காங்கிரஸை கடுப்பேற்றிய கையேந்தி பவன்! கதம்பசோறு பகுதி 4

கதம்பசோறு பகுதி 4

தாமினி-சேரன்-சந்துரு

            தமிழ் திரையுலகை மட்டுமல்ல தமிழ் நாட்டையே ஒருவாரகாலமாக இந்த காதல் விவகாரம் பரபரப்பாக ஆக்கி கொண்டுள்ளது. திரைப்பட இயக்குனர் என்பதாலேயே சேரன் குடும்ப விவகாரம் இந்த அளவுக்கு பெரிது படுத்தப்பட்டுள்ளதாக எனக்குத்தோன்றுகிறது. பொதுவாகவே தமிழனுக்கு அடுத்தவன் மீது ஒரு கண் இருந்துகொண்டே இருக்கும். இது பொறாமையோ என்னவோ தெரியாது. அடுத்தவன் வீட்டில் எழவு விழுந்தால் இவனுக்கு மகிழ்ச்சி என்ற நிலை எப்போது மாறுமோ?  மீடியாக்களும் எப்போது என்ன பரபரப்பு கிடைக்கும் என்று  அலைந்து தீயாய் வேலை செய்கின்றார்கள். இது அவர்களது குடும்பவிசயம்! ஒரு பெண்ணை பெற்ற தகப்பனுக்குத்தான் இதன் வலி உணர முடியும். அந்த பெண் வலிய வந்து புகார் கொடுத்து விட்டதாலேயே இது பொது விஷயமாக மாறிவிடாது. புதியதலைமுறை சேனல் இந்த விசயத்தில் ரொம்ப மோசமாகவே நடந்து கொண்டுவிட்டது. ஒருவழியாக தனிப்பட்ட விசாரணை முடிந்து இப்போது தாமினி அவர் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.  ஒரு பெண்ணை வளர்க்கும் பெற்றோருக்கு அவனது கணவனை தேர்ந்து எடுக்கும் உரிமை கூட இந்த காலத்தில் இல்லாது போனது வருத்தமே! இந்த காதல் விவகாரத்திற்கு தமிழ் சினிமா முக்கிய காரணம்! பள்ளிக் காதல் கிராமத்து காதல் விடலை காதல் என விதவிதமான படங்களை எடுத்து இளைய சமுதாயத்தை கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கியவர்கள் இன்று அவர்கள் வீட்டிலேயே இப்படி ஒரு நிலைமை வந்தவுடன் பதைக்கிறார்கள்! கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல! இனியாவது இவர்கள் திருந்துவார்களா தெரியவில்லை!

ஓட்டலின் குறும்பும்! காங்கிரஸ் கடுப்பும்!
    மும்பையில் “அதிதி” என்ற பெயரில்  கையேந்திபவன் வகையறா ஹோட்டல் ஒன்று உள்ளதாம். இதுபிரபலமான உணவகம். இடம்பிடிக்கவே பலர் காத்துக் கிடப்பார்களாம். எப்போதும் கூட்டம் முண்டியடிக்கும் இந்த ஹோட்டலில் ஒருத்தர் சாப்பிட்டு முடிக்கும் முன்னே அந்த இடத்தை பிடிக்க பலர் போட்டி போட்டு காத்து நிற்பார்களாம்.
    இதனால் சாப்பிடுபவர்கள் அரைகுறையாக சாப்பிட்டுவிட்டு பாதி வயிறோடு கை கழுவ சென்று விடுவார்களாம். இந்த ஓட்டலில் சமீபத்தில் ஒரு விளம்பர பலகை வைத்தார்களாம். “ஸ்பெக்ட்ரம், நிலக்கரி போன்ற விவகாரங்களில் பணத்தை அடிப்பது மத்திய அரசுக்கு எவ்வளவு அவசியமோ அந்த அளவுக்கு இந்த ஹோட்டலில் புல் மீல்ஸ் சாப்பிடுவதும் ரொம்ப அவசியம்” என்று.
     என்னா தில்லு பாருங்க! ஹோட்டல்காரனுக்கு! இதைப்பார்த்து நம்ம மன்னு மோகனோட ஆட்கள் கொதித்து எழுந்து விட்டார்களாம்! நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்காதவரை ஹோட்டலை திறக்கவிடமாட்டோம் என்று திரண்டு எழுந்தனராம். உடனே ஹோட்டல்காரர்களுக்கு ஆதரவாக தாமரை கட்சி காரர்கள் குதித்தார்களாம்.
     மேலிடத்து காங்கிரஸ் மும்பை முதல்வர் பிரித்வி ராஜ் சவுகானை கூப்பிட்டு வறுத்து எடுத்து விட்டதாம்! ஒரு ஹோட்டல் விளம்பரம் கூட நம்மை இப்படி கடுப்பு ஏத்தி விட்டதே பேசாம அரசியல் துறவரம் போய்விடலாமா என்று யோசிக்கிறாராம் ப்ருத்விராஜ் சவுகான்.

