படித்தது பத்தாம் வகுப்பு; பேசப்போவது ஐ.நா.,சபை இளைஞர் மாநாட்டில்!

""பத்து மார்க் குறைஞ்சதுக்கெல்லாம் இப்போ "சூசைடு' பண்ணிக்கிறாங்க பசங்க. பத்தாம் வகுப்புல நான் எடுத்த மொத்த மார்க்கே 150தான்; ஒரு பாடத்துலயும் "பாஸ்' ஆகலை; அதுவரைக்கும் எப்படி "பெயில்' ஆகாமப் படிச்சீங்கன்னு கேக்குறீங்களா? டீச்சர்களுக்கு மத்த பசங்க "டீ' வாங்கிட்டு வந்தா, சூடே இருக்காது; ஆனா, நான் வாங்குன நொடியில, "சிட்டா' பறந்து வந்து "ஹாட்டா' கொடுப்பேன். அதுக்காகவே, ஒன்பதாங்கிளாஸ் வரைக்கும் என்னைய "பாஸ்' போட்டு விட்டாங்க. எந்த வேலை செஞ்சாலும், அதை ஈடுபாட்டோட செய்றதுதான் என்னோட வழக்கம். அந்த ஈடுபாடுதான், ஐ.நா.,சபை இளைஞர்கள் மாநாட்டுல, எனக்குப் பேசுற வாய்ப்பை வாங்கிக் கொடுத்திருக்கு...'' என, யதார்த்தமாய் பேசுகிறார் நித்யானந்தன் 41. ஏதோ, பத்தாம் வகுப்பில் "பெயில்' ஆகி, அதன்பின் படித்து, பெரிய பொறுப்புக்கு வந்ததால், ஐ.நா., சபை இளைஞர்கள் மாநாட்டில், அவரைப் பேச அழைத்திருப்பார்கள் என்று, அவசரப்பட்டு யோசிக்க வேண்டாம். இப்போது வரையிலும், அவரது அதிகபட்ச கல்வித் தகுதியே அதுதான். அப்புறம் எப்படி சாத்தியமானது இந்த சாதனைப் பயணம்...?.

""படிப்புதான் வரலையே தவிர, சின்ன வயசுல இருந்தே ஊருக்கு ஏதாவது செய்யணும்கிற ஆசை நிறையவே இருந்துச்சு. எய்ட்ஸ் விழிப்புணர்வு பணியிலதான் என்னோட சமூகசேவை ஆரம்பிச்சது. கோவை மாவட்டத்துல 440 கிராமங்கள்ல எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரம் பண்ணுனேன். அப்ப இருந்தே, நான் செய்யுற எல்லா வேலையையும் "டாக்குமென்ட்' பண்ண ஆரம்பிச்சேன். அதைப் பார்த்துட்டு, கலெக்டர் முருகானந்தம் பாராட்டுனாரு. அடுத்ததா மகளிர் சுய உதவிக்குழு, இளைஞர் சுய உதவிக்குழு அமைக்கிற பொறுப்பு கிடைச்சது. மகளிர், இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கிற நிகழ்ச்சிகள் நிறைய நடத்துவேன். ஊர் ஊர்ன்னு அலைஞ்சு, அடிக்கடி "லீவு' போட்டதுல, நான் வேலை பார்த்த கம்பெனியில என்னை 7 தடவை"சஸ்பெண்ட்' பண்ணிட்டாங்க. கடைசியா, "டிஸ்மிஸ்' ஆகுற நிலைமையிலதான், எங்க முதலாளி (எல்.எம்.டபிள்யு.,நிறுவனம்) ஜெயவர்த்தனவேலு சாரைப் போய்ப் பார்த்து, "இந்த வேலையெல்லாம் நான் செய்யுறேன்'னு சொன்னேன். அவர் அதெல்லாம் பார்த்துட்டு, "நீ நாட்டுக்கு வேலை பாரு. உனக்கு நான் சம்பளம் கொடுக்கிறேன்'னு சொல்லி அனுப்பிட்டாரு. அதுலயிருந்து முழு நேரமும் ஊர் வேலைதான்...'' என, தனது பணிக்கு சாட்சியம் சொல்லும் "கனமான' ஆவணங்களைப் புரட்டிக் காண்பித்தபடியே, பேசுகிறார் நித்யானந்தன். பெற்றோர், மனைவி, இரு குழந்தைகளுடன் கோவை சிங்காநல்லூரில் வசிக்கும் இவருக்கு இன்று வரையிலும் வறுமைதான் அடையாளம். இதுவரை, தனது மனைவி கவிதாவின் நகையை 17 முறை அடகு வைத்திருப்பதையும் ஆவணப்படுத்தியிருக்கிறார். இலக்குகளோ, எதிர்பார்ப்புகளோ வைக்காமல் இவர் செய்த சமூகசேவை, எப்படியோ மத்திய அரசின் உளவுத்துறையை எட்டியிருக்கிறது. அவர்கள் வந்து, இவரைப் பற்றியும், இவரது குடும்பத்தைப் பற்றியும் விசாரித்துச் சென்றனர்.

