மொத மொதலா கவித ப(டி)டைச்ச அனுபவம்! தொடர்பதிவு!

மொத மொதலா கவிதை படிச்ச அனுபவம்!


வலையுலகில் மீண்டும் தொடர்பதிவுகள் கலக்க ஆரம்பித்து விட்டது. பதிவர் குட்டனின் அழைப்புக்கிணங்க நான் முதல் கணிணி அனுபவம் எழுத இப்போது கோவை ஆவி அவர்கள் விருப்பத்திற்கிணங்க முதல் கவித அனுபவம் எழுத போறேன்!
    நாம் பிறவி கவிஞன் எல்லாம் கிடையாது! நான் கவிதை எழுத வந்ததே ஒரு விபத்துன்னு சொல்லலாம்! அதை படிக்கிற உங்களுக்கு தான் பாதிப்பு அதிகமா இருக்கும்! எனக்கு இருக்காது. அந்த சுவாரஸ்யமான ஆக்ஸிடெண்ட் எப்படி நடந்துச்சுன்னு உங்களுக்கு தெரிஞ்சிக்க ஆசையா இருக்கா?  அதுக்குள்ள அவசரப்பட்டா எப்படி?
      ஓவ்வொரு நாளும் பதிவு தேத்த நான் எப்படி கஷ்டப்படறேன்! அதை டைப் பண்ணி வெளியிடறதுக்குள்ள என் கம்பூட்டருக்கு பிடிக்காம என்ன அட்டூழியல்லாம் பண்ணுது தெரியுமாங்க! அதை கொஞ்சம் புலம்பிட்டு அப்புறம் கவித அனுபவத்துக்கு வாரேன்!
     ஊருல இருக்கற தெய்வத்துக்குள்ளாம் பூஜை பண்ணிட்டு ஊட்டாண்ட வந்து சேர எனக்கு பதினொன்னரை மணி ஆயிரும்! ஒரே களைப்பா இருக்கும். ஆனா மனசு மட்டும் இன்னிக்கு என்ன பதிவு போடலாம்னு தீயா வேலை செஞ்சிகிட்டு இருக்கும். ஒரு ஆறு மாசம் முன்னாடி வரைக்கும் நிறைய கட் காப்பி பேஸ்ட் செஞ்சு பொழப்பை ஓட்டிகிட்டு இருந்தேன்! இப்ப மட்டும் என்ன வாழுதுன்னு கேக்கறீங்களா?
     அப்ப கொஞ்சம் அசைவ ப்ளாக்கா இருந்தது! இப்ப சைவத்துக்கு மாறிடுத்து! அதனால விசிட்டர்ஸ் கொறைஞ்சு போச்சுன்னு அலேக்ஸா வந்து அலாரம் அடிக்கறது!  அதனால தினமும் ஏதாவது பதிவு தேத்தனுமேன்னு நான் தவியா தவிச்ச ஏதாவது ஒன்றை தேத்துவதற்குள் இருக்கிற நாலு முடியும்  பிச்சுக்க வேண்டியிருக்குது!
   இந்த சமயத்துலதான் ஆபத் பாந்தவனா வந்திருக்கு இந்த தொடர் பதிவு!
   பதிவர் நாய் நக்ஸ் அண்ணன்! முதல் டீன் ஏஜ் சினிமா அனுபவம் எழுத சொல்லியிருந்தார். அதுக்காக ரோசனை பண்ணிக்கிட்டு இருந்தேனா. ஒரு நாலைஞ்சு நாள் முன்னாடி நைட் தூங்கறதுக்கு முன்னாடி ஆண்ட்ராய்டு போனை கொடைஞ்சிகிட்டு இருந்தப்பா மெயில்ல ஆவி வந்து மிரட்டிருச்சு!
