பிதுர் தோஷம் போக்கும் செதலப்பதி முக்தீஸ்வரர்
பிதுர் தோஷம் போக்கும்
செதலப்பதி முக்தீஸ்வரர்
ஆன்றோர்கள் பலர் அவதரித்த
ஞானபூமியாம் பாரதத்தில் ஆலயங்கள் பலவுண்டு.ஒவ்வோர் ஆலயமும் ஓர் சிறப்பு உண்டு.
அத்தகைய சிறப்புக்களை அறிந்து அதற்கேற்ப வழிபாடு செய்வதால் அதிகபலன்கள் கிடைக்கும்.
பித்ரு தோஷம் என்பது நம் முன்னோர்களை சரிவர
திருப்தி படுத்தாமையால் எழுவது.பெற்றோர்கள் வாழுகின்ற காலத்திலும், வாழ்ந்த
பின்னரும் அவர்களுடைய பிள்ளைகள் தம் கடமையை சரிவர ஆற்ற வேண்டும். அப்படி கடமை
தவறும் பிள்ளைகளுடைய சந்ததிகள் பித்ரு தோஷத்தால் பாதிப்படைவர். இத்தகைய பித்ரு
தோஷம் நீக்கும் அருமையான ஆலயங்கள் தமிழகத்தில் நிறைய உண்டு. அவற்றுள் இராமபிரானே
தம் தந்தை தசரதருக்கும் ஜடாயுவிற்கு சிரார்த்தம் செய்வித்த தலமான செதலப்பதி
என்னும் தில தர்ப்பண புரி என்னும் தலத்தை பற்றி இன்று படிக்க உள்ளோம்.
திருவாரூர்- மயிலாடுதுறை சாலையில் 20
கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பூந்தோட்டம். இங்குதான் சரஸ்வதி கோயில்
அமைந்துள்ளது. இங்கிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது செதலப்பதி. இங்கு
ஆதி விநாயகரும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார்.
முன்னோருக்குத் தர்ப்பணம்
செய்ய காசி, ராமேஸ்வரம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு,
திலதர்ப்பணபுரி,(சிதலைப்பதி) கயா, அலகாபாத், ஆகிய ஏழு தலங்கள் சிறப்பாக
சொல்லப்படுகின்றது. இதில் ஐந்தாவது இடமாகிய இந்த தலம் திலதர்ப்பணபுரி இன்று மருவி
சிதலைப்பதி, செதலைப்பதி என்று வழங்கப்படுகிறது. திலம் என்றால் எள். இராமர் எள்
கொண்டு தர்ப்பணம் செய்தமையால் திலதர்ப்பணபுரி என்று வழங்கப்பட்டது.
தல வரலாறு: சீதையை இராவணன்
கடத்தியபோது ஜடாயு மன்னன் இராவணனை எதிர்த்து போரிட ஜடாயுவின் இறக்கைகளை இராவணன்
வெட்டி வீழ்த்தினான். இராமனிடம் ஜடாயு செய்தி சொல்லி இறந்தார். ராமனின் வனவாசகாலத்தில்
அவர் தந்தை தசரதரும் இறந்துவிட்டார். அதற்காக சிரார்த்தம் செய்ய எண்ணி இந்த
தலத்திற்கு வந்தார். அரசலாற்றில் நீராடி சிவபூஜை செய்து தசரதருக்கு பிண்டம் வைத்து
சிரார்த்தம் செய்தார். அப்போது தனக்காக போராடி உயிர்விட்ட ஜடாயுவிற்கும் மரியாதை
செய்யும் விதத்தில் இங்கு பிதுர் தர்ப்பணம் செய்தார்.
இத்தலத்தில் தர்ப்பணம்
செய்வோரின் முன்னோர் பிறப்பற்ற நிலையாகிய முக்தியை அடைவர் என்பதால் சுவாமிக்கு
முக்தீஸ்வரர் என்றும் தலம் திலதர்ப்பணபுரி என்றும் வழங்கப்படுகிறது. அம்பாளின்
பெயர் பொற்கொடியம்மை.
ராமர் தர்ப்பணம் செய்யும் போது
பிடித்த நான்கு பிண்டங்கள் லிங்கங்களாக மாறியதாக சொல்லப்படுகிறது. கருவறைக்குப்
பின்புறம் இந்த லிங்கங்களை இன்றும் காணலாம். இந்த லிங்கங்களுக்கு அருகே வலதுகாலை
மண்டியிட்டு வடக்கு நோக்கித் திரும்பி வணங்கியபடி இருக்கும் இராமரையும் காணலாம்.
இராமரின் இத்தகைய கோலம் வேறெங்கும் காணக் கிடைக்காது. கோயிலுக்கு வெளியே அழகநாதர் சன்னதியில்
இராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம் உள்ளது.
காசியில் கங்கை நதி வடக்கிலிருந்து தெற்கு
நோக்கி பாய்வதுபோல இங்கும் அரசலாறு வடக்கிலிருந்து தெற்குநோக்கி பாய்கின்றது. இது
காவிரியின் துணை நதி. இத்தலத்து ஈசனை சம்பந்தர் தேவாரம் பாடி வழிபட்டுள்ளார்.
முருகனை அருணகிரிநாதர் பாடியுள்ளார்.
சூரியனும் சந்திரனும் நேர்க்கோட்டில்
சந்திப்பது அமாவாசை எனப்படுகிறது. இங்குள்ள முக்தீஸ்வரரை சூரியனும் சந்திரனும்
ஒரேநேரத்தில் வழிபாடு செய்து வணங்கியுள்ளனர். இங்கே இருவரின் சன்னதிகளும் உண்டு.
