ஆத்தீகர் ஆன கலைஞர்! கதம்ப சோறு பகுதி 42
கதம்ப சோறு பகுதி 42
மவுலி வாக்கம், அலமாதி
உயிர்ப்பலிகள்!
சென்னையில் இப்போதெல்லாம் சனிக்கிழமை மழை
பெய்தால் பயப்படுகிறார்கள். அந்த அளவிற்கு சனிக்கிழமை பெய்யும் மழை உயிர்களை காவு
வாங்கிக் கொண்டு இருக்கிறது. காக்கை உட்கார பணம் பழம் விழுந்த கதைதான் என்றாலும்
இந்த பயங்கர சம்பவங்கள் மக்களிடையே பீதியை கிளப்பி உள்ளது நிஜம். ஒரு சாதாரண
விருப்ப ஓய்வுபெற்ற வங்கி குமாஸ்தா தான் மவுலிவாக்கம் இடிந்த கட்டடங்களின்
உரிமையாளர். இன்று அவரையும் இஞ்சினியர்களையும் இன்னும் பலரையும் கைது செய்து
சிறையில் வைத்துள்ளார்கள். இதனால் எல்லாம் என்ன பலன் வந்துவிடப்போகிறது? இறந்து
போன குடும்பங்களின் கதி? அவர்களின் எதிர்காலக் கனவுகள்? எல்லாவற்றையும் குழிதோண்டி
புதைத்துவிட்டது அந்த பதினோருமாடிக் கட்டிடம். முதலில் இரண்டு லட்சம் என்று சொன்ன
அம்மா ஆந்திர அரசு ஐந்து லட்சம் என்று சொன்னதால் ஏழு லட்சம் என்று உயிருக்கு விலை
நிர்ணயித்து அதை கொடுத்தும்விட்டார். இது போன்ற விதிமீறல் கட்டிடங்கள் முளையிலேயே
கிள்ளி எறியப்படவேண்டும். சில சில்லரைக்காசுகளுக்கு ஆசைப்பட்டு பல உயிர்களுக்கு
உலைவைத்த அதிகாரிகள் கண்டறியப்பட்டு கடுமையான தண்டனை வழங்கினால் ஒழிய இவைகளை தடுக்கமுடியாது.
இன்னும் ஓர் அறிக்கை சொல்கிறது சென்னையில் மட்டும் இன்னும் 200 கட்டிடங்கள் இப்படி
அபாயகரமாக இருக்கிறதாம் இடிக்கச் சொல்லி பரிந்துரைத்தும் இன்னும் ஒன்றும் நடந்த
பாடில்லையாம். அவர்களுக்கு மனித உயிர் தூசுதான். அலமாதி விபத்து இன்னும் கோரம்?
பக்கத்து கட்டிடத்தில் வேலை செய்பவர்கள் இடிந்த மதில் சுவர் ஓரம் கூரை அமைத்து
தங்கி இருக்கிறார்கள். ராத்திரி பெய்த மழையில் சுவர் சரிய பதினோறு பேர்
தூக்கத்திலேயே இறந்து போனார்கள். தம்மிடம் வேலை செய்ய வந்தவர்களுக்கு தங்குமிடம்
கூட சரியாக அமைத்து தராத அந்த முதலாளி. அஸ்திவாரம் சரியாக போட்டு சுவர் எழுப்பாத
இந்த முதலாளி என்று பெயருக்கு கைது செய்துள்ளார்கள். இறந்தவர்களிடமும் எவ்வளவு
சுருட்டமுடியுமோ அவ்வளவு சுருட்டிக் கொண்டார்கள் போல மீட்டவர்கள். முதல் நாள்
இறந்த ஒரு பெண்மணியிடம் 90 ஆயிரம் ரூபாய் 5 சவரன் நகை இருந்ததாக செய்தி. அடுத்த
நாள் இறந்து போன பெண்ணிடம் இருந்து மீட்ட 58 ஆயிரம் உறவினர்களிடம் வழங்கப்பட்டது
என்றொரு செய்தி மீதி 32 ஆயிரமும் 5 சவரனும் எங்கே போனது? ஆண்டவனுக்கே வெளிச்சம்!
