குரங்கின் விஷமம்! பாப்பா மலர்!

குரங்கின் விஷமம்! பாப்பா மலர்!


 நாராயண வனம் என்ற அடர்ந்த காட்டினுள் ஓர் மரத்தில் சிட்டுக்குருவி ஒன்று கூடுகட்டி வசித்து வந்தது. அழகான நீரோடையும் இனிக்கும் பழங்களும் அது வசித்துவந்த மரத்தின் அருகில் கிடைத்தன. எனவே உணவுக்கு பஞ்சமின்றி நிம்மதியாக வசித்து வந்தது குருவி. அதுமட்டுமல்ல அங்கு ஏராளமான பறவை இனங்கள் வசித்துவந்தன. காலையிலும் மாலையிலும் பறவை இனங்களின் சப்தம் ஒலித்து அந்தக் காடே ரம்யமாக இருக்கும்.
     இவ்வாறு இந்த குருவி மகிழ்ச்சியாக வசித்து வந்த சமயம் அந்த இடத்திற்கு  குரங்கு கூட்டம் ஒன்று குடிபெயர்ந்து வந்தது. அடடா! இந்த குரங்குகள் இங்கே வந்தால் சும்மா இருக்காதே! நம் நிம்மதி பறிபோய்விடுமே! என்று சிட்டுக் குருவி நினைத்தது. அது பயத்தில் “கீச்கீச்” என கத்தியபடியே தன்னுடைய கூட்டை விட்டு பறந்து மற்ற பறவைகளுக்கு குரங்கினங்கள் வந்த செய்தியைச்சொல்ல பறந்து சென்றது.
    அந்த குரங்கு கூட்டத்தில் தலைவர் குரங்கு ஒன்று இருந்தது. அது சிட்டுக்குருவி “கீச்கீச்’ என கத்தியபடியே பறந்ததைப் பார்த்தது.  “நண்பர்களே! நாம் புதிய இடத்திற்கு வந்துள்ளோம்! இங்கு வசிப்பவர்கள் நம்மைக் கண்டு பயந்து கத்தியபடியே ஓடுகிறார்கள். இத்தனை நாள் இது அவர்களின் இருப்பிடமாக இருந்தது. அதை நாம் பறித்துக்கொண்டு அவர்களை துன்புறுத்த கூடாது. எனவே யாருக்கும் தொந்தரவு செய்யாமல் நாம் இங்கே தங்கியிருக்க வேண்டும்” என்றது.
   “ எல்லாக் குரங்குகளும் தலையசைத்து ஒப்புக்கொண்டது. ஆனால் ஒரு குட்டிக் குரங்கு மட்டும்  இதை ஏற்றுக்கொள்ளவில்லை! அதெப்படி! இந்த காடு அவர்களுக்கு மட்டும் சொந்தமா என்ன? இங்கு என் இஷ்டம்போலத்தான் நான் நடந்துகொள்வேன்! என்று அது மனதிற்குள் சொல்லிக் கொண்டது. அது மிகவும் விஷமம் பிடித்த குரங்கு. அது எப்போதும் தன் கூட்டத்திற்கு அடங்காமல் தன்னிச்சையாக சுற்றிக் கொண்டிருக்கும். மற்ற குரங்குகள் சொல்வதை செவிமடுக்கவே மடுக்காது. சரிபோகட்டும் அதுவே பட்டு திருந்தட்டும் என்ற மற்ற குரங்குகள் சும்மா இருந்துவிட்டன.
     சிட்டுக்குருவி வசித்த கூட்டிற்கு இந்த குரங்கு சென்றது. அப்போது குருவி வெளியில் சென்று இருந்தது. உடனே குரங்கு கூட்டைப் பிரித்துப் போட்டது. பின்னர் அங்கிருந்து கிளம்பி சென்றது.
   இரைதேடச் சென்ற குருவி மாலையில் திரும்பியதும் கூடு கலைந்து போயிருப்பதை பார்த்து  அதிர்ச்சியுற்றது. யார் இவ்வாறு செய்து இருப்பார்கள் என்று யோசித்தது. அதற்கு ஒன்றும் புரிபடவில்லை! மீண்டும் கஷ்டப்பட்டு கூடு ஒன்றை கட்டியது.
    மறுநாளும் குருவி இரைதேட சென்றபின் குரங்கு வந்து குருவியின் கூட்டைப் பிரித்துப் போட்டது. இப்படி தினம் ஒரு கூட்டினை குரங்கு பிய்த்துப் போட்டுக் கொண்டு இருந்தது. குருவி இதை யார் செய்கிறார்கள் என்று கண்டுபிடிக்க நினைத்தது. மறுநாள் இரை தேடச்செல்வது போல சென்று மறைந்திருந்து பார்த்தது.
    அப்போது குரங்குவந்து கூட்டைக் கலைப்பதை பார்த்தது. உடனே ஆத்திரமுடன்  “ஏய் குரங்கே! என்ன செய்கிறாய்? என் கூட்டைக் கலைக்கிறாய்?” என்று கேட்டது.

