“கிழிந்த நோட்டு”


  “கிழிந்த நோட்டு”

அந்தக் காலைப்பொழுதில் பிதுங்கி வழிந்த மாநகரப் பேருந்தில் அலுவலகத்திற்கு செல்லும் துர்பாக்கிய சாலிகளில் நானும் ஒருவன்.பிதுங்கி வழியும் அந்த பேருந்தில் படிக்கட்டில் தொற்றி உள்ளே முன்னேறுவது என்பது ஒரு கலை! இதை அந்த பஸ்ஸில் தொடர்ந்து பயணிக்கும் சிலராலேதான் சரிவர செய்யமுடியும். அதிலும் இரு கால்களுக்கு இடையில் அலுவலகப்பையினை இடுக்கிக் கொண்டு ஒரு கையால் மேலே கம்பியை பிடித்துக் கொண்டு மற்றொரு கையால் சரியான சில்லறையை எடுத்து கண்டக்டரிடம் கொடுத்து நீங்கள் டிக்கெட் வாங்கிவிட்டீர்கள் என்றால் பஸ் பயணத்தில் பி.எச்.டி படித்ததற்கு சமானம் என்று அர்த்தம்.
    இப்படி காசை எடுக்கும் வேளையில் சகபயணிகள் எரிச்சலோடு மேலே இடிக்காதீங்க சார்! சாயாதீங்க! என்று சகட்டு மேனிக்கு அர்ச்சிப்பதை எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளவே கூடாது. அதில் கவனத்தை செலுத்தினால் உங்களால் உள்ளே நுழையவே முடியாது. இதில் பள்ளிக் குழந்தைகள் வேறு முதுகில் பாவமூட்டைகளை சுமந்துகொண்டு சகட்டுமேனிக்கு இடித்துத் தள்ளிவிட்டு செல்வார்கள். அப்படி இடிக்கும்போது யாராவது ஒல்லிப்பிச்சான் ஆசாமிகள் அவர்களிடம் சிக்கினால் அதோ கதிதான். பின்புறம் இருந்து முன்புறத்திற்கு அனுப்பி வைத்துவிடுவார்கள்.
    இப்படியெல்லாம் அவஸ்தைப்பட்டு பயணிக்கும் பஸ் பயணத்தில் அன்று கண்டக்டரிடம் ஒரு ஐம்பது ரூபாய் தாளை நீட்டி சைதாப்பேட்டை ஒன்று என்று சொன்னபோது நோட்டைத் திருப்பி திருப்பி பார்த்துவிட்டு  “வேறதாங்க” என்றார் நோட்டை என் கையில் திணித்து.
     “ ஏன் இதுக்கென்ன?” என்றேன்!
 “கிழிச்சி ஒட்டி வெச்சிருக்கிறதை வாங்க நான் தான் கிடைச்சேனா? காலையில பேஜார் பண்ணாதீங்க! சரியா பதிமுணு ரூபா கொடுங்க!” என்று எரிச்சல்பட்டார் கண்டக்டர்.
   அப்போதுதான் கவனித்தேன்! அது கிழிந்த நோட்டு என்பதை! சரியாக இரண்டாக கிழிந்து செல்லோ டேப் போட்டு ஒட்டி வைத்து இருந்தார்கள். இது எப்படி என்னிடம் வந்தது?  அட எவனிடமோ ஏமாந்து போய்விட்டோமே? என்று என் மேலே சுயபச்சாதாபம் எழுந்தது.
     அப்போதைக்கு வேறு நோட்டைக் கொடுத்து டிக்கெட் வாங்கிக்கொண்டாலும் இந்த நோட்டை என்ன செய்வது? என்று யோசிக்க ஆரம்பித்தேன். அதைவிட அந்த நோட்டு எப்படி என்னிடம் வந்தது? எந்த இடத்தில் ஏமாந்துவிட்டோம் என்றும் யோசிக்கையில் நேற்று சாயந்திரம் டீக்கடையில் நூறு ரூபாய் நோட்டை மாற்றி டீ குடித்தபோது  கிடைத்த சில்லறை இது என்று தோன்றியது.
    சரி அதே டீக்கடையில் கொடுத்துவிடுவோம்! மாற்றிக் கொடுக்கச் சொல்ல வேண்டாம் ஒரு டீ வாங்கிவிட்டு இந்த நோட்டை கொடுத்து சில்லறை மாற்றிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன். இதற்குள் என் நிறுத்தம் வந்துவிடவே அந்த கூட்ட நெரிசலில் மோதி நகர்ந்து பலரின் வசவுகளை காதில்வாங்காது இறங்கினேன்.
    இறங்கி நடக்கத் தொடங்கியதுமே நேற்று டீக் குடித்த அந்த கடை தென்பட்டது. உள்ளே நுழைந்தேன். டீக்கடைக்காரர் ஆச்சர்யமாக பார்த்தார்!  “வாங்கசார்! என்ன காலையிலேயே இந்த பக்கம்? வழக்கமா ஈவினிங்க்தான் வருவீங்க?” என்றார்.

