தித்திக்கும் தமிழ்! பகுதி 5 இல்லாதவனிடம் இரக்காதே!

தித்திக்கும் தமிழ்! பகுதி 5 இல்லாதவனிடம் இரக்காதே!


  புலவருக்கு அழகு பொய்யுரைத்தல் என்பர். இந்தகாலத்தில் எல்லோருமே புலவர்கள் ஆகிவிட்டார்கள். எதிலும் பொய் எங்கும் பொய்! அதிலும் முகஸ்துதி இருக்கிறதே! அதை எல்லோரும் சரியாக புரிந்து கொண்டு இருக்கிறார்கள்.
    ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாக இரு! இப்படி ஒரு பழமொழி கூட இருக்கிறது. யாரை எப்படி புகழ்ந்து தன் காரியத்தை சாதித்துக்கொள்வது என்றே சில நபர்கள் அலைகின்றனர். ஒரு காலத்தில் புலவர்கள்தான் இப்படி கவிதையிலே பொய் புனைந்து கவிதையை அழகுபடுத்தி மன்னனை மகிழ்வூட்டி பொருள் ஈட்டினார்கள்.
    இன்றோ எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்ற நிலை! இந்த ஜனநாயகத்தில் பணநாயகமும் பிரதானமாய் இருக்கிறது. எல்லாவற்றிலும் பணம்! பணத்திற்காகவும் பதவிக்காகவும் எப்படியெல்லாமோ காக்காய் பிடிக்கிறார்கள்.
     ஆட்சியாளர்களும் கவிஞர்களுக்கு மயங்கினால் பரவாயில்லை! இந்த மாதிரி கழிசடை புகழ்ச்சிகளுக்கு மயங்கிக் கிடக்கிறார்கள். இன்று சுவரொட்டிகளிலும் பேனர்களிலும் அலங்காரவளைவுகளிலும் திரைப்படங்களிலும் வரும் அடைமொழிகள் இன்று தோன்றியது அல்ல! என்ன காலத்திற்கு ஏற்ப கொஞ்சம் உருமாறி வந்துள்ளன அவ்வளவுதான்.

   இப்படி புகழ்ச்சிக்கு மயங்கிய மன்னர்கள், வள்ளல்கள் அக்காலத்தே மட்டுமல்ல இக்காலத்திலும் இருக்கிறார்கள். சிலர் எவ்வளவுதான் புகழ்ந்தாலும் முகத்திலே ஒரு புன்சிரிப்புக்கூட காட்டாது இருக்கட்டும் இருக்கட்டும் என்று கடந்து போய்விடுவார்கள்.
   சிலரோ இந்திரனே சந்திரனே என்று புகழ்ந்தால் போதும்! அப்படியே தன் கையில் இருப்பதையெல்லாம் கொடுத்துவிடுவார்கள். புகழ் எல்லோருக்கும் பிடிக்கும் என்றாலும் யாரைப் புகழ வேண்டும் என்பதில் ஒரு வரையறை இருக்கிறது
    ஒன்றுமே ஈயாதவனை வள்ளல் என்றும் மூடனை அறிஞன் என்றும் புகழ்வதால் ஏதாவது பயன் இருக்கிறதா?


இராமச்சந்திர கவிராயர் என்ற புலவர் இப்படித்தான் ஒருவரை அவனிடம் இல்லாததை எல்லாம் இருக்கிறது என்று சொல்லி புகழ்ந்தாராம். ஏதாவது பரிசில் கிடைக்கும் என்று இவ்வாறு புகழ்ந்தும் அவன் இல்லை என்றானாம். அடடா! இல்லாதவனை இருப்பவனென்று புகழ்ந்தது நம் தவறு! என்று வருந்தி அவனை ஏதும் கூறாது சென்று விட்டாராம். இதோ அந்தப்பாடல்!

   கல்லாத வொருவனைநான் கற்றா யன்றேன்
      காடெறியு மறவனைநா டாள்வா யென்றேன்
  பொல்லாத வொருவனைநா னல்லா யென்றேன்
     போர்முகத்தை யறியானைப்புலியே றென்றேன்
  மல்லாரும் புயனென்றேன் சூம்பற் றோளை
     வழங்காத கையனை நான் வள்ள லென்றேன்
   இல்லாது சொன்னேனுக்  கில்லை யென்றான்
     யானுமென்தன் குற்றத்தா லேகின்றேனே!


கல்லாத ஒரு செல்வனை நான் கற்றவனே என்றேன். காட்டிலே விறகு வெட்டும் அவனை நாடு ஆள்வாய் என்றேன். பொல்லாத தீய குணம் பெற்றவனை நான் நல்லவன் என்று புகழ்ந்தேன். போர்க்களத்தையே அறியாத ஒருவனை நீ போர் செய்வதில் புலி போன்றவன் என்றேன். மெலிந்த தோளினை உடையவனை மற்போருக்கு ஏற்ற தோளுடையவனே என்றேன். இதோடு நில்லாமல் பிறருக்கு சிறிதும் ஈயாதவனை வள்ளல் என்றே சொன்னேன். இவ்வாறு பொய்யாக இல்லாததை எல்லாம் சொல்லிய எனக்கு அவன் தன்னிடம் கொடுக்க பொருள் இல்லை என்றான். அப்போதுதான் நானும் என் குற்றத்தை உணர்ந்தேன். இல்லாதானிடம் இரந்து என்ன பயன்? எனவே என் குற்றம் உணர்ந்து பொருள் பெறாமல் திரும்பிச்சென்றேன்.

  வாழ்த்தியும் புகழ்ந்தும் பொருளீட்டுவது புலவர் மரபு. அப்படியும் பொருத்தமிலாரை புகழ்ந்தால் என்ன நடக்கும் என்று இந்த பாடல் அழகாக உணர்த்துகிறது அல்லவா?

முகஸ்துதி நாமும் செய்யக் கூடாது! முகஸ்துதியில் மயங்கவும் கூடாது அல்லவா?

மீண்டும் அடுத்த பகுதியில் சந்திப்போம்! நன்றி!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



Comments

  1. இல்லாது சொன்னேனுக் கில்லை யென்றான்

    இதுதானைய்யா இந்தப்பாடலின் உச்சம்.

    இவர்தானா இராமச்சந்திரக் கவிராயர்.

    நான் இவர் ரசிகன்.
    பகிர்வுக்கு நன்றி அய்யா!

    ReplyDelete
  2. நல்ல பதிவு நண்பரே,,,

    ReplyDelete
  3. ரசித்துப் படித்தேன் நண்பரே
    நன்றி

    ReplyDelete
  4. நல்ல கவிதை
    நன்றி

    ReplyDelete
  5. எதுவும் இல்லாதவரை கவிஞர் ஏன் புகழவேண்டும். கவிஞர் நம்மள வச்சு காமெடி செய்கிறார் என்ற உண்மை தெரிந்து விட்டதால் அவர் எதுவும் கொடுக்கவில்லை..

    ReplyDelete
  6. அருமை! இங்கும் தமிழ் வகுப்பு! சூப்பர்! கற்றுக் கொள்கின்றோம்!.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2