தேனுக்கு ஆசைப்பட்ட நரி! பாப்பா மலர்!
தேனுக்கு ஆசைப்பட்ட நரி!
சயனாவனம் என்ற காட்டில்
பல்வேறு விலங்குகள் கூட்டமாக வசித்து வந்தன. இயற்கை எழில் கொஞ்சும் அந்த காட்டில்
ஓங்கி உயர்ந்த மரங்களும் நீரோடைகளும் பசும் புல்வெளிகளும் நிறைந்து இருந்தன.
இதனால் விலங்குகள் உணவிற்கு பஞ்சமின்றி இருந்தன. அதே சமயம் அந்த காட்டினுள் வாழும்
விலங்குகளை மனிதர்களோ பிறரோ துன்புறுத்துவது கிடையாது. வேட்டையாடுதல்
தடைவிதிக்கப்பட்டு இருந்தது. இதனால் விலங்கினங்கள் மிகவும் நிம்மதியாக அந்த
காட்டில் வாழ்ந்து வந்தது.
அந்த காட்டினில் குள்ள நரி ஒன்று வசித்து
வந்தது. அது மிகவும் தந்திரம் கொண்டது. காட்டு ராஜாவான சிங்கத்தின் மந்திரிசபையில்
முக்கிய பதவியில் இருந்தது. சிங்க ராஜாவிற்கே ஆலோசனை வழங்கும் பொறுப்பில்
இருந்ததால் மிகவும் கர்வத்துடன் அது சுற்றிவந்தது.
அதை கண்டாலே மற்ற விலங்குகள் அஞ்சி நடுங்கி
வணக்கம் தெரிவித்தன. அதை மதியாதவர்களை ஏகவசனத்தில் திட்டி அவர்களை தக்க சமயத்தில்
பழிவாங்கிக் கொண்டு இருந்தது நரி. இதனால் நரி வருகிறது என்றாலே மற்ற
விலங்குகளுக்கு கொஞ்சம் அச்சம் தான். அது என்ன சொல்லுமோ? அதன் வாயில் வீணாக
மாட்டிக் கொள்ள வேண்டாமே என்று ஒதுங்கி சென்று கொண்டிருந்தன.
இது நரிக்கு மேலும் கர்வத்தை அளித்தது. தனது
சொந்த தேவைகளுக்குக் கூட மற்றவர்களை எதிர்பார்க்க ஆரம்பித்தது. தினமும் ஒருவர்
அதற்கு தேவையான உணவுகளை தயாரித்து வழங்க வேண்டும். சிங்க ராஜாவிடம் ஏதாவது உத்தரவை
பெற வேண்டுமானால் நரி மந்திரிக்கு தேவையானதை செய்து கொடுப்பவர்களுக்கே முன்னுரிமை
வழங்கப் பட்டது. இப்படி நரி வைத்ததுதான் சட்டம் என்று அந்த காடே அல்லோகலப்பட்டது.
ஒருநாள் நரி ஒரு மரத்தின் அடியில் படுத்து
உறங்கிக் கொண்டிருந்தது. அப்போது மரத்தின் மேல் இருந்த தேன் கூட்டில் இருந்து தேனை
உறிஞ்சிக் கொண்டிருந்தது கரடி ஒன்று. அந்த கரடி அப்படி தேனை உறிஞ்சும் போது ஒரு
சொட்டுத் தேன் நரியின் முகத்தில் விழுந்தது. அதை தன் நாவால் நக்கியது நரி. அதன்
சுவை அதற்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது.
“ஆகா! என்னே இனிப்பு! என்னே சுவை!” இந்த
சுவையை நான் இதுவரை ருசித்ததே இல்லை! இது என்ன உணவு என்று தெரியவில்லையே!” என்று
அப்படியே அண்ணாந்து பார்த்தது.
மரத்தின் உச்சியில் கரடி ஒன்று அமர்ந்து
தேனை உறிஞ்சுவதை பார்த்து அதற்கு ஆத்திரமாய் வந்தது. இத்துணை சுவை நிறைந்த இதை கரடி உண்பதா? நாட்டின் மந்திரியான நான்
அல்லவா உண்ண வேண்டும்? இந்த கரடிக்கு என்ன திமிர்! நான் பார்த்துக்
கொண்டிருக்கையிலேயே உண்ணுகிறதே! அதை என்ன
செய்கிறேன் பார் என்று மனதிற்குள் நினைத்தபடியே குரல் கொடுத்தது.