     “இல்லே! ஒரே மண்டைவலியா இருக்கு! ஒரு டீ சாப்பிட்டுப் பார்க்கலாம்னுதான்! ஸ்ட்ராங்கா ஒரு டீ போடுங்க!”
   மாஸ்டர் கொடுத்த டீயை வாங்கி பருகியவன் அந்த ஐம்பது ரூபாய்த் தாளை எடுத்து கொடுத்தேன். வாங்கிய கடைக்காரர், “ சார்! வேற நோட்டு இருந்தா கொடுங்க!” என்றார்.
    “ என்னப்பா! இந்த நோட்டுக்கு என்ன?”
  “கிழிஞ்சி ஒட்டி வைச்சிருக்கு சார்! ஓடாது! வேற கொடுங்க!”
    “இது நீங்க நேத்துக் கொடுத்த நோட்டுதான்! நீங்களே கொடுத்துட்டு நீங்களே வாங்கலைன்னா எப்படி?”
   “ என்னது நாங்க கொடுத்தமா? அப்படி கொடுக்கிறப்பவே பார்த்து வாங்கிறதுதானே சார்! ஓடாத நோட்டை கொடுத்து  நாங்க கொடுத்தோம்னு சொல்றீங்க?” கடைக்காரர் கடுப்பானார்.
     “இ.. இல்ல சார்! நேத்து டீ குடிச்சு மாத்தும்போது நீங்க கொடுத்ததுதான் இது!”
   “ இல்ல சார்! நாங்க கொடுத்திருக்க மாட்டோம்! அப்படியே கொடுத்து இருந்தாலும் நீங்க சரிபார்த்து வாங்கி இருக்கணும்! இந்த நோட்டுச் செல்லாது! வேற கொடுங்க! காலையிலேயே பிரச்சனை பண்ணாதீங்க!” என்றார் எரிச்சலுடன்.
  இதற்குமேல் பேசிப் பயனில்லை! இந்த அளவுக்கு அவர் மரியாதை தருவதே தினமும் டீ குடிக்கும் பழக்கத்தில்தான்! இனிமேலும் அழுத்தினால் நம் மரியாதைதான் பறந்து போகும் என்று தோன்றவே மறு பேச்சு பேசாமல் வேறு நோட்டைக் கொடுத்துவிட்டு  அலுவலகத்திற்குள் நுழைந்தேன்.
   அலுவலகத்தில் வேலையே ஓடவில்லை! அந்த கிழிந்த நோட்டு என் சட்டைப்பையில் உறுத்தலாக உறுத்திக் கொண்டு இருந்தது. அதை எப்படி மாற்றுவது? என்று சிந்தனையிலேயே கழிந்தது பொழுது.
    மாலையில் அலுவலகம் விட்டு வரும்பொழுது ப்ளாட்பாரத்தில் ஒரு வயதான பெண்மணி காய்கறி விற்றுக் கொண்டிருந்தாள். சட்டென்று அவளிடம் காய்கறி வாங்கிக் கொண்டு நோட்டை மாற்றிவிடலாம். வயதானவள்! கண் தெரியாது ஏமாற்றிவிடலாம் என்று தோன்றியது.
 உள்ளுக்குள் இருந்து மனசாட்சி தட்டி எழுப்பியது! பாவம் அந்த வயதானவள் அவளைப் போய் ஏமாற்றவேண்டுமா? என்று கேட்டது. உன்னை ஒருவன் ஏமாற்றி இருக்கிறான் பதிலுக்கு நீ யாரையாவது ஏமாற்றுவது தவறில்லை என்று இன்னொரு மனசு சொன்னது. அடச்சீ! ஏமாந்தது நீ! நீ தவறு செய்துவிட்டு மற்றவன் ஏமாற்றிவிட்டான் என்று புலம்புவது என்ன நியாயம்? அத்தோடு வேறு ஒருவனையும் ஏமாற்ற துடிப்பது கேடுகெட்ட செயல் என்றது மனசாட்சி.
    இப்படி மனசாட்சிக்கு பதில் சொல்லியபடியே அந்த காய்கறி கடையில் இருந்த சில கத்திரிக்காய்கள் தக்காளிகள், கேரட் என சிலவற்றை எடுத்து தட்டில் போட்டு நீட்டினேன். என்னைப் போலவே சிலரும் காய்கறிகள் வாங்கிக் கொண்டு இருந்தனர் அங்கு. கூட்ட நெரிசலில் சீக்கிரம் வாங்கிக் கொண்டு நோட்டை கொடுத்து ஏமாற்றிவிடலாம் என்று தட்டில் இருந்த காய்கறிகளை எடை போடு பாட்டிம்மா! என்று அந்த முதியவளிடம் கொடுத்தேன்.
   அந்த பாட்டி என்னை ஏற இறங்கப் பார்த்தாள். “ தம்பி! நீ முன்னே பின்னே காய்கறி வாங்கியது இல்லையா?”
    “ ஏன் பாட்டிம்மா?”