ரயில்வே பட்ஜெட்!
சதானந்த கவுடா! ரயில்வே பட்ஜெட்டை
சமர்பித்துவிட்டார். புதிய திட்டங்கள் எதுவும் இல்லை! ஒரு ரூபாயில் 94 காசுகள்
செலவழிந்து போகிறது. ஆறு பைசாவை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்யமுடியாது என்று
சொல்லிவிட்டார். தமிழகத்துக்கு 5 புதிய ரயில்கள் விட்டிருக்கிறாராம். ரயிலில்
கணிணி வசதி, உணவு வசதி என சில புதிய வசதிகளை பரிட்சார்த்த முறையில் செயல்படுத்த
முடிவு செய்துள்ளார். செல்போன் மூலம் அலாரம் வசதி, ஸ்டேஷன் விபரம் போன்றவை
சொல்லும் வசதி என சில மாயஜாலங்கள் காட்டி இருக்கிறார். சிலவற்றை தனியாரிடம் தாரை
வார்க்கவும் முடிவு செய்துள்ளார். பார்ப்போம் இவை எந்த அளவிற்கு ரயில்வேயை உயர்த்த
போகிறது என்று.
ஆத்திகர் ஆகும் கலைஞர்;
பகுத்தறிவு திலகமாக தன்னைப் பறைசாற்றிக்
கொள்ளும் கலைஞரது சமீபகாலத்து பேட்டிகள், அறிக்கைகள் நம்மை கிச்சுகிச்சு மூட்டி
விடுகின்றது. எல்லாம் வயது முதிர்ச்சியா? குடும்ப குழப்பத்தில் உளறும் பிதற்றலா
என்றுதான் யோசிக்க வைக்கிறது அவரது அறிக்கைகள். இன்று ஓர் அறிக்கை படித்தேன்.
ஜெயலலிதா ஆட்சி அமையும் போதெல்லாம்
தமிழகத்தில் அகால மரணங்கள் ஏற்படுகின்றனவாம். மகாமக குளத்தில் நடந்த
விபத்து, வறட்சி நிவாரணம் வழங்கும் போது ஏற்பட்ட விபத்து, கும்பகோணம் தீ விபத்து,
என்று அடுக்கி சமீபத்தில் மவுலிவாக்கம், அலமாதியில் நடந்த விபத்துக்கள் வரை
அடுக்கியுள்ளார். இப்படி எல்லாம் சிந்திப்பது அவர் வாக்குப்படி மூடர்கள்,
ஆத்திகர்கள்! அவர்கள்தான் சகுனம் பார்ப்பது, ஜோஸ்யம் போன்றவை பார்ப்பர்! இது
ஆகாது! அது ஆகாது என்பர். ஆனால் பகுத்தறிவு பகலவனாக தமிழகத்திற்கே வெளிச்சத்தை
வழங்கிக் கொண்டிருக்கும் உதய சூரியனான கலைஞர் இப்படி உளறிக் கொட்டுவதை பார்த்தால்
அவரும் ஆஸ்திகர் ஆகிவிட்டாரோ? அல்லது அவருக்கு யாராவது பில்லி சூனியம் வைத்து
விட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
கிச்சன் கார்னர்:
வாழைக்காய் தயிர்வடை
தேவையான பொருள்கள்:
வேகவைத்த வாழைக்காய் 2
வேகவைத்த உருளைக்கிழங்கு 1
கடலைமாவு 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் 2
சீரகத்தூள் ½ டீஸ்பூன்
தயிர் 2 கப்
உப்பு, எண்ணெய் தேவையான அளவு
கொத்துமல்லி கறிவேப்பிலை
தேவையான அளவு.
