தித்திக்கும் தமிழ்! பகுதி 3 மும்முறை உண்ட ஔவை!

தித்திக்கும் தமிழ்! பகுதி 3 மும்முறை உண்ட ஔவை!


இப்போதெல்லாம் திருமணங்கள் என்பது ஆடம்பரம் ஆகிவிட்டது. பெரிய மண்டபம். ஆயிரக்கணக்கானவர்களுக்கு அழைப்புக்கள். சிறப்பு விருந்தினர்கள், இசை நிகழ்ச்சி, விருந்து என்று பல லட்சங்கள் செலவு பிடிக்கிறது திருமணத்திற்கு.

   மண்டப வாடகையே நாள் ஒன்றுக்கு பல லட்சங்கள் கேட்கும் மண்டபங்கள் பெருகி வருகின்றன. சாமான்யன் நடத்தும் திருமணங்களுக்குக் கூட லட்சக் கணக்கில் செலவாகின்றது. செலவை விடுங்கள். திருமணத்திற்கு அழைக்கிறார்கள். செல்கிறோம். வரவேற்பு நடந்து கொண்டிருக்கும் போதே ஒரு பக்கம் விருந்து நடந்து கொண்டு இருக்கும். நகரத்தின் பெரிய கேட்டரிங் காரார்கள் விருந்து உபசரிப்பில் இருக்க திருமணத்திற்கு உரியவர்களோ எங்கோ இருப்பர். பந்தி நிறைந்திருக்கு அடுத்த பந்திக்கு இடம் போட காத்திருக்கும் ஓர் கூட்டம். எப்போது எழுந்திருப்பான் என்று காத்திருந்து பாய்ந்து அமர்வர் சிலர். இப்படி இலை முன்னே மற்றவர் காத்திருந்தால் எப்படி லயித்து சாப்பிட முடியும்?
   இலை முழுக்க சித்ராண்ணங்களும் பட்சணங்களும் நிறைந்திருக்க அவசர அவசரமாக எதையோ இரண்டை அள்ளி வாயில் போட்டுக்கொண்டு எழுந்து விட வேண்டிய கட்டாயச்சூழல் ஒரு இலைக்கு குறைந்த பட்சம் இருநூறில் இருந்து ஐநூறு வரை செலவு செய்து விருந்து போட அதில் முக்கால்வாசி அப்படியே வீணாக குப்பைக்குச் செல்கின்றது.
    இன்றைய திருமணங்களில் இப்படி டாம்பீகம் குடிகொண்டிருக்க மனுசர்களின் வாத்சல்யம் காணாமல் போய் ஓர் இயந்திரத் தனம் குடி கொண்டுவிட்டது.

   இப்படி ஏழை எளிய நடுத்தர மக்களின் திருமணமே இப்படி என்றால் ஓர் அரசன் வீட்டு திருமணம் எப்படி இருக்கும். எத்தனை பேரை அவன் அழைத்திருப்பான்? எவ்வளவு தடபுடலான விருந்து பறிமாறப்பட்டு இருக்கும்? கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.
   பாண்டியன் வழுதி என்ற மன்னன் வீட்டு கல்யாணத்தில் ஏகப்பட்ட கூட்டம். விருந்துக்கும் நிறைய தள்ளு முள்ளு. பந்திக்கு முந்து என்பார்களே அதனால் எங்கே விருந்து தீர்ந்துவிடப்போகிறது? என்ற நினைப்பில் ஆளாளுக்கு முண்டியடித்து பாய்ந்தார்கள்.
  அந்த கூட்டத்தில் மூதாட்டி ஒருவளும் இருந்தாள். கவிபாடும் மூதாட்டி அவள். மன்னர்களின் மனதிலே நீங்கா இடம் பிடித்த அந்த மூதாட்டிக்கு பந்தியில் ஓர் இடம் கிடைக்கவில்லை. பந்தியில் தள்ளுமுள்ளில் சிக்கி கீழே தள்ளிவிட்டனர்.
   அவரால் இளையவர்களோடு போட்டி போட முடியுமா? பாவென்றால் சரசரவென்று எழுதிவிடுவார். பந்தியிலே முந்த முடியாது ஓர் ஓரத்தில் சென்று சோர்வாக அமர்ந்தார். அவர்தான் ஔவை.

   இந்தக்காலம் மாதிரி அன்று இல்லை! விருந்தை நடத்திய மன்னன் ஒவ்வொருவரையும் விசாரித்துக் கொண்டு இருந்தான். அந்த மன்னன் ஔவையைக் கண்டதும். தமிழ் மூதாட்டியே! விருந்து உண்டீர்களா? விருந்தின் சுவை எப்படி? என்று விசாரித்தான்.
    பசித்திருந்த ஔவை தனது பசியையும் எரிச்சலையும் அடக்கிக் கொண்டு, ‘உண்டேன், உண்டேன், உண்டேன்.. ஆனால் சோறு மட்டும் உண்ணவில்லை!’ என்றார்.
    மும்முறை உண்டதாக சொன்ன ஔவை சோறை உண்ணவில்லை என்கிறாரே! புரியாது விழித்த மன்னன் விளக்கிச் சொல்லுமாறு கூறினான்.
  ஔவையார் பாடினார்.
  
    வண்டமிழைத் தேர்ந்த வழுதி கல்யாணத்து
    உண்ட பெருக்கம் உரைக்கக் கேள் – அண்டி
    நெருக்குண்டேன்; தள்ளுண்டேன்; நீள்பசியினாலே
    சுருக்குண்டேன்… சோறு உண்டி லேன்!

