புத்தி வந்தது! பாப்பா மலர்!

புத்தி வந்தது! பாப்பா மலர்!


மணி தன் வீட்டு வாசலில் நின்ற புத்தம் புதிய ஹீரோ சைக்கிளை துடைத்துக் கொண்டிருந்தான். பச்சை வண்ணத்தில் மிளிர்ந்த அந்த சைக்கிளை  பெருமையுடன் பார்த்த அவன் அதை ஒரு நாயைத் தடவிக் கொடுப்பது போல மென்மையாகத் தடவினான். நேற்றுதான் அவனது நச்சரிப்பு தாங்க முடியாத அவனுடைய அப்பா இந்த புத்தம் புது சைக்கிளை வாங்கித்தந்து இருந்தார். சைக்கிள் வந்ததும் உற்சாகத்தில் நேற்று முழுவதும் ஊரையே சுத்தி வந்தான். நேற்று விடுமுறையாக அமைந்தது அவனுக்கு மிகவும் சவுகர்யமாக அமைந்துவிட்டது.

     “ஏண்டா மணி! இன்னும் சைக்கிளையே துடைச்சிக்கிட்டு இருந்தா எப்படி? மணி எட்டரையாவுது! ஸ்கூலுக்கு கிளம்ப வேண்டாமா?” சமையலறையில் இருந்து அவனது அம்மா குரல் கொடுக்கவும் இயல்புக்குத் திரும்பினான் மணி.
  “ இதோ இதோ வந்துட்டேம்மா! சைக்கிள் வந்தாச்சு இல்லே பத்தே நிமிஷத்துல ஸ்கூலுக்கு போயிருவேன்! கவலைப்படாதீங்க!” என்று சொல்லியபடி உள்ளே நுழைந்தான்.
   குளித்து முடித்து அன்னை தந்த சிற்றுண்டியை உண்டு முடித்து பையினை கேரியரில் வைத்தவாறு “ அம்மா! நான் போயிட்டு வரேன்!” என்றபடி சைக்கிளில் ஏறி மிதிக்க ஆரம்பித்தான் மணி.
    அவனது பள்ளி ஒர் இரண்டு தெரு தள்ளித்தான் அமைந்து இருந்தது. ஆனால் புது சைக்கிள் வாங்கிய குஷி! அதை ஓட்டி மகிழ  மகிழ ஓர் இன்பம் அதனால் இன்னும் இரண்டு தெருக்களை சுற்றி வந்து பின்பு பள்ளி இருந்த தெருவிற்குள் சென்றான் மணி.
   அன்றுமுதல் தினமும் சைக்கிளில் தான் எங்கும் செல்வான் மணி. கடைக்கு செல்வதானால் கூட சைக்கிள் தான். இத்தனைக்கும் கடை அவன் வீட்டு தெருக்கோடியில் இருந்தது. அப்படி செல்லாமல் எதிர்புறத்தில் சென்று அடுத்த தெருவழியாக நுழைந்து கடைக்கு வந்து அடுத்த தெருவில் நுழைந்து இந்த தெருவிற்கு வருவான் மணி. அத்துடன் ஒரு புதிய பழக்கத்தையும் கற்றுக்கொண்டுவிட்டான் அவன். அவன் செல்லும் பாதையில் பாதசாரிகள் யாராவது சென்றால் அவரின் அருகில் சென்று திடுமென  சைக்கிளின் பெல்லை அழுத்துவான். அது” டிரிங்க் டிரிங்க்’ என ஒலிக்கையில் பாதசாரிகள் தடுமாறும் போது அதைக் கண்டு ரசித்து மகிழுவான் மணி.  “எப்படி பயமுறுத்தினேன் பார்த்தியா?” என்று அவன் கண்கள் கேட்க அப்படியே சிரித்தபடியே சென்றுவிடுவான்.