“ஓய் கரடியாரே! என்ன உண்ணுகிறீர்?”
“பார்த்தால் தெரியவில்லையா மந்திரியாரே?”
கரடி இப்படி திருப்பிக் கேட்டதும் தன் அறியாமையை வெளிக்காட்டிக் கொள்ளாமல் “தெரிகிறது தெரிகிறது! ஆனால் உன் வாயால்
சொல்லேன்! என்ன உணவு அது?” என்றது நரி
“சுவையான தேன்! இனிப்புத் தேன்! எனக்கு
மிகவும் பிடிக்கும்! அதை அருந்திக் கொண்டிருக்கிறேன்!” என்றது கரடி.
“ அது சரி! இனிப்புத் தேன் தான்! ஆனால்
திருட்டுத் தேனை உண்ணுகிறாயே! உன்னை அரசரிடம் சொல்லி சிறையில் அடைக்க வேண்டும்”
“என்னது திருட்டுத் தேனா? இந்த காட்டில்
விளைகிறது! உண்கிறேன்! இது எப்படி திருட்டுத் தேனாகும்?”
“ இந்த காடு யாருக்குச் சொந்தம்? இந்த
காட்டின் ராஜா யார்?”
“ஏன்? இந்த காட்டின் ராஜா சிங்கம்! என்று
எனக்குத் தெரியாதா என்ன?”
“அப்படியானால் தெரிந்தேதான் குற்றம்
செய்கிறாயா?”
“தேனைக் குடிப்பது ஓர் குற்றமா?”
“தேன் குடிப்பது குற்றமல்ல! ராஜாவுக்கு
சொந்தமான தேனை குடிப்பது குற்றம்”
“இதென்ன விந்தை! தேனீக்கள் கூட்டில் சேமித்து
வைக்கும் தேன் எப்படி ராஜாவுக்கு சொந்தமாகும்?”
” சரி! தேன் எப்படி கிடைக்கிறது?”
“பூக்களில் இருந்து தேனிக்கள் சேகரிக்கிறது!”
சரி இந்த காடு யாருக்கு சொந்தம்? சிங்க
ராஜாவுக்குத்தானே! அப்படியானால் காட்டில் பூக்கும் பூக்கள் அவருக்குத்தானே
சொந்தம்? அப்படி அவருக்கு உரிமையான பூக்களில் இருந்து தேனை திருடுவது தேனிக்களின்
குற்றம்! அந்த தேனிக்களை கைது செய்து சிறையில் அடைக்க ராஜா உத்தரவு இட்டுள்ளார்.
தேனீக்கள் திருடி வைத்ததை நீ திருடி சாப்பிட்டு விட்டாய்! நீயும் குற்றவாளி!”
இப்போது கரடி கொஞ்சம் மிரண்டு போனது! ஆனாலும்
விடாமல், “இதென்ன புதுக் கதையாக
இருக்கிறதே! காலம் காலமாய் நாங்கள் தேனெடுத்துக் கொண்டிருக்கிறோம்! இப்போது…”
“காலங்கள் மாறுகிறது கரடியாரே! இப்போது
தேன்கூடுகள் அரசுக்கு சொந்தம்! அதை கொள்ளையடித்த உனக்கு என்ன தண்டணை கிடைக்குமோ?
தெரியவில்லையே!”
“தெரியாமல் செய்து விட்டேன்! என்னை
மன்னித்துவிடுங்கள் மந்திரியாரே!”
“ நீ செய்தது பெருங்குற்றம்! போனால்
போகட்டும்! இந்த சுவையான தேனை தினமும் நீ என் வீட்டிற்கு கொண்டுவந்து தரவேண்டும்!
அப்படி செய்தாயானால் உன்னை விட்டுவிடுகிறேன்! ஒரு நாள் தவறினாலும் உன்னை ராஜாவிடம்
மாட்டிக் கொடுப்பேன்! ”
“உத்தரவு மந்திரியாரே! ராஜாவிடம்
சொல்லிவிடாதீர்கள்! நான் தினமும் தாங்கள் ருசிக்க நல்ல தேனைக் கொண்டு வருகிறேன்!”
அதில் இருந்து தினமும் ஒரு தேனடையை தேடிப்பிடித்து கொடுத்துக் கொண்டிருந்தது கரடி.