செய்முறை: வேகவைத்த
உருளைக்கிழங்கு, வாழைக்காய்களை தோலுரித்து நன்றாக மசித்துக் கொள்ளவும். அத்துடன்
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், கடலைமாவு, உப்பு, மூன்று டீஸ்பூன் எண்ணெய்
(சூடுபடுத்தி சேர்க்கவும்) சேர்த்து நன்றாகப் பிசைந்து, சின்ன சின்ன வடைகளாகத்
தட்டவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும்
வடைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். தயிரை இலேசாக கடைந்து அதில் வடைகளை
போட்டு ஊறவிட்டு மேலே கொத்துமல்லி, கறிவேப்பிலை, சீரகப்பொடி தூவி பறிமாறவும்.
(பழைய இதழொன்றில் படித்தது)
டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்!
எலுமிச்சை சாறில் கஸ்தூரி
மஞ்சள் பொடியை கலந்து தேய்த்து குளித்தால் பெண்களின்முகத்தில் உள்ள பூனை முடிகள்
மறையும்.
உடைந்த கொசுவர்த்தி சுருள்
துண்டுகளை புத்தக அலமாரிகளில் போட்டுவைத்தால் புத்தகங்களை பூச்சி அரிக்காது.
இரண்டு ஸ்பூன் கசகசாவை பாலில்
ஊறவைத்து மையாக அரைத்து பாலுடன் சேர்த்து குடித்துவந்தால் வாய்ப்புண் குணமாகும்
மீண்டும் வராது.
கீரிஸ் பட்ட கறை போக கறைபட்ட
இடத்தின் அடியில் ஒரு மை உறிஞ்சும் பேப்பரை வைத்துக்கொண்டு ஒரு சிறிய துணியில்
பெட்ரோலை நனைத்து துடைத்தால் கிரிஸ் கறை மறையும்.
தாளிதம் செய்யும் எண்ணெயில்
சிறிதளவு உப்பு போட்டுவிட்டு தாளிதம் செய்தால் கமறல் ஏற்படாது.
டீவி கார்னர்!
இந்த வாரத்தில் உடல் நிலை சரியில்லாமல்
போனதால் எப்போதாவது பார்க்கும் டீவியும் கட்! இருந்தும் சனியன்று விஜய் டீவியில்
ஒளிபரப்பான சாட்டை படம் பார்த்தேன். ஒரு பள்ளியை அப்படியே கண் முன் கொண்டுவந்து
நிறுத்தி இருந்தார்கள்.ஆசிரியர்களுக்குள் ஈகோ! பசங்களின் குறும்பு! நல்ல வாத்தியார், புதுசா வந்தவர் பெயர் எடுக்கிறாரே என பொறாமை படும் பழைய வாத்தியார், பசங்களுக்குள் விடலைக் காதல், தனியார் பள்ளிகளின் தகிடு தத்தங்கள்என கதையை
சிறப்பாக பின்னியிருந்தார்கள். ஏற்கனவே ஒரு முறை பார்த்ததுதான். ஆனாலும் மீண்டும்
பார்க்கத் தூண்டியது. தம்பி ராமையாவும் சமுத்திரகனியும் கலக்கி இருந்தார்கள்.
ஆனால் முழுவதும் பார்க்க முடியவில்லை! மின்சார வாரியத்தினர் புண்ணியம் கட்டிக் கொண்டனர்.
புக்ஸ் கார்னர்:
மொட்டைத் தலையும்
முழங்காலும்!
வெளியீடு: ழகரம்
புத்தகச்சோலை, 8/36 ஜோதி ராமலிங்கம் தெரு சென்னை 33.
எழுதியவர்: சேட்டைக் காரன்.