 “இல்லே ஒரே முத்தலும் தொத்தலும் அழுகலுமா பொறுக்கி வச்சிருக்கிறியே?”
   நோட்டை மாற்றவேண்டும் என்ற அவசரத்தில் அப்படியே அள்ளிப்போட்டிருந்தேன். அந்த பாட்டி அந்த தட்டில் இருந்த அழுகல்களை, பூச்சி அரித்தவைகளை முற்றியவைகளை நீக்கிவிட்டு நல்லதாகவே எடுத்து தட்டில் போட்டு எடை போட்டாள்.
    “ ஏன் பாட்டி! இப்படி நீயே நல்ல காய்கறிகளை எடுத்து போட்டா உனக்கு நஷ்டம்தானே! இது நானா எடுத்தது! அப்படியே எடை போட்டு கொடுத்தா லாபம் வரும் இல்லையா?”
   அந்த பாட்டி என்னை தீர்க்கமாக பார்த்தாள். “ தம்பி மத்தவங்களை ஏமாத்தி லாபம் சம்பாரிச்சு என்னைத்தை அள்ளிக்கினு போயிடப் போறோம்! செத்தா இப்ப ஆறடி நிலம் கூட சொந்தம் இல்லாம போயிருச்சு! இதுல லாபம் சம்பாதிச்சு கோட்டை கட்டி என்ன பிரயோசனம்?”
    “கோட்டை கட்ட வேண்டாம் பாட்டி? உனக்கு இப்படி அழுகல் சொத்தைன்னு நிறைய வீணாகுதே? அத எப்படி ஈடு கட்டுவே? அப்படியே கலந்து வித்தாதானே நாலு காசு பார்க்க முடியும்?”
  “ தம்பி! எனக்குன்னு வாடிக்கையாளருங்க இருக்காங்க! அவங்க நான் நல்ல பொருளா தர்றதாலே எங்கிட்டேயே வர்றாங்க! அதனால என் கடைக்கு வியாபாரம் குறையாது! நான் இப்படி அழுகல, சொத்தையை கலந்து வித்தா வாடிக்கையாளருங்க எப்பவோ மாறிப் போயிருப்பாங்க! ஏமாத்தறவங்க இருக்கத்தான் செய்யறாங்க! எல்லாத்திலேயும் நல்லதும் இருக்கு! கெட்டதும் இருக்கு! நாம நல்லதையே நினைச்சு நல்லதையே கொடுத்தா நமக்கு நல்லதே நடக்கும்! என்ன நான் சொல்றது?” என்றாள்
   எனக்கு ஏதோ புரிந்த மாதிரி இருந்தது. “ நீ சொல்றது சரிதான் பாட்டி” என்று கிழிந்த நோட்டை கொடுக்காமல் நல்லதையே எடுத்துக் கொடுத்தேன்.