பாக்டீரியாவை காட்டுங்க!
   மத்திய வர்த்தக தொழில் துறை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன்  திருப்பூர் அருள்புரம் பொது சுத்திகரிப்பு நிலையத்து வந்தாராம். நிலையத்தை சுத்திப்பார்த்த அவரு திடீர்னு ஒண்ணு கேட்கவும் ஊழியர்கள் திணறி போயிட்டாங்களாம்!
  சுத்திகரிப்பு செய்ய பாக்டீரியா உடுறீங்களாமே? அந்த பாக்டீரியாவை நான் பார்க்கணும் என்றாராம் அமைச்சர்!
   ஊழியர்களும் மைக்ராஸ்கோப் வழியா பார்க்க சொல்லிக் கொடுத்தாங்களாம். அப்படி பார்த்த அமைச்சர் என் கண்ணுக்கு ஒண்ணுமே தெரியலையே! நான் பாக்டீரியாவை பார்த்தே ஆகனும்னு அடம்பிடிச்சாரம்!
   இது என்னடா சின்ன புள்ளத்தனமா இருக்கே! ன்னுட்டு மைக்ராஸ்கோப்பை சரி செய்து திரும்பவும் அமைச்சரை பார்க்க வைச்சாங்களாம்! பாக்டீரியாவை பார்த்து முடிச்சிட்டு அப்படி பாக்டீரியாவை பாக்கிறாமாதிரி பத்திரிக்கை காரங்களுக்கு போஸ் கொடுத்திட்டுதான் கிளம்பினாராம் அமைச்சர்!

நாலு பேருல ஒருத்தரு இப்படித்தானாம்!
   சர்வதேச அளவில் நான்கு பேரில் ஒருவர் லஞ்சம் கொடுப்பவராக உள்ளார் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. உலக அளவில் 107 நாடுகளில் 1.14 லட்சம் மக்களிடையே லஞ்சம் குறித்த கருத்துக்களை கேட்டறிந்தது. இதில் அரசியல்வாதிகளே மிக அதிக அளவில் லஞ்ச ஊழலில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்துள்ளது.
  ஊழல் நாடுகள் பட்டியலில் லைபீரியா  மங்கோலியா முன்னனியில் உள்ளது. லஞ்சம் இல்லாத நாடுகளின் பட்டியலில் டென்மார்க் முதலிடத்தில் உள்ளது. பின்லாந்து சுவிட்சர்லாந்து ஆகியவையும் லஞ்ச ஊழல் அற்ற நாடுகளாக உள்ளன.
   காவல் துறையில்  மிக அதிகமாக ஊழல் நடைபெறும் நாடாக காங்கோ தேர்வாகியுள்ளது. இங்கு போலீஸ் காரர்களுக்கு லஞ்சம் கொடுத்தால்தான் வேலையே நடக்கும் என்று 75% பேர் கூறியுள்ளனர்.

