குஷ்பு பெயர்ச்சியும்! இந்தியரின் மேஜிக்கும்! கதம்ப சோறு பகுதி 40

கதம்பசோறு பகுதி 40


அம்மா உப்பு அவசியமா?

   தமிழக அரசு அடுத்த வியாபாரமாக அம்மா உப்பை விற்கத்துவங்கிவிட்டது. அம்மா உணவகங்கள், அம்மா மினரல் வாட்டரைத் தொடர்ந்து இந்த உப்பு விற்பனை துவங்கி உள்ளது. சந்தைவிலையைவிட குறைந்த விலையில் செறிவூட்டப்பட்டு விற்கப்படுகிறது இதெல்லாம் சரிதான். ஆனால் இந்த உப்பு விற்பனை தேவையா என்பதுதான் கேள்வி. ஓர் அரசாங்கத்திற்கு எத்தனையோ வேலைகள் இருக்க இப்படி வியாபாரத்தில் இறங்க வேண்டிய அவசியம் என்ன வந்தது என்று தெரியவில்லை. ஒருகாலத்தில் வண்டிகளில் கூவிக் கூவி உப்பு விற்பார்கள். அந்த வண்டிக்காரர்கள் இப்போது காணாமல் போய்விட்டார்கள். மக்களுக்கு நல்ல உப்பு தேவை என்பது போலவே பல்வேறு தேவைகள் இருக்கின்றன. அதையெல்லாம் தராத அரசு உப்பு மட்டும் விற்க முன்வந்துள்ளது வேடிக்கையாக உள்ளது. அப்படியே விநியோகிக்க வேண்டுமானால் ரேசன் கடைகள் மூலம் கார்டுக்கு ஒரு பாக்கெட் என்று விநியோகித்து செல்வதை விட்டு இப்படி வியாபாரத்தில் குதித்துள்ளது. இது போன்ற திறமையான? யோசனைகளை அம்மாவின் காதில் ஓதுவது யாரோ தெரியவில்லை!

குஷ்பு பெயர்ச்சி!

    குருபெயர்ச்சி முடிந்த உடனே திமுகவில் குஷ்பு பெயர்ச்சியும் நடந்துவிட்டது. தலைவரால் இந்த பெயர்ச்சியை தடுத்து நிறுத்த முடியவில்லை. திமுகவில் நடிகர்கள் இணைவதும் விலகுவதும் சாதாரணமான ஒன்றுதான் என்றாலும் பல்வேறு தோல்விகளில் சிக்கி தள்ளாடும் நிலையில் கழகம் இருக்கும் சமயம் அதன் நட்சத்திர பேச்சாளர் தன்னுடைய உழைப்பு ஒருவழிப்பாதையில் செல்வதால் விலகுவதாக அறிவித்தது கொஞ்சம் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. என்னைப் பொறுத்தவரை சினிமா நட்சத்திரங்களின் அரசியல் அவர்களை காப்பாற்றிக் கொள்ள அவசரகதியில் எடுக்கும் ஒரு நிலைப்பாடு என்பதே! குஷ்புவும் அவ்வாறே! சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறிவிட்டு அதனால் எழுந்த பின்விளைவுகளால் அச்சம் அடைந்து கழகத்தை நாடினார். அங்கும் அவரது வாய் சும்மா இருக்கவில்லை! ஜனநாயகம் அது இது என்று பேசி வாங்கிக் கட்டிக்கொண்டார். ஏதாவது பதவி கிடைக்கும் என்று பார்த்தார். எதுவும் கிடைக்கவில்லை! தொல்லைகள்தான் தொடர்ந்தன. இப்போது விலகி இருக்கிறார் அவ்வளவுதான். வேறோர் கட்சி பதவி கொடுத்து அழைத்தால் அங்கே செல்லுவார். அவ்வளவுதான் அவர்களின் நிலைப்பாடு.

சென்னையில் ஒருநாள்!

