ஆடிப்பூரம்! அம்மன் தரிசனம்! நிம்மதி நிச்சயம்!

ஆடிப்பூரம்! அம்மன் தரிசனம்! நிம்மதி நிச்சயம்!


  ஸ்ரீ விஷ்ணுசித்த குலநந்தன கல்பவல்லீம்
ஸ்ரீ ரங்க ராஜ ஹரிசந்தன யோக த்ருஸ்யாம்
ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமி வாந்யாம்
கோதாம் அந்ந்ய சரணௌ சரணம் ப்ரபத்யே!

   விஷ்ணு சித்தர் எனப்படும் பெரியாழ்வாரின் குலத்திலே தோன்றியவளே! ரங்கராஜனான விஷ்ணுவை மணம் செய்தவளே! பொறுமையின் வடிவமான பூமாதேவி அம்சம் கொண்டவளே!கோதை என்னும் ஆண்டாளே! உனது திருவடிகளை சரணடைகிறேன்!

   பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதம் அனைத்துக்கும் வித்தாகும்-கோதைதமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதுவும் வம்பு.
   கோதை ஆண்டாளின் பாசுரங்கள் நம் பாவங்களை போக்கி திருமாலின் திருவடியில் சேர்க்கும். வேதத்திற்கு வித்தாக அமைந்திருக்கும் திருப்பாவை முப்பது பாடல்களை அறியாத மனிதர்களை இந்த பூமி சுமப்பது கூட வீணானதாகும்.

      ஆடிப்பூர நன்னாளில் தான் பெரியாழ்வாரின் வீட்டில் ஆண்டாள் அவதரித்தாள். ஆண்டாள் தன் அளப்பரிய பக்தியால் திருமாலை கரம்பிடித்து சூடிக் கொடுத்த சுடர்கொடியானாள். இன்று ஆடிப்பூர நன்னாள். சிவாலயங்களிலும் விஷ்ணு ஆலயங்களிலும் அம்மன் ஆலயங்களிலும் விசேசமாக கொண்டாடப்படுகிறது.
   அபிஷேக ஆராதனைகளுடன் பால்குடம் எடுத்தல் தீ மிதித்தல், வீதியுலா போன்ற பல்வேறு வைபவங்கள் இன்று அம்பாளுக்கு நடைபெறுகின்றன.
     ஆண்டாள் பிசூடிக் கொடுத்த சுடர் கொடியாள்' ஆனாள். ஒருநாள் பெரியாழ்வார் கனவில் ஸ்ரீரங்க பெருமாள் தோன்றி, "உனது மகளை ஸ்ரீரங்கம் அழைத்து வா. அங்கே யாம் அவளை மணந்து கொள்வோம்'' என்றார். அதன்படி பங்குனி உத்திரம் அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து ஆண்டாளை மணந்தார் பெருமாள். 
இத்தகைய சிறப்புமிக்க ஆண்டாள், ஸ்ரீவில்லிபுத்தூரில் நந்தவனத்தில் கண்டெடுக்கப்பட்டது ஆடி மாதம் வரும் பூரம் நட்சத்திர நாளன்று. அதனால், அன்றைய நாளை ஆடிப்பூரம் என்று அழைத்து கொண்டாடுகிறார்கள். ஆடிபூரத்தில் விரதம் இருந்தால் திருமணம் விரைவில் கைக்கூடும். ஆண்டாள் அவதார நாளான ஆடிப்பூரம் அன்று தேரோட்டம் நடைபெறும். இந்த ஆண்டுக்கான தேரோட்டம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. 

ஆண்டாளும் ஸ்ரீரங்கமன்னாரும் பவனிவரும் காட்சியைத் தரிசனம் செய்தால் பிறவிப்பயனை அடையலாம். ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது தேவிக்குரிய திருநாளாகும். இந்த நாளில் தான் உமாதேவி தோன்றியதாக கூறப்படுவதுண்டு. 