  இப்போது அந்த நோட்டு உறுத்தலாக இல்லை! நாளைக்கு அதை வங்கியில் மாற்றிக் கொள்ளலாம் என்று முடிவு செய்து தெளிந்த மனதுடன் வீடு திரும்பினேன்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. பாட்டிச் சொல்லை தட்டக்கூடாதுங்க!

  ReplyDelete
 2. நல்ல கதை. ஏமாற்ற வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு பாட்டி மூலம் சாட்டை அடி கொடுத்திருக்கிறீர்கள்.

  ReplyDelete
 3. மிக அருமை! பஸ் பயணத்தில் உண்மையில் ஆய்வுப்பட்டம் வாங்கியது போலவே அழகாய் எழுதியிருக்கிறீர்கள்! ஒரு கிழிந்த நோட்டு நம்மை எப்படி பாடாய் படுத்தும் என்பதைக்கூட அத்தனை தத்ரூபமாக உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்! 'ஏமாந்தது நம்முடைய தவறு! நம் தவறை அடுத்தவருக்கு தண்டனையாக்குவது எப்படி சரியாகும்? 'என்பதையும் காய்கறிப்பாட்டி மூலம் அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்!

  வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!!

  ReplyDelete
 4. கண் திறந்த பாட்டி வாழ்க

  ReplyDelete
 5. #வங்கியில் மாற்றிக் கொள்ளலாம்#
  இந்த முடிவை முதலில் எடுக்காதது நல்லதா போச்சு ,இல்லைன்னா பாட்டியோட நல்ல மனசு எங்களுக்கு தெரிந்து இருக்காதே ?

  ReplyDelete
 6. நல்ல கதை சகோ..

  ReplyDelete
 7. நல்ல பாட்டிதான் சுரேஸ்....

  ReplyDelete
 8. கிழிந்த நோட்டுக்கு நாங்கள் பின்னூட்டம் இட்டு இட்டு கிழிந்தே போய் விட்டது.......உங்களை வந்து சேரவே இல்லை! இன்னுதான் கிடைச்சுதுங்க.....அருமையான கதை! நமது வாழ்வில் நம் எல்லோருக்குமே இப்படிப்பட்ட எண்ணங்கள் ஒரு ஒட்டின நோட்டால் ஏற்பட்டிருக்கும். வங்கில மாத்தியிருக்கலாமே நு தோணிச்சு கதை வாசிக்கும் போது....அது தோணியிருந்தா...இந்தக் கதையே உருவாகி இருக்காதே!!!!! (நாங்க இப்படித்தான் அடிக்கடி படம் பார்த்துட்டு டைரக்க்டர் இப்படி யோசிச்சுருக்கலாமேனு சொலுவோம்...ஆன அப்படி யோசிச்சுருந்தா படமே இல்லியே!!!)

  ReplyDelete
 9. பாட்டி பாட்டிதான்......

  ReplyDelete
 10. அன்புடையீர்! வணக்கம்!
  அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (15/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
  வலைச்சர இணைப்பு: http://gopu1949.blogspot.in/


  நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com
  FRANCE

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2