அதற்கு கிடைக்கிறதோ இல்லையோ நரிக்கு தேனடை தினமும் கிடைத்து வந்தது.
இப்படியே சில நாட்கள் சென்றன. காட்டில் தேன்
கூடுகளே இல்லை! தினமும் ஒரு கூடு பறித்தால் எங்கிருந்து கூடுகள் முளைக்கும்.
தேனிக்கள் எங்கும் கூடு கட்ட முடியாமல் தவித்தன.
ஒருநாள் கரடி எங்கும் தேனடை கிடைக்காமல்
தவித்துப்போய் நரியிடம் வந்து நரியாரே! மன்னித்துக் கொள்ளும்! இன்று தேனடை
கிடைக்கவில்லை! காடு முழுவதும் தேடிவிட்டேன்! என்றது.
அதெப்படி? இங்கு இல்லாவிட்டால் வேறெங்காவது
போய் கொண்டுவா! இல்லையேல் சிறையில் தள்ளிவிடுவேன் என்றது நரி.
கரடி தன் நிலையை நொந்து கொண்டு வீட்டிற்கு
சென்றது. அங்கு கரடியினுடைய குட்டி இருந்தது. தந்தை கரடி சோகமாக இருப்பதை பார்த்த
குட்டிக்கரடி என்ன விஷயம் என்று விசாரித்தது.
கரடி நடந்த எல்லாவற்றையும் சொன்னது.
“ அப்பா! அந்த பொல்லாத நரியை
நான் பார்த்துக் கொள்கிறேன்! நீங்கள் பயப்படாதீர்கள்! என்றது குட்டிக்கரடி.
குட்டிக்கரடி நரியின் இருப்பிடம் சென்றது.
”மந்திரியாரே! மந்திரியாரே!” என்று அழைத்தது.
“யாரது? குட்டிகரடியா? எங்கே உன் அப்பா?”
உடனே குட்டிக் கரடி அழுதபடி, “மந்திரியாரே!
உங்களுக்காக தேனெடுக்க சென்ற என் அப்பா மரத்தில் இருந்து விழுந்து அடிபட்டு கால்
முறிந்துவிட்டது. அதனால்…
“ அதனால்…”
“தேன் இல்லாமல் நீங்கள் கோபப்படுவீர்கள் என்று
தந்தை வருந்தினார். இன்னொன்றும் சொன்னார். குகை ஒன்றில் மிகப்பெரிய தேனடை சேமித்து
வைத்திருக்கிறாராம். அந்த குகை மிகவும் இருட்டாக இருக்கிறது. சின்ன பையனானா
என்னால் அந்த குகையில் நுழைய பயமாக இருக்கிறது. நீங்கள் வந்தீர்களானால் நல்ல தேனை
சுவைக்கலாம். இதை சொல்லிவிட என்னை அனுப்பினார்”
“அப்படியா? உன் தந்தை காலொடித்துக்
கொண்டாலும் என் மீது விசுவாசமாய் சொல்லி அனுப்பி இருக்கிறான். பாவம் நீயும்
சின்னப் பையன்! உன்னால் இருட்டு குகைக்குள் செல்ல பயமாகத்தான் இருக்கும். நான்
போய் எடுத்துக் கொள்கிறேன்! அந்த குகை இருக்கும் இடத்தை மட்டும் காட்டிவிடு!”
“வாருங்கள் அழைத்துச்செல்கிறேன்!”
குட்டிக் கரடி அந்த காட்டில்
இருந்த ஓர் இருண்ட குகைக்கு நரியை அழைத்துச்சென்றது.
நரியாரே! பாருங்கள் இதோ இருண்ட குகை!
இதனுள்ளேதான் தேனீக்கள் பெரிய தேனடையில் தேனை சேமித்து வைத்துள்ளன. எனக்கு உள்ளே
நுழையவே பயமாக இருக்கிறது! நீங்களே சென்று எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னது
குட்டி கரடி.
தேனெடுக்கும் ஆவலில் நரி வேகமாக அந்த
குகைக்குள் நுழைந்தது. ஒரே கும்மிருட்டு! ஒன்றுமே தெரியவில்லை! சில
நிமிடங்களுக்குப்பிறகு குகை இருட்டு பழக்கம் ஆக அதோ மூலையில் பெரிய தேனடை!