உலக மக்களை காக்க சக்தியாக அம்பாள் உருவெடுத்தாள். சித்தர்களும், யோகிகளும் இந்த நாளில் தவத்தை துவக்குவதாக புராணங்கள் கூறுகின்றன. வைண வத்திருக் கோவில்களிலும் திருவாடிப்பூரம் பத்து நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது. ஏனென்றால் ஆண்டாள் அவதரித்த நட்சத்திரம் பூரம். 
    இந்த ஆடிப்பூர நன்னாள் அம்மனுக்கு வலைக்காப்பு நடத்தி அழகு பார்த்தனர் பக்தர்கள். அம்மனை அழகுற அலங்கரித்து முளைகட்டிய தானியங்களை அம்மனது வயிற்றில் கட்டி கைகளில் வளைகள் மாட்டி வளைகாப்பு உற்சவம் நடத்தி அழகுற வழிபட்டனர் பக்தர்கள்.
   இந்த நன்னாளில் அம்மன் ஆலயங்களூக்கு சென்று வழிபட நம் துன்பங்கள் நீங்கி நிம்மதி கிடைக்கும் என்பது மரபு.
 மாசுபடா அம்மன் குடியாத்தம்!
     
குடியாத்தம் நெல்லூர் பேட்டையில் அமைந்துள்ளது மாசுபடா மாரியம்மன் ஆலயம். இது அம்மை நோய் கண்டவர்களை காப்பாற்றும் தலம். அம்மை இங்கு வந்து சென்றால் அண்டாது என்று சொல்வர். குடியாத்தம் கிராம தெய்வம் இந்த அம்மன். கழுத்துவரை மட்டுமே உள்ள அழகிய அம்மன் கருவறையில் காணலாம். அதன் அருகில் பழைய மூலவர் அம்மனும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஆடி மாதத்தில் நான்கு வார வெள்ளிக்கிழமைகளும் இந்த ஆலயத்தில் விழாக் கோலம் தான்.அதிலும் கடை வெள்ளி எனப்படும் ஆடி கடைசி வெள்ளியன்று அம்மனுக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். பொங்கல் வைத்தல் கூழ் வார்த்தல் வீதி உலா போன்ற வைபவங்கள் நடைபெறும். இது தவிர ஜனவரி மாதம் முதல் தேதி லட்சார்ச்சணையும்  தை அமாவாசையில் பிரத்யங்கிரா யாகமும். ஒவ்வொரு பவுர்ணமியிலும் பவுர்ணமி யாகமும் நடைபெறுகிறது. இங்குள்ள சாஸ்தா மிகவும் விசேஷமானது.  அம்மை நோய் தீர்க்கும் மாசுபடா மாரியம்மனின் அருள் பெற ஒரு முறை சென்று வாருங்கள்!.

காஞ்சிபுரம் ஆதி காமாட்சி!

   கயிலாயத்தில் சிவனும் பார்வதியும் உரையாடிக்கொண்டிருந்தனர்.  அப்போது சிவன் ஒரு லீலை செய்தார் தன் கண்களை மறைக்கும் வகையில் பார்வதி தேவியைக் கொண்டு மூடச்செய்தார். அப்போது உலகமே இருண்டு போனது. உயிர்கள் தத்தளித்து நின்றன. அவளை பெரும்பாவம் சூழ்ந்தது. பொன்மயமான அம்பிகையின் மேனியில் அந்த இருள் படிந்தது. அம்பிகை தன் கைகளை இறைவன் கண்களில் இருந்து வெடுக்கென எடுத்துவிட்டாள்.
   சிவன் அவளிடம், தேவி கரிய நிறம் பெற்றதால் நீ காளி என்ற பெயர் பெறுவாய்! உன் பாவம் நீங்க பூலோகத்தில் தவம் இயற்றி அறம் பல செய்வாயாக! என்று அருள் புரிந்தார். அதன்படி தேவியும் பூலோகத்தில் கம்பா நதிக்கரையில் மணல் லிங்கம் அமைத்து தவமிருந்து வந்தாள். ஒருநாள் ஆற்றங்கரையில் வெள்ளம் பெருக்கெடுக்கவே சிவலிங்கத்தை தன் கைகளால் அணைத்துக் கொண்டாள். அப்போது உமையவள் வளையல் தழும்பு மணல் லிங்கத்தில் பதிந்தது. அம்பிகையின் அன்புக்கு கட்டுப்பட்டு சிவன் தோன்றினார். தேவியும் தன் கருமை நிறம் நீங்க  வேண்டினாள். சிவனருளால் பழைய நிறம் பெற்றாள். அதே வடிவில் ஆதி காமாட்சி காளிகாம்பாள் என்ற திருநாமத்துடன் அருள் புரிய தொடங்கினாள்.
     கருவறையில் கிழக்கு நோக்கி பத்மாசனத்தில் மேல் கைகளில் பாச அங்குசத்துடனும் கீழ் கைகளில் அட்சயப்பாத்திரமும் அபய ஹஸ்தமாகவும் அனுக்கிரகம் செய்கிறாள் ஆதி காமாட்சி. வெள்ளிக்கிழமை மாலைகளில் வெளிப்பிரகாரத்தில் 16கால் மண்டபத்தில் அம்மன் ஊஞ்சல் சேவை நடக்கும்.
   காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே ஆதி காமாட்சி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.  தொடர்புக்கு 9941470606.
கதிராமங்கலம் வனதுர்கை!