  நாமதான் பேய்களை ஓயாம விரட்டிக்கிட்டிருந்த ஆளாச்சே! மிரண்டுருவமா? ஏய்! வாணாம் விட்டுருன்னு சொல்லி எஸ்கேப் ஆகலாம்னு பார்த்தா அந்த பேய் விடறதா இல்லை!  திரும்ப வந்து எஸ்கேப் எல்லாம் ஆவாதீங்க! மருவாதியா எழுதிருங்க உங்க கவித அனுபவத்தைன்னு திரும்பவும் சொல்ல சரி! இனி எனக்கென்ன வந்துச்சு! நீங்க தான் கஷ்டப்பட போறீங்க! உங்க நாக்குல இல்லை இல்லை விரல்ல சனி புகுந்திருச்சு அப்படின்னு சந்தோஷமா கம்பூட்டர் முன்னாடி உட்கார்ந்தேன்!
   அப்பத்தான் என் செல்ல குட்டி ஜனனி வந்து அப்பா! நான் ஒரே வாட்டி கேம் ஆடிட்டு கொடுத்திரட்டுமா? என்றது. ஆறு மாசத்தில் இருந்து கம்பூட்டர் பழகுது கொடுத்து வைச்ச குழந்தை! சரிடான்னு அதுக்கிட்டே கொஞ்ச நேரம் சிஸ்டத்தை விட்டுகொடுத்து திரும்பவும் உக்காந்து ஒரு பத்தி டைப் பண்ணா  கம்பூட்டர் திடீர்னு ஆப் ஆயிருச்சு! பாவம் அதுக்கும் வயசாகுதில்ல! அதான் இப்படி அடிக்கடி மக்கர் பண்ணுது!
    விதியை நொந்துகிட்டு திரும்பவும் டைப் பண்ண ஆரம்பித்தேன்!  ‘கவி’ ன்னா குரங்காம்!
அந்த குரங்கு என்னை பிடிச்ச கதை இருக்கே அது இதுதான்.
   எட்டாப்பு படிக்கிறப்பவே கையெழுத்து பத்திரிக்கை நடத்திக்கிட்டு இருந்தேன்! நான் தான் மொத்த பக்கமும் எழுதுவேன். ஒரு நண்பன் படம் வரைவான். எல்லாம் கதைகள்தான் கவிதைகள் எதுவும் கிடையாது. அப்படி அந்த இளந்தளிர் கையெழுத்து பத்திரிக்கை வளர்ந்து வந்தது. 93 ல நான் ப்ளஸ் டூ முடிச்ச சமயம் தீபாவளி மலர்னு ஒண்ணு வெளியிட்டோம்! அப்ப மலர்ல சிறுவர்கதைகளோட பெரியவர்களுக்கான கதையும் எழுதினேன். வேற வழி இல்லாமா அதையும் என் ப்ரெண்ட்ஸ் படிச்சி சகிச்சிகிட்டாங்க!
 நான் கவித படைச்ச தேன்சிட்டு இதழ் வெளியீடு 1997ல்
   அட இம்புட்டு பண்ணிட்டோம்! கவித படைக்க மாட்டோமா?ன்னு எனக்குள்ளேயே ஒரு கேள்வி? ஆனா என் ப்ரெண்ட் கிட்ட எல்லாம் கவிதை எழுது கொடுங்கடா? தீபாவளி மலர்ல போடனும் என்று கேட்டு கேட்டு சலித்து போய்விட்டேன்!
   தீபாவளி நெருங்கி விட்டது! மூன்றே நாள்தான் இருந்தது.  தீபாவளி மலர் ஹாப் சைஸ் நோட்டு புத்தகம் சைசில் 140 பக்கம் தைத்தாகிவிட்டது. மாங்கு மாங்கென்று சிறுவர்கதைகளையும் சிறுகதையும் எழுதி முடித்து கவிதைக்கு காத்திருந்தால் ஒருத்தனும் எழுதி தரவில்லை! அட போங்கடா! நானே எழுதிக்கிறேன் என்று எழுத ஆரம்பித்து விட்டேன்.
   அந்த மலரில் நான் எழுதிய சில கவிதைகள்!
 மாணவன்!
 ஓ! மாணவனே!
 நீ புத்தக மூட்டையை
சுமப்பது
வருங்காலத்தில்
குடும்ப சுமையை
சுமப்பதற்கான
ஒத்திகையா?

