துன்பம் எப்படியெல்லாம் துரத்துகிறது? தித்திக்கும் தமிழ்! பகுதி 6
துன்பம் எப்படியெல்லாம்
துரத்துகிறது? தித்திக்கும் தமிழ்! பகுதி 6
துன்பம் இல்லாத மனிதன் யார்?
இன்பம் இல்லாத மனிதர்கள் கூட இருப்பார்கள் துன்பம் இல்லாதவர்கள் இல்லை!
எல்லோருக்கும் எதோ ஒரு கஷ்டமோ துயரமோ இருக்கத்தான் செய்கிறது.
பல கோடி அதிபனுக்கும் ஓர் துயரம் இருக்கிறது!
இந்த கோடிகளை காப்பாற்றவேண்டுமே என்ற பயம் இருக்கிறது! அதற்காக துயரப்படுகின்றான்.
தனக்குப் பின் இந்த செல்வம் என்ன ஆகுமோ? என்று துயரப்படுகின்றான்.
ஒன்றுமே இல்லாத ஏழைக்கும் துன்பம் இருக்கிறது!
இன்றைய பொழுது எப்படி போகுமோ? அடுத்த வேளைக்கு உணவு கிடைக்குமா? என்று
துயரப்படுகின்றான். இருந்தாலும் துன்பம் இல்லாவிட்டாலும் துன்பம்! பிறந்தாலும்
துன்பம்! இறந்தாலும் துன்பம்.
என்னப்பா எப்படி இருக்கே? என்று
கேட்டுப்பாருங்கள்! ஏதோ இருக்கேன்! என்று விட்டேற்றியாக பதில் வரும் பலரிடம்
இருந்து. அனைத்தையும் எதிர்மறையாகவே சிந்தித்து எதிர்மறையாகவே வாழ்ந்து தானும்
துன்பத்தில் உழன்று பிறரையும் துன்பத்தில் ஆழ்த்தி விடுவார்கள் இவர்கள்.
சிலரோ இப்படி எதிர்மறை எண்ணங்களை
விட்டொழித்து எவ்வளவு துன்பம் வந்தாலும் அதில் இருக்கும் நன்மைகளை
எடுத்துக்கொள்வர். இதற்கு ஒரு முல்லாக் கதை கூட சொல்லப்படுவது உண்டு.
முல்லாவிடம் ஒரே ஒரு நோஞ்சான் குதிரை
இருந்தது. அனைவரும் இந்த குதிரை எதற்கு விற்றுவிடு! என்று சொன்னார்கள். அந்த
குதிரையும் ஒருநாள் காணாமல் போய்விட்டது. உடனே எல்லோரும் துக்கம் விசாரித்தார்கள்.
அடடே! அந்த குதிரையை அப்போதே விற்றிருந்தால் கொஞ்சம் பணமேனும் கிடைத்து இருக்கும்
இப்போது காணாமல் போய்விட்டதே என்று சொன்னார்கள். முல்லா இப்பொழுதும் பதில்
பேசவில்லை! சிலநாள் கழித்து அந்த குதிரை ஒரு நல்ல குதிரையுடன் வந்து சேர்ந்தது.
இப்போது அண்டை மனிதர்கள் முல்லா அதிர்ஷ்டக் காரன்! ஓடிப்போன குதிரை இன்னொரு நல்ல
குதிரையை அழைத்து வந்து விட்டது என்று பாராட்டினார்கள். இப்போதும் முல்லா ஒன்றும்
சொல்லவில்லை! அந்த புதிய குதிரையின் மீது சவாரி செய்ய ஆசைப்பட்ட முல்லாவின் மகன்
சவாரி செய்கையில் கீழே விழுந்து அடிபட்டுவிட்டான். உடனே பலரும் அடடே!
