யார் ஏழை? பாப்பா மலர்!
யார் ஏழை? பாப்பா மலர்!
விஜய நகரம் என்ற நாட்டை
விமலாதித்தன் என்ற மன்னன் ஆண்டுவந்தான். அவனுக்கு பெரிய சக்ரவர்த்தியாக வேண்டும்
என்ற எண்ணம் உண்டு. சதா சர்வ காலமும் அதே சிந்தனைதான். எப்பொழுதும் அண்டை
நாடுகளின் மீது படையெடுத்து அதை வெல்ல வேண்டும் என்ற நினைப்புத்தான்.
அந்த சமயத்தில் அவனது அண்டை நாட்டில் மன்னர்
இறந்து போய் குழப்பத்தில் இருப்பதை அறிந்து அதன் மீது படையெடுத்து அதை தன்
நாட்டோடு இணைத்துவிடலாம் என்று முடிவெடுத்தான். எனவே துரித கதியில் படைகளை
திரட்டினான். ஒரு நல்ல நாளில் எதிரி நாடு மீது படையெடுத்துப் புறப்பட்டான். அந்த
நாட்டை அடைய வழியில் ஒரு காட்டைக் கடக்க வேண்டி இருந்தது.
காட்டில் நடுமையத்தில் ஒரு முனிவரின் ஆசிரமம்
இருந்தது. அங்கே நிலவிய அமைதியை கிழித்தபடி விமலாதித்தனின் படைகள் அந்த ஆசிரமத்தை
கடந்தன. அப்போது விமலாதித்தன் அங்கு முனிவர் ஒருவர் தவம் இருப்பதை கண்டான். முனிவரின்
ஆசிபெற்று போரை நடத்திட முடிவு செய்து அவரது ஆசிரமத்தினுள் நுழைந்தான்.
அந்த முனிவர் தன்னுடைய இடையில் ஒரே ஒரு
வஸ்திரம் மட்டும் அணிந்தபடி கடுமையான தவத்தில் இருந்தார். காட்டில் கடும் குளிர்
நிலவியது. முனிவருக்கு குளிருமே என்று தன்னுடைய சால்வையை எடுத்து போர்த்தினான்
விமலாதித்தன்.
சால்வை மேலே விழுந்ததும் கண்விழித்த முனிவர்
அரசனைப் பார்த்தார்.
”யாரப்பா நீ! எதற்காக இந்த சால்வையினை
எனக்குப் போர்த்தினாய்?” என்று வினவினார்.
“முனிவர் பெருமானே! நான் விஜய நகரத்து அரசன்
விமலாதித்தன். பக்கத்து நாடான பண்ணைபுரத்தின் மீது படையெடுத்துச் செல்கிறேன்! நான்
வெற்றிபெற உங்கள் ஆசி பெறவே இங்கு காத்திருந்தேன். காட்டில் கடும் குளிர்
நிலவியதால் உங்களுக்கு குளிருமே என்று இந்த சால்வையை போர்த்தினேன்!”
“அப்படியா! சரி! இந்த சால்வை எனக்கு
வேண்டாம்! எடுத்துச் செல்!”
“முனிவர் பெருமானே! தங்களுக்கு குளிரவில்லையா?”
“குளிரத்தான் செய்கிறது! ஆனாலும் பணக்காரனான
நான் ஏழையான உன்னிடம் யாசகம் பெற விரும்பவில்லை!”
“என்னது நீங்கள் பணக்காரர் நான் ஏழையா?”
“ஆம்! நான் ஏற்கனவே பணக்காரன்! இந்த
சால்வையையும் சேர்த்து சுமக்க எனக்கு விருப்பம் இல்லை!”
“ முனிவரே! அரையாடையுடன் நீங்கள்
இருக்கிறீர்கள்! என்னிடமோ இன்னும் இதே போல் பல சால்வைகள் இருக்கின்றன! இதோ நீர்
இருக்கும் இந்த இடம் கூட அரசனான எனக்குச் சொந்தம்! இதில் நீர் பணக்காரன் என்று
பேசுகிறீர்கள்! முனிவராயிற்றே என்று பொறுமையாக இருக்கிறேன்!”
இதைக்கேட்டு முனிவர் சிரித்தார். “மன்னா! உன்னுடையது! உன்னுடையது என்று
சொல்கிறாயே எதுவரை! நீ இறந்தால் உன்னுடன் கூட வருமா உன் நாடு? உன்னிடம் ஒரு நாடு
இருக்கிறது. அது போதாது என்று பக்கத்து நாட்டையும் பிடிக்கச் செல்கிறாய்!
அப்படியானால் உனக்கு தேவை இருக்கிறது என்றுதானே அர்த்தம்! தேவை உடையவனே ஏழை!
அவனுக்கே பொருட்கள் தேவை! இப்போது சொல் நான் என் தேவைக்கு அதிகமாக எதையும்
சேர்ப்பது இல்லை! நீயோ தேவை! தேவை என்று அலைகின்றாய்! யார் ஏழை?”
அரசன் அதிர்ந்து போனான். துறவியின் சொற்கள்
அவன் மனதை மாற்றின. போர் எண்ணம் மறைந்து போனது. முனிவரின் காலில் விழுந்து ஆசி
பெற்றான். “முனிவரே! என் கண்களை திறந்தீர்! இனி இப்படி பேராசை கொண்டு
அலையமாட்டேன்! இருக்கும் செல்வங்களை அனைவருக்கும் பகிர்ந்தளிப்பேன்! நல்ல மன்னனாக
ஆட்சி செய்வேன்! என்னை வாழ்த்துங்கள் என்றான்.
முனிவரும் அரசனை வாழ்த்தி அனுப்பினார்.
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
மிகவும் அருமையான கதை! தேவை என்று வந்துவிட்டால் எல்லோருமே ஏழைகள்தான்!!!!!....தேவைகள் குறைந்தால் நிச்சயமாகப் பணக்காரர்கள்தான்! அதைத்தானே சொன்னார் புத்தரும்....ஆசையைத் துற என்று!
ReplyDeleteஎனது, என்னுடையது என்று சொல்லுவதும் சரியல்லதான்....இன்று ஒரு பொருள் நம்முடையதாக இருக்கலாம்....நாளை அது யாருடையதோ....ஏன் வீடு உட்பட......எதுவுமே நிரந்தரமல்ல...என்ற உள்ளத்துடன் நாம் இருந்தால் நமது தேவைகளும் குறையும், படுத்தால் நிம்மதியான உறக்கமும் வரும்.....
ReplyDeleteவாழ்க்கைக்கு தேவையான கதை. நல்ல தத்துவத்தோட சொல்லப்பட்ட கதை.
ReplyDeleteஎதுவுமே யாருக்கும் சொந்தமில்லை..
ReplyDeleteதேவை உடையவனே ஏழை! //
ReplyDeleteஉண்மை.
அருமையான கதை.
நல்லதொரு கதை நண்பரே அனைவரும் இதை கடைப்பிடித்தால் துன்பம் குறைய இதுவும் ஒருவழியே,,,,
ReplyDeleteஅருமையான கதை...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
வணக்கம்
ReplyDeleteசிந்தனைக்கு அறிவான கதை .. பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தேவை உடையவனே ஏழை
ReplyDeleteஅருமை நண்பரே
அருமை