   எத்தனையோ பேர் அவனது இந்த பெல் சத்தத்தை கேட்டு தடுமாறி கீழே விழுவர். சைக்கிளின் குறுக்கே வந்து இடித்து கொள்வர். இதெல்லாம் இவனுக்கு சுவாரஸ்யமாக இருந்தது. பலர் வசை பாடினாலும் அவனது இளவயதுக்கு இதெல்லாம் ஒரு விளையாட்டாகவே தெரிந்தது.
    அன்று பள்ளி விட்டு வரும்போது இப்படி ஒருவர் அருகில் சென்று பெல் அடித்து விட்டு பயமுறுத்தினான். அவர் அவன் தந்தைக்குத் தெரிந்தவர். நேராக அவனது தந்தையிடமே வந்து புகார் தந்துவிட்டார்.
   “ ஏண்டா சைக்கிள் கேட்டேன்னு கஷ்டப்பட்டு வாங்கிக் கொடுத்தா இப்படி ஊர் வம்பை இழுத்துக் கொண்டு வர்றியே!”
     “அப்பா! நான் என்ன தப்புப்பா செஞ்சேன்! சைக்கிள்ல வரும்போது இவர் வழியிலே வந்தார். ஒதுங்கட்டும்னு பெல் அடிச்சேன்! அதுக்குப் போய் என்னையே திட்டறீங்களே! அவர் மேல இடிச்சிருந்தா தப்பு! இடிக்காமலேயே திட்டறீங்களே!”
    “ அப்போ! கிட்டத்துல போய் பெல் அடிச்சதை ஒத்துக்கறியா?”
   “ நான் ஏதொ சுவாரஸ்யத்திலே பேசிக்கிட்டே வரும்போது இவரை கிட்ட வரும்போதுதான் கவனிச்சேன்!”
   “ இது இன்னிக்கு மட்டும் நடக்கலேன்னு எனக்குத் தெரியும்டா!”
    “ அப்பா! நான் வேணுமின்னே எதுவும் செய்யலே! எல்லாம் தற்செயலாத்தான் நடந்தது!”
   “ தற்செயலா நடந்ததோ வேணுமின்னே நடந்ததோ! நீ செய்யறது தப்பு! இப்படியே போனா நீ கெட்டு குட்டிச்சுவர் ஆயிருவே! மரியாதையா நாளையில இருந்து ஸ்கூலுக்கு நடந்து போ!  அந்த சாவியை என்கிட்ட கொடு!”
   “ அப்பா! அப்பா! ப்ளீஸ்பா! யாரோ சொல்றதை நம்பறீங்க! நான் உங்க புள்ளை சொல்றதை நம்ப மாட்டீங்களா? இந்த ஒரு முறை மன்னிச்சுருங்க! இனிமே புகார் வராம நான் பாத்துக்கறேன்!”
   மணி கெஞ்சவும் எப்படியோ கெட்டு ஒழி! நீயா திருந்தினாத்தான் உண்டு! என்று சாவியை வீசி எறிந்தார் அவனுடைய தந்தை.
    இன்னும் கொஞ்ச நாள் அடக்கி வாசிக்க வேண்டும் என்று முடிவு செய்தான் மணி. அன்று வழக்கம் போல பள்ளிக்குக் கிளம்பினான். வேகமாக தெருவை கடக்கும் சமயம் அவனருகே வந்த லாரி ஒன்று ஹாரனை அழுத்த தடுமாறிப் போனான் மணி. சைக்கிள் பேலன்ஸ் தவற அப்படியே கீழே விழுந்தான் மணி.
    நல்ல வேளையாக லாரி கடந்துவிட்டது. கீழே விழுந்ததில் சில சிராய்ப்புக்கள்! முட்டிகளில் லேசாக ரத்தம் கசிந்து எரிச்சலை உண்டு பண்ணியது.
    அப்போது அங்கே நின்றிருந்த சில பாதசாரிகள் ஓடி வந்து மணியை தூக்கினர். சைக்கிளையும் தூக்கி நிறுத்தினர். இந்த லாரிக்காரங்களே இப்படித்தான் தம்பி! என்னமோ ப்ளைட் ஓட்டறதா நினைப்பு! வேகமா வந்து கிட்ட ஹாரன் அடிப்பாங்க! நாமதான் எச்சரிக்கையா இருக்கணும்! அடி எதுவும் பலமா படலை நல்ல வேளை! என்றார் ஒருவர்.
   இப்படித்தானே நாமும் நடந்துசெல்பவர் அருகே சென்று பெல் அடித்து தடுமாறச் செய்தோம்! நாம் செய்தது நமக்கே திரும்பி வந்தது என்று நினைத்துக் கொண்டான் மணி.
   லாரி ஓட்டுனர்களை வசைபாடிக்கொண்டிருந்தார் ஒருவர். அந்த வசைகள் நமக்கும் உரியன என்று அவன் நினைக்கும் போது அவன் கண்கள் கலங்கின.
   என்ன தம்பி ரொம்ப வலிக்குதா? ஆஸ்பிடல் போலாமா? என்று ஒருவர் கேட்க மணி ரொம்பவம் வெட்கம் அடைந்தான். இத்தனை நல்லவர்களை பயமுறுத்தி ரசித்தோமே என்று வெதும்பினான்.
  தன் செய்கையை நினைத்து வெட்கித்தான். அன்று முதல் அவன் சைக்கிளில் வேகம் குறைத்து இப்படி பெல் அடிப்பதையும் நிறுத்தினான். அவன் திருந்தியதன் காரணம் புரியாமல் வியந்தார் அவனது அப்பா.


