தமிழகத்தை கலக்கிய வேஷ்டியும் ஓடுகாலிகளும்! கதம்ப சோறு பகுதி 43

கதம்ப சோறு 

வேட்டி பிரச்சனை!

 இந்த வாரம் தமிழகத்தை உலுக்கிய தலையாயப் பிரச்சனை வேட்டிப்பிரச்சனை. நீதிபதி ஒருவர் கிரிக்கெட் கிளப்பிற்கு வேட்டி கட்டி சென்றபோது உள்ளே விடவில்லையாம். ஆளாளுக்கு பொங்கி எழுந்துவிட்டார்கள். முகநூலில் பல்வேறு கருத்துக்கள்.  ஆளுக்கொரு நியாயங்கள்! விதிகள் சட்டங்கள் என்று இருவகை உண்டு. விதிகளை அவ்வப்போது சூழ்நிலைக்கேற்ப தளர்த்திக் கொள்ளலாம். சட்டங்கள் அப்படியில்லை! ஆனால் இன்று ஆட்சியாளர்கள் தங்கள் வசதிப்படி சட்டங்களைக் கூட திருத்திக் கொள்கின்றனர். அந்த கிளப்பின் விதிப்படி வேட்டி அணிந்து வரக்கூடாது. நீதிபதியான இவர் அந்த கிளப்பின் உறுப்பினரா என்பது தெரியவில்லை. உறுப்பினராக இருந்தால் தெரிந்து இருக்கும் அணிந்து சென்றிருக்க மாட்டார். விதிப்படி வேட்டி அணிந்து வராதீர்கள் என்று சொல்லி இருக்கிறார்களே தவிர வேட்டியே அணியக் கூடாது என்று சொல்லவில்லை! ஒரு பள்ளி இருக்கிறது! அதற்கு ஒரு யூனிபார்ம் இருக்கிறது. அந்த யூனிபார்மை மாணவர்கள் பின்பற்றவேண்டும். ஆசிரியர்களுக்கும் ஒரு டிரெஸ் கோட் இருக்கிறது. அதைப் பின்பற்றவேண்டும். அதையேத்தான் இங்கே சொல்லி இருக்கிறார்கள்.. இதை பெரிது படுத்தி இரண்டு நாள் வேறு எதையும் யோசிக்காமல் அடித்துக் கொண்டது நல்ல காமெடி. கடைசியாக இன்று சட்ட மன்றத்தில் தமிழக கலாசாரங்களை மதிக்க மறுக்கும் கிளப்களை தடை செய்யப்போவதாக அம்மா அறிவித்து இருக்கிறார். எனக்கு ஒரு சந்தேகம்  ‘கிளப்’ கிரிக்கெட் எல்லாம் எப்படி தமிழர் கலாசாரத்தில் வருகிறது என்று தெரியவில்லை! இப்போது இன்னொரு கூத்து என்னவென்றால் தமிழக சட்டசபை உறுப்பினர்கள் பேண்ட்டுக்கு மாறிவிட்டார்களாம். நான் வேட்டிக்கு எதிரி இல்லை! சொல்லப்போனால் தினமும் வேட்டி அணிபவன். என்னால் இவர்களின் கூத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை!

ஓடுகாலிகள்!

     முகஸ்துதியும் நமஸ்காரத்தையும் மட்டுமே முழுதாக அறிந்து இருக்கும் தமிழக அமைச்சர்கள் சபையில் எதிரணியினரை கிண்டல் செய்து அம்மாவிடம் பாராட்டு வாங்கத் துணிகிறார்கள். இந்த நையாண்டி கலாசாரம் கலைஞர் முதல்வராக இருந்தபோதுதான் ஆரம்பித்தது என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். இப்போது எதிர்கட்சியினர் மவுலி வாக்கம் பிரச்சனை பற்றி கேள்வி எழுப்பினால் விசாரணை கமிஷன் நடக்கிறது என்று சப்பைக் கட்டு கட்டி பதில் சொல்ல மறுத்த அமைச்சர் தேவையில்லாமல் எதிர்கட்சியை தனியாக நின்று ஓட்டு வாங்க முடியுமா? என்று கேள்வி கேட்கிறார். அவர்கள் வாங்க முடியாதபடி ஆகிவிட்டார்கள் என்று உலகறிந்த ரகசியம் ஆகிவிட்டது. இதில் வெளிநடப்பு செய்பவர்களை ஓடுகாலிகள் என்று சொல்கிறார். எல்லாம் தெரிந்த சபாநாயகரும் அதை சபைக் குறிப்பில் நீக்கவில்லை! ஓடுகாலிகள் என்பது எவ்வளவு உத்தமம் ஆன தமிழ்ச்சொல்! சபையில் அரங்கேறிவிட்டது. நாக்கை கடித்து முகத்தை துருத்தினால் அது அநாகரீகம்! அமைச்சர் இப்படி கண்டபடி விமரிசித்தால் அது நாகரீகம்! இப்படி இவர்கள் ஒருவரை ஒருவர் தூற்றிக்கொள்ள ஒரு சபை! அதற்கு மக்களின் பணம் வீணாகிறது! இதையெல்லாம் பார்க்கும் போது பழைய காலங்கள் மீண்டும் திரும்பாதா? என்று தோன்றுகிறது.

