உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 63

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 63

வணக்கம் வாசக அன்பர்களே! உங்களின் பேராதரவிற்கு மிக்க நன்றி! சென்ற வார இடுகை தமிழ் 10 திரட்டியின் முன்னனி இடுகைகளுல் ஒன்றாக அமைந்தது என்று இன்று என்னை நேரில் சந்தித்த அன்பர் கூறினார். அகமகிழ்ந்தேன். சென்ற பகுதியில் முதலெழுத்துக்களில் சுட்டெழுத்தை பார்த்தோம். அதை நினைவு கூற இங்கு சென்று வருக: சுட்டெழுத்து

    இந்த வாரம் படிக்க இருப்பது, வினாவெழுத்து. ஆங்கிலத்தில் ( interrogative letters) என்று படித்திருப்போம். ஒரு வினாவை எழுப்ப அந்த வாக்கியங்கள் தேவைப்படும். தமிழிலும் வினாவை உருவாக்க எழுத்துக்கள் உண்டு. வினாப்பொருளை காட்ட வருகின்ற எழுத்துக்கள் வினாவெழுத்து என்று வழங்கப்படுகிறது.

  வினா எழுத்துக்கள் சொல்லின் முதலிலும் இறுதியிலும் வரும்.

வினாவை உருவாக்கும் எழுத்துக்கள், எ,யா, ஆ, ஓ, ஏ

எ, யா என்னும் எழுத்துக்கள் சொல்லின் முதலில் வந்து வினாவை உருவாக்கும்.
உதாரணம்} எது, யாது, எவன், யாவன்

ஆ, ஓ என்னும் எழுத்துக்கள் சொல்லின் கடைசியில் வந்து வினாவை உருவாக்கும்.
உதாரணம்} உண்டானா? படித்தானா? அவனா?, இவனோ?,அவனோ?

ஏ என்னும் எழுத்து சொல்லின் முதலிலும் இறுதியிலும் வந்து வினாவை உருவாக்கும்.
உதாரணம்} ஏது, ஏன், (சொல்லின் முதலில்)
            வந்தானாமே? பார்த்தாயாமே? கேட்டாயாமே? ( சொல்லின் இறுதியில்)

வினா அது அமையும் இடத்தை பொறுத்து அகவினா புறவினா என்று இருவகைப்படும்.

சொற்களின் உள்ளேயே வினா எழுத்து அமைந்தால் அது அகவினா எனப்படும். உதாரணமாக ஏன், எங்கு, எப்படி, யாது?

சொற்களின் புறத்தே வினா எழுத்து அமைந்து வந்தால் அது புறவினா எனப்படும். உதாரணமாக எப்போது? (எ+ போது)
எவ்வூர்? எ+ஊர் , வந்தானே? வந்தான்+ ஏ  உண்டானோ?  உண்டான்+ஓ

இன்னும் தெளிவாக பார்த்தால் சொற்களை பிரிக்கும்படி அமையும்
வினா எழுத்துக்கள் புறவினா என்று அறிந்து கொள்க

இனிக்கும் இலக்கியம்!

நற்றிணை

திணை: குறிஞ்சி, பாடியவர் கபிலர்

துறை}பிரிவு உணர்த்திய தோழிக்கு தலைவி சொன்னது

  “நின்ற சொல்லர், நீடுதோ றினியர்.
  என்றும் என் தோள் பிரிபுஅறி யலரே!
  தாமரை தண் தாது ஊதி மீமிசை
  சாந்தின் தொடுத்த  தீந்தேன் போலப்
  புரைய மன்ற புரையோர் கேண்மை,
  நீர் இன்று அமையா உலகம் போலத்
  தம் இன்று அமையா நம்நயந்து அருளி
  நறுநுதல் பசத்தல் அஞ்சித்
  சிறுமை உறுபவோ செய்புஅறி யலரே”