     சென்னையில் ஒருநாள் என்ற படம் பார்த்திருப்பீர்கள். அந்த படம் நிஜ சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. அதே போன்று இப்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. மூளைச்சாவு அடைந்த வாலிபர் ஒருவரின் இதயம் சென்னை அரசு பொது மருத்துவ மனையில் இருந்து அடையார் மலர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவந்த மும்பையை சேர்ந்த பெண்ணுக்கு பொருத்தப்பட்டு சாதனை ஆபரேசன் செய்துள்ளனர்.
   பழையனூரை சேர்ந்த சுகாதார செவிலியர் ராஜலட்சுமியின் மகன் லோகநாதன் விபத்தொன்றில் படுகாயம் அடைந்து சென்னை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இவர் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் கூறிவிட்டனர்.  உடல் உறுப்பு தானங்கள் குறித்து டாக்டர்கள் எடுத்துரைக்க செவிலியரான ராஜலட்சுமியும் அவரது உறவினர்களும் சம்மதிக்க லோகநாதனின் உடல் உறுப்புகளான கண்கள், இதயம், கிட்னி, கல்லீரல் தோல்கள் அகற்றப்பட்டது. ஒரு இதயம் அகற்றப்பட்ட நான்கு மணி நேரத்தில் மற்றொரு உடலில் பொறுத்தப்பட வேண்டும். இந்த நிலையில் மலர் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்றுவந்த ஹவோவிக்கு இதயம் பொறுத்த முடிவு செய்து ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டது. இரு மருத்துவ மனைகளுக்கு இடையே பதினோறு கிலோ மீட்டர் தூரம், பதினோறு சிக்னல்கள், போக்குவரத்து போலிசாரின் துணையோடு  ஆம்புலன்ஸ் 13 நிமிடத்தில் மலர் மருத்துவமனையை அடைந்தது. அங்கு வெற்றிகரமாக இதயம் பொறுத்தப்பட்டது. இந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை கதிர்வேல் என்ற டிரைவர் ஓட்டினார். சாதனை படைத்த மருத்துவக்குழுவிற்கும் தானம் அளித்த குடும்பத்தினருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

வில்லங்க சான்றிதழை ஆன் லைனில் பார்க்கலாம்!

    அம்மா அரசு அவ்வப்போது சில உருப்படியான திட்டங்களையும் செய்து வருகிறது! அதில் ஒன்று இது. பதிவுத்துறையில் பாதுகாக்கப்பட்டு வரும் வில்லங்க சான்று விவரங்களை கட்டணமின்றி அத்துறையின் இணையதளத்தில் பார்க்கும் வசதியை முதல்வர் திங்களன்று துவக்கி வைத்தார். மேலும் 9.2 கோடியில் கட்டப்பட்டுள்ள 18 சார்பதிவாளர் அலுவலகங்களையும் திறந்துவைத்தார். www.tnreginet.net. என்ற இணைய தள முகவரியில் இந்த வசதியை பெறலாம். இதனால் சார் பதிவாளர் அலுவலகம் சென்று அல்லல் படவேண்டிய தொல்லை இனி இல்லை! உருப்படியான காரியம்! வாழ்த்துக்கள்!.

என் நூலகம்!
  தாத்தா சொன்ன குட்டிக்கதைகள்


ஆசிரியர்: திருமுருக கிருபானந்தவாரியார்.
 வெளியீடு: குகஸ்ரீ  வாரியார் பதிப்பகம்,132/107 சிங்கண்ணத் தெரு
சிந்தாதிரிப்பேட்டை, சென்னை- 2

 திருமுருக கிருபானந்த வாரியாரை அறியாதவர்கள் இருக்க முடியாது. உலகமெங்கும் சென்று பக்திமனம் பரப்பிய இந்த அடியார் தனது சொற்பொழிவுகளில் கூறும்கதைகள் அத்தனை சுவையானவை. இந்த கதைகளை நமது தாத்தா பாட்டிகள் கூட நமக்குச் சொல்லியிருக்கலாம். ஆனால் வாரியாரின் வாய்வழியில் அந்த கதைகளைக் கேட்கும் போது அவற்றின் சுவையே தனி. தாத்தா சொன்ன குட்டிக்கதைகள் என்ற இந்த புத்தகத்தில்  வாரியாரின் 81 குட்டிக்கதைகள் இருக்கின்றன. சில சிறுகதை என்ற அளவிலும் இருக்கின்றன. புராணங்கள், இதிகாசங்கள், நகைச்சுவை, நாட்டுப்புற இலக்கியம் என்று பல்வேறு தலைப்புக்கள் கலந்து குட்டிக்கதைகள் நம்மை கவர்கின்றன. வாரியாரின் பேச்சு நடையிலேயே கதைகளை தொகுத்து தந்திருப்பது இன்னும் சுவை கூட்டுகிறது. பல அறியாத அற்புத தகவல்களையும் கூட தெரிந்து கொள்ள முடிகிறது. ரஜினி நடித்த அருணாசலம் படத்தில் ஒரு காமெடி வரும். செந்தில் பெண் பார்க்கச்செல்வார். அப்போது ரஜினியின் பட்டு வேட்டியை அணிந்து செல்வார். இதுல யாரு மாப்பிள்ளை என்று கேட்பார்கள் வழியில் பார்ப்பவர்கள். இவர்தான் மாப்பிள்ளை! ஆனா இவர் போட்டிருக்கிறது என் வேட்டின்னு சொல்லுவார். இந்த காமெடி வாரியாரின் கதையில் இருந்துதான் எடுத்தாளப்பட்டிருக்கிறது என்கிறார் பதிப்பாசிரியர். அதற்கெற்ற ஒரு கதையும் உள்ளது. இப்படி பல சுவையான கதைகள் உள்ள புத்தகம்.
 பக்கங்கள் 128. விலை ரூ 30.

