பூவின் ஆணவம்! பாப்பா மலர்!
பூவின் ஆணவம்! பாப்பா மலர்!
அந்த பூங்காவில் அழகான பூச்செடிகள் பல பூத்து குலுங்கிக்
கொண்டிருந்தன. பூக்களின் மணம் நாசியை துளைத்துக் கொண்டிருந்தது. பூக்களின் மகரந்தத்தை
சேகரம் பண்ண வண்டுகளும் வண்ணத்து பூச்சிகளும் பூக்களின் மீது படர்ந்து கொண்டிருந்தன.
காலை வேளையில் அந்த பூங்காவே ரம்யமாக காட்சி தந்தது.
மலர்களின் சுகந்தமான மணத்தில் கமகமத்துக்
கொண்டிருந்த அந்த பூங்காவில் சங்கு பூக் கொடியும் ஒன்று. அழகான நீல வண்ணத்தில் சங்கு
பூ மலர்ந்து இருந்தது. அந்த பூவிற்கு ஆணவம் அதிகம் கொண்டது. மற்ற மலர்களை பார்த்து
தன்னுடைய நிறத்தையும் பார்த்து அட்டகாசமாக ஒரு சிரிப்பு சிரித்தது. ஆகாயம், கடல் இரண்டும்
நீலவண்ணம் கொண்டவை. உலகை காக்கும் கடவுளும் நீல வண்ணத் திருமேனி உடையவன். கடவுளின்
வண்ணத்தில் பிறந்த நான் பெருமை மிக்கவன். ஆகையால்தான் கடவுளுக்கு சமர்ப்பிக்கப்படுகிறேன்!
என்று மிகவும் கர்வத்துடன் சொல்லிக் கொண்டது அந்த பூ.
அந்த புஷ்பம் இப்படி தன்னைப் பற்றி
உயர்வான எண்ணங்களை அசைப்போட்டு கொண்டு இருந்தபோது அந்த கொடியில் ஏறிய சிற்றெரும்பு
ஒன்று பூவின் மீது ஊர்ந்தது. ஏதோ குறுகுறுவென தம் மீது ஏறுவதை கண்டு சுதாரித்த சங்குப்
பூ எறும்பை கண்டதும் சீறி விழுந்தது. ஏ! எறும்பே! என் மீது ஏற உனக்கு என்ன தைரியம்?
என்று வினவியது.
பூவில் உள்ள மகரந்தத்தை சுவைக்கத்தான்
என்று சொன்னது எறும்பு.
நான் ஆண்டவனுக்கு சொந்தம்! என் மீது
ஏறாதே! என்று இதழ்களை குலுக்கியது சங்கு புஷ்பம். ஆனாலும் எறும்பு தன் பாதங்கள் நழுவாமல்
கெட்டியாக பூவை பிடித்துக் கொண்டது.
சங்கு பூவிற்கு கடுமையான கோபம்! ஏ!
எறும்பே! என் மீது ஏறி மகரந்தம் தின்ன உனக்கு என்ன தைரியம்! நான் அழகான மலர்களில் ஒருவன்.
அந்த நீல வண்ண கண்ணனின் நிறத்தை ஒத்தவன். அந்த கடவுளின் ஆயுதமான சங்கு என்ற பெயரை தாங்கியவன்.
என் மீது நீ ஏறலாமா? மரியாதையாக சென்றுவிடு உனக்கு என் மகரந்தம் ருசிக்கும் தகுதி இல்லை!
என்று சொன்னது.
அதைக் கேட்ட எறும்பு விழுந்து விழுந்து
சிரித்தது. ஏ! அற்ப சங்கு பூவே! ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம். உயர்ந்தவன் தாழ்ந்தவன்
ஏது? ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொன்றை சார்ந்து இருக்கிறது. நாங்கள் பூக்களை சார்ந்து இருக்கிறோம். நீ எங்களை சார்ந்து
இருக்கிறாய்! நாங்களும் வண்டுகளும் மகரந்தத்தை சேகரித்து வேறு மலர்களுக்கு பரப்பாவிட்டால்
நீ பிறந்திருக்கவே முடியாது. இதில் உன் வாழ்வோ இன்று ஒருநாள் மட்டும்தான். ஆண்டவனை
அலங்கரித்தாலும் இன்று காலையில் அழகாக இருக்கும் நீ மாலையில் வாடி அழகிழந்து உயிரை
விட்டு விடுகிறாய்! இதற்குள் உனக்கு இத்தனை அகம்பாவமா? என்று கேட்டது.
எறும்பின் நியாயமான பேச்சைக் கேட்டு
சங்கு பூ தலை கவிழ்ந்தது!
நீதி: ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!
நன்றி!
அருமையான நீதிக் கதை அன்பரே நன்றி
ReplyDelete