பக்கங்கள் 160 விலை ரூ 120
பிரபல பதிவர் சேட்டைக்காரன்
அவர்கள் எழுதிய நூல்! பக்கத்துக்கு பக்கம் சிரிப்புக்கு கியாரண்டி என்ற விதத்தில்
எழுதப்பட்ட நகைச்சுவை சிறுகதைகளின் தொகுப்பு இந்த நூல். சென்ற வருட பதிவர்
சந்திப்பில் வெளியிடப்பட்டது. அப்போதுதான் வாங்கினேன். படிக்க சோம்பேறித்தனப்பட்டு
அப்படியே வைத்திருந்தேன். வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பார்களே என்று
இந்த முறை உடல்நிலை சரியில்லாதபோது எடுத்து படித்தேன். எனக்கு பிடித்த ஜலதோஷம்
விட்டுப்போனது. சேட்டைக்காரன் நகைச்சுவையில் விழுந்து விழுந்து சிரிக்க சளியும்
வெளியில் வந்து விழுந்தது என்று சொன்னால் மிகையில்லை. மாப்பிள்ளை வந்தார்
மாப்பிள்ளை வந்தாரில் சொந்த பெண் சுகுணாவையே அடையாளம் தெரியாமல் தேடுவதில்
ஆரம்பிக்கிறது ரகளை கடைசியாக மாப்பிள்ளைவீட்டார் நர்சரி ஸ்கூலில் அட்மிசன் மட்டும்
வேண்டும் வரதட்சணை வேண்டாம் என்று சொல்ல செமரகளை செய்கிறார் கோலப்பெருமாள்.
கேரக்டர்களின் பெயர்களே சிரிக்க வைக்கின்றன. இப்படி கதைகள் சிறப்பாக இருந்தாலும்
நூலின் காகிதத்தின் தரமும், பைண்டிங்கும் சரியில்லை. பாலகணேஷ் சாரின் வடிவமைப்பு அழகாய்
இருந்தாலும்160 பக்கங்களுக்கு 120 ரூபாய் என்பது சாதாரண வாசகனின் பட்ஜெட்டை பதம்
பார்க்கும் ஒன்று. மற்றபடி சிரித்து சிரித்து மகிழ இந்த புக் கியாரண்டி.
இவர்களை தெரிந்து கொள்வோம்!
பிறந்தோம்! வாழ்ந்தோம்! இறந்தோம் என்றில்லாது இந்த மண்ணுக்கு தம்மால் இயன்றதை செய்யும் நல்ல உள்ளங்களை பற்றிய பகிர்வு இது.
இலவசமாய் மரக்கன்றுகளை மாணவர்களின் உதவியுடன் வழங்கி வரும் இந்த ஆசிரியர் பற்றி அறிந்து கொள்ள இங்கு: மரக்கன்றுகள் வழங்கும் ஆசிரியர்
படிச்சதில் பிடிச்சது
ஒரு குடும்பத்தில் மாமியார்- மருமகள்
இவர்களுக்குள் பிரச்சனை. இது சகஜம். தினமும் சண்டைப்போட்டுக்கொள்வார்கள். அன்று
மாமியாருக்கும் மருமகளுக்கும் ஏதோ சண்டை முற்றிவிட்டது. ஆத்திரத்தில் மருமகள்
மாமியாரை உலக்கையால் தாக்கி வீழ்த்திவிட்டாள்.
உலக்கையால் அடித்தால் சொல்ல வேண்டுமா? பலத்த
காயம்! பேச்சு மூச்சில்லாமல் வீழ்ந்துவிட்டாள் மாமியார். அந்த சமயம் பார்த்து
அங்கே கணவன் வந்தான். அவனொரு மடச்சாம்பிராணி. வீழ்ந்து கிடக்கும் அம்மாவை பார்த்து
அம்மா! என்ன ஆயிற்று? ஏன் விழுந்து கிடக்கிறாய் என்று கேட்டாள்.
தாயால் பேச முடியவில்லை! ஜாடை காட்டினாள்.
தன்மீது கைவைத்து காட்டினாள். உலக்கையை காட்டினாள். மருமகளை காட்டினாள். மகன் தான்
மடச்சாம்பிராணி ஆயிற்றே! புரிந்து கொள்ளவில்லை!
அம்மா என்ன சொல்றாங்க? மனைவியிடம் கேட்டான்.
மனைவி சாமர்த்திய காரி? அவள்
என்ன சொன்னாள் தெரியுமா? உலக்கை மாதிரி நிற்கிறேயேடா? நான் போற நேரம் வந்துருச்சு!
நகையெல்லாம் கழற்றி மருமகளுக்குப் போடு!ன்னு சொல்றாங்க! என்றாள்.
இதைக் கேட்ட மாமியார் அப்போதே உயிரைவிட்டாள்!