விளக்கம்} தலைவியியை யாரும் அறியாமல் களவில் கூடிய தலைவன் தொடர்ந்து பல நாட்களாக சந்தித்து வருகிறான். தலைவிக்கு அவனை பிடித்துப் போனது. அச்சமயம் அவன் பொருளீட்ட பிரியப்போகிறான் என்று தோழிக்கு தெரிகிறது. இந்த செய்தியை தலைவிக்கு கூறுகிறாள் தோழி. ஆனால் தலைவன் மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட தலைவி தலைவன் சொன்ன சொல் தவறாதவன் உன்னைப் பிரியேன் என்று எனக்கு வாக்கு அளித்துள்ளான். அவன் என்னை பிரியமாட்டான் என்று பெருமிதமாக கூறுகின்றாள்.

   அடிதோழி! என் காதலர் சொன்னால் சொன்னபடி நிற்பவர்! எத்தனை நாள் ஆனாலும் இனிப்பவர்! என்றும் அழகான என் தோளினைப் பிரிய அவருக்குத் தெரியவே தெரியாது.  தாமரை மலரின் தாதுவை ஊதி அதன் தேனை வண்டு எடுத்து மிக உயரமாக வளர்ந்த சந்தன மரத்தில் தேனடை கொடுத்தால் அது எவ்வளவு சுவையாக இனிக்குமோ அந்தளவிற்கு இனிப்பது என் காதலர் நட்பு! தண்ணீர் இல்லாமல் இந்த உலகம் அமையுமா? அமையாதல்லவா? அது போல அவர் இல்லாமல் அமையாத நம்மை அன்புடன் பேணுவதில் அக்கறையுள்ளவர் அவர். என் நெற்றி அவர் பிரிந்தால் பசலை பாயுமே, அதற்கு அஞ்சுவார் அவர். நீ சொல்வது போல சிறுமை செய்வாரா? அப்படி செய்ய தெரியாது  அவருக்கு! என்று தன் காதலனை பெருமையாக சொல்கிறாள் தலைவி.

 இந்த பாடலில் அமைந்துள தாமரை தண் தாது ஊதி மீமிசை சாந்தின் தொடுத்த தீந்தேன் போல  என்ற உவமை மன உணர்வினை சிறப்பாக விளக்குவதாக அமைந்துள்ளது. உலகியல் உண்மைகளை விளக்கும் நீரின்றி அமையாது உலகு போன்ற உவமைகளும் கையாளப்பட்டு பாடல் அழகுற்றிருப்பது சிறப்பு.

அழகான பாடலை மீண்டும் படித்து ரசியுங்கள்!


உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


மேலும் தொடர்புடைய இடுகைகள்:Comments

 1. அருமையாக பாடம் சொல்லிக்கொடுக்கிறீர்கள் வாழ்த்துக்கள் நண்பரே....

  ReplyDelete
 2. வினா எழுத்துக்கள் விளக்கமும், சிறப்பான பாடலின் விளக்கமும் அருமை...

  ReplyDelete
 3. பாடலும், பொருளும், விளக்கமும் ஒரு வகுப்பறையில் இருப்பதைப் போன்ற உணர்வைத் தந்தது. நன்றி.

  ReplyDelete
 4. தமிழ் பல வகைகளில் தேய்ந்துகொண்டிருக்கும் சமயத்தில் இது போன்ற பதிவுகள் மிக அவசியமானது.

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  எனது புதிய பதிவு : தமிழன் என்று சொல்லடா... தமிழில் பேசடா !

  http://saamaaniyan.blogspot.fr/2014/07/blog-post.html

  ( தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதியுங்கள்.நன்றி )

  ReplyDelete
 5. தங்களின்பணி போற்றுதலுக்கு உரியது நண்பரே
  நன்றி

  ReplyDelete
 6. தமிழை அழகாக சொல்லிக் கொடுக்கிறீர்கள். எல்லா பதிவுகளையும் படிக்க வேண்டும். நேரம் கிடைக்கும் போது வருகிறேன். நன்றி.

  ReplyDelete
 7. தமிழ் அறிவு அதிகம் இல்லாமலேயே பல வலைப் பூக்கள் !

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!