அரசியல்வாதி!

பதவிக்காக பலகரை
வேட்டிக்களை
பல தடவை
மாற்றிக் கட்டும்
கறைபடிந்த
கன்னியவான்!

இப்படி ஒன்றிரண்டு கவிதைகள் எழுதி நிரப்பி அந்த புத்தகம் வெளியிட்டு விட்டேன்! அதற்கடுத்து தேன் சிட்டு என்று 16 பக்க சிற்றிதழ் ஒன்று கையெழுத்து பிரதியாக வெளியிட ஆரம்பித்தேன்! அதில் கவிதைகள் கவிப்ரியா என்றபெயரில் எழுத ஆரம்பித்தேன்.
இளைஞனே எழுந்திரு!
 ஓ இளைஞனே!
 விழித்தெழு!
இன்னும் என்ன தூக்கம்?
இன்னும் நீ தூங்கிக் கொண்டிருந்தால்
இந்தியா காணாமல் போய்விடும்
சீர்கெட்டு சிதறிக் கிடக்கும்
பாரதத்தை சீர்படுத்த
உன் உழைப்பு
தேவைப்படுகிறது!
ஆகவே இளைஞனே!
இன்னும் என்ன தூக்கம்?
விழித்தெழு!
  இப்படி  புரட்சி கவிதைகள் சில எழுதினேன்! இதற்கெல்லாம் உபயமாக அப்போதைய தினமலர் வாரமலர் இதழ்கள் உதவின. அதில் வந்திருக்கும் கவிதைகளை படித்து. அதன் கருவை எடுத்துக் கொண்டு வேறு வகையில் எழுதுவேன்!
கவிதை எழுத வந்துவிட்டு காதல் கவிதை எழுதாமல் இருக்க முடியுமா? அதற்காக போய் காதலித்துக் கொண்டு இருக்கவும் முடியாது!
வலி!
 அப்பா அடித்தபோதும்
வலிக்கவில்லை!
அம்மா அடித்த போதும்
வலிக்கவில்லை!
ஆசிரியர் அடித்த போதும்
வலிக்கவில்லை!
கிரிக்கெட் ஆடி
மண்டை உடைந்தபோதும்
வலிக்கவில்லை!
உனக்காக உன்
அண்ணனிடம் உதைபட்டபோதும்
வலிக்கவில்லை!
ஆனால் வலித்தது
நீ என்னை மறந்துவிடு
என்று சொன்னபோது?
 இப்படி ஒரு கவிதையை  தேன்சிட்டில் எழுத நிறைய பேர் பாராட்டினார்கள்! அப்போதுதான் என்னால் கவிதையும் எழுத முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது. நிறைய எழுதினேன்! சில நிறைவை தந்தன.
  இணையப்பக்கம் வந்தபோது தமிழ் தோட்டம் என்ற தளத்தில் (ஃபோரம்)  இணைந்து கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். அதில் ஹைக்கூ என்ற தலைப்பில் சிலவற்றை எழுத ஹைக்கூ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கற்றுத் தந்தார் ஹைக்கூ கவிஞர் கவியருவி ரமேஷ். அவரின் ஆலோசனையால் அந்த தளத்தில் 450 ஹைக்கூக்கள் எழுதி இருப்பேன்! சில லிமரிக், சென்ரியு கவிதைகளும் எழுத ஆரம்பித்தேன். திருக்குறளுக்கு சென்ரியு கவிதைகளும் எழுதினேன்.
தமிழ் தோட்டத்தில் பரிசு பெற்ற என் ஹைக்கூ ஒன்று மூன்றாம் பரிசு - தளிர் அண்ணா சா சுரேஷ் பாபு

பொங்கி வழிந்தாலும்
வீணாவதில்லை!
அன்பு!

_________________இரண்டாம் இடம்
by thaliranna on Mon Jun 18, 2012 8:45 pm
கடல் நீரைக்
குடி நீராக்கியது
மழை!
  இவ்வளவு ஏன்? நமது தளிரின் முதல் பதிவே பொங்கல் வாழ்த்து கவிதைதான்!

என்ன நான் குரங்க அதாங்க கவிதை பிடி(படை)ச்ச கதையை சொல்லிபுட்டேன்! இது உங்களுக்கு பிடிச்சிருக்கா நீங்கதான் சொல்லனும்! சொல்லுவீங்க இல்லை!
இந்த பதிவை தொடர நான் அழைப்பவர்கள்!
  காரஞ்சன் சேஷ்.
  யாதோ ரமணி ஐயா
இரவின் புன்னகை வெற்றிவேல்
இளமதி
அருணா செல்வம்

இவர்கள் ஏற்கனவே எழுதவில்லை என்றே நினைக்கிறேன்! யாராகிலும் அழைத்து இருந்தாலும் என் அழைப்பையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்! நன்றி!


Comments

  1. கவிதைகளின் வகைகள் அறிந்து கொண்டேன் .
    ஹைக்கூ அருமை.

    ReplyDelete
  2. தொடக்கமே நல்லாத் தான் இருந்திருக்கு..... பரிசு பெற்ற கவிதைகள் அருமை...

    ReplyDelete
  3. வாவ்.. கலக்கியிருக்கீங்க நண்பா.. பதிவெழுத நீங்கள் காட்டும் ஆர்வம் தொடரட்டும்..

    ReplyDelete
  4. தங்களது தளத்தை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன். முடிந்தால் சென்று பார்க்கவும். நன்றி

    http://blogintamil.blogspot.in/2013/08/blog-post_17.html

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2