காதுகள் மூலம் காணலாம்;
   கண்பார்வையற்றோர்களும் காட்சிகளை காணும் வகையிலான கருவியை வடிவமைப்பதில் உலகின் பல நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாக ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த ஆராய்ச்சிகளின் பலனாக காட்சி பதிவுகளை ஒலி அலைகளாக மாற்றம் செய்து அதற்கான மொழியின் மூலம் அதை மீண்டும் ஒளி அலைகளாக மாற்றி மூளைக்கு கொண்டு செல்லும் அதி நவீன கருவியை ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்து உள்ளனர்.
 கண்பார்வையற்றோரின் காதுகளில் பொருத்தப்படும் இந்த கருவி காட்சிகளை ஒளி அலைகளின் அதிர்வுகளை உள்வாங்கி அதை ஒலி அலைகளாக பதிவு செய்யும் தன்மை கொண்டது. இந்த கருவிகளில் பொருத்தப்பட்டுள்ள விஷுவல் வேர்டு பார்ம் எனப்படும் காட்சிகளுக்கான  ஒளி மற்றும் ஒலியியல் மொழிகள் எழுதப்பட்டுள்ளன. எனவே இவை உள்வாங்கிய ஒளி அலைகளை ஒலி எழுத்து வடிவில் மாற்றி மூளைக்கு அனுப்புகிறது. மூளையில் உள்ள காட்சி பதிவுகளை அறியும் பகுதியில் இவை மீண்டும் ஓளி அலைகளாக மாற்றம் செய்யப்படுவதால் இந்த கருவியின் மூலம் பார்வையற்றோரும் காட்சிகளை காணமுடியும். என்கின்றனர்.
  முதல்கட்ட ஆராய்ச்சியில் வெற்றி கண்டுள்ள இவர்கள் இதை முழு வெற்றி கண்டால் விழி இழந்தோரின் துயரங்கள் பெருமளவில் குறையும்.

சித்த மருத்துவம்!
   அத்திக்காய்க்கு வாதநோய் உடல் உஷ்ணம் இரணம், பிரமேகம், சூலை நோய் ஆகியவற்றை நீங்கச்செய்து குணமாக்கும் தன்மை உண்டு.
வாழைக்காய் பித்தசுரம் உமிழ்நீர் சுரப்பு வயிற்று உளைவு உடல் உஷ்ணம் இருமல் பித்தசுரம் பைத்தியம் பித்த வாந்தி ஆகியவற்றை குணப்படுத்தும். இரத்த விருத்தி அதிகரிக்கும்.
உடலில் ஆறாத ரணங்கள் வாய் குளறல் அதிகப்படியான வாய்வு, சிரங்கு சுக்கில நஷ்டம் பல் கூச்சம் ஆகியவை மாங்காய் உண்டுவருவதால் நீங்கும்.
தாகம், உடல் சூடு, காசம் சீதத்தால் உண்டாகும் பித்தம் ஆகியவை குணமாக அருநெல்லிக்காய் மருந்தாகும்

ஜோக்கு!

   அது ஒரு ஆங்கிலவழி கல்வி கற்பிக்கும் பள்ளி! அதில் நமது மாணவர் சேர்ந்து விட்டார். அவருக்கு சுட்டுப்போட்டாலும் ஆங்கிலம் வராது. ஆனால் அந்த பள்ளியில் பேசுவதாக இருந்தால் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும். மறந்தும் தமிழ் பேசக்கூடாது என்று ஸ்டிரிக்டான உத்தரவு.
    நம்ம ஆள் சேர்ந்த முதல் நாள்! அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டும் போல வெளியே செல்ல வேண்டும். நம்ம மாணவர்கள் என்று கையை தூக்கி விரலில் ஒன் என சைகை காட்டி சென்று விடுவார்கள். அங்கு அப்படி எல்லாம் செல்ல முடியாது.
  நம்ம மாணவர் எழுந்தார். மேம்! என்று விரலை நீட்டினார்! மேம் கவனிக்கவே இல்லை! மாணவருக்கு பொறுக்க முடியவில்லை!
   மீண்டும் மேம்! என்றார். மேம் நிமிர்ந்து பார்த்து வொய் டொண்ட் டிஸ்டர்ப் மீ? என்றார்.
   மாணவர் பரிதாபமாக என்ன சொல்வது என்றறியாமல் மேம்!  கேன் ஐ சப்ட்ராக்ட் மை ஸ்மால் வாட்டர்? என்றார்.
   மேமுக்கு ஒன்றும் புரியவில்லை! பக்கத்திலிருந்த மாணவர்கள் கொல்லென்று சிரிக்க!  நம்மாளு மீண்டும் ஒரு விரலை காட்ட டீச்சருக்கு புரிந்து கர்மம்! கர்மம்! ஓடுன்னு தமிழ்ல திட்டுனாங்களாம்!

   இது எப்படி இருக்கு?                                                                              
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. கதம்ப சோறு சுவை அருமை. தொடருங்கள்.

    ReplyDelete
  2. ஹஹஹா ஜோக்கு அருமை..

    நண்பா, நான் அழைத்த தொடர்பதிவு முதல் கவிதை அனுபவம்..எஸ்கேப் எல்லாம் ஆவாதீங்க..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2