நன்றி கொன்ற விலங்கு! பாப்பாமலர்!

நன்றி கொன்ற விலங்கு! பாப்பாமலர்!


ரொம்ப காலத்துக்கு முன்னாலே ஒரு அடர்ந்த காடு இருந்தது. அந்த காட்டில வேடன் ஒருத்தன் இருந்தான். அவன் வில்லில் இருந்து அம்புகள் புறப்பட்டால் எந்த விலங்கும் செத்துவிடும். குறி தவறாமல் எய்யக் கூடியவன். கருணையே இல்லாத கொடியவன்.
  ஒரு நாள் அவன் வேட்டைக்குப் புறப்பட்டான். அன்னிக்கு அவனுக்கு நேரமே சரியில்லை! பகல் முழுதும் அலைந்தும் ஒரு விலங்கும் அவனுக்கு சிக்கவே இல்லை! உணவில்லாமல் பசி வேறு அவனை கொடுமைப் படுத்தியது. வெயிலில் அலைந்தமையால் தாகம் வேறு. கையில் கொண்டுவந்திருந்த நீரெல்லாம் காலியாகிவிட்டது. பொழுதும் இருட்ட மிகவும் சோர்வோடு தன்னோட இருப்பிடத்துக்கு புறப்பட்டான்.
  அந்த நேரம் பார்த்து திடீர்னு மேகங்கள் சூழ்ந்துகிச்சு! இடி முழங்கிச்சு! “சோ’ன்னு மழை கொட்ட ஆரம்பிடுச்சு. அவன் மழையில் முழுக்க நனைந்து விட்டான். கையில் இருந்த வில் அம்பு எல்லாம் அடித்த சூறாவளி மழையில நழுவிடுச்சு! ஒதுங்கக் கூட இடம் இல்லை. குளிருல நடுங்கிட்டு இருந்தான். அந்த சமயம் “பளிச் பளிச்”னு இருட்டுல ரெண்டு புள்ளிகள் மின்னுச்சு! அது ஒரு புலி! அது வேடன் மேல பாய தயாரா நின்னுச்சு!
   வெலவெலத்துப் போன வேடன் பக்கத்துல இருந்த ஒரு பெரிய மரத்துமேல மடமடன்னு ஏறிட்டான். புலிக்கு மரம் ஏறத் தெரியாது. அது மரத்தையே சுத்தி சுத்தி வந்தது “ வேடனே! எப்படி இருந்தாலும் நீ கீழே இறங்கித்தானே வரவேண்டும்! நான் பசியோடு இருக்கிறேன்! உன்னை சாப்பிடாமல் விடமாட்டேன்!” சீறியது புலி.
 வேடன் அஞ்சினான். இன்னும் கொஞ்சம் மேலே ஏறினான். அங்கே அவனுக்கு அதிர்ச்சி! கரடி ஒன்று அங்கே படுத்திருந்தது. இருதலைக் கொள்ளி எறும்பு போல வேடன் தவித்துப் போனான். அப்போது கரடி சொன்னது. வேடனே! அஞ்சாதே! நீ என்னுடைய விருந்தாளி! என்னுடைய வசிப்பிடத்திற்கு வந்து இருக்கிறாய். விருந்தாளியான உன்னை நான் கொல்ல மாட்டேன்! நீ என் பகைவனே ஆனாலும் என்னை அண்டிவந்துவிட்டாய் உன்னை காப்பது எனது கடமை நீ பயப்படாமல் இந்த இரவை இங்கே கழிக்கலாம்!” என்று சொன்னது.
   உடனே கீழேயிருந்த புலி சொன்னது, கரடி தம்பியே! நீ செய்வது முறையோ? இவன் கொடூரமான வேடன்! நம் இனத்தை அழிப்பதற்கென்றே பிறந்தவன். இரக்கம் இல்லாத இவனுக்கு நீ இரங்கலாமா? நம் இனமில்லாத இவனுடன் கூட்டுச் சேர்ந்து என்னை பட்டினி போடலாமா? இவனை கீழே விரட்டி விடு! நான் உண்ட பிறகு உனக்கும் உணவு ஆவான்” என்றது