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
மாமியார் கதை ஸூப்பர்.
ReplyDeleteபழரசங்கள் அனைத்தும் அருமை நண்பரே....
#மீதி 32 ஆயிரமும் 5 சவரனும் எங்கே போனது? ஆண்டவனுக்கே வெளிச்சம்!#
ReplyDeleteஅடப்பாவிங்களா ,இப்படியா எரியற வீட்டிலே பிடுங்கின வரைக்கும் ஆதாயம்னு கொள்ளை அடிப்பீங்க ?
சாட்டை நல்ல படம் ,அதுதான் சரியாய் ஓடலே!
மாமியாரை இப்படியா கொல்வது?
நீண்ட பதிவு என்றாலும் ரசிக்கத்தக்க பதிவு சுரேஷ் ஜி !
அது மட்டும் இல்லே ஜி! விபத்து நள்ளிரவு நடந்து ஓனருக்கு தகவல் போயிருக்கு! அவர் விடிகாலையிலதான் போலீஸிக்கு சொல்லி இருக்கார்! எல்லாம் பெரிய இடத்து சமாசாரமா இருக்கு! ஆந்திர மாநில கூலித்தொழிலாளர்கள் ஒடிசா மாநில கூலித்தொழிலாளர்கள் அன்று தான் சம்பளம் வாங்கி மடியில் கட்டி கொண்டு படுத்து இருக்கிறார்கள்! அப்படியே சமாதி ஆகிவிட்டார்கள்! கொடூரமான சம்பவம் இது!
Deleteவாழைக்காய் தயிர்வடை புதிது...!
ReplyDeleteபடிச்சதில் பிடிச்சது செம...!
மொட்டைத் தலையும் முழங்காலும் என்றும் ரசிக்கத்தக்கவை...
அனைத்தையும் ரசித்தேன் நண்பரே
ReplyDeleteஉடல்நிலை தற்போது நலம்தானே
கதம்பச்சோறு சுவையாக இருந்தது. ருசித்தேன்! இரசித்தேன்!வாழ்த்துக்கள்!
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : கும்மாச்சி அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கும்மாச்சி
வலைச்சர தள இணைப்பு : கும்மாச்சி தொடுக்கும் மலர்ச்சரம்--செண்பகம், தாமரை, சேடல், செம்மை
//அவருக்கு யாராவது பில்லி சூனியம் வைத்து விட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.//
ReplyDeleteஅவருக்கு அவரே சூனியம் வைச்சுகிறார்ங்க
முதலில் தலைப்பைப் பார்த்ததும் ஆச்சரிய ஷாக்...அப்புறம் நெஞ்சு திக் திக்...புயல் வந்துடுமோன்னுதாங்க.....பின்ன என்னங்க இப்படிப் பயமுறுத்தினா....வாசிச்சப்புறம்தான்...நிம்மதிங்க....கடவுள் நம்பிக்கைக்கும், மூட நம்பிக்கைக்கும் வித்தியாசம் தெரியாதவர்......அதான் மூட நம்பிக்கைகள் பேசிட்டுருக்காருங்க.....அவருக்கு அவரே பகைதான்........
ReplyDeleteவங்கி குமாஸ்தா இவ்வளவு பெரிய கட்டிடத்துக்கு உரிமையாளர்....என்ங்கனையோ இடிக்குதே ....
வாழைக்காய் தயிர் வடை...புதிது! பகிர்வுக்கு மிக்க நன்றி!
அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை ஊருக்கு தான் உபதேசம்.
ReplyDeleteஇப்படிக்கூட மாமியாரை கொல்ல முடியுமா!!!!
பகுத்தரிவு பகலவனை கரு மேகங்கள் மறைத்தது போலும்... மாமியார் பாவம்
ReplyDeleteமாமியார் - மருமகள் - :))))
ReplyDeleteமவுலிவாக்கம் - சோகம். கிடைத்த வரை லாபம் என இறந்தவர்களிடம் திருடுபவர்களை என்ன செய்யலாம்...
தயிர் வடை - வித்தியாசம்....