும் போது ஐசில் ஒட்டிக்கொள்ளாமல் எடுக்கலாம்.

சாம்பார் வைக்க துவரம்பருப்பு வேக வைக்கும் போது ஒரு டீஸ்பூன் வெந்தயத்தினையும் சேர்த்து வேக வைத்து சமைத்துப்பாருங்கள்.சுவையும் மணமும் சூப்பராக இருக்கும்.

தேங்காயை உடைக்கும் போது சரியாக உடையாமல் திட்டு வாங்குகிறீர்களா? தேங்காயின் மூன்று கண்களில் ஒரு கண்ணை விரலால் மூடிக்கொண்டு உடைத்துப் பாருங்கள். தேங்காய் இரண்டாய் உடையும்.

நெல்லிக்காய் மற்றும் சீயக்காயை காய வைத்து பொடி செய்து தலைக்குத் தேய்த்து குளித்துவந்தால் நாளாவட்டத்தில் நரை பரவுவது நீங்கும்.

விட்டான் எலுமிச்சம்பழம்! பட்டான் ராவணன்!


 ஒரு ராஜாகிட்டே ஒரு புலவர் போனார். உனக்கு என்னத்தெரியும்னு ராஜா கேட்கிறார். எல்லாம் தெரியும்னார். பெரிய பிரசங்க வித்வான்.
   “பாரதம்… ராமாயணம்”
    இரண்டுமே தெரியும்.
 “ராமாயணம்னா எத்தனை நாள்ல சொல்லுவே? பாரதம்னா எத்தனை நாள்ல சொல்லுவே?”
“ஒவ்வொரு கதையும் ஏழுமாசம் சொல்லுவேன்”
 “அவ்வளவு காலம் வேண்டாம். சுருக்கமா எவ்வளவு நாள்ல சொல்லுவே?”
 “ஏழுநாள்ல சொல்லுவேன்”
  “அதைவிட சுருக்கமா?”
 “ஏழரை நாழிகையில சொல்றேன்”
 “இன்னும் சுருக்கமா?”
இதைவிட சுருக்கமா எப்படி சொல்றதுன்னு புலவர் யோசிக்கிறார்.

அப்போது ராஜா ஓர் எலுமிச்சம்பழத்தை கொண்டுவந்து “இந்த பழத்தை மேலே போடுவேன். அது கீழே விழறதுக்குள்ளே ராமயணத்தை சொல்லி முடிக்கணும்”னு சொல்றார்.
“ இவ்வளவு தானுங்களா. எறிஞ்ச பழம் கீழே இறங்குறதுக்குள்ளே ராமயணம், பாரதம் ரெண்டையும் சொல்லுவேன்”னு புலவர் சொல்கிறார்.
 சரின்னு அரசர் எலுமிச்சம்பழத்தை மேலே எறிகிறார்.
உடனே புலவன், “ விட்டான் எலுமிச்சம்பழம்; பட்டான் அராவணன்”னு சொல்லி முடிக்கிறார்.

பட்டான் ராவணன் – ராவணன் இறந்தான்( இது ராமாயணம்)
பட்டான் அராவணன்  - அராவணன் – பாம்புக்கொடி கொண்ட துரியோதனன் இறந்தான். (இது பாரதம்)

ஒரே சொல்லில் இரண்டு கதைகளையும் இணைத்து புலவர் சமத்காரமாக கூறுகிறார்.
ராஜா சந்தோஷப்பட்டு சன்மானம் கொடுத்து அனுப்புகிறார்.

            வாரியாரின் குட்டிக்கதைகளில் இருந்து.
(படித்ததில் பிடித்தது)


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. வாரியாரின் குட்டிக்கதை அருமை...

    டிப்ஸ்களுக்கு நன்றி...

    ReplyDelete
  2. அருமையான குட்டிக்கதை. எல்லா டிப்ஸ்களையும் செய்து பார்க்க வேண்டும். நன்றி.

    ReplyDelete
  3. செய்தி சுருக்கம் ...நல்ல முயற்சி

    ReplyDelete
  4. அருமையான குட்டிக் கதை....

    செய்தித் தொகுப்பு நன்று.....

    பாராட்டுகள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!