இருவரும் இணைந்து இருப்பதால் இத்தலம் நித்ய அமாவாசைத் தலம் என்றும்
வழங்கப்படுகிறது. பிதுர் தர்ப்பணம் இங்கு தினமும் செய்யப்படுகிறது.
இவ்வாலயத்தில் எதிரே மேற்கு நோக்கிய நிலையில்
ஆதி விநாயகர் சன்னதி அமைந்துள்ளது. மனித முகத்துடன் அழகாக காட்சி தருகிறார்
ஆதிவிநாயகர். பிரகாரத்தில் எட்டு கைகளுடன் அஷ்டபுஜ துர்க்கை அருள்பாலிக்கின்றார்.
இத்தலத்தின் அருகாமையில் ஆறுகிலோ மீட்டர் தொலைவில் திருமணத் தலமான திருவீழிமிழலை
மாப்பிள்ளை சுவாமி கோயிலும் அமைந்துள்ளது.
மூன்று பெருமாள்: அரிதாக சில சிவன் கோயில்களில் தனி சன்னதியிலோ, அல்லது கருவறைக்கு பின்புறத்தில் லிங்கோத்பவர் இருக்க வேண்டிய இடத்திலோ பெருமாள் இருப்பார். ஆனால், இக்கோயிலில் மகாவிஷ்ணு தனது மூன்று கோலத்தை காட்டியபடி அருளுகிறார். ராமர் தர்ப்பணம் செய்த போது மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகிய நால்வரையும் வணங்கி நான்கு பிண்டங்கள் பிடித்து வைத்து பூஜித்தார்.
இந்த பிண்டங்கள் லிங்கங்களாக மாறின. மூலஸ்தானத்திற்கு பின்புறத்தில் இந்த லிங்கங்களையும், தர்ப்பணம் செய்த ராமரையும் காணலாம். இவர் வலது காலை மண்டியிட்டு, வடக்கு நோக்கி திரும்பி வணங்கியபடி காட்சி தருகிறார்.
ராமரின் இத்தகைய தரிசனத்தை காண்பது அபூர்வம். இத்தலத்தில் பிதுர்வழிபாட்டுக்கு உகந்த தலமாக திகழ்கிறது. இச்சன்னதி எதிரே சிவனது கருவறை கோஷ்டத்தில் (சுற்றுச்சுவர்) லிங்கோத்பவர் இடத்தில், மகாவிஷ்ணு நின்ற கோலத்தில் இருக்கிறார்.
பிரகாரத்தில் நவக்கிரக சன்னதி அருகில் மற்றொரு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வடக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். இவ்வாறு மகாவிஷ்ணுவின் மூன்று விதமான கோலங்களை இக்கோயிலில் தரிசிக்கலாம்.
சுவர்ணவல்லி தாயார்: செதலபதி முக்தீஸ்வரர் கோயிலில் சுவர்ணவல்லி தாயார் காட்சி தருகிறார். சுவர்ணம் என்றால் "தங்கம்' என பொருள். தங்கத்தை வாங்கி குவிக்க வேண்டும் என விரும்புவோர் இங்கு வந்து அம்பிகைக்கு சிறப்பு அர்ச்சனை செய்கிறார்கள். தங்கநகை தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் இந்த அம்பிகையை வழிபடலாம். இந்த அம்பிகைக்கு "பொற்கொடி நாயகி' என்ற பெயரும் இருக்கிறது. இது மட்டுமின்றி இவ்வூரில் ஓடும் அரசலாறு, வடக்கிலிருந்து தெற்கு நோக்கி உத்தரவாஹினியாக செல்கிறது.
இதுபோன்ற நதிகள் ஓடும் தலங்களில் உள்ள கோயில்களை வழிபட்டால் செல்வம் செழிக்கும் என்பது நம்பிக்கை.
இதுபோன்ற நதிகள் ஓடும் தலங்களில் உள்ள கோயில்களை வழிபட்டால் செல்வம் செழிக்கும் என்பது நம்பிக்கை.
சுமார் இரண்டு வருடங்கள்
முன்பு இத்தலங்களை தரிசித்தேன். நாளை ஆடி அமாவாசை! முன்னோர்களுக்கு தர்ப்பணம்
செய்யும் தினம். அதற்கு பொருத்தமாக இந்த தலத்தை பகிர்ந்துள்ளேன். அருகில்
இருப்பவர்கள் நாளை செதலப்பதி சென்று தர்ப்பணம் செய்து முன்னோரை வழிபடுங்கள்! வளம்
பெறுங்கள்!
நடை திறக்கும் நேரம்: காலை
6.30 முதல் 12.30 வரை
மாலை 4 மணி முதல் இரவு
8.00 வரை
போன்: 04366-238818, 239700
படங்கள் உதவி: நன்றி: தினமலர் இணையதளம்
தொடர்புடைய பதிவுகள்: ஆடி அமாவாசையில் திருவள்ளூர் வீரராகவர் தரிசனம்
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
ஆலய தரிசனம் சாலவும் நன்று,
ReplyDeleteநல்ல பயனுள்ள பகிர்வு சுரேஷ்!
ReplyDeleteநல்ல பயனுள்ள பகிர்வு. தெரியாத கோவில். அடுத்த முறை இந்தியா வரும்போது அந்த கோயிலுக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும்.
ReplyDeleteபகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி
நல்ல தகவல் நன்றி அருமையான தகவல் நன்றி
ReplyDelete