அவரும் அதை மறந்து விட்ட நிலையில், கடந்த ஆண்டில் அமெரிக்காவிலிருந்து வந்தது அழைப்பு. வாஷிங்டன்னில் கிளிண்டன், ஹிலாரி கிளிண்டன் உட்பட 196 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற சர்வதேச எய்ட்ஸ் கருத்தரங்கில், இந்தியாவின் சார்பில் பங்கேற்றார்; எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர்பான இவரது ஆய்வுக்கட்டுரையும் சமர்ப்பிக்கப்பட்டது. ஓராண்டு கூட நிறைவடையாத நிலையில், வரும் ஆக.,7, 8 மற்றும் 9 ஆகிய 3 நாட்கள், ஐ.நா.,சபை தலைமையகத்தில் நடக்கவுள்ள ஐ.நா.,சபையின் 12வது இளைஞர்கள் மாநாட்டில், உரையாற்றுவதற்கான அழைப்பு, நித்யானந்தனுக்கு வந்துள்ளது. 26 வயது வரையுள்ளவர்கள் மட்டுமே பங்கேற்கும் இந்த இளைஞர்கள் மாநாட்டில், 41 வயதில் பங்கேற்கும் இளைஞர் இவர் மட்டுமே. அங்கு தனது 20 ஆண்டு கால சேவையை விளக்கவுள்ளார் நித்யா. இவருக்கான உரையைத் தயாரிக்க உதவுகிறார், தலைமைச்செயலகத்தில் கல்வித்துறையில் பணியாற்றும் பாலுசாமி. நித்யானந்தனின் இப்போதைய கவனமெல்லாம், மரங்களின் மீதுதான். "சிறுதுளி', "ராக்' அமைப்புகளின் உதவியுடன் அரசூரில் 10 ஏக்கர் பரப்பில் மரப்பூங்காவை விதைத்துள்ள இவர், அடுத்ததாக மயிலம்பட்டி கிராமத்தில் 20 ஏக்கரில் சோலையை உருவாக்க, களம் தயாரித்துக் கொண்டிருக்கிறார். அமெரிக்கா சென்று வந்த பின், காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணி வரைக்கும் அங்கேதான் இருப்பேன் என்று சொல்லும் நித்யானந்தனுக்கு காத்திருக்கின்றன இன்னும் பல கவுரவங்கள். நீங்களும் அழைத்து ஒரு வாழ்த்து சொல்லுங்களேன்...95667 57074.

- எக்ஸ்.செல்வக்குமார் -

நன்றி: தினமலர்

Comments

 1. நானும் தொடர்பு கொள்ள முயசித்தேன் இருந்தாலும் வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 2. பாராட்டியே தீரவேண்டும். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

  ReplyDelete
 3. என்னதான் படிப்பில்லாமல் இருந்தாலும் மனதுக்குள் இருக்கும் உத்வேகம் மனிதனை வெளியே காட்டி கொடுத்து கவுரவப்பட வைத்து விடுகிறது வாழ்த்துக்கள்...!

  ReplyDelete
 4. பகிர்விற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2