    பூலோகத்தில் யாகங்களை செய்யவிடாமல் முனிவர்களை தடுத்து வந்தனர் மகிஷன் சும்பன், நிசும்பன்,பண்டன் ஆகிய அசுரர்கள். இதனால் தேவர்களுக்கு அவிர்பாகம் கிடைக்கவில்லை! அவர்கள் முப்பெரும் தேவர்களான சிவன் விஷ்ணு பிரம்மாவிடம் முறையிட அனைவரும் இணைந்து ஆதிபராசக்தியின் அருள் வேண்டி மிகப்பெரிய யாகம் செய்தனர். யாக குண்டத்தில் தேவி எழுந்தருளி விரைவில் அசுரர்களை அழிப்பதாக வாக்களித்தாள். பின் அசுரர்களை அழித்து தேவர்களை காத்தாள்.பின் அவள் தனித்த நிலையில் சிவமல்லிகா என்று அழைக்கப்பட்ட கதிரா மங்கலத்தில் உலக நலன் கருதி தவம் புரிந்தாள்.
   கதிராமங்கலம் பெயர்க்காரணம்!
    இத்தலத்திற்கு அருகில் கம்பர் வாழ்ந்த தேரழுந்தூர் உள்ளது. இவர் வனதுர்க்கையின் மீது தீவிர பக்தி கொண்டவர்.ஒரு மழைக்காலத்தில் கம்பரின் வீட்டுக் கூரை சிதைந்து போனது. கம்பர் அம்பாளை நினைத்து மனமுருகி வேண்டினார். காலை விழித்தெழுந்த போது அவர் வீட்டுக்கூரை நெற்கதிர்களால் வேயப்பட்டு இருந்தது. கம்பர் மனமுருகி ‘கதிர்வேய்ந்த மங்கலநாயகி’ என்று பாடினார்.  கதிர்வேய்ந்த மங்கலம் என்ற ஊர்ப்பெயர் பின்னாளில் கதிரா மங்கலம் ஆனது.
   இத்தல அம்மனுக்கு ஆகாச துர்க்கை என்ற பெயரும் உண்டு. தினமும் ராகு காலத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன.
  கும்ப கோணத்தில் இருந்து ஆடுதுறை, சூரியனார் கோவில் செல்லும் வழியாக மயிலாடுதுறை செல்லும் வழியில் 26 கீ.மீ தொலைவில் கதிராமங்கலம் அமைந்துள்ளது.
தொடர்புக்கு 04364-232344,232555.

  ஆடிப்பூர திருநாளில் அம்மன் ஆலயங்களுக்கு சென்று வளையல் குங்குமம் மஞ்சள், புஷ்பம் போன்றவகளை வாங்கி அம்மனுக்கு செலுத்தி பெற்று ஏழை எளிய மக்களுக்கு தானமாக வழங்குவோம்!
    அம்மனின் அருளைப் பெறுவோம்! நிம்மதி அடைவோம்!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  2. ஆலய தரிசனம் சாலவும் நன்று.
    நன்றி ஐயா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 6

வெற்றி உன் பக்கம்! கவிதை!