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. நல்ல கதையாருக்கே பசங்களுக்கு சொல்லலாம் போலவே..வாழ்த்துகள் சகோ..நடை அருமை..

    ReplyDelete
    Replies
    1. சிறுவர்களுக்கான கதைதான் மேடம்! வந்து வாழ்த்தியமைக்கு நன்றி!

      Delete
  2. அய்யா,
    கதையும் எழுதுவீர்களா..
    மாணவர் உணரத் தகுந்த கதை அருமை!!
    வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. சிறுவர்கள், பெரியவர்களுக்கான கதைகளைத்தான் முதலில் எழுதி பழகினேன்! பின்னர்தான் கவிதை எழுதப் பழகினேன்! வாழ்த்துக்கு நன்றி!

      Delete
  3. மிகவும் அருமையான கதை.
    நன்றாக எழுதியுள்ளீர்கள்.
    பல வித தலைப்பில் எழுதி அசத்துகிறீகள் சகோ. சகலகலாவல்லவன் தான் நீங்கள்.

    நன்றி
    வாழ்க வளர்க
    உமையாள் காயத்ரி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ! சகலகலா வல்லவன் எல்லாம் இல்லை சாதாரணன் தான்!

      Delete
  4. கதை நகர்வு நன்று
    படிக்க தூண்டும் பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
  5. நல்ல கதை தொடர்க ...

    ReplyDelete
  6. அருமையான பதிவு தளிர். என்னமோ தெரியல, இந்த மணி அடித்த மணி உமக்கு ரொம்ப (?) தெரிந்தவர் போல் தெரிகின்றதே...

    ReplyDelete
    Replies
    1. எமக்கு மட்டுமல்ல உமக்கும் இன்னும் பலருக்கும் வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்க கூடிய ஒருநபரே மணி! நன்றி நண்பரே!

      Delete
  7. சிறுவர் கதை நன்று...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. சிறுவர்களுக்கு மட்டுமல்ல சில பெரியவர்களுக்கும் இது புத்தி புகட்டும் நல்ல கதை சுரேஷ் சகோ ..
    நான் இன்னிக்கு சிக்னலில் பார்த்தேன் ஒருவர் பச்சை சிக்னல் விழுந்ததும் எதோ நினைப்பில் இருந்திட்டார் ..பின்னால் இருந்த கார் ஓட்டுனர் பெரும் சத்தத்துடன் ஹாரன் அடிச்சார் பாவம் அந்த முன்னமவர் திடுக்கிட்டு காரை ஸ்டார்ட் செய்தார் ....இப்படி திடீர் அதிர்ச்சி கொடுப்பது யாராக இருந்தாலும் தவறுதான் ...

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் பாலோயர் ஆனதிற்கும் நன்றி சகோ!

      Delete
  9. அருமையான கருத்தைச் சொல்லும் கதை. எந்த வண்டியை ஓட்டுபவராக இருந்தாலும் நல்ல அறிவுரை! தன் வினை தன்னைச் சுடும்! அருமை சுரேஷ் னண்பரே!

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே! உங்களின் ஊக்கமூட்டும் கருத்துக்கள் என்னை இன்னும் சிறப்பாக எழுத தூண்டுகின்றது!

      Delete
  10. கார் ஓட்டும் சிலர் கூட இந்த மாதிரி கிட்ட வந்தவுடன் ஹாரன் அடிப்பார்கள். எல்லா வண்டியோட்டிகளும் படிக்க வேண்டிய கதை.
    பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் அம்மா! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  11. அந்த அனுபவம் தனக்கும் கிடைத்த பிறகாவது திருந்தினானே....

    நல்ல பாடம் அவனுக்கு....

    பகிர்வுக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. சிலருக்கு பாடம் படித்தால்தான் புத்தி வருகிறது! கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே!

      Delete
  12. நல்லதொரு அறிவுரை கதை.

    ReplyDelete
  13. அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2