காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழா!

காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழா!


அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் காரைக்கால் அம்மையார். பெண் நாயன்மார்கள் மூவரில் மூத்தவர். கணவர் கேட்ட மாங்கனியை இறைவனை வேண்டி தருவித்தவர். அதன் நினைவாக காரைக்காலில் வருடம் தோறும் மாங்கனித்திருவிழா நடைபெறுவது சிறப்பாகும். காரைக்கால் அம்மையார் கோயில் மாங்கனித் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம், பௌர்ணமி அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மாங்கனித் திருவிழாவின் போது சுவாமி தேர் வீதி உலா வருகையில், பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக, வீட்டு மாடிகளில் நின்றுகொண்டு இறைவன் மீது மாங்கனிகளை வாரி இறைத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்

முக்கனிகளில் முதற்கனி மாங்கனி. இந்த கனியை சிறப்பிக்கும் விழாவாகவும் இது கருதப்படுகிறது. தமிழகத்தில் வேறெங்கும் இப்படி கனித் திருவிழா நடைபெறுவது இல்லை என்பது சிறப்பாகும்.

  இந்த ஆண்டு நடைபெறும் மாங்கனித் திருவிழா நேற்று 10-7-14 விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. இன்று புனிதவதியார்- பரமதத்தர் திருமணமும் வீதி உலாவும் நடைபெறும். வெள்ளிக்கிழமை மாலை ஸ்ரீ பிச்சாண்டவர் வெள்ளைசாற்று புறப்பாடு ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில் நடக்கிறது. இரவு ஸ்ரீ புனிதவதியாரும், பரமதத்தரும் முத்து சிவிகையில் வீதியுலா நடைபெறும். நாளை நடைபெறும் சுவாமி வீதி உலாவின் போது பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேறும் பொருட்டு பிரார்த்தனை செய்து மாங்கனிகளை வீசி இறைப்பர். இது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.


முற்காலத்தில் காரைவனம் எனப்பட்ட மாநகர்,தற்போது  காரைக்கால் என்று வழங்கப்படுகிறது. இந்நகரில் காரைக்கால் அம்மையார் தனதத்தன், தர்மவதி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் புனிதவதி. சிவ வழிபாட்டில் ஈடுபாடு கொண்ட வைசிய குடும்பத்தில் பிறந்தார். அவர் இறைவர்பால் நிலைபெற்ற அன்புடன் அழகின் கொழுந்து எழுவது என வளர்ந்தார். பெற்றோர் திருமணப்பருவம் வந்ததும் தகுந்த வரன் தேடினர். நட்பு முறையிலான உறவினராகிய  காரைக்கால் மாநகரை அடுத்த நாகைப்பட்டினத்தில் காசுக்கடை(jewelery) வைத்திருந்த பரமதத்தன் என்ற வணிகருக்கு மணமுடித்து கொடுத்தனர்


ஒருசமயம் பரமதத்தன் தனது கடையிலிருந்தபோது ஒரு வியாபாரி இரண்டு மாங்கனிகளைக் கொண்டுவந்து அவரிடம் கொடுத்தார். கனிகளை பெற்ற பரமதத்தன், அதனைத் தன் வீட்டிற்கு கொடுத்து விட்டார். அவரது வீட்டிற்கு சிவனடியார் ஒருவர் உணவுவேண்டி வந்தார். அவரை வரவேற்று அமர செய்தார் அம்மையார். மத்திய உணவு தயாராக இல்லாததால் தயிர்கலந்த அன்னம் படைத்து அத்துடன் தனது கணவன் கொடுத்து அனுப்பிய ஒரு மாங்கனியையும் தந்து உபசரித்தார். மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்த பரமதத்தனுக்கு பல வகை பத்தார்தங்கலுடன் அன்னம் பரிமாறிய அம்மையார்,சிவனடியாருக்குப் படைத்தது போக மீதமிருந்த ஒரு மாங்கனியை அவருக்கு வைத்தார். அதன் சுவை நன்றாக இருக்கவே, மற்றொரு கனியையும் தனக்கு வைக்கும்படி கேட்டார் பரமதத்தன். அம்மையார் செய்வதறியாது திகைத்து சமையலறைக்குள் சென்று சிவபெருமானிடம் வேண்டினார். "மெய் மறந்து நினைந்து உற்ற இடத்து உதவும் விடையவர் தான் தம் மனம் கொண்டு உணர்தலுமே " அவர் கையில் ஒரு மாம்பழம் தோன்றியது

மகிழ்ச்சி அடைந்த அம்மையார் அதனை கணவனுக்கு படைத்தார். முதலில் வைத்த மாங்கனியைவிட இக்கனி அதிக சுவையுடன் இருக்கவே சந்தேகமடைந்த பரமதத்தன், காரணம் கேட்டார். அம்மையார் நடந்ததை கூறினார். அக்காரணத்தைப் பரமதத்தன் நம்பவில்லை. சிவபெருமான் கனி தந்தது உண்மையானால், மீண்டும் ஒரு கனியை வரவழைக்கும்படி கூறினான். அம்மையார் சிவபெருமானை வணங்க, மீண்டும் ஒரு மாங்கனி கிடைத்தது. இதைக்கண்டு வியந்த பரமதத்தன் அவரைத் தெய்வப் பெண் என்று கருதினார். உடனுறையத் தனக்குத் தகுதியின்மையால் தான் அவரை விட்டு நீங்கிவிடுதல் வேண்டுமென்னும் முடிவில் அவரை நீங்கத் துணிந்தான். வாணிபம் செய்ய விரும்பும் பண்டங்களும் பொருந்துவனவற்றை நிரம்ப ஏற்றிக்கொண்டு கடலின்மீது பயணமாகச் சென்றான். காரைக்கால் அம்மையார் இறைவனிடமிருந்து பெற்ற மாங்கனி நிகழ்வை நினைவு கூறுமுகத்தான், காரைக்கால் கோயிலில்  மாங்கனித் திருவிழா இன்றளவும் ஆனி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.


அறுபத்து மூவரில் ஒருவரான காரைக்கால் அம்மையாரை நினைவு கூறும் இந்த விழா காரைக்கால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிகவும் பிரசித்திபெற்றதாகும்.

படங்கள் உதவி: கூகுள் இமேஜஸ்.

(இணையத்தில் கிடைத்த தகவல்களின் தொகுப்பு)


தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

 1. காரைக்கால் அம்மையார் அவர்கள் பற்றிய சிறப்பான தகவலுக்கு நன்றி....

  ReplyDelete
 2. அறியாத தகவல்கள் நன்றி நண்பரே

  ReplyDelete
 3. நல்ல தகவல்கள்.... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சுரேஷ்.

  ReplyDelete
 4. அன்பின் அருந்தகையீர்!
  வணக்கம்!
  இன்றைய...
  வலைச் சரத்திற்கு,
  தங்களது தகுதி வாய்ந்த பதிவு
  சிறப்பு செய்துள்ளது!
  வருக!
  வலைச்சரத்தில் கருத்தினை தருக!
  http://blogintamil.blogspot.fr/
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2