இப்படியாகிவிட்டதே! எல்லாம் இந்த முரட்டுகுதிரையால் வந்த வினை! என்றனர். இப்போதும்
முல்லா சும்மாவே இருந்தார். நாட்டில் போர் வந்தது. எல்லா இளைஞர்களும் போருக்கு
கட்டாயம் செல்லவேண்டிய சூழல்! முல்லாவின் மகன் அடிப்பட்டு இருந்ததால் போருக்கு
செல்லாமல் வீட்டில் இருந்தான். இப்போது பக்கத்து வீட்டினர் முல்லாவின் மகன்
அதிர்ஷ்ட காரன்! என்றனர். இப்போதும் முல்லா மவுனமாக இருந்தார்.
இப்படித்தான் மனிதர்கள் இருக்கின்றனர். நம்மை
சுற்றி நடப்பது எதுவும் நம்மைக் கேட்டு நடப்பது இல்லை! பின்பு ஏன் வருத்தமும்
மகிழ்ச்சியும்.
வள்ளுவர் கூட துன்பம் வரும்போது சிரிக்க
சொல்கிறார். ஆனால் ஒருவனுக்கு இத்தனை துன்பம் வந்தால் சிரிக்க முடியுமா?
இராமசந்திர கவிராயரின் இந்த பாடலை படியுங்கள் பின்பு சிரிக்க முடியுமா? என்று
யோசியுங்கள்!
ஆவீன
மழைபொழிய இல்லம் வீழ
அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாவ
மாவீரம் போகுதென்று விதைகொண் டோட
வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளச்
சாவோலை கொண்டொருவன் எதிரே செல்லத்
தள்ளவொண்ணா விருந்துவரச் சர்ப்பந் தீண்டக்
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்
குருக்கேளா தட்சணைகள் கொடுவென்றாரே
அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாவ
மாவீரம் போகுதென்று விதைகொண் டோட
வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளச்
சாவோலை கொண்டொருவன் எதிரே செல்லத்
தள்ளவொண்ணா விருந்துவரச் சர்ப்பந் தீண்டக்
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்
குருக்கேளா தட்சணைகள் கொடுவென்றாரே
ஒரு மனிதனை எப்படியெல்லாம்
துன்பங்கள் துரத்துகின்றன பாருங்கள். இத்தனை துன்பங்கள் துரத்தினால் பாவம்
அவனும்தான் என்ன செய்வான் பாவம்?
ஒருவனுடைய வீட்டில் பசு கன்று
போடுகிறது. அந்த சமயம் மழை பொழிந்து இல்லம் இடிந்து விழுகிறது. அவனுடைய மனைவிக்கோ
திடீரென உடல்நலம் கெடுகிறது.
அதோடு விட்டதா? அவனுக்கு என்று
ஒரு அடிமை அவனும் செத்துப் போகிறான்.விதைப்பதற்கு வைத்திருந்த விதைகளும் காணாமல்
போகின்றது. இத்தனை போதாது என்று அவனை கடன்காரர்கள் வேறு வழியில்
மறித்துக்கொள்கிறார்கள். அந்த சமயத்தில் யாரோ இறந்த செய்தியை ஒருவன் எதிரில்
கொண்டுவருகிறான். அப்போதுதான் மறுக்க முடியாத விருந்து ஒன்று வருகிறது.
விருந்துக்கு செல்ல முடியாமல் பாம்பு தீண்டி விடுகிறது. அந்த சமயம் பார்த்து அரசன்
வரி கேட்கிறான். இதோடு குருக்கள் வேறு
வந்து தட்சணைகள் கொடு என்று கேட்கிறாராம்.
இத்தனை துன்பங்கள்
துரத்தினால் பாவம் அந்த மனிதன் சிரிக்க முடியுமா? பாடல்சிரிக்க வைத்தாலும்
சிந்திக்கவும் தூண்டுகிறது அல்லவா?
சிந்தித்து பின்னூட்டங்கள்
இட்டு நிரப்புங்கள்! மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்! நன்றி!