கிச்சன் கார்னர்:
  டூ இன் ஒன் சப்பாத்தி


தேவையான பொருள்கள்:  சர்க்கரை இல்லாத ப்ளெயின் கோவா 100கிராம். முந்திரிபருப்பு 20, பாதம்பருப்பு 20, காய்ந்த திராட்சை 10, கொப்பரைத்துருவல் ஒரு கப், கோதுமை மாவு ஒரு கப், தண்ணீர், உப்பு, சர்க்கரைத்தூள், எண்ணெய், தேவையான அளவு.
  பூரணம் தயாரிக்கும் முறை: கோவா, பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம், காய்ந்த திராட்சை, கொப்பரைத்துருவல், சர்க்கரைத்தூள் எல்லாவற்றையும் பாத்திரத்தில் போட்டுக் கலந்தால் பூரணம் ரெடி.
தயாரிக்கும் முறை (ஒன்று) கோதுமை மாவை உப்பு போட்டு கலந்து தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். சிறிய சப்பாத்திகளாக இட்டு அதனுள்  பூரணத்தை வைத்து மூடி மீண்டும் சப்பாத்தி இட்டு கல்லில் நெய்விட்டு சுட்டு எடுக்கவும்.
தயாரிக்கும் முறை ( இரண்டு)
   சிறிய பூரிகளாக தேய்த்து அதனுள் பூரணத்தை வைத்து பூரிகளாக இட்டு பொரித்தெடுத்து மேலே சிறிது சர்க்கரைத்தூளை தூவிவிடவும்.

(விஜயா ராமகிருஷ்ணன் என்பவர் மங்கையர் மலரில் எழுதிய குறிப்பு)  குட்டீஸ்களுக்கு ஸ்கூல் திறந்துட்டாங்க இல்லே அவங்களுக்கு விதவிதமா செஞ்சி கொடுக்க உதவும்னு பகிர்ந்துகிட்டேன்! செய்து கொடுத்து பார்த்து பீட் பேக் சொல்லுங்களேன்!

டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்!

   வேர்க்குரு இருப்பவர்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் சைனா களிமண் வாங்கி சிறு உருண்டைகளாக எடுத்து நீரில் போட்டு கரைத்து வேர்க்குரு மீது தடவி வந்தால் வேர்க்குரு மறைந்துவிடும்.

பித்த வெடிப்பு உள்ளவர்கள் இரவில் படுக்கப் போகும் முன் காலை சுத்தம் செய்து போரிக் பவுடரை தேங்காய் எண்ணெயில் குழைத்து வெடிப்பு பகுதியில் பூசி மறுநாள் காலையில் நன்கு கால்களை தேய்த்து கழுவி வர விரைவில் குணமாகும்.

வெள்ளைத்துணிகளை துவைக்கும் போது தண்ணீரில் சிறிது டேபிள் சால்ட் சேர்த்துக்கொண்டால் துணிகள் வெள்ளை வெளேர் என்று ஆகும்.

வெயிலில் அலைந்து வேலை பார்ப்பவர்கள் தினமும் கேரட் ஜூஸில் தேன் கலந்து சாப்பிட்டால் முகம் பொலிவு பெறும்.

சமையல் எரிவாயு கசிகிறதா என்று பார்க்க சோப்புத்தண்ணீரை பயன் படுத்தலாம். சோப்பு கலந்த தண்ணீரில் குழாயை வைத்தால் கசிவு ஏற்படின்  குமிழ்கள் தோன்றும்.

ஓமத்தை சின்னத்துணியில் கட்டி முடி போட்டு துணியை கசக்கி மூக்கில் இழுத்தால் சளி தொந்தரவு இருக்காது.

 இவர்களை அறிந்துகொள்வோம்!

தன் தளராத முயற்சியினால் கலெக்டரான பார்வையற்ற மாணவி பற்றி அறிய இங்கு:  தன்னம்பிக்கை தந்த பரிசு:
 65 வயதிலும்  ரத்த தானத்தில் சதம் அடித்த சீனிவாசன் பற்றி இங்கு: ரத்த தானத்தில் சதமடித்த சீனிவாச தாதம்-
படிச்சதில் பிடிச்சது!

இந்தியரின் மேஜிக்!
  