   கரடி சொன்னது, “புலியாரே! நீர் சொல்வது அனைத்தும் உண்மைதான்! ஆனால் இவன் என்னை அடைக்கலம் தேடி வந்து இருக்கிறான். அடைக்கலம் ஆனவனை விரட்டுவது தப்பு! நான் அந்த தவறை செய்யமாட்டேன்!” என்றது.
இரவு பொழுது கடந்து கொண்டிருந்தது. நள்ளிரவை நெருங்குகையில் வேடன் தூக்கத்தில் மயங்கினான்.  அப்போது கரடி சொன்னது. வேடனே! நீ தூக்கத்தில் மயங்கி கீழே விழுந்தால் புலி உன்னை கொன்றுவிடும்! நீ என் தொடையில் தலை வைத்து உறங்கு! நான் உன்னை பற்றிக் கொள்கிறேன்! என்றது.
  வேடனும் கரடியின் தொடைமீது தலை வைத்துப் படுத்துக் கொண்டான். உடனே புலிக்கு கோபம் வந்து கரடியை வசை பாடியது. இனத் துரோகியே! உன் பகைவனுக்கு உதவுகிறாயே! இப்போது கூட ஒன்றுமில்லை! உறங்கும் அவனைத் தள்ளிவிடு! போதும்!” என்று சொன்னது.
    “ நம்பி வந்தவனை கைவிட மாட்டேன்! வேடன் ஆயிரம் கொடியவனாக இருந்தாலும் இன்று அவன் என் விருந்தாளி. அவனை தள்ளிவிட முடியாது ”என்று மறுத்தது.
  நேரம் கடந்தது இப்போது வேடன் முழித்துக் கொண்டான். கரடிக்கு அசதியாக இருந்தது. வேடனே! இரவெல்லாம் கண் விழித்ததில் அசதியாக இருக்கிறது. நான் உன்மீது தலைவைத்து படுக்கிறேன்! என்னைப் பிடித்துக் கொள்! கவனம்! கொஞ்சம் சிதறினாலும் புலி கொன்றுவிடும்! என்று சொன்னது.
  வேடன் மடியில் கரடி படுத்துக் கொண்டது. தூங்கியும் விட்டது. புலி இப்போது வேடனிடம் சொன்னது.

  “ வேடனே! நான் மிகுந்த பசியோடு உள்ளேன்! எனக்கு கட்டாயம் உணவு தேவை! அது நீயாக இருந்தால் என்ன? கரடியாக இருந்தால் என்ன? இந்த கரடி உன்னை கொல்லாமல் இருக்கும் என்பதற்கு என்ன உத்திரவாதம்! விடிந்த பிறகு உன்னை கொன்றுவிட்டால் என்ன செய்வாய்? உன்னிடம் ஆயுதம் எதுவும் இல்லை அல்லவா? பசியோடு இருப்பவனுக்கு பழையது கிடைத்தால் என்ன பலகாரம் கிடைத்தால் என்ன? எல்லாம் ஒன்றுதான்! நீ கரடியைத் தள்ளிவிடு! நான் அதை தின்றுவிடுகிறேன்! அப்புறம் சென்று விடுவேன். நீயும் காலையில் தைரியமாக வீட்டுக்கு போகலாம்” என்றது.
 வேடன் நன்றி மறந்தான். அவன் தான் கொலைக்காரனாச்சே! தனக்கு இடம் கொடுத்து உதவிய கரடியை அதன் உதவியை மறந்தான். புலியின் மயக்க பேச்சில் மதி மயங்கி கரடியை பிடிச்சு கீழே தள்ளினான்.
  கீழே விழுகையில் கரடி சுதாரித்துக் கொண்டது. பக்கத்து கிளையை தாவிப் பற்றிக் கொண்டது. பின்னர் விடுவிடுவென மேலே ஏறியது.
  வேடனுக்கு இப்போது கால்கள் நடுங்கின. கீழே புலி! கரடி வேறு மேலே வருகிறது! அதை நாம் கீழே தள்ளி விட்டிருக்கிறோமே! அந்த கோபத்தில் அது நம்மை கொன்றுவிடும் என்று அஞ்சி நடுங்கினான்.
    மேலே வந்த கரடி, வேடனைப் பார்த்து சொன்னது, நண்பா! அஞ்சாதே! நீ வேண்டுமானால் நன்றி மறந்திருக்கலாம்! நம்பிய என்னை நன்றி மறந்து புலிக்கு உணவாக கீழே தள்ளினாய்! அது உனது குணம். என் குணம் அதுவன்று. நீ என் இருப்பிடம் வந்த அடைக்கலப் பொருள்! விருந்தாளி! உன்னைக் கொல்லவும் மாட்டேன்! புலிக்கு விருந்தாக அனுப்பவும் மாட்டேன்! விடியும் வரை தைரியமாக நீ இங்கே  தங்கலாம்! நீ செய்த பிழையை நான் மன்னித்துவிட்டேன்! நீ பயப்படாதே! என்றது.
    வேடன் அப்போதே செத்துப் போய் விட்டான். தலை குனிந்தவாறே!  கரடியாரே! கொடூரமான கொலைக்காரனான என்னையும் காத்து மன்னித்து அருளினீர்! நான் சிறியவன் ஆனேன்! என்று கதறினான்.
புலி ஏமாந்து போனது! விலங்கானான் மனிதன்! மனிதனானது கரடி!

(செவிவழி கதை)
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

    

Comments

  1. எங்களைக் குழந்தைகளாக்கிவிடுகின்றன உங்களது கதைகள். நன்றி.

    ReplyDelete
  2. அருமையான கதை....

    ReplyDelete
  3. அருமையான கதை சுரேஷ்! என்னதான் பெரியவர்கள் ஆனாலும் இது போன்ற பாப்பா கதைகளைப் படிப்பதிலும் சுவாரஸ்யம் இருக்கிறதுதான்...நம்மை மறந்து நாமும் குழந்தைகளாகிவிடுகிறோம்...நல்ல கதை..

    ReplyDelete
  4. நல்ல கதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  5. படிச்சதுனாலும் உங்கள் எழுத்துத் திறமை மீண்டும் படிக்க வைத்தது.

    ReplyDelete
  6. நல்ல கதை...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!