தேனின் ருசியில் ஆபத்தை உணராத நரி அந்த தேன்
கூட்டினுள் கை வைத்தது.
மறுநிமிடம்! நூற்றுக் கணக்கான மலைத்தேனிக்கள்
நரியின் உடலை பதம் பார்த்தன. ஆ, ஐயோ! விட்டு விடுங்கள்! வலிக்கிறதே! என்று கண் மண்
தெரியாமல் ஓடிவந்தது நரி. உடல் முழுவதும் வீங்கிப்போய் விட்டது. வலி உயிரை
எடுத்தது. மலைத் தேனிக்களின் விஷம் பரவ தேனெடுக்கும் ஆசையில் உயிரை விட்டது நரி.
நரி மறைந்த செய்தியை மகிழ்ச்சியோடு தந்தை
கரடிக்கு சொல்ல ஓட்டம் பிடித்தது குட்டி கரடி.
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
நரிக்கதை ஸூப்பர் குழந்தைகளுக்கு பிடித்தமானவையே...
ReplyDeleteகுட்டிக்கரடியின் மூளை நரியைவிட அபாரமானது.
நன்றி ஜி!
Deleteசிங்கம் , முயல் கதை போல் அருமை.
ReplyDeleteநரியை ஒழித்த குட்டி கரடி கதை மிக அருமை.
நன்றி சகோ!
Deleteசூப்பர் கதை! நாங்களும் குழந்தைகளானோம்!
ReplyDeleteமகிழ்ந்தேன் நண்பரே!
Deleteகதை அருமை....
ReplyDeleteவாழ்த்துகள்.
நன்றி நண்பரே!
Deleteதந்தையைக் காப்பாற்ற குட்டிக்கரடி எடுத்த யோசனையும், தொடர்ந்த விளைவும் சரியான நீதியைத் தந்தது. அருமையான கதை.
ReplyDeleteநன்றி ஐயா!
Deleteஎல்லாப் பணியிடங்களிலும் இந்த நரி போன்ற சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.இருக்கும் பதவியை வைத்துக் கொண்டு ஆட்டம் போடுவது.அவர்களுக்கும் குட்டிக் கரடியைப் போல பாடம் புகட்ட வேண்டும்.
ReplyDeleteஉண்மைதான்! முதல் முறை வருகை என்று நினைக்கிறேன்! தொடரவும்! நன்றி!
Deleteமனுஷன் வாழ்ந்தா அயனாவரம் ,விலங்குகள் வாழ்வது சயனாவரமா ,இதுவும் நல்லாயிருக்கே !
ReplyDeleteஎங்க ஊரு பக்கத்துல சயனா வரம்னு ஊர் கூட இருக்குஜி! நன்றி!
Deleteநல்ல கதை
ReplyDeleteஇன்று குழந்தைகளுடன் பகிர ஒரு கதை தந்ததற்கு நன்றி
நன்றி தோழர்!
Deleteஅருமையான கதை. நன்றி சுரேஷ்.
ReplyDeleteநன்றி வெங்கட்!
Deleteஇப்படியான உங்கள் தேன்சுவை கதைகள் தான் இப்போ பெரும்பாலான நேரங்களில் மகி, நிறைக்கு bed டைம் கதையாக இருக்கிறது. மிக்க நன்றி அண்ணா!
ReplyDeleteநன்றி தங்கையே! என்னுடைய கதைகள் உங்கள் குழந்தைகளுக்கு பெட் டைம் கதைகளானதில் எனக்கும் மகிழ்ச்சி! குழந்தைகளுக்கு இந்த கதைகள் பிடித்து இருந்தால் இன்னும் மகிழ்ச்சியே!
Deleteநீங்கவேற! இப்போ எல்லாம் நிறை கேட்கிறாள் "அம்மா , இன்னிக்கு சுரேஷ் அங்கிள் ப்ளோக்ல எதாவது ஸ்டோரி படிசீங்களா:)))) நம்ம வீட்டில் உங்களுக்கு ரெண்டு டேபிள் fans இருக்காங்க:))
Deleteதந்திரத்துக்கு பெயர் போனது நரி. ஆனால் அதையும் மிஞ்சும் வகையில் அந்த குட்டி கரடியின் செயல் சூப்பர்.
ReplyDeleteநன்றி நண்பரே!
Delete