    இந்தியரும் அமெரிக்கரும் ஒரு சாக்லேட் கடைக்குள் நுழைந்தனர். அனைவரும் பிஸியாக இருந்த நேரம் அமெரிக்கர் 3 சாக்லெட் பார்களை யாருக்கும் தெரியாமல் எடுத்து தனது பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டார்.சிறிது நேரம் கழித்து இருவரும் கடையை விட்டு வெளியே வந்தனர்.
   அமெரிக்கர் தான் யாருக்கும் தெரியாமல் எடுத்த மூன்று சாக்லெட் பார்களையும் தனது பாக்கெட்டிலிருந்து வெளியே எடுத்து இந்தியரிடம் காட்டினார். “பார்த்தியா… யாருக்கும் தெரியாம 3 சாக்லெட் பார்களை எடுத்துட்டு வந்துட்டேன்” என்று பெருமை அடித்துக் கொண்டார். அதோடு “உன்னால் இதைவிட பெரிசா ஏதாவது செய்ய முடியுமா?”என்று இந்தியரிடம் சவால் விட்டார்.
   “உள்ளே வா… உனக்கு உண்மையான திருட்டுன்னா என்னன்னு காட்டுறேன் என்று சொல்லி அமெரிக்கரை சாக்லேட் கடையினுள் அழைத்துச்சென்றார் இந்தியர்.
   விற்பனை கவுண்டரில் இருந்த பையனிடம் சென்ற இந்தியர், அவனிடம், நான் ஒரு வித்தை காட்டுகிறேன் பார்க்கிறாயா?”என்று கேட்டார்.
       பையனும் சரியென்று தலையாட்ட, கவுண்டரில் இருந்த ஒரு சாக்லெட் பாரை எடுத்து தின்று முடித்தார். அடுத்து இன்னொரு சாக்லெட்டை எடுத்து தின்று முடித்தார். பிறகு மூன்றாவதாக ஒரு சாக்லேட்டை எடுத்து தின்று தீர்த்தார். கவுண்டரில் இருந்த பையனை இப்போது ஏறிட்டுப்பார்த்தார்.
  கவுண்டர் பையன், இதில் என்ன வித்தை இருக்கிறது? என்றான்.
பொறு! என்ற இந்தியர், “என் ப்ரெண்டோட பாக்கெட்ல செக் பண்ணிப் பாரு. நான் சாப்பிட்ட 3 சாக்லெட் பாரும் அப்படியே இருக்கும்னு அமைதியாக சொன்னார்.
   

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

    

Comments

  1. தேர்தல் வெற்றி இது போன்ற யோசனைகளை இன்னும் வலுவாக்கும் ! கூடிய விரைவில் வால்மார்ட்டுக்கு போட்டியாக அம்மா சூப்பர் மார்க்கெட் ஆரம்பிக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை !

    குஸ்பு பெயர்ச்சி பற்றிய உங்களின் கருத்து மிக சரி !

    சென்னையில் ஒரு நாளும், தளராத முயற்சியில் வென்றவர்களும் மனதை தொட்டது !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    எனது முதல் சிறுகதை : முற்பகல் செய்யின்...

    http://saamaaniyan.blogspot.fr/2014/06/blog-post.html

    தங்களின் கருத்தினை அறிய ஆவலாக உள்ளேன் ! நன்றி

    ReplyDelete
  2. குஷ்பு பெயர்ச்சி - தலைப்பு அருமை. எப்படி, இப்படியெல்லாம் உங்களால் யோசிக்க முடிகிறது.

    டிப்ஸ் அருமை.

    இந்தியரின் மாஜிக் - ரசித்து சிரித்தேன்.

    ReplyDelete
  3. இந்தியரின் மேஜிக் அருமை நண்பரே....

    ReplyDelete
  4. ஹாஹா அனைத்தும் அருமை என்றாலும் சாக்லேட் மிக அருமை..

    ReplyDelete
  5. அன்புள்ள திரு.சுரேஷ் ஐயா.. வணக்கம்..

    கதம்பசோறு நல்ல ருசி..:)

    மூளைச்சாவு இளைஞரின் இதய தானம், பார்வையற்ற மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு நனவான லட்சிய கதை போன்றவை இன்றைய இளைஞர்கள் அவசியம் வாசிக்க வேண்டியவற்றுள் ஒன்று..

    பகிர்ந்தமைக்கு நன்றி..

    ReplyDelete
  6. உடலுறுப்பு தானம் செய்ய முன்வந்த அந்த இளைஞரின் தாயார் பாராட்டுக்குரியவர்.

    கடைசி சாக்லெட் ஜோக் - :))))

    கதம்பசோறு மிகவும் ருசி.... தொடரட்டும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!