அய்யா அருமையான பழம்பாடலை எடுத்துக்காட்டியிருக்கிறீர்கள். இந்தப் பாடலைப் படித்த தாக்கத்தில், நடுத்தர வர்க்கத்தின் துயரமாக இதையே மாற்றி,
ReplyDeleteகாப்பித்தூள் கடைமாற்றி வாங்க, வழியில்
............காய்கறிக்கா ரன்பார்க்க, பல்லைக் காட்ட,
“சாப்பாடு இல்லைகேஸ் இல்லை மதியம்
............சமாளியுங்கள் எனமனைவி முகத்தைப் பார்க்க,
மோப்பெட்டில் ரிசர்வுவர பிள்ளைமுணு முணுக்க.
............மூன்றாம்தவணை டீ.வி. காரன் திட்ட,
நாய்ப்பட்ட வாழ்க்கையடா நடுத்தர வாழ்க்கை,
...........நாளொருபொழு தாகிவரும் நடுத்தெரு வாழ்க்கை என எழுதினேன். இது எனது “புதிய மரபுகள்“ தொகுப்பிலும் உள்ளது. நினைவைக் கிளர்த்தியமைக்கு நன்றி. த.ம.(1)
அய்யா என்ன தமிழ்மணப் பட்டை இணைக்கவில்லையா? விரைந்து இணைக்க வேண்டுகிறேன். கடைசி வரி முதற்சீர் “குருக்களோ“ என்றோ, “குருக்கள்வந்து” என்றோ படித்த நினைவு
Deleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா! உங்களின் பாடலும் ரசிக்க வைக்கிறது! மிக அருமையாக இன்றைய நடுத்தர குடும்பஸ்தனை காட்சி படுத்தி இருக்கிறீர்கள்! நன்றிஐயா! உங்களின் மலேசிய பயணம் சிறக்க வாழ்த்துக்கள்!
ReplyDeleteகண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதத்தில் இந்தப் பாடலை குறிப்பிட்டிருந்தார் . நல்ல பகிர்வு. முல்லா கதையும் அருமை
ReplyDeleteமுல்லாவின் கதை வாழ்வியல் உண்மையை உணர்த்தியது. அருமை.
ReplyDeleteஅருமையான பாடல் நண்பரே
ReplyDeleteநன்றி
முல்லாவின் கதை சரியான உதா"ரணம்"...
ReplyDeleteமுல்லா கதையும், இராமசந்திர கவிராயர் பாடலும் அருமை.
ReplyDeleteமுல்லாவின் கதை அருமை !!!
ReplyDeleteஇரண்டாவது பாடல்பாவம் அவர் ..என்னதான் செய்வார் இவ்ளோ சோதனை வந்தா
இராமச் சந்திரகவிராயரின் நல்லதொரு பாடல்...துன்பங்கள் வரும் பொது இதுவும் கடந்து போகும் என்றுதானே ஓட்டுகின்றோம்...
ReplyDelete.முல்லாவின் கதையும் அருமை.
"//இப்படித்தான் மனிதர்கள் இருக்கின்றனர். நம்மை சுற்றி நடப்பது எதுவும் நம்மைக் கேட்டு நடப்பது இல்லை! பின்பு ஏன் வருத்தமும் மகிழ்ச்சியும்.//' - அருமையான வாழ்க்கை தத்துவம். இதனை கடைபிடிப்பது தான் சிரமமே.
ReplyDeleteபட்டக் காலிலே படும். கேட்ட குடியே கெடும் என நம் முன்னோர்கள் சொன்னது இதைத்தானோ....?
ReplyDeleteஒருவனுக்கு துன்பம் எப்படி வரும் எப்போது வரும் என்பது யாருக்குமே தெரியாது. அருமையான பதிவு
ReplyDeleteநானும் அர்த்தமுள்ள இந்து மதத்தில் படித்தது. மறுபடி காணக்கிடைத்ததில் மகிழ்சசி.
ReplyDeleteஅரிய நூலிலிருந்து அரிய செய்தியைத் திரட்டிப் பகிர்ந்தமைக்கு நன்றி. துன்பத்தை எதிர்கொள்வதற்கு மனத்தில் துணிவுவேண்டும். அந்தத் துணிவு அனைவருக்கும் அமைவதில்லை. தாங்கள் உரிய கவிதைகளுடன் இதனைப் பொருத்திப் பார்த்தது சிறப்பாக உள்ளது.
ReplyDelete