உலகப்பந்தை தனதாக்கிய ஜெர்மனி!

  பிரேசிலில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது ஜெர்மனி. நெதர்லாந்தின் முரட்டு ஆட்டத்தில் பிரேசில் வீழ்ந்து போனது மீண்டும் எழ முடியாத அளவிற்கு போய்விட்டது. நெய்மர் முதுகுத் தண்டில் விழுந்த அடி அந்த அணிக்கு பேரிடியாக போய்விட்டது. அர்ஜெண்டினா அணி மெஸ்ஸியையே முழுதாக நம்பி இருந்தது. சுற்றுப்போட்டிகளிலும் அணி வெல்ல மெஸ்ஸியே பலமாக இருந்தார். அதுவே அணியின் பலவீனமாகவும் போய்விட்டது. தங்க பந்து விருது அவருக்கு கிடைத்தும் அணி வெற்றிபெறாததால் அவர் சோகமாக காணப்பட்டார். இதற்கிடையில் அர்ஜெண்டினா முன்னாள் கேப்டன் மரடோனா தங்க பந்து விருதுக்கு மெஸ்ஸி தகுதியானவர் அல்ல என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி விட்டார். கோடிக்கணக்கான ரசிகர்கள் கொண்டாடிய உலகக் கோப்பை கால்பந்து எப்படியோ பல்வேறு சர்ச்சைகளை கடந்து இனிதாக நிறைவேறியது.

 கிச்சன் கார்னர்:

 காரட் காஜா!

  இதென்ன பேரே புதுசா இருக்கேன்னு பயப்படாதீங்க!  இது ஒரு ஸ்வீட் என்னுடைய தங்கை செய்து கொடுத்தார். அவர் கொடுத்த ரெசிபி கீழே!
  தேவையானவை: கேரட், சர்க்கரை, மைதா, ஏலம், முந்திரி பாதாம், செர்ரிப்பழம், உப்பு எண்ணெய், நெய்.

செய்முறை:  கேரட்டை நன்கு சீவிக்கொள்ளவும். மைதா மாவை உப்பு சேர்த்து பூரிமாவு பதத்திற்கு பிசைந்துகொள்ளவும். வாணலியில் நெய்விட்டு முந்திரி பாதாம் பருப்பை வறுத்துக் கொள்ளவும். துருவிய கேரட்டையும் சேர்த்து நன்றாக வதக்கி சுருண்டு வரும்போது இறக்கிக்கொள்ளவும்.
   சர்க்கரையை தண்ணீர் விட்டு பிசுக்குப் பதத்தில் பாகு எடுக்கவும். மைதாமாவை பூரிகளாக திரட்டி அதில் கேரட் அல்வாவை வைத்து  மூடி எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்.பின் பாகில் ஊறவைத்து பின் அதில் செர்ரிப்பழம், முந்திரி ஏலம் தூவி பறிமாறவும்.

டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்!

வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வறுத்து பனங்கற்கண்டு சேர்த்து காலையிலும் மாலையிலும் ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டால் தொப்பை குறையும்.

பூரிமாவு பிசையும்போது பிரட் துண்டுகளை நீரில் நனைத்து சேர்த்து பூரி செய்தால் கரகரவென்று இருக்கும் சுவையாகவும் இருக்கும்.
கறிவேப்பிலை காயாமல் இருக்க வேண்டுமானால் அதன் மீது ஓர் அலுமினியப் பாத்திரத்தை மூடிவைத்தால் காயாமல் இருக்கும்.