  மன்னா வழுதி! உன் வீட்டு கல்யாணத்தில் நான் உண்ட பெருமையைக் கேள்!  விருந்து கூடத்திலே கூட்டத்திலே சிக்கி நெருக்குண்டேன்! இப்படி நெருக்கி உண்டது போதாது என்று கூட்டத்தினாரால் தள்ளுண்டேன்! வயதான பாட்டியை இதோடு விட்டார்களா என்றால் இல்லை! என்னுடைய நீண்ட பசியினால் வயிறு சுருக்குண்டேன்! இப்படி மூன்று முறை உண்டும்  சோற்றை உண்ணவில்லை! என்றார்.

  மன்னன் பதைபதைத்து போனான்! ஔவையாருக்கு நேர்ந்த பிழைக்கு மன்னிக்குமாறு வேண்டினான். உடனே அழைத்துச்சென்று தன் கையாலேயே உணவு பறிமாறி அவரை பெருமை படுத்தினான்.


வழுதி வீட்டுக் கல்யாணத்திலே கூட்டத்திலே நெருக்குண்டேன்; கீழே தள்ளுண்டேன்: பசி மிகுதியினாலே வயிறு சுருக்குண்டேன் சோறு மட்டும் உண்ணவில்லை என்று மூன்று முறை உண்டதை  துன்பத்தையும் இன்பமாக எள்ளல் நடையில் பாட அதுவும் பாராளும் மன்னனை பாடும் துணிச்சல் அன்றைய புலவர்களுக்கு இருந்தது என்பதே பெருமையன்றோ!

மீண்டும் ஒரு பாடலுடம் அடுத்த வாரம் சந்திப்போம்!

உங்களின் கருத்துக்களை பின்னூட்டத்தில் நிரப்புங்கள்! நன்றி!


Comments

  1. அருமை சகோ ! ஔவைக்கு இந்நிலை என் ஆதங்கமாக இருந்தாலும் அழகான கவிதையும் விளக்கமும் கண்டு மகிழ்ந்தேன். நன்றி தொடர வாழ்த்துக்கள் ....! ஆவலாக உள்ளது மேலும் கேட்க.

    ReplyDelete
  2. அருமை கவி பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. அழகாக பாடலுக்கு அருமையான விளக்கம் அய்யா!
    கடைசி வரி,
    “சோறுண்டிலேன்“
    எனப் படித்ததாக நினைக்கிறேன்.
    அருள் கூர்ந்து அதைமட்டும் சரிபார்த்திடுங்கள்.
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி! என்னிடம் இருந்த புத்தகத்தில் சோறு கண்டிலேன் என்றே இருந்தது. நீங்கள் சொல்வதை பார்க்கும்போது சோறுண்டிலேன் என்பது பொருத்தமாகத் தோன்றுகிறது. ஔவையார் அந்த கல்யாணத்தில் சோற்றை கண்டார் உண்ணத்தான் இல்லை! எனவே உண்டிலேன் என்று மாற்றிவிடலாம் என்று நினைக்கிறேன்! வருகைக்கும் பிழை சுட்டியமைக்கும் மிக்க நன்றி!

      Delete
  4. அருமை தளிர்.. அருமை. எப்படி ஐயா, இந்த மாதிரி நல்ல விஷயம் உங்கள் மனதில்...? நானும் யோசிக்கிறேன்.. யோசிக்கிறேன்... தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க விசு! நீங்க புகழறீங்களா? இல்லை இகழறீங்களா? நானும் யோசிக்கிறேன்! நானும் யோசிக்கிறேன்! இன்னும் புரிபடவில்லை!

      Delete
  5. இலக்கியச் சுவை சொட்டும்
    இனிய பதிவு இது!
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. தொடர் வருகைக்கும் ஊக்கமூட்டும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி!

      Delete
  6. ஆகா
    அற்புதம்
    ஒள்வை மொழி அல்லவா

    ReplyDelete
  7. இல்லேன்னு ஒரே வார்த்தையில சொல்லியிருந்தா சீக்கிரம் சாப்பிட்டிருக்கலாமே? ;)

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்! ஆனா நாம எல்லோரும் சுவைக்க ஒரு பாட்டு கிடைச்சிருக்காது இல்லையா!

      Delete
  8. நல்லதொரு பதிவு நண்பரே,,,, வாழ்த்துக்கள் தங்களை மதுரையில் எதிர்பார்த்தேன்.

    ReplyDelete
    Replies
    1. தவிர்க்க முடியாத காரணத்தினால் மதுரை வரவில்லை! நன்றி நண்பரே!

      Delete
  9. தமிழ் எவ்வளவு சுவையை கொண்டது. மூன்று முறை உண்டும் சோறு உண்ணவில்லை என்று எவ்வளவு அழகாக ஔவையார் பாடியிருக்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. தமிழின் சுவையை பருகப்பருக இனிக்கத்தான் செய்யும்! நன்றி நண்பரே!

      Delete
  10. அருமையான முறையில் குறையைச் சொல்லி இருக்கிறாரே ஔவை....

    அழகான பாடலை பகிர்ந்தமைக்கு நன்றி சுரேஷ்.

    ReplyDelete
  11. அழகான பாடல்
    பதிந்தவருக்கு நன்றிகள் பல.

    அ. ஶ்ரீவிஜயன்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2