     “அட வந்துவிட்டாயா? எனக்கு இது விளையாட்டு! இப்படி கூட்டை பிரித்துப் போட்டு விளையாடுவது எனக்கு ரொம்பப் பிடிக்கும்!” என்று தெனாவட்டாக சொன்னது குரங்கு.
   “ஓஹோ! கூட்டைக் கலைத்துப்போடும் உனக்கு அதை உருவாக்கத் தெரியுமா?” என்றது குருவி.
   “அது என் கவலை இல்லை! இதுமாதிரி எத்தனை கூடுகள் இருந்தாலும் அதை நான் கலைப்பேன்! என் விளையாட்டை தொந்தரவு செய்யாதே!” என்றது குரங்கு.
    “ஏய் விஷம குரங்கே! இது என் கூடு! மரியாதையாகப் போய்விடு! இல்லையேல்…!”
    “உன்னால் என்னை என்ன செய்து விட முடியும்?”
   குருவி யோசித்தது. இதை தந்திரத்தால்தான் வெல்ல முடியும் என்று நினைத்தது.
    “ஏய் குரங்கே! என்னுடைய கூட்டைக் கலைத்துவிட்டாய்! என் தங்கை ஒருத்தி இருக்கிறாள் அவளிடம் ஆயிரம் வேலைக்காரர்கள் இருக்கிறார்கள்! அவர்கள் கூட்டை உன்னால் பிரிக்க முடியுமா? என்று ஏளனமாக சொன்னது குருவி.
    குரங்குக்கு ஆத்திரமாக வந்தது. ”ஏய் உன் தங்கை என்ன பெரிய ஆளா? இப்போதே அந்த கூட்டைக் கூட கலைத்துப் போடுவேன்! உன்னால் என்ன செய்ய முடியும்? எங்கே அவளது கூடு?” என்று எகிறி குதித்தது.
    ”நீ ரொம்பத்தூரம் போய் கவலைப்பட வேண்டாம். இரண்டு மரம் தள்ளி அதோ உயரமாய் தெரிகிறதே அந்த மரத்தில்தான் அவள் கூடு! உன்னால் அந்த மரத்தில் ஏற முடியுமா?” உசுப்பி விட்டது குருவி.
      “ஏன் முடியாமல்? இப்போதே உன் கண் எதிரிலேயே பிய்த்துப்போடுகிறேன் பார்! என்று அருகில் இருந்த மரத்துக்கு தாவி அந்த பெரிய மரத்தில் வேகமாக ஏறியது குரங்கு.
      அந்த மரத்தில் கூடு உயரத்தில் இருந்தது. வேகவேகமாக ஏறி கூடு இருந்த கிளையை நெருங்கியது குரங்கு. அந்த கூட்டில் ஆயிரம் வேலைக்காரர்கள் பாதுகாத்துக் கொண்டு இருந்தார்கள். யாரோ எதிரி நெருங்குகிறார்கள் என்று அவை உஷாராகிவிட்டன.
   குரங்கு அந்த கிளையைப் பிடித்ததுதான் தாமதம்! அந்த ஆயிரக்கணக்கான வேலைக்காரத் தேனிக்கள் அப்படியே பறந்து மொய்த்து குரங்கைக் கொட்ட ஆரம்பித்தன. அப்போதுதான் தான் கைவைத்தது ஒரு தேன் கூடு என்று குரங்குக்கு உறைக்க ஆரம்பித்தது.
   ஆனால் என்ன பிரயோசனம்? தேனிக்களின் தாக்குதலில் தப்பிக்க முடியாமல் அங்கிருந்து ஓடியது. துரத்தி துரத்தி கொட்டின தேனிக்கள்.
    குருவி கை கொட்டிச்சிரித்தது.  “குரங்காரே! இது போதுமா? இல்லை இன்னொரு தம்பி வீட்டுக்குச் செல்கிறீர்களா?” என்றது
.
    “ஐயோ! போதும்! போதும்! இனி விஷமமே செய்ய மாட்டேன்!” என்று அலறியபடியே ஓடியது குரங்கு.
   நல்ல பாடம் புகட்டினோம்! இனி நிம்மதியாக இருக்கலாம் என்று குருவி மீண்டும் கூட்டினை கட்ட ஆரம்பித்தது.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
    

Comments

 1. நண்பரே நன்றாக இருந்தது குரங்கு கதை கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன் இதுக்கு அரசியல் சாயம் பூசினால் எப்படி ? இருக்கும் ‘’கொல்’’ என சிப்பு சிப்பா வந்துச்சு.

  ReplyDelete
 2. மந்தியை தன் மதியால் வென்று நிம்மதி அடைந்தது குருவி. அருமை

  ReplyDelete
 3. நல்ல கதை
  புத்திசாலிதனமும், சுவாரஸ்யமுமாய் இருக்கிறது.
  தொடருங்கள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. அருமையான கதை
  நன்றி நண்பரே

  ReplyDelete
 5. ஹா..ஹா..
  நல்ல கதை..

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2