தோசை சுடும்போது கல்லில் மாவு ஒட்டிக்கொள்கிறதா? சிறு கோலியளவு புளியை ஒரு துணியில் கட்டி அதனால் எண்ணெயைத் தொட்டுக் கல்லில் தேய்த்து பிறகு தோசைவார்த்து பாருங்கள். தோசை நன்றாகவரும்.

கூர்மையான கத்திகளில் தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் அதன் கூர்மை மழுங்காது.

தக்காளி எலுமிச்சம் பழம் சீக்கிரம் கெடாமல் இருக்க உப்புகலந்த நீரில் போட்டு வைக்கவும்.

 இவரைத் தெரிந்து கொள்வோம்:

 பழங்குடியின மக்களின் கல்விக்கு பாடுபட்டு பட்டதாரிகளாக மாற்றும் இந்த மனிதரை அறிந்துகொள்ள இங்கு:  பழங்குடி பட்டதாரிகளை உருவாக்குபவர்


டீவி கார்னர்!

  இந்த வாரம் ஒரு நாள் கே.டீவியில் முந்தானை முடிச்சு ஓடிக்கொண்டு இருந்தது. எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத ஒரு படம். ஊர்வசிக்கு அது முதல் படமா? என்று யோசிக்க வைக்கும் வகையில் நடித்து இருப்பார். பாக்யராஜின் பல காட்சிகள் கைதட்டலை அள்ளித்தரும். அப்பாவி வாத்தியார் கேரக்டரை அருமையாக நடித்து அசத்தி இருப்பார். ஊர்வசியை அழைத்துக்கொண்டு சினிமாவுக்கு போவதாக கிளம்புவார். பின்னர் யாரோ ஏதோ சொல்லிவிட வேண்டாம் என்று நிறுத்திவிடுவார். அப்புறம் ஊர்வசி, பாக்யராஜ் அதற்காக வாக்குவாதம் செய்யும் காட்சிகள் அசத்தலாக இருக்கும். இந்த காட்சியை இந்த வாரம் வேறு ஏதோ பணியின் ஊடே ரசித்தேன். மற்றபடி டீவி சேனல் மாற்றும் உரிமைகள், அம்மா, மனைவி, பிள்ளைகள் என்று மாறிவிட்டபடியால் அவர்கள் பார்க்கையில் நமக்கு பிடித்தது தென்பட்டால் பிடித்துக் கொள்வது இல்லையேல் நெட்டே கதி என்று வந்துவிடுவது என்றாகிவிட்டது.

புக்ஸ் கார்னர்.
 இதழில் எழுதிய கவிதைகள்!
ஆசிரியர் சதிஷ் சங்கவி
அகவொளி பதிப்பகம், 390 அண்ணாசாலை, சைதாப்பேட்டை, சென்னை 15
பக்கங்கள் 96 விலை ரூ 70


சக வலைபதிவர் சங்கவி என்ற சங்கமேஸ்வரன் எழுதிய கவிதைகளின் தொகுப்பு இந்த நூல். இதழில் எழுதிய கவிதைகள் என்ற பெயரே ஒரு ஈர்ப்பை நம்மிடம் ஏற்படுத்திவிடுவது நிஜம். முகநூலில் நிலைத்தகவலாக எழுதப்பட்ட கவிதைகள்தான் என்றாலும் ஒவ்வொரு கவிதையும் ஒருவிதத்தில் நம்மை ரசிக்கத் தூண்டுகிறது.
   தலைப்புக்கு ஏற்றபடி முத்தக் கவிதைகள் நம் மனதை மொத்தமாக கொள்ளையடித்துச்செல்கின்றது உறங்கியபின் அவள் நெற்றியில் இட்ட ஒற்றை முத்தத்தில் இரட்டைச் சத்தம் எப்படி என்று சொல்பவர் உன் ஒவ்வொரு முத்தமும் ஒர் முள் என்று திகைக்க வைத்து முள்ளை முள்ளால் எடுக்கப் போவது போல் முத்தத்தை முத்தத்தால் எடுக்க போகிறேன் என்று திகைக்க வைக்கிறார். இருவருக்கும் இடையே காற்று படும் பாட்டை எந்த கவிதையும் எழுதாது என்று எழுதி வியக்க வைக்கிறார்.
  முத்தக் காதல் காதலில் முத்தியவர்களுக்கு மட்டுமல்ல! காதலிப்பவர்கள், காதலித்து மணந்து கொண்டவர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் பிடிக்கும் இந்த நூல். கட்டமைப்பும் காகிதமும் தரமாக உள்ளது. விலை இன்றைய விலைவாசிக்கு ஏற்றதுதான். ஜாலியாக பொழுது போக இந்த நூல் கியாரண்டி.

படிச்சதில் பிடிச்சது:

வயதான அன்னையை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுகிறான் மகன். எப்போதாவது ஒருமுறை கடனே என்று போய் பார்த்து வருவான். ஒரு நாள் அன்னையின் உடல்நிலை மோசம் என தகவல் வருகிறது.
மகன் பார்க்கச் சென்றான். அன்னையின் கடைசி ஆசை என்ன என்று கேட்கிறான்.
 “விடுதியில் மின்விசிறிகளே இல்லை! கொஞ்சம் வாங்கித் தந்து உதவுகிறாயா?” என்கிறாள் தாய்.
“ இதுநாள்வரை நீ இதை கேட்கவில்லையே?” என்று ஆச்சர்யத்துடன் கேட்டான் மகன்.
   “என் கஷ்டத்தை நான் பொறுத்துக் கொண்டேன். ஆனால் உன் மகன் உன்னைக் கொண்டுவந்து சேர்க்கும் போது நீ கஷ்டப்படக் கூடாது பார். அதற்காகத்தான் மின்விசிறி கேட்கிறேன் என்றாள் அந்த தாய்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. காரட் காஜா செம...!

    படிச்சதில் பிடிச்சது மிகவும் பிடித்தது...

    ReplyDelete
  2. வேட்டி கலாச்சாரமும், ஓடுகாலிகளும் பற்றிய உங்கள் கருத்தே என்னடைய கருத்தும்.

    ReplyDelete
  3. அருமையான கதம்பமாலை மணத்தது வாழ்த்துக்கள் நண்பரே....

    ReplyDelete
  4. தங்கள் பதிவு வலைச்சரத்தில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது! //http://blogintamil.blogspot.in/2014/07/cocktail-fizzy-crissppy.html// நன்றி !

    ReplyDelete
  5. வேட்டிக்கலாச்சாரத்தைப் பற்றி தங்களின் கருத்தை நானும் ஒத்துக்கொள்கிறேன்.

    புது வைகாயான இனிப்பு.

    படித்ததில் பிடித்தது - எனக்கும் பிடித்திருக்கு.

    ReplyDelete
  6. தாயுள்ளம் மனது கனக்க செய்தது
    >>>
    கேரட் காஜா செய்து பார்த்து சொல்றேன்.
    >>
    முந்தானை முடிச்சு எந்த தலைமுறையிலயும் யார் வேணும்னாலும் பார்த்து ரசிக்கலாம். ஒருசில வசனங்களை தவிர்த்து...,

    ReplyDelete
  7. கேரட் காஜா, டிப்ஸ், படித்ததில் பிடித்தது என்று எல்லாமே அருமை. முந்தானை முடிச்சு படம் எனக்கும் பிடித்தது தான்..

    ReplyDelete
  8. சுவையான கதம்பம்.....

    வேட்டி - எத்தனையோ பிரச்சனைகள் இருக்க, இதில் இத்தனை வாக்குவாதங்கள், விதண்டாவாதங்கள்.

    ReplyDelete
  9. இவர்களின் கூத்தை ரசிக்கமுடியவில்லை என சொல்லியிருக்கிறீர்கள்... இவர்களெல்லாம் சபைகளில் வேட்டியை உருவியே கூத்தடித்தவர்கள் ! வேட்டியை வைத்து அரசியல் பார்ப்பதெல்லாம் இவர்களுக்கு சகஜமய்யா !

    நம் ஜனநாயகம் அப்படி !!!

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ReplyDelete
  10. டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் மிகவும் பயனுள்ளதாய் இருந்தது..

    படித்ததில் பிடித்தது மிகவும் அருமை.. சில நொடிகளிலேயே நெஞ்சைத் தொடும் இதுமாதிரியான கதைகளை, விளம்பரங்களாக